Maha sankatahara chaturthi
மஹா சங்கடஹர சதுர்த்தி
அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான்.
யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக் கூடியவர்.
வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள் எனக் கொண்டு வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும்.
ஸ்ரீ விநாயக மூர்த்தியை வழிபட பல்வேறு வழிபாடுகள் இருந்த போதிலும், சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிக மிக முக்கியமானது.
சங்கடஹர சதுர்த்தி வழிபாடு :
ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும்.
வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.
ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.
ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது.
சந்திர பகவான் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.
தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம்.
சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.
வாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் யாவும் நீங்கப் பெற்று வாழ்வாங்கு வாழ சங்கட ஹர சதுர்த்தி வழிபாடு மிக முக்கியமானதாகின்றது.
மற்றுமொரு புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணர், வளர்பிறை சதுர்த்தி தினத்தில் வானில் நிலவைப் பார்த்ததால், ஒரு பெரும் அபவாதம் கிடைக்கப் பெற்றார். சியமந்தக மணி எனும் கல்லினால் பெரும் கெட்டபெயர் ஏற்பட்டது. (சத்ராஜித், சூரியன், பாமா, பிரசேனன், ஜாம்பவான், ஜாம்பவதி, அக்ரூரர் என்பவர்களால் – சம்பவங்கள் நிறைந்த பெரும் கதை – ஸிம்ஹ: பிரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத: ஸுகுமாரக மா ரோதீ: தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:- சியமந்தக உபாக்யானம்) சியமந்தக மணியைப் பற்றி மேலும் விபரம் அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
வளர்பிறை சதுர்த்தி தினத்தில் சந்திரனைப் பார்த்ததால், கெட்ட பெயர் ஏற்பட்டு, அதை நீக்க வேண்டி, ஸ்ரீ விநாயகருக்கு தேய்பிறை சதுர்த்தி தினத்தில் ஸ்ரீ கிருஷ்ணர், பூஜையைச் செய்தார். விநாயகர் அவருடைய அபவாதம் நீங்குவதற்கு அனுக்கிரகம் செய்தார். ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு செய்து, கெட்ட பெயர் நீக்கிக்கொண்டு நற்பெயர் பெற்றதை நினைவு கூறும் வகையிலும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு முக்கியமானதாகின்றது.
ஸ்ரீ விநாயகருக்கு முப்பத்திரண்டு வடிவங்கள் உண்டு. இவற்றை மூர்த்தி பேதங்கள் என்று கூறுவார்கள். அவற்றில் பதினாறு மிகவும் முக்கியமானவை. அவற்றில் ஒன்று சங்கடநாஸன கணபதியாகும்.
ஒவ்வொரு வகையான பலனைப் பெறவேண்டி ஒவ்வொரு வகையான விநாயக வடிவங்களை வணங்குவதுண்டு. கடன் நீங்க ருணமோசன கணபதியையும் பணம் வேண்டி லட்சுமி கணபதியையும் வழிபடுவதுண்டு. அந்தந்த வழிபாட்டிற்கு உரிய தனிப்பட்ட மந்திரங்களும் முறைகளும் உண்டு.
சந்திரனும் விநாயகரைச் சிறப்பாக வழிபட்டுப் பல சிறப்புகளுடன் விநாயகருடைய திருமுடியில் பிறைச் சந்திரனாகவும் நெற்றியில் முழு நிலவுத் திலகமாகவும் விளங்கும் பேறு பெற்றான். விநாயகருக்கு பாலசந்திரன் என்றும் பெயர் உண்டு. மேலும் சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரனையும் தரிசிக்க வேண்டிய முறையும் உண்டாகியது.
சங்கடங்கள், இக்கட்டுகள், நெருக்கடிகள் தீருவதற்கு சங்கடஹர கணபதியை வணங்குகின்றோம்.
சங்கடஹர கணபதியை வணங்கியவர்களில் செவ்வாய் கிரகம் எனப்படும் அங்காரகன் முக்கியமானவர். விநாயகரை வழிபட்டுப் பல மங்கலங்களுடன் கிரகப் பதவியையும் ‘மங்கலன்’ என்னும் சிறப்புப் பெயரையும் விநாயகரிடமிருந்து பெற்றார். ஆகையால் சங்கடஹர சதுர்த்திக்கு அங்காரகச் சதுர்த்தி என்றும் பெயர் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருந்து வழிபட்டால் சங்கடங்கள் தீருவதோடு செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் கெடுதல்களும் தோஷங்களும் நீங்கும்.
சங்கடஹர சதுர்த்தி தின வழிபாட்டினால், சனி பகவானின் பார்வையால் ஏற்படும் தோஷங்களும், ஸர்வ ரோகங்கள் எனும் நோய்களும் (கலௌ சண்ட விநாயக: – புராண வாக்கியம்) நீங்குகின்றன என்று புராணங்கள் கூறுகின்றன.
சங்கட ஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் உண்டு.
விநாயகர் சதுர்த்திக்கு (ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி) முன்னதாக வரும் சங்கடஹர சதுர்த்திக்கு மஹா சங்கட ஹர சதுர்த்தி என்று பெயர்.
வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் ஒரு மஹா சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்வது கிடைக்கப் பெறும்.
சங்கட ஹர சதுர்த்தி வழிபாட்டினால் கிடைக்கப் பெறும் பலன்கள் :
கோசாரப் பலன்களை அருளும் சந்திர பகவான் விநாயகரின் அருள்பெற்றதால், சந்திர பகவானின் நற்பலனாக, நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் தடங்கல்கள் நீங்கும்.
செவ்வாய் பகவான் வழிபட்டதால், அங்காரக (செவ்வாய்) தோஷ பாதிப்புகள் நீங்கித் திருமணத் தடைகள் நீங்கும். நல்ல மங்கலமான நல்வாழ்வு அமையும்.
சனி பகவானின் தோஷம் நீங்குவதால், ஆயுள் அபிவிருத்தி, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்.
நெய்வேலி, ஸத்சங்கம் – மணித்வீபம் வளாகத்தில், ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.
நெய்வேலி நகரத்தின் பழமையான கோயில்களில் ஒன்று ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் ஆலயம். காஞ்சி மஹா பெரியவரின் அருட்கரங்களில் தவழ்ந்தது இந்த விநாயகர் விக்ரஹம். அவர் கூறிய ஆலோசனைகளின் படியே ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் ஸ்தாபிதம் செய்யப்பட்டார்.
பெயருக்கு ஏற்றார் போல, வரங்களை வாரி வழங்கும் வள்ளலாக விளங்குபவர் வரசித்தி சக்தி விநாயகர்.
வேண்டும் வரங்களை உடனடியாக சித்திக்க (கிடைக்க) வழிகோலுபவர். அருட்சக்தி நிறைந்தவர்.
ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகருக்கு ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தியிலும் மிக விசேஷமான வழிபாடுகள் நடைபெறும்.
சங்கடஹர சதுர்த்தியின் மாலை நேரத்தில், விநாயகருக்கு ஸகல திரவிய அபிஷேகங்கள் வேதகோஷங்களோடு செய்யப்படும்.
பலன்களை வெகு விரைவில் அருளும் “ஸ்ரீ விநாயகர் திரிசதி (300 நாமாவளிகள்) கொண்டு அர்ச்சனை செய்யப்படும். பிறகு மஹா தீபாராதனை நடைபெறும்.
கஷ்டங்களை நீக்கும் கணநாயகாஷ்டகம் :
‘முதாகராத்த மோதகம்‘ எனத் தொடங்கும் கணேச பஞ்சரத்னம் (5 பாடல்கள்) போல, கணநாயக அஷ்டகம் (எட்டு பாடல்கள்) சிறப்பு வாய்ந்த ஒன்று. விநாயகரை வழிபடும்போது இந்த கணநாயகாஷ்டகத்தைச் சொல்வது அனைத்து பாபங்களையும் அழித்து, நற்கதி அடைய வழிசெய்யும்.
ஸ்ரீ கணநாயகாஷ்டகம்
ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம் I
லம்போதரம் விசா’லாக்ஷம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
மெளஞ்ஜீ க்ருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோபவீதினம் I
பாலேந்து விலஸன் மெளலிம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம் I
பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம் I
சித்ரரூபதரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
கஜவக்த்ரம் ஸுரச்’ரேஷ்ட்டம் கர்ணசாமர பூஷிதம் I
பாசா’ங்குச தரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
மூஷிகோத்தமம் ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே I
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா I
ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
ஸர்வவிக்ன ஹரம் தேவம் ஸர்வவிக்ன விவர்ஜிதம் I
ஸர்வஸித்தி ப்ரதாதாரம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
கணாஷ்டகம் −தம் புண்யம் பக்திதோ ய: படேந் நர: I
விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரலோகம் ஸ கச்சதி II
விநாயகரைப் பணிவோம் ! வினைகள் நீங்கப் பெறுவோம்…
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _*பஞ்சாங்கம்*_°°°°°°°°°°°°°°°*சித்திரை - 09**ஏப்ரல் - 22 - (… Read More
# 2025-26 தமிழ் புத்தாண்டு: விசுவாவசு வருடத்தின் பஞ்சாங்கக் கணிப்பும் பலன்களும் **தமிழ் புத்தாண்டு** இந்த ஆண்டு ஏப்ரல் 14,… Read More
Panguni Uthiram 2025 11-04-2025 மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.… Read More
Panguni Uthiram Special பங்குனி உத்திரம்: அசுரனை வீழ்த்திய நாள்... Panguni Uthiram special அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்திரம்… Read More
Rama Navami ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் இராமாயணத்தில் ஒரு சம்பவத்தின் நிகழ்ச்சியால் ராம மந்திர மகிமையை உணரமுடியும். ஹனுமான்,… Read More
வியாழக்கிழமைகளில் இவைகளைச் செய்தால் வீட்டில் செல்வம் கொட்டும். நவகிரகங்களில் குரு மிகவும் முக்கியமானவராகவும், சிறப்பானவராகவும் கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு… Read More