கண்ணன் கதைகள் – 47

கோபியர்களின் மதிமயக்கம்

குருவாயூரப்பன் கதைகள்

கோபிகைகள் கண்ணனையே கணவனாக அடைய வேண்டும் என்று காத்யாயனீ பூஜை செய்தார்கள். அந்தப் பூஜையின் முடிவில், முன்பே கோபியரிடம் கூறியபடி, நிலவொளியில், யமுனைக்கரையில் கண்ணன் குழலூதிக் கொண்டு நின்றான். அவன் புல்லாங்குழலில் இருந்து கிளம்பிய ஏழு ஸ்வரங்களால் உண்டான நாதம், உலகம் முழுவதையும் மயங்கச் செய்தது. அதைக் கேட்ட கோபியர்களும் சொல்லமுடியாத மதிமயக்கம் கொண்டனர்.வீட்டு வேலையில் ஈடுபட்டுக் கொண்டும், குழந்தைகளை கவனித்துக் கொண்டும், கணவனுக்குப் பணிவிடை செய்து கொண்டும் இருந்த கோபியர்கள், கண்ணனின் குழலோசையைக் கேட்டதும், மனம் மயங்கி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடி வந்தார்கள்.

சில கோபியர்கள் பாதி நகைகளைப் போட்டுக் கொண்டும், பாதி அலங்கரித்துக் கொண்டும் ஓடி வந்தார்கள். ஒரு பெண் தன் கழுத்தில் ஒட்டியாணத்தையும், இடுப்பில் ஹாரத்தையும் மாற்றி அணிந்துகொண்டு வந்தாள். மற்றொரு பெண், அதிக அன்பினால், ரவிக்கை அணிய மறந்து, மற்றவர்களுக்குத் தெரியாமல் ஓடி வந்தாள். அவள் ஓடி வந்தது, கண்ணனுக்கு அன்பாகிற பாரத்தை அபிஷேகம் செய்ய இரு குடங்களை எடுத்து வந்தது போலத் தோன்றியது. கணவர்களாலும் வீட்டிலுள்ளவர்களாலும் தடுக்கப்பட்ட சில பெண்கள், கண்ணனை மனதால் தியானம் செய்தார்கள். அவர்கள் உடலைவிட்டு ஆனந்த வடிவமான பரப்ரம்மத்தை அடைந்து மிகவும் புண்ணியம் செய்தவர்கள் ஆனார்கள்.அந்தப் பெண்கள் எவரும் கண்ணனைப் பரமாத்மா என நினைத்து வரவில்லை. காதலனாகவே நினைத்து வந்தனர். ஆயினும் நொடியில் துறவிகள் அடையக்கூடிய முக்தியை அடைந்தனர். கருணையான பார்வையாலும், புன்சிரிப்பினாலும் அழகாய் குழலூதிக் கொண்டு நிற்கும் கண்ணனை, கோபியர்கள் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அவன் அருகே வந்த அந்த கோபியர்கள் மயங்கி நின்றார்கள்.

அவர்களின் எண்ணத்தை அறிந்திருந்தும், வானத்தில் கூடியிருக்கும் முனிவர்களும், உலக மக்களும் கேட்பதற்காக, குடும்பப் பெண்களின் தர்மத்தைப் பற்றி அப்பெண்களுக்கு கண்ணன் எடுத்துக் கூறினான். முன்பு கூறியதற்கு நேர்மாறான அவனுடைய வார்த்தைகளைக் கேட்ட கோபியர் மிகுந்த சோகம் அடைந்தனர். கண்ணா! எங்களைப் புறக்கணிக்காதீர்கள் என்று புலம்பினார்கள்.அவர்கள் புலம்பிக்கொண்டு அழுவதைப் பார்த்த கண்ணன், கருணை கொண்டு, யமுனைக் கரையின் மணல் குன்றுகளில் அவர்களுடன் விளையாடினான்.நிலவொளி வீசும் யமுனைக்கரையில், மணல் குன்றுகளில், கோபிகைகள் மேலாடையினால் ஆசனம் அமைத்து, கண்ணனை அமரச் செய்தார்கள். கண்ணன், அவர்களுடைய கைகளைப் பிடித்தும், முத்தமிட்டும், கட்டி அணைத்தும், இனிமையாகப் பேசியும், அந்த கோபிகைகளின் மனதை மயக்கி அவர்களை மகிழ்வித்தான். அழ்காகப் புன்னகைத்துக்கொண்டே அந்தப் பெண்களின் ஆடைகளை மறுபடி கவர்ந்தான். கண்ணனின் முகம் சிறு வியர்வைத் துளிகளால் நிறைந்து மூவுலகிலும் அழகு வாய்ந்ததாக இருந்தது. கோபியர்கள் கண்ணனைத் தழுவிக் கொண்டு அளவற்ற ஆனந்தம் அடைந்தார்கள். அளவற்ற ஆனந்தம் அடைந்ததால், மிகுந்த கர்வம் கொண்டார்கள்.உலகிலேயே அழகனான கண்ணன், என்னிடத்தில் மட்டும் அன்பு கொண்டிருக்கிறான் என்று ஒவ்வொரு கோபியரும் நினைத்தார்கள். அதனால் மிகுந்த கர்வம் கொண்டவர்களாக ஆனார்கள். அதையறிந்த கோவிந்தன், அந்த நொடியிலேயே மறைந்து போனான். ராதையென்ற கோபிகை மட்டும் கர்வமில்லாமல், அன்பு மிகுந்து இருந்தாள். .கண்ணன் அவளை அழைத்துக்கொண்டு வெகுதூரம் சென்று, அவளுடன் விளையாடினான்.

கண்ணன் மறைந்ததால், கோபியர் மிகுந்த துயரம் அடைந்தனர். அனைவரும் ஒன்றுகூடி கானகம் முழுவதும் தேடினார்கள். அவன் கிடைக்காததால் மிகுந்த வருத்தம் அடைந்தனர். மாமரமே, சம்பகமரமே, மல்லிகைக் கொடியே, எங்கள் கண்ணனைக் கண்டீர்களா? என்று மரங்களையும், கொடிகளையும் கேட்டு, கவலையுடன் புலம்பினார்கள்.கோபிகை ஒருத்தி, கற்பனையில் கண்ணனைக் கண்டு, மற்ற கோபியரிடம், கண்ணனை என் எதிரில் பார்த்தேன் என்று கூறினாள். அதைக் கேட்ட மற்றவர்களுடைய துன்பம் அதிகரித்தது. அவர்கள் எல்லாரும் கண்ணனையே நினைத்து, அவனுடைய செய்கைகளைப் பற்றியே பேசி வந்தார்கள்.

அப்போது ராதை கர்வம் கொண்டதால் அவளையும் விட்டு மாயமாய் மறைந்தான் கண்ணன். அனைவரும், ராதையுடன் கூட, இருட்டும்வரை கானகத்தில் தேடினார்கள். மனம் கலங்கி மீண்டும் யமுனைக் கரைக்கு வந்து புலம்பினார்கள். அவர்களது துன்பத்தைக் கண்டு கருணை கொண்டு, கோபியரின் முன், மன்மதனையும் மயங்கச் செய்யும் அழகுடன், மூவுலகங்களையும் மயக்கும் புன்சிரிப்புடன்மீண்டும் கண்ணன் தோன்றினான். அவனை நேரில் கண்ட கோபியர்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள். தங்கள் மகிழ்ச்சியை விதவிதமாக வெளிப்படுத்தினார்கள். சிலர் அசைவற்று நின்றார்கள். ஒரு கோபிகை, மயிர்க்கூச்சலுடன், கண்ணனது கையை எடுத்து, தனது மார்பில் வைத்துக்கொண்டு நின்றாள். மற்றொருத்தி அவன் கையை எடுத்து, தன் மூச்சே நின்றுவிடும்படி தனது கழுத்தில் இறுகச் சுற்றிக் கொண்டாள்.

Leave a Comment