Arthamulla Aanmeegam

இந்து தர்ம சாஸ்திரம் | Hindu Dharma Sastram in tamil | Best practices of hinduism

Hindu Dharma sastram in Tamil

இந்து தர்ம சாஸ்திரம் | Hindu Dharma Sastram in tamil | Best practices of hinduism

1. திருக்கோயில்களை வலம் வருவது “ப்ரதக்ஷிணம்” என்று சொல்லப்படுகிறது. எப்பொழுதும் மும்முறை ப்ரதக்ஷிணம் வருவதே சிறந்தது. நிச்சயம் ஒருமுறை ப்ரதக்ஷிணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
2. ஒரு கோயிலில் இருக்கும்போது, அடுத்த கோயிலின் மேன்மைகளைப் பற்றிப் பேசுவது தவிர்க்கப்பட வேண்டும்.
3. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பால் உட்கொள்ளப்படக்கூடாது. ஆனால், “சாளக்ராம” ஸிலாரூபத்திற்கும், மற்றைய விஷ்ணு கோயிலின் தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்த பாலை உட்கொள்ளலாம்.
4.விஷ்ணு ஆலயங்களில் கொடுக்கப்படுகின்ற துளஸி ப்ரஸாதத்தை, சிரஸில் தரிக்கக்கூடாது. ஆனால் அவற்றை செவிகளில் வைத்துக் கொள்ளலாம்.
5. ஆலயங்களில் அபிஷேகம் நடைபெறும்போதோ, நடை சாற்றியிருக்கும் போதோ, வலம்வருவது தவிர்க்கப்பட வேண்டும்.
6.ஆலயங்களில் கொடியேற்றப்பட்டுவிட்டால், மறுபடி கொடி இறங்கும்வரை, அந்தக் கோயிலைச் சுற்றி வசிப்பவர்கள் தமது இல்லங்களில் திருமணமோ, வேறு சுபகாரியங்களோ செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
7. துளஸி தீர்த்தம், நைவேத்தியப் பிரஸாதங்கள் இவற்றை வாங்கி உண்ட பிறகு, கை கழுவுவது தவிர்க்கப்பட வேண்டும்.
8. ஈரமான துணிகளோடு, தெய்வ பூஜைகளும், ஆராதனைகளும் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.
9. விளக்குத் திரியை விரல்களால் நீக்குதலும், சரிப்படுத்துதலும் செய்யக்கூடாத செயலாகும்.. இப்படி செய்வதால் வறுமை ஏற்படும்.
10. பூஜையில் பயன்படுத்தப்படுகின்ற வெற்றிலை, பாக்கு ஆகியவை இரட்டைப்படையிலேயே அமைய வேண்டும். எப்பொழுதுமே, ஒற்றைப்படையில் அவற்றை உபயோகிக்கக் கூடாது..
11. எப்பொழுதும் வாழைப்பழங்களை ஊதுவத்தி ஏற்றி வைக்கப் பயன்படுத்தக்கூடாது.
12. அக்ஷதையைக் கொண்டு விஷ்ணுவிற்கு அர்ச்சனை செய்யக்கூடாது.
13. இரும்பு, எவர்சில்வர் பாத்திரங்களில் அபிஷேகத்திற்கான நீரை வைப்பது கூடாது. அபிஷேக நீரை தாமிரம், பித்தளை, வெள்ளி பாத்திரங்களிலேயே வைக்க வேண்டும்.
14. மணி சப்தம் எழுப்பாமல் பூஜை செய்யக்கூடாது. (ஒருசில பிரிவினர் மணியை பூஜையில் உபயோகிப்பதில்லை. இது அவர்களது சம்பிரதாயம் என்பதால், அதற்கான காரணங்களை அவர்கள் பெரியோர்களிடம் கேட்டு, தெளிவு பெறவும்..)
15. இரும்பு, எவர்சில்வர் விளக்குகளை இறைபூஜையில் பயன்படுத்தக் கூடாது.
16. பூஜையில் பயன்படுத்துகின்ற சங்கின் மீது அவசியம் துளஸி இலை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
17. தலையைத் துணியால் மூடிக்கொண்டு, எந்த மந்திர ஜபமும் செய்யக் கூடாது.
18. காயத்ரி ஜபம் செய்யும்பொழுது, கைகள் கண்டிப்பாகத் துணியால் மூடப்பட்டிருக்க வேண்டும்.
19. பூஜைக்குப் பயன்படுத்துகின்ற மணி, வெற்றிலை, பழங்கள், பூக்கள், வாழைஇலை, தர்ப்பம் முதலியவற்றை வெற்றுத் தரையில் வைக்கக்கூடாது. அவற்றை எப்பொழுதும் ஏதாவது தாம்பாளம் அல்லது தட்டில்தான் வைக்கவேண்டும்.
20. பூஜைக்கு உபயோகப்படுத்துகின்ற சந்தனக் குழம்பை மண்அகலிலோ, தாமிரப் பாத்திரங்களிலோ வைக்கக்கூடாது.
21. சிவபூஜையில் தாழம்பூவை உபயோகிக்கக் கூடாது. (பொய்சாட்சி சொன்னதால் தாழாம்பூ சிவனால் நிராகரிக்கப்பட்டதை நினைவு கொள்ள வேண்டும்.)
22. சிவ பூஜை முடிந்த பிறகு சண்டிகேஸ்வரருக்கும் நைவேத்தியம் செய்ய வேண்டும்.
23. தும்பைப்பூவைக் கொண்டு மஹாலக்ஷ்மிக்கு அர்ச்சனை செய்யக்கூடாது.
24. துளஸி கட்டைகளை, ஹோமத்தீயில் இடக்கூடாது.
25. வில்வ இலையைக் கொண்டு சூரியனுக்கு அர்ச்சனை செய்யக்கூடாது.
26. புனித நதிகளில் ஒருவர் நீராடிக் கொண்டிருக்கும்போது, அவருக்குப் பின்னாலேயே நின்று மற்றொருவர் நீராடக்கூடாது.
27. நீராடுவதற்கு, வெந்நீரில் பச்சைத் தண்ணீரைக் கலக்கக் கூடாது. பதிலாக பச்சைத் தண்ணீரில் வெந்நீரை சேர்க்கலாம்.
28. நீராடும்பொழுது பேசுவதோ, பாடுவதோ கூடாது. இது வருண பகவானை அவமதிப்பது போலாகும். இப்படிச் செய்வதால் நமது அழகு அழிந்துபோகும்.
29. நீராடுவதற்கு முன், சந்தனத்தை நெற்றியில் தரிக்கக்கூடாது.
30. விரத நாட்களில் எண்ணெய் குளியல் கூடாது..
31. பூஜையோ, ஹோமமோ செய்தபிறகு நீராடுவது கூடாது.. அதுபோன்றே உறவினர்களையும், நண்பர்களையும் ஊருக்கு அனுப்பிவிட்டு நீராடக்கூடாது.
32. காரணமில்லாமல் இரவு நேரங்களில் நீராடக்கூடாது.
33. தீபாவளியைத் தவிர, மற்ற நாட்களில் சூரிய உதயத்திற்கு முன் எண்ணெய் ஸ்நானம் செய்யக்கூடாது.
34. ஆண்கள் மேல்சட்டை அணிந்துகொண்டு இறைவழிபாடு செய்யக்கூடாது.
35. வெண்கலப்பாத்திரத்து நீரைக் கொண்டு, பாதங்களைக் கழுவக்கூடாது..
36. நீரில் சூரியன் ப்ரதிபலிப்பதைக் காணக்கூடாது.
37. தலைப்பு (முந்தானை), கரை இல்லாத வேட்டி புடவைகளை யாரும் அணியக்கூடாது. அதேபோன்று தீப்பொறி பட்டு சேதமடைந்த வஸ்திரங்களையும் உபயோகிக்கக்கூடாது.
38. ஈரத்துணிகளோடு ஜப, தபங்களையோ, பூஜைகளையோ செய்யக்கூடாது.
39. வடக்கு தெற்காகத் துணிகளை உலர்த்துதல் ஆகாது. பதிலாக, கிழக்கு மேற்காக துணிகளை உலர்த்தலாம்.
40. வெற்றுக் கைகளால் உணவை பரிமாறக்கூடாது. சமைக்கப்படாத உணவையும், அப்பளம் வடை போன்ற பொரித்த உணவுகளையும் தவிர மற்றவற்றைப் பரிமாற கரண்டிகளை உபயோகப்படுத்த வேண்டும்.
41. இரவு நேரத்தில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர், கீரை இவற்றை உண்ணக்கூடாது.
42. தாமரை இலையைத் தவிர மற்ற இலைகளின் பின்புறத்தில் உணவருந்தக்கூடாது.
43. பகல்நேரத்தில் பால் அருந்தக்கூடாது.
44. தாமிரப் பாத்திரத்தில் வைத்திருக்கும் பாலை அருந்தக்கூடாது.
45. பித்தளைப் பாத்திரத்தில் இருக்கும் இளநீரை அருந்தக்கூடாது.
46.உணவருந்தும்போது வலதுகையால் நீர் அருந்தாமல், இடது கையை உபயோகித்து நீர் அருந்த வேண்டும்.
47. பூணூல் அணிந்தவர்கள் அனைவரும் பரிசேஷணம் செய்த பிறகே உணவருந்த வேண்டும்.
48. சாப்பிடும்போது அருகிலிருப்பவரைத் தொடாமல் சாப்பிட வேண்டும்.
49. காம்பைக் கிள்ளி எறியாமல் வெற்றிலையை சுவைக்கக்கூடாது.
50. ஒரே பாயோ, ஒரே பலகையோ அல்லது ஒரே ஜமக்காளமோ இட்டு, பலரும் குழுவாக அமர்ந்து சாப்பிடக்கூடாது. அப்படி இருக்கின்ற இடங்களில் அதன்மீது தாம் உபயோகிக்கின்ற துண்டையாவது விரித்து அமர வேண்டும்..
51. அந்தி வேளையிலும், அர்த்த இராத்திரியிலும் உணவருந்தக் கூடாது.
52. தலையை விரித்துப் போட்டுக்கொண்டு உணவருந்தக் கூடாது. ஈர வஸ்திரத்துடனும் உணவருந்தக் கூடாது.
53. இருட்டில் அமர்ந்துகொண்டு உணவருந்தக் கூடாது. குறைந்தபட்சம் உணவருந்தும் இடத்தில் ஒரு விளக்காவது எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
54. எள் சாதத்தையும், எள்ளினால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளையும் இரவில் சாப்பிடக்கூடாது.
55. குழுவாக உட்கார்ந்து சாப்பிடும்போது, ருசியான பண்டங்களை அடுத்தவர்க்கு அளிக்காமல் உண்ணக்கூடாது.
56. பாயசம், வடை போன்றவற்றை நைவேத்தியம் செய்துவிட்டு, அடுத்தவர்க்கு அளித்தபிறகே நாம் உண்ண வேண்டும்.
57. பட்டு வஸ்திரங்களோடு உணவருந்தக் கூடாது. அப்படி ஒருவேளை உணவருந்த நேரிட்டால், பிறகு அவற்றை பூஜை செய்யும்போது பயன்படுத்தக்கூடாது.
58. பூனை முகர்ந்த உணவை உண்ணக்கூடாது. அப்படி உண்டால், அது தரித்திரத்தை வரவழைக்கும்.
59. தர்ப்பையால் செய்யப்பட்ட பவித்திரத்தை அணிந்துகொண்டு, தண்ணீரோ இதர பானங்களோ பருகக்கூடாது.
60. மிகுந்த காரத்தை உணவில் சேர்க்கக்கூடாது. இது “ரஜோ” குணத்தை அதிகரிக்கும்.
61. சன்யாசிகள் சாப்பிட்ட உணவை உண்ணக்கூடாது.
62. திருமணமானவர்கள் தாமரை இலையில் உண்ணக்கூடாது.
63.உறங்கிக் கொண்டிருக்கும் முதியவர்களைத் தட்டி எழுப்பக்கூடாது.
64. படுக்கைகளை நோயாளிகளுடன் பங்குபோட்டுக் கொள்ளக்கூடாது.
65. உறங்கும்போது வலதுபுறம் திரும்பிப் படுக்காமல், இடது புறமாகவே திரும்பிப் படுக்க வேண்டும்..
66. வடக்கு தெற்காக ஒருபொழுதும் படுக்கக்கூடாது.
67. நல்ல சொப்பனம் கண்டபிறகு உறக்கத்தைத் தொடரக்கூடாது. அப்பொழுதுதான் கனவு பலிக்கும். துர்ஸ்வப்னம் கண்டால், கடவுளிடம் ப்ரார்த்தனை செய்துவிட்டு, கண்டிப்பாக உறக்கத்தைத் தொடரவும்.
68. ஆண்கள் இறை சந்நிதியில் எரிந்து கொண்டிருக்கும் விளக்குகளை அணைக்கக் கூடாது.
69. ஐம்பது வயதைக் கடந்த ஆண்கள் திருமணம் செய்யக்கூடாது.
70. வெந்நீரால் சந்தியாவந்தனம், ஆசமனம், பரிசேஷணம் ஆகியவற்றைச் செய்யக்கூடாது.
71.முடி வெட்டிய பிறகோ அல்லது இடுகாட்டிற்குச் சென்றுவந்த பிறகோ, எண்ணெய்க் குளியல் செய்யக்கூடாது.
72. மனைவி கர்ப்பமாக இருக்கும்பொழுது கணவன் கடலாடுதல், மலையேறுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
73. ஆண்கள் கழுத்தில் சந்தனம் தரிக்கக்கூடாது.
74. பூஜை, ஜபம், ஹோமம், தர்ப்பணம், ச்ரார்த்தம், நமஸ்காரம் ஆகியவற்றைச் செய்யும்பொழுது, ஆண்கள் அவசியம் உத்தரீயம் (அங்கவஸ்திரம்) அணிய வேண்டும்.
75. திருமணமாகாத ஆண்கள் காவி வஸ்திரம் தரிக்கக்கூடாது.
76. தகுந்த காரணமில்லாமல், திருமணமான ஆண்கள் நாற்பத்தைந்து நாட்களுக்கு மேல் தாடி வளர்க்கக்கூடாது.
77.தெற்கு மேற்கு ஆகிய திசைகளை நோக்கி ஆசமனம் செய்யக்கூடாது.
78. ஆசமனம் செய்யும்பொழுதும் பவித்திரம் (தர்ப்பையால் செய்யப்பட்டது) தரிக்கக்கூடாது.
79. முகக்ஷவரமும், எண்ணெய்க்குளியலும் ஒரே நாளில் செய்யக்கூடாது.
80. தந்தை உயிருடன் இருப்பவர்கள், ஆட்காட்டி விரலில் வெள்ளிமோதிரம் (தர்ஜனி முத்திரை) அணியக்கூடாது.
81. வீட்டில் ஹோமம் (ஔபாசனம்) செய்யும்போது மனைவி இல்லாமல் செய்யக்கூடாது.
82. தந்தை, மகன் அல்லது சகோதரர்கள் ஒரேநாளில் க்ஷவரம் செய்துகொள்ளக்கூடாது.
83. ஆண்கள் செவ்வாய்கிழமைகளில் எண்ணெய் ஸ்நானம் செய்யக்கூடாது.
84. காலையில் சந்த்யாவந்தனம் செய்த பிறகே பூஜையோ, ஜபமோ, ஹோமமோ செய்ய வேண்டும்.
85. வீட்டிற்கு வருகை தருகின்ற சுமங்கலிப் பெண்டிருக்கு, குங்குமம் தராமல் அனுப்பக்கூடாது.
86. பூசணிக்காயைப் பெண்கள் உடைக்கக்கூடாது.
87. மகளின் சேலையைத் தாயார் உடுத்தக்கூடாது.
88. கர்ப்பிணிப் பெண்கள் அடுப்புச் சாம்பலை நீக்குவதும், அடுப்பிலிருந்து தணலை சேகரிப்பதும் செய்யக்கூடாது.
89. கர்ப்பிணிப் பெண்கள் உலக்கையைப் பயன்படுத்தி இடிக்கின்ற வேலையைச் செய்யக்கூடாது.
90. வீட்டுக்கு விலக்காய் இருக்கின்ற பெண்கள், மற்ற பெண்களைத் தீண்டக்கூடாது.

91.பங்குனி மாதம் பிறந்த பிறகு காரடையான் நோன்புச்சரடைக் கட்டிக்கொள்ளக்கூடாது.
92. ஒருவருடத்தில் இரண்டு முறை சுமங்கலி ப்ரார்த்தனை செய்யக்கூடாது.
93. திருமணமாகாத பெண்களுக்கு, அவர்கள் வீட்டில் பிறப்பு, இறப்பு தீட்டுகள் கிடையாது.
94. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், விளக்கு வைத்த பிறகும், பணம் கடன் தரக்கூடாது.
95. யமகண்டத்தின்போது எந்த சுபகாரியத்தையோ, பிரயாணத்தையோ தொடங்கக்கூடாது.
96. குளிகை காலங்களில் அபர காரியங்களைச் (இறுதிக் கடன்கள்) செய்யக்கூடாது.
97. விதை விதைத்தல், மரங்கள் நடுதல், முடி வெட்டுதல், க்ஷவரம் செய்தல் போன்ற காரியங்களை இரவு நேரத்தில் செய்யக்கூடாது.
98. அமாவாசை, பௌர்ணமி காலங்களைத் தவிர ஏனைய நாட்களில் கடல் நீராடுதலைச் செய்யக்கூடாது.
99. கடல் நீரை வெறும் கைகளால் தீண்டக்கூடாது.
100. அந்தி நேரத்திலும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும் பெருக்கக்கூடாது. அது ஏழ்மைக்கு வித்திடும்.
101. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகோ அல்லது மாலை பூஜையறையில் விளக்கேற்றிய பிறகோ, பணமோ, பொருளோ யாருக்கும் கடனாகவும் கொடுக்கக்கூடாது.
102. அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்று பயணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
அதேபோன்று எந்த மருத்துவத்தையும் அன்று ஆரம்பிக்கவும் கூடாது.
103. செவ்வாய், சனிக்கிழமைகளுக்கு சூரிய அஸ்தமனத்திற்குப்பிறகு லக்ன தோஷம் இல்லை. அதனால் அவற்றை அஸ்தமனத்திற்குப் பிறகு தோஷமான கிழமைகளாகக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
104. ஒரு ஆண் பிறந்த மாதத்தில், அவனுக்குத் திருமணம் செய்யக்கூடாது.
105. சனிக்கிழமையைத் தவிர, மீதி நாட்களில் அரசமரத்தைத் தீண்டக்கூடாது. ஆனால் எல்லா நாட்களிலும் வலம்வரலாம்.
106. நான்காம் பிறையைப் பார்க்கக்கூடாது.
107. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துணிகளைத் தைக்கக்கூடாது.
108. காலை வெயிலும், இடுகாட்டுப்புகையும் நமது உடலைத் தீண்டக்கூடாது. அவை தேக ஆரோக்யத்தைக் கெடுக்கும்.
ஆனால் மாலை வெயிலும், ஹோமப் புகையும் நமக்கு நன்மையை விளைவிக்கும்.
109. கன்னத்தில் கைவைத்துக்கொண்டு அமரக்கூடாது.
110. எரியும் நெருப்பைத் தாண்டக்கூடாது.
111. ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக்கூடாது.
112. கொட்டாவி விடும் போது வாயைக் கையினால் மூடவேண்டும்..அல்லது விரல்களால் சொடுக்குப் போடவேண்டும்.
113. வாயினால் ஊதி நெருப்பை (விளக்கை) அணைக்கக்கூடாது.. எந்த சாப்பிடும் பொருளையும் (உ.ம்.. கொதிக்கின்ற பால், பானங்கள்…) வாயினால் ஊதக்கூடாது. அப்படி ஊதினால் அது உச்சிஷ்டமாகக் (எச்சிலாக) கருதப்படும்.
114. கைகளைப் பின்புறமாகக் (முதுகுக்குப்பின்னே) கட்டக்கூடாது.
115. நெருப்பின் மேல் கைகளையும் கால்களையும் காட்டி சூடேற்றிக் கொள்ளக்கூடாது.
116. நகங்களைக் கடிக்கக் கூடாது.
117. திருக்கோயில்களின் முன்பும், நதிகளின் முன்பும், அரச மரத்தின் முன்பும் ஆத்ம ப்ரதக்ஷிணம் செய்யக்கூடாது.
118. தனக்கான மாலையைத் தானே கட்டக் கூடாது.
119. நம்நிழலை எண்ணெயிலோ, நீரிலோ பார்க்கக்கூடாது.
120. குரு −சிஷ்யன், நந்தி −சிவன், தந்தை−மகன், சகோதரர்கள், சகோதரிகள், பசு−கன்று, கணவன் −மனைவி இவர்களின் குறுக்கே போகக்கூடாது.
121. வெற்று உடலுடன், காலைநேர வெயிலில் நிற்கக்கூடாது. இது ஆயுளைக் குறைக்கும்.
122. பிச்சைக்காரர்களை விரட்ட, அவர்கள் முகத்தில் அடிப்பதுபோல கதவைச் சாத்தக்கூடாது.
123. கஷ்டம் வந்தபோது, தூய்மையற்ற வார்த்தைகளைப் பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
124. (1) சொத்து விபரங்கள், (2) வயது, (3) வீட்டில் நடக்கின்ற நிகழ்வுகள், (4) உபதேச மந்திரம், (5) வியாதிக்கு உண்கின்ற மருந்து (6) கிடைத்த விருது/அவமானம் இவற்றைத் தகுந்த காரணங்கள் இன்றி, அடுத்தவரிடம் பகரக்கூடாது.
125. தலைமுடி, நகம் போன்றவற்றை உடனேயே வீட்டிலிருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும். அவற்றை வீட்டிலேயே வைத்திருக்கக்கூடாது.

மேலும் சில குறிப்புகள்

1.பூக்களை தொடுத்து கட்டும்போது, இடைவெளி இருக்கக்கூடாது. அப்படி கட்டியுள்ள பூவை கடையில் வாங்காதீர்கள். நீங்களாகவே வாங்கி நெருக்கமாக தொடுத்து அணிந்துகொள்ளுங்கள்.அதனால் கணவன் மனைவி உறவு மேம்படும் .

2.செவ்வாய் கிழமையும், வெள்ளிகிழமையும், கணவன் மனைவியுடன் சண்டை போடாதீர்கள்.(எப்போதும் சண்டையில்லாமல் ஒற்றுமையா இருப்பது நல்லது ) சுபகடாட்சம் குறைவு ஏற்படும்.

3.தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், ( நந்தவனங்களில் இருக்கும் மலர்கள்) மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.

4.வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும்.

5.அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

6.பொதுவாக பெண்கள் நெற்றிக்கு திலகமிடாமல் ( குங்குமம்) பூஜை செய்யக்கூடாது.

7.பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.

8.கர்ப்பிணி ( பிரசவ காலங்களில்) பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது.

9.வீட்டின் நிலைகளில் ( வாசற்கால்கள்) குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும்.
விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

10.நெய், விளக்கு எண்ணெய், நல்லெண்ணெய் , இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.

11.ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.

12.வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.

13.சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.

14.யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும்.

15.பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.
தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்.

16.பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.

17.விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய இணைவு, சண்டையிடுதல் கூடாது.

18.ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.

19.தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.

20.புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

21.தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.

22. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.

23.வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.

24.செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.

25. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு அன்றைய தினம் பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.

26.பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் பொட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களை
யும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.

27.வீட்டில் அரளி பூச்செடி வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் அரளி பூச்செடியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது அரளி பூதானம் கொடுக்க வேண்டும். அரளியோடு தரப்படும் தானம் சிறப்பானது.

28.வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.

29.வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.

30.செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர்களுக்கு செல்வத்தை வாரி கொடுப்பவரே பரம்பொருள் ( சிவபெருமான்) ஒருவரே ஆவார் இவர்களின் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.

31.நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

32.அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.

33.கடல் நீரை கொஞ்சம் குளிக்கும் நீரில் கலந்து குளித்து வந்தால் உடம்பில் உள்ள எதிர்மறை சக்திகள் அகலும். புத்துணர்ச்சி கிடைக்கும்

34.தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

35.சாமி படங்களில் உள்ள உலர்ந்த பூக்களை வீட்டில் வைக்கக் கூடாது..
காலில் மிதிபடாமல் நீர் நிலைகளில் சேர்ப்பது நல்லது.

36. வீட்டிற்கு வரும் சுமங்கலிகள் அனைவருக்கும் தாம்பூலம் குங்குமம் கொடுத்து அனுப்ப வேண்டும். வயது முதிர்ந்த சுமங்கலிகளிடம் காலில் விழுந்து ஆசி பெற்று குங்குமம் அவர்களை வைக்க சொல்லி பெறவேண்டும். அவர்களுக்கும் தர வேண்டும்.

காலம் காலமாக பலர் செய்து வருகின்ற முறைகளை இங்கே தரப்பட்டுள்ளது. பண வரவுகள் நிறைய வரும் என்பதை விட தேவையற்ற செலவுகள், நஷ்டங்கள் முதலில் குறையும். நம்பிக்கை இல்லாதவர்கள்படிக்கவேண்டாம்.நம்பிக்கையோடு கடைபிடித்தால் பலனை உணரலாம்.

1.வியாழக்கிழமை குரு ஹோரை காலத்தில் குபேரனை வழிபட பணம் வரும்.

2. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.

3. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும்…

4. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேரனருள் வரும்.

5. நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.

6. அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது.மதியம்வரை பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.

7. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும்.

8. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.

9. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பண புழக்கம் அதிகரிக்கும்.

10. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்குதிருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெறபணம் நிலைத்திருக்கும்.

11. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.

12. பசுவின் கோமியத்தில் தினமும் அல்லது வாரம் ஒரு முறையாவது சிறிதளவு (1ஸ்பூன்) குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும். 45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.

13. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.

14. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.

15. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.

16. பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சயமாக பணம் வரும்..

 

நல்ல இல்லத்திற்கு சில ஆன்மீக குறிப்புகள்

வீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது?

வீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து குறிப்புகள்

Share
ஆன்மிகம்

Leave a Comment

View Comments

Published by
ஆன்மிகம்
 • Recent Posts

  ரத சப்தமி வரலாறு, விரதமுறை மற்றும் பலன்கள் | Ratha saptami

  Ratha Saptami ரத சப்தமி வரலாறு (ratha saptami) ரிஷி காஷ்யபர் மனைவி அதிதி பூரண கர்ப்பவதி. ஒருநாள் கணவருக்கு… Read More

  5 days ago

  அனைத்திலும் நிறைந்த பேராற்றல் கிட்டும் வசந்த பஞ்சமி ஸ்பெஷல்

  #வசந்த_பஞ்சமி_ஸ்பெஷல் ! சியாமளா நவராத்திரியில் ஐந்தாவது தினமான வசந்த பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவி திருஅவதாரம் செய்ததாக ஐதீகம். எனவே,… Read More

  7 days ago

  மாசி மாத சிறப்புகள் | Maasi matha sirapukal

  மாசி மாத சிறப்புகள் : எல்லா தெய்வங்களுக்கும் சிறப்பு மிக்க மாதம் என்று போற்றப்படுகிறது மாசி மாதம். திருமால், மகாவிஷ்ணுவாக… Read More

  1 week ago

  Rudhraksham specialities | ருத்ராட்ஷத்தின் மகிமை

    ருத்ராட்ஷத்தின் மகிமை ﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌ ❖ ருத்ராட்சமும் விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை. ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு… Read More

  2 weeks ago

  Today rasi palan 21/02/2024 in tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் புதன் கிழமை மாசி -9

  Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°°°° *மாசி - 09* *பிப்ரவரி -… Read More

  15 hours ago

  Noigalai theerkum parihara kovilgal | நோய்களைத் தீர்க்கும் பரிகார கோவில்கள்

  நோய்களைத் தீர்க்கும் பரிகார கோவில்கள் -  ஸ்ரீ சிரிவர மங்கைத் தாயார் உடனாய ஸ்ரீ வானமாமலை பெருமாள் திருக்கோவில் திருவரமங்கை… Read More

  3 weeks ago