ஓங்காரம் (பிரணவம்) ஓம் என்பதன் ஆராய்ச்சி கருத்து | Om meaning
எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த ஒலியே பிரணவம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது.
இந்த ”ஓம் – ஓம்” என்ற ஒலியையே பிரணவம் என்று கூறுவர்.
ஓம் என்னும் மூலமந்திரம், இறைவனை அம்மையப்பனாக வுணர்த்தும் ஒலிவடிவாகும். அது ஓ என்னும் ஒரே யெழுத்தே. இன்னிசைபற்றி மகர ஈறு சேர்க்கப்பட்டது. ஓங்காரம் எனினும் ஓகார மெனினும் பொருளளவில் ஒன்றே.
வடமொழியில் அகரவுகரம் புணர்ந்து (குல + உத்துங்கன் = குலோத்துங்கன் என்பதுபோல்) ஓகாரமாவது நோக்கியும், எழுத்துப் பேறான மகரத்தைச் சொல்லுறுப்பாகக் கொண்டும், ஓம் என்பதை அ + உ + ம் எனப் பிரித்து, அம் மூவெழுத்தும் முறையே முத்திரு மேனியரையுங் குறிக்குமென்றும், சிவனையும் சிவையையும் மாயையையுங் குறிக்குமென்றும், ஆதனையும் (ஜீவாத்துமாவையும்) பரவா தனையும் (பரமாத்துமாவையும்) மாயையையுங் குறிக்கு மென்றும், பலவாறு கூறுவர்.
ஓங்காரம் ஒரேயெழுத் தென்பதை,
“ஓரெழுத் தாலே யுலகெங்குந் தானாகி” (திருமந்திரம் 765)
“ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்” (திருமந்திரம் 941)
என்பவற்றாலும், ஓங்காரம் அம்மையப்பனையுணர்த்தும் எழுத் தென்பதை
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
-திருமந்திரம் 2627-
ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே
-திருமந்திரம் 2628-
என்பவற்றாலும் அறியலாம்.
உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும், பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.
ஓம் என்பது பிரணவ மந்திரமாகும. இது அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள் வடிவம்தான்.
ஓம் என்ற பிரணவன் “அ” என்பது எட்டும் “உ”என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல்
உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.
அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு)
” உ ‘ எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. ” ம் ‘ ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்
அத்துடன் ” ஓம் ” என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.
இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்:
அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.
இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் ” ஓ ” என பிள்ளையார் சுழியாகவும், “உ” எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக ‘சிவலிங்கமும்’ ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம் பிரணவம் என்றும் ஆன்றோர்களும், சான்றோர்களும் சொல்கிறார்கள்.
முதல் எழுத்து:
“ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி ”
என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.
சட்டை முனியும் தனது சூத்திரத்தில் :
” ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு ”
– என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிவன், சக்தி, சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்க்கும் முதல் எழுத்தாகவும் இதுவே ” அ ” உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக் குறிக்குங்கால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து.
” அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு ”
என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும்,
அகத்தீசப் பெருமான் தனது மெய்ஞான சூத்திரத்தில்,
அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி,
ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி ”
அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் ”
என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.
உருவமும்- உடலும்
உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடி
இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.
ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்
என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது பாடல் மூலம் விளங்கும்.
“கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே”
– மச்சைமுனி தீட்சை ஞானம்
உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி
விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை
– அகஸ்தியர் முதுமொழி ஞானம்.
மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு, அல்லது மேல் வாயைத்
தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது
உண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.
இது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 – ல்
அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்
அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்
எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்
ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்
முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்
முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி ”
என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல்
காரணமென நன்கு தெளிந்துணரலாம்.
ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்து அகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கி நிற்கும்.
இதை விளக்கும்படி திருமூலர்,
ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும் ” என்று கூறியுள்ளார்.
ஓங்காரத்தி தத்துவம், அ உ ம் எனமித்து ஒலி எழுப்புவது.
அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின் தோன்றிக் காத்தல் தொழிலையும். மகாரவொலி முடிவாதலின் அழித்தற் தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கே இணைத்து அடக்கி நிற்கும்.
“ஓம்” எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம் செய்தால் இதன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம் அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும், உலகையும் மறந்து நிற்க ஆசாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும்.
குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து, அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத ஒன்றாகிவிடும். இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்.
“ஓம்” என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால் ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும். இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில் ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும் தன்மை நீங்களும் காணலாம்.
ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம். ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்பட அருஞ் சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை, கவனத்தைச் செலுத்தலாம். வேகமாக சிந்திக்கலாம். சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம்.
போன்றவை எளிதானவைதானே!
பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதை உண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து – சாவில்லாது என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.
அதிகாலை எழுந்ததும், இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாது பத்து நிமிட மணித்துளிகள் ‘ ஓம் ‘ என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்க வேண்டும்.உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக காற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிட
வேண்டும்.
“ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே ” – என்கிறார்.
இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை. அவ்வாறு இரண்டாகப் பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வாறு அறிந்தவர்கள் பிறப்பு இறப்பு சுழற்சியை வெல்லும் ஆற்றல் அறிந்தவர்கள்.
வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் ‘தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக’ என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.
காயசித்தியின் பெருமையினை ‘காகபுசண்டர்’ பாடலைக் காண்போம் :
பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்
பாலகன் போலொரு வயது தானுமாச்சு
நேரப்பா இருபத்தி நான்கு சென்றால்
நேர்மையுள்ள வயது மீரண்டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ
தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்
தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே ….
ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் – சக்தியும். உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் – பெண்ணும் சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப – துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சம பங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே, விளக்கவே அர்த்தநாரீஸ்வரர் உருவமாக சரிபாதி உடல்.
“ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.”
ஓங்காரத்தில் உள்ளொளி வண்ணமாக இருப்பவன் சிவன். அவன் அருளின் தோற்றம் அங்கே உண்டாக ஆங்காரம் ஒழிந்து சிவனடியின் இன்ப நுகர்வு கைவரும். இந்நிலை கிட்டாதோர்க்கு இறப்பு உண்டென எண்ணமாட்டார். எனவே பிறவாமை கிட்டாது. தனால் பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர்.
படத்தை உற்றுப் பாருங்கள். விநாயகரின் தலை “ஓம்” உடன் பொருந்தியிருக்கிறது அல்லவா? “ஓ”வின் இரு சுழிகள் இரு கண்கள். ஞானத்தின் ஆதிமூலம் விநாயகர் என்பது இதற்காகத்தான். விநாயகரின் தலையும் மனிதனின் தலையும் ஒன்றுதான். ஞானத்தின் இருப்பிடம் தலையில்தான். ஆக, பிரணவம் எனும் “ஓம்” மனிதனின் தலைக்குள்தான் உள்ளது.
ஓம்/om/ॐ/aum/ओं/唵 is the cosmological sound of creations. Scientifically it’s known as the sound of ‘big bang’.
தைப்பூசம் தைப்பூசம் அன்று முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி? 🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் _* _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *தை -… Read More
Thaipusam 2025 - தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் தைப்பூசம் / Thaipusam என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டு வரும்… Read More
தைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள், Thaipusam special informations 1. தைப்பூசம் (Thaipusam special informations) இந்தியாவில்… Read More
அள்ளிக் கொடுப்பதில் பாடல் வரிகள்| Alli koduppathil song lyrics tamil அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன்… Read More
பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்| Pachai Mayil Vahananae Lyrics Tamil பச்சை மயில் வாகனனே – சிவ… Read More