கடக ராசி வாசகர்களே
இடம் பொருள் ஏவல் தெரிந்து, இனிமையாகப் பேசிக் காரியம் சாதிப்பதில் வல்லவர்களே! உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
ராகு தரப்போகும் பலன்கள்
இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்துகொண்டு என்ன செய்கிறோம் என்று தெரியாமலே பிரச்சினைகளில் சிக்க வைத்ததுடன், தலை வலி, முதுகுவலி, கால்வலி எனப் புலம்பித் தவிக்கவைத்த ராகு பகவான் இப்போது ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டுக்கு வந்தமர்வதால் நோய் நீங்கும். இனி, எப்போதுமே முகத்தில் சந்தோஷம் பொங்கும். விலகிச் சென்றவர்கள் வலிய வந்து பேசுவார்கள்.
இழுபறியான பணிகள் முழுமையடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்றுசேர்வார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வீட்டில் அடுத்தடுத்து கல்யாணம், காது குத்து என நல்லதெல்லாம் நடந்துகொண்டேயிருக்கும்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்
குருவின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகு பகவான் செல்வதால் இழுபறியான வேலைகள் உடனே முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மகனுக்கு வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்தபடி வீடு, மனை அமையும். வங்கிக் கடன் கிடைக்கும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள்.
ராகு பகவான் தன் சுய நட்சத்திரமான திருவாதிரையில் 19.8.2019 முதல் 26.4.2020 வரை செல்வதால் இக்காலகட்டத்தில் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். சாலையைக் கடக்கும் போது கவனம் தேவை. சின்னச் சின்ன விபத்துகள் வந்து போகும். சில கூடா பழக்கங்கள் உங்களை நெருங்கக்கூடும். புதிய நண்பர்களுடன் கவனமாக இருங்கள். வீடு மாற வேண்டியது வரும்.
செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 27.4.2020 முதல் 31.8.2020 வரை ராகு பகவான் செல்வதால் வீண் செலவுகளிலிருந்து மீள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பிரிந்தவர்கள் சேர்வீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். புதுச் சொத்து வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. வழக்கு சாதகமாகும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். வி.ஐ.பி.க்களும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். கூட்டுத் தொழிலில் புது முதலீடுகளைச் செய்வீர்கள். பங்குதாரர்கள் உங்களுடைய கருத்துகளை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக்கொள்வார்கள்.
கேதுவின் பலன்கள்
இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் இருந்துகொண்டு உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே சண்டையையும் உடல் நலக்குறைவையும் அடுக்கடுக்காகத் தந்தாரே! காரியத்தடை, மன உளைச்சல், டென்ஷன் எனத் தொல்லை தந்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்றும் சக்தியைக் கொடுப்பார். ஷேர் மூலம் பணம் வரும். சொத்து வாங்குவீர்கள். பழைய கடனையும் பைசல் செய்யுமளவுக்கு வருமானம் கூடும்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்
சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரை கேது பகவான் செல்வதால் யதார்த்தமாகப் பேசி சில வேலைகளை முடிப்பீர்கள். கண், காது, பல்வலி வந்துபோகும். அதிகாரத்தில் இருப்பவர்கள் உதவுவார்கள். தந்தையாருடன் சின்னச் சின்ன கருத்துமோதல்கள் வரும். வேலைச்சுமை அதிகரிக்கும். சோர்வு, களைப்பு வரும். தூக்கம் குறையும்.
சுக்கிரனின்பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். கணவன் மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். தாய்வழி உறவினர்களால் உதவியுண்டு. கேது பகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால், திடீர் செலவுகளால் திணறுவீர்கள். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள்.
விவசாயிகள் விளைபொருட்களுக்கான நியாயமான விலைகள் கிடைக்க பெறுவார்கள். கலைஞர்கள் பொருள், புகழ் போன்றவற்றை ஈட்டும் வாய்ப்புகளை பெறுவார்கள். பெண்களுக்கு தாய் வழியில் வர வேண்டிய சொத்துகள் வகையில் லாபம் ஏற்படும். கெட்ட நடத்தை உள்ள மாணவர்களிடம் இருந்து விலகி மாணவர்கள் கல்வியை ஆர்வமுடன் பயின்று சாதனைகள் செய்வர்
இந்த ராகு-கேது மாற்றம் அடிவாரத்தில் இருந்த உங்களை உச்சிக்குக் கொண்டு வருவதுடன் அனைத்து வளங்களையும் அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம்: பிரதோஷ நாளில் சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபடுவதுடன் புறாவுக்குத் தானியம் கொடுங்கள்.