சியாமளா நவராத்திரி ஸ்பெஷல் !
🌹🌿சியாமளா நவராத்திரியில் தாம்பூலம் கொடுப்பதால் என்ன பலன்🌹🌿
அம்பிகைக்குரிய நவராத்திரியில் அம்பிகையை வழிபடும் செயல்களில் ஒன்று தாம்பூலம் தருதல். தாம்பூல பூரித முகீ. என்று லலிதா சகஸ்ரநாமம் தேவியை புகழ்கிறது. இதன் பொருள் ‘தாம்பூலம் தரித்ததால் பூரிப்படைந்த முகத்தைப் உடையவள்’ என்பதாகும்.
‘தாம்பூலம்’ என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது வெற்றிலையும் பாக்கும். வெற்றிலை அம்பிகையின் அம்சமாகவே கருதப்படுகிறது. அதனாலேயே எந்த ஒரு நல்ல காரியத்திலும் வெற்றிலை பாக்கை பயன்படுத்திக்கிறோம்.
தாம்பூலத்தில் கொடுக்கும் வெற்றிலை பாக்கின் மகிமை!
நம் முன்னோர்கள் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதற்கு ஒரு காரணம் நிச்சயமாக இருக்கும். அதுபோலவே, நவராத்திரியில் கொடுக்கப்படும் தாம்பூலத்திற்கும் காரணங்கள் இருக்கின்றன.
விழாக்காலங்களிலும், பண்டிகை நாட்களிலும் பெண்கள் ஒருவருக்கொருவர் தாம்பூலம் வழங்கிக்கொள்வதன் மூலம் ‘நாம் இருவரும் தோழிகள், ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து, உண்மையாக இருக்க வேண்டும்’ என்று ஒப்புக்கொள்வதாகும். தானங்கள் செய்யும் போது, சொவர்ன தானம், வஸ்திர தானம் போன்றவையுடன் வெற்றிலை, பாக்கையும் சேர்த்து தருவதே நம் சம்பிரதாயம்.
வெற்றிலையில் முப்பெரும் தேவியரும் வாசம் செய்கின்றனர். அனைத்து உயிர்களிடத்தும், அன்பு, கருணை, ஈகை, முதலிய குணங்களை விருத்தி செய்யும் முகமாக மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளுள் ஒன்று அதிதி போஜனம். அதிதி போஜனம் என்பது முன்பின் தெரியாத யாரவது பசி என்று வந்தால் உணவளிப்பதேயாகும். சுமங்கலி பெண் என்றால், அவர் சாப்பிட்டப்பிறகு அவருக்கு தாம்பூலம் அளித்தல் வேண்டும். வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வந்தால் கட்டாயம் தாம்பூலம் தர வேண்டும். குறைந்தபட்சம் குங்குமவாது தர வேண்டும். வெற்றிலை சத்தியத்தின் சொரூபமாகும். அதனால்தான் திருமண நிச்சாயத்தார்த்தின் போது வெற்றிலை பாக்கை மாற்றிக்கொள்கின்றனர்.
திருமணங்களில் விருந்தினர்களுக்கு வழங்கப்படும் தாம்பூலப்பை முக்கிய இடம் பிடிக்கிறது. சுப நிகழ்ச்சிகளுக்கு அழைக்கச் செல்லும்போது தாம்பூலம் வைத்து அழைப்பது மிகுந்த மரியாதைக்குரிய செயலாக கருதப்படுகிறது. பொதுவாகவே, விருந்து உபாச்சாரங்கள் தாம்பூலத்துடனே நிறைவு பெறுகிறது.
🌹நவராத்திரி தாம்பூலத்தில் உள்ள பொருட்களும், சிறப்புகளும் பலன்களும்🌹
நவராத்திரி கொலுவிற்கு வருவோருக்கு வழங்கப்படும் தாம்பூலத்தில் மங்கள பொருட்களாக கருதப்படும் இந்த பொருட்களை கொடுப்பார்கள். வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சீப்பு, முகம்பார்க்கும் கண்ணாடி, வளையல், மஞ்சள் கயிறு, தேங்காய், பழங்கள், பூக்கள், மருதாணி, கண் மை, தக்ஷினை, ஜாக்கெட் துணி அல்லது அவரவர் வசதிக்கேற்ப புடவை. இந்த பொருட்களையெல்லாம் ஒரு சில்வர் டப்பாவிலோ அல்லது ஒரு ஜிப்லாக் கவரிலோ, அல்லது துணிப்பையிலோ கொடுக்கலாம். இதில், கொடுக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு அர்த்தமும் பலன்களும் உள்ளது.
மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு ஆகிய மங்களப் பொருட்கள் சுமங்கலித் தன்மையை குறிப்பதால், சுமங்கலியின் தாலிப் பாக்கியம் நிலைத்து நிற்கும். சீப்பு கணவனின் ஆயுள் விருத்தி செய்வதற்காகவும், கண்ணாடி கணவனின் ஆரோக்கியம் காக்கவும், வளையல் மன அமைதி பெறவும் வழங்கப்படுகிறது. சிவப்பெருமானின் மூன்று கண்களின் தோற்றமுடைய தேங்காய் நம் அனைத்து பாவத்தையும், தோஷத்தையும் நீக்கக்கூடியது. பழங்கள் கொடுப்பதால் அன்னதானம் பலம் கிடைக்கச் செய்கிறது. பூக்கள் மகிழ்ச்சியை பெருக செய்வதோடு, மகாலெட்சுமியின் அம்சமான மருதாணி நோய்கள் வராமலிருக்கவும், கண் மை திருஷ்டி தோஷங்கள் அண்டாமல் இருக்கவும்,
தட்சனை லட்சுமி கடாட்சம் பெருகவும், ஜாக்கெட் துணி அல்லது புடவை வஸ்திர தானப் பலன் கிடைக்கவும் வழங்குப்படுகிறது.
தாம்பூலம் தருவது அம்பிகையை திருப்தி அடைய செய்வதே..!
அனைவருக்கும் தாம்பூலம் வழங்கும்போது அம்பிகையும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து தாம்பூலத்தைப் பெற்றுக்கொண்டு நம்மை வாழ்த்துவாளாம். எல்லா உயிர்களிடத்திலும் தேவியிருக்கிறாள். தேவி எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம். நமக்குப் பூக்கள் தரும் பூக்காரியாக, வீட்டு வேலைகளில் உதவுபவராக, அல்லது குப்பைகளை சுத்தம் செய்பவராக இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படியிருக்க, தாம்பூலம் தருவதில் உயர்வு தாழ்வு இல்லாமல் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், அது அம்பிகையை அவமானப்படுத்தும் செயலாகும்.
வயதான சுமங்கலிகள், பெண்கள், குழந்தைகள் என்பது ஒப்புக்கொள்ளக்கூடியவை. இதை தவிர்த்து, அந்தஸ்து, வசதி வேறுபாடு, பழைய கோபதாபங்கள் இவற்றை மனதில் வைத்து தரப்படும் தாம்பூலங்களுக்கு எந்தவித பலனும் இல்லை. இவையெல்லாம் வசதியிருப்போர் தரலாம்.
வசதியில்லாதவர்கள் வருத்தப்படத்தேவையில்லை. எல்லோர் இதயத்திலும் அகிலத்தைக் காக்கும் அம்பிகை குடிக்கொண்டிருக்கிறாள்.
கன்யா பூஜை செய்து சிறியபெண் குழந்தைகளுக்கு உணவு அளித்து, நலங்கு வைத்து உடை, கண் மை, பொட்டு, பூ, பழங்களோடு கூடிய தாம்பூலம் அளிப்பது அளவற்ற நன்மைகளை தரும். மேலும், குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்தக்கூடிய பென்சில், ரப்பர், பேனா, க்ரையான்ஸ், நோட்டு, ஸ்கெட்ச் பேனா போன்றவைகளிலும் இப்பொழுது பரவலாக கொடுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பொருட்கள் நம் முன்னோர்களை திருப்தி செய்து, நம் சந்ததியினரை வாழ்வாங்கு வாழச் செய்யும்.
🚩தாம்பூலத்தை வழங்கும் முறைகள்
தாம்பூலத்தில் முப்பெரும் தேவியரும் வாசம் செய்வதால், தாம்பூலம் தருவபவர்கள் சூரியன் உதயமாகும் கிழக்கு திசை பார்த்து நின்று கொடுக்க வேண்டும். பெற்றுக்கொள்பவர் அவர் எதிரே, சிறு மனைபலகை அல்லது பாய் மீது உட்கார்ந்துக்கொண்டு வாங்க வேண்டும். தாம்பூலம் பெற்றுக்கொள்பவருக்கு, நலங்கு இடுவதனால் பிசைந்த மஞ்சள் கொஞ்சம் தந்து கால் அலம்பி வரச் சொல்லியப் பிறகு உட்கார வைத்து நலங்கு இடுவது நல்லது.
நவராத்திரி கொலுவை வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினருக்கு பானகம் அல்லது பழரசங்கள் குடிக்கத் தரலாம். எதுவும் இல்லையென்றால், தண்ணீராவது தர வேண்டும். பிறகு, மஞ்சள், குங்குமம், சந்தனம் தந்து எடுத்துக்கச் சொல்ல வேண்டும். தாம்பூலத்தில், தேங்காய் அளிப்பதனால், அதில் மஞ்சள் பூசி, குங்குமம் பொட்டு வைத்து, தாம்பூலம் பொருட்களோடு சேர்த்து அம்பிகையின் முன் காட்டவும். தேங்காயின் குடுமி பகுதி அம்பிகையை பார்த்து இருக்க வேண்டும். அம்பிகையின் அருள் முழுமையாக அதில் இறங்கி, கொடுப்பவரும் வாங்குபவரும் நலம் பெற வேண்டிக் கொள்ளவும். பின் தாம்பூலப் பொருட்களை ஒரு தட்டில் வைத்து தரவும்.
பெற்றுக்கொள்பவர்கள் வயதில் சிறியவர்கள் என்றால் கொடுப்பவரின் காலில் வணங்கி வாங்கிக் கொள்ளவும். வயதில் பெரியவர்களுக்கு தாம்பூலம் கொடுக்கும் போது, அவர்களை வணங்கி அவர்களின் ஆசிர்வாதம் பெற்று கொடுக்கவும். தென் மாநிலங்களான கேரளாவிலும், கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் தாம்பூலத்தையும், கருகமணியையும் மகாலட்சுமி வாசம் செய்யும் முறத்தில் வைத்து, புடவைத் தலைப்பால் முறத்தை மூடி வழங்குகின்றனர். வாங்குபவரும் முறத்தை மூடியே தாம்பூலத்தை பெறுகின்றனர். இந்த நவராத்திரில் தர்மம், தயை, ஈகை, கருணை, சாந்தி போன்ற நற்குணங்கள் வேண்டி, பராசக்தியை வணங்கி தாம்பூலம் அளித்து வீட்டில் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் பெருக்குவோம்.
அம்பிகையின் திருவடிகளில் சரணம் !
Sashti viratham கந்த சஷ்டி விரதம் பற்றி ஓர் பார்வை: கந்த சஷ்டி விரத மகிமைகள், கந்தசஷ்டி விரதம் கடை… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *ஐப்பசி - 19*… Read More
Lakshmi kubera pooja சகல ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர விரத பூஜை... சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளிதரும் தீபாவளி திருநாளில்… Read More
Diwali celebrations தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம்? நாம் எல்லோரும் எதிர்ப்பார்த்திருக்கும் ஒரு முக்கிய பண்டிகை தீபாவளி. அதாவது தீபங்களின் வரிசைகள்,… Read More
Yema Deepam தீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள் ! யம தீபம் - 30/10/2024 -------------------… Read More
Lord mururgar different darshan temples குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அபூர்வ தோற்றத்தில் முருகன் காட்சி… Read More
Leave a Comment