கண்ணன் கதைகள் – 60

எது மதுரம்?

ஓர் ஊரில் ஒரு வயதான நம்பூதிரிப் பெண் இருந்தாள். அவள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று குருவாயூர் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அப்போது அவள் பகவானுக்கு திரிமதுரம் சமர்ப்பிப்பது வழக்கம். ஒரு சமயம் அவள் கால்கள் வீங்கி வலியும் வேதனையும் இருந்ததால் அவளால் செல்ல முடியாமல் இருந்தது. மேலும் மாதக் கடைசியானதால் அவளிடம் அதற்கான பணமும் இருக்கவில்லை. அதனால் பஸ்ஸிலும் செல்ல முடியாது, திரிமதுரம் சமர்ப்பிக்கவும் முடியாது. அடுத்த நாள் முதல் தேதி. தன்னால் செல்ல முடியாததை நினைத்து அவள் மிகவும் வருந்தினாள்.

தனது விதியை நொந்து தனது சினேகிதியிடம் சொல்லிவிட்டு படுக்கச் சென்றாள். படுக்கும்போது பகவானின் நாமங்களைச் சொல்லிக் கொண்டே தூங்கிவிட்டாள். அப்போது அவளுக்கு ஓர் கனவு வந்தது. சொப்பனத்தில் குருவாயூரப்பன் அவள் முன்பு தோன்றி, “உன்னுடைய பையில் செலவுக்குப் பணம் இருக்கிறது. நீ வழக்கம்போல் குருவாயூருக்கு வரலாம். திரிமதுரம் எனக்குப் பிடிக்கும். ஆனால், என் பக்தர்கள் எனது நாமத்தை ஜபிப்பதைக் கேட்பது அவர்கள் அளிக்கும் நெய்வேத்தியத்தைவிட மதுரமானது” என்று கூறி மறைந்தார். கனவு கலைந்து பகவானின் அருளை நினைத்து மிகவும் மகிழ்ந்தாள். காலையில் அவளது கால் வீக்கமும் வடிந்திருந்தது. சந்தோஷத்தோடு, எந்தவித சிரமமும் இல்லாமல் குருவாயூர் சென்று தரிசனம் செய்தாள்.

பகவானிடம், அவன் நாமங்களைத் தொடர்ந்து சொல்வதையே வரமாகக் கேட்டாள். பகவானுடைய திருவருளை நினைத்து, தனது அன்புக்குரலுக்கு ஓடோடி வந்ததையும் நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.

Leave a Comment