Temples

Naga Dosham Temple in Tamilnadu | நாக தோஷத்தை விரட்டும் கோவில்கள்

Naga dosham temple in tamilnadu

நாக தோஷத்தை விரட்டும் கோவில்கள் – Naga dosham temple – ராகு, கேதுக்களை ‘கரும்பாம்பு’, ‘செம்பாம்பு’ என்று கூறுவதால் இந்த தோஷத்தை ‘நாக தோஷம்’ என்று சொல்வார்கள். நாகதோஷம் போக்கும் கோவில்களை பார்க்கலாம்.

 

(1) காளஹஸ்தி

ராகு, கேதுக்களை ‘கரும்பாம்பு’, ‘செம்பாம்பு’ என்று கூறுவதால் இந்த தோஷத்தை ‘நாக தோஷம்’ என்று சொல்வார்கள். நாகதோஷம் உள்ளவர்களுக்குக் காலா காலத்தில் திருமணம் நடைபெறாது; தள்ளிக்கொண்டே போகும்.

 

குழந்தை பிறக்காது; சிலருக்கு ஆண் குழந்தை பிறக்காது. சிலருக்குக் கர்ப்பம் தங்காது; கருச்சிதைவு ஏற்படும். சில பெண்களுக்குத் தாலி தங்காது.

இதனால் இதை களத்திர தோஷம் என்றும், மாங்கல்ய தோஷம் என்றும் புத்திர தோஷம் என்றும் கூறுவார்கள்.

 

ராகு கேது தோஷம், நாகதோஷம், களத்திர (திருமண) தோஷம், புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் எது இருந்தாலும் தகுந்த பரிகாரம் செய்து கொண்டு தோஷம் நீங்கி நன்மை பெற முடியும். அப்படிப்பட்ட பரிகாரத் தலங்களில் முதன்மையாக விளங்குவது ஆந்திராவில் உள்ள ‘காளத்தி’ எனப்படும் காளஹஸ்தி அங்கு நாள்தோறும் பரிகார பூஜை நடை பெறுகிறது.

 

சென்னையிலிருந்து திருப்பதிக்குச் செல்லும் சாலையில் காளஹஸ்தி உள்ளது. காளத்தி வேடனான கண்ணப்ப நாயனார் முக்தி பெற்ற இடம் இது.

மலையில் வாழ்ந்த ஒரு யானை இறைவனை வழிபட்டு முக்தி பெற்ற தால், ‘காளத்தி’ என்று பெயர் பெற்றது.

 

காளத்திநாதர் இங்கு நாகலிங்க வடிவில் காட்சி தருகிறார். இறைவன் நாக வடிவமாகக் காட்சி தருவதால், இது ராகு, கேது பரிகாரத்தலமாக

விளங்குகிறது.

நாள்தோறும் ராகு காலத்தில் தோஷ பரிகார பூஜை நடைபெறுவது இக்கோவிலில் உள்ள தனிச்சிறப்பு. இங்குள்ள ‘ராகு, கேது சாந்தி நிலையம்’ என்ற மண்டபத்தில் இந்த பூஜை நடக்கிறது. மண்டபத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து பரிகார பூஜை செய்யலாம். பரிகார மந்திரம் தமிழில் சொல்லப்படுவது தனிச்சிறப்பு ஆகும்.

 

பூஜைக்குரிய கட்டணத்தை முதலில் செலுத்தி சீட்டு வாங்கி வரிசையாகக் காத்திருக்க வேண்டும். பூஜைக்கு வேண்டிய துளசிப்பூ, வெள்ளெருக்கன் பூ, தர்ப்பை, அருகு போன்ற பூஜை சாமான்கள் கோவிலில் கொடுக்கிறார்கள்.

 

இது தவிர, கோவிலினுள்ளே இன்னொரு பரிகார பூஜை நடக்கிறது. மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம், ராகு, கேது தசாபுக்தி நடப்பவர்கள் இந்த சிறப்புப் பூஜையில் கலந்து கொள்கிறார்கள்.

 

காளஹஸ்தி கோவிலில் மிகப்பெரிய விசேஷம் என்னவெனில் அது வாயு ஸ்தலம் என்பதை விட சர்ப்பதோஷ சாந்தி ஸ்தலம் என்பதுதான் விசேஷம்.

காரணம் அங்குள்ள அம்பாளுக்கு 180 டிகிரி நேர் கீழாக- எதிர்புறத்தில் பாதாள விநாயகர் இருக்கிறார்.

 

அந்த பாதாள விநாயகர் கோவில் அமைப்பு கூட – பாம்பின் புற்றின் தலை போல் சிறியதாக அமைந்திருக்கும். பாம்பு புற்றுக்குள் செல்வதைப் பார்த்தால் ஒரு உண்மை விளங்கும்.

 

முதலில் புற்றுக்குள் தலையை நுழைத்ததும் சட்டென்று தலையை வெளியே கொண்டு வந்து பின்பு தன் உடல், வால் புறத்தை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளும். இது இயற்கை. இதே போல் நாமும் இந்த பாதாள விநாயகர் கோவிலுக்குள் செல்லும்போது பாம்பைப் போல் தலையை முதலில் உள்ளுக்குள் நுழைத்து பின்பு மற்ற பாகங்களை நுழைந்து கொண்டு குனிந்து செல்ல வேண்டும்.

 

உள்ளே நுழைந்ததும் நாம் நிமிர்ந்து நடக்கலாம். கீழேயுள்ள விநாயகருக்கு நாமே நமது கையால் அர்ச்சனையோ அபிஷேகமோ பூச்சூடுவதோ செய்யலாம். இந்த விநாயகர் கேது சொரூபம்.

 

(2) திருநாகேஸ்வரம் :

 

நாக தோஷத்துக்கு மிகச் சிறந்த பரிகாரத்தலம் – திருநாகேஸ்வரம் கும்பகோணத்துக்குக் கிழக்கே காரைக்கால் செல்லும் பேருந்து மாக்கத்தில் சுமார் ஆறு கி.மீ தூரம் சென்றால் திருநாகேசுவரத்தை அடையலாம்.

 

நாகேசுவரம் கோவில் மிகப் பெரிய கோவில். நாற்திசைக் கோபுரங்களும், மண்டபங்களும், கற் தூண்களும், அரிய சிற்பங்களும் நம்மை அசத்தும்.

சந்நிதி நிறைந்த கூட்டம் கால சர்ப்பதோஷம், நாக தோஷம், ராகுதசை, இராகுபுத்தி இவற்றினால் முன்னேற்றம் காண இயலாதவர், ராகுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து சாந்தி பெற தினமும் இங்கு திரள்கிறார்கள்.

 

கருவறையில் வீற்றிருப்பவர் சண்பகாரணியே சுவரர். இவரே நாகநாதமூர்த்தி என்ற பெயரிலும் மூர்த்தி கரகமாக வீற்றிருக்கிறார். ஐந்து தலை பாம்பு வழிபட்ட மூர்த்தி யாதலினாலே நாகநாதர் என்ற பெயரையே சிறக்கத் தாங்கியருளுகிறார்.

 

நாகநாதர் சந்நிதியை அடுத்துள்ள சந்நிதியில் சண்முகப் பெருமானும், சண்முகப் பெருமானது சந்நிதியை அடுத்து பிறையணிவாள் நுதல் அம்மை யார் சந்நிதியையும் காணலாம்.

 

இப்படி ஐயன் இடையே குமரன், அடுத்து அம்பிகையும் காட்சியளிப்பதால் சோமாஸ் கந்தர் அமைப்புடைய கோயில் எனப்படுகிறது. இத்தலத்தில் மற்றொரு பிராட்டியார் தலத்தின் பெரும் பிராட்டியாராக தனிக் கோயில் ஒன்றில் தவக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். குன்றாமுலை நாயகியாகிய இந்த அம்மையின் இரு மருங்கும் கலைமகளும் திருமகளும் அணிபெற காட்சி அளிப்பது சிறப்பு.

 

பெரும்பாலும் அர்த்த நாரீஸ்வரர் நின்ற வண்ணம் காட்சியளிப்பதே வழக்கம், இதற்கு மாறாக அப்பொருமான் இங்கே வீற்றிருந்த கோலத்திலேயே ஒரு காலை தொங்க விட்டும் மற்றொரு காலை பீடத்தின் மீது ஊன்றியும், வெகு சொகுசாக அமர்ந்திருப்பதைக் காணலாம். விநாயகர், நான்முகன், இந்திரன் முதலிய தேவர்களும், வசிட்டர், கவுதமர், பராசரர் முதலான முனிவர்களும், பாண்டவர், நளன் முதலிய மன்னர்களும் வழிபட்டு பலன் அடைந்துள்ளனர்.

 

இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத் தின் தென் மேற்கு பகுதியில் ஐந்து தலை பாம்பு நாக ராஜா என்று அழைக்கபெறும் ராகு பகவான் சந்நிதி சிறக்க அமைந் துள்ளது. மக்கள் திரள் திரளாக வந்து ராகு பகவானின் அருளாசியை பெறுகிறார்கள்.

 

மடித்த கால் ஒன்றின் தொடையில் இடக்கரத்தை ஊன்றி வலக்கரத்தால் அபயமளிக்கும் மாதெய்வமாக வீற்றிருக் கிறார். பாலாபிஷேகம் கண்டருளும் போதெல்லாம் பாலை நீல நிறமாக செய்து திருவிளையாடல் புரிகிறார். ராகுபகவானின் அரசருக்கேற்ற அரசிகளாக இரு தேவியர் உள்ளனர். நாகவல்லி நாக கன்னி என்பது அவர்கள் பெயர். இப்படி குடும்ப சமேத ராய் காட்சி அளிப்பது அரிய காட்சி. இவ்விதம் தேவியர் புடைசூழ வீற்றிருக்கும் இத்தல ராகுபகவானுக்கு நம்மனம் குளிர சிறப்பு செய்தால் நாக தோஷம் உடனே விலகிவிடும்.

 

(3) திருப்பாம்புரம் :

 

மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மி.தொலைவில் திருபாம் புரம் பாம்பு புரேஸ்வர் ஆலயம் உள்ளது. கும்பகோணம் – காரைக்கால் சாலை வழிப்பாதையில் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மீ. சென்றும் இத்தலத்தை அடையலாம்.

 

திருப்பாம்பரம் ஒரு ராகு – கேது நிவர்த்தி ஸ்தலம்.

 

குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்பரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது தலமகாத்மியம்.

 

ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக அதவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்கிகிறது. மேலும் சிவராத்திரி அன்று இரவில் ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும்.

 

மேலும் ஆதிசேஷன், பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூஜை செய்த தலம், இந்திரன் சாபம் நீங்கிய தலம், கங்கை பாவம் தொலைந்த தலம், சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்ட தலம் இதுவாகும்.

 

ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 2-ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 8-ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி கோவில் அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

 

தல வரலாறு:

 

கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன.

 

சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருபாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார். அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருபாம்புரம் பாம்புர நாதரரையும், நானகாம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.

 

இவ்வாலயத்தின் இராஜகோபுரம் 3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இராஜகோபுரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் இருக்கிறது. இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள பாம்பு புரேஸ்வரரை வழிபட்டால் எல்லா வகையான நாக தோஷங்கள் விலகி விடுகின்றன. மூலவர் பாம்புபுரேஸ்வரர் கிழக்கு நோக்கி நாக கவசம் சாற்றப்பட்டு காட்சி தருகிறார். அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் ஒரு கையில் தாமரை மலரையும் மற்றொரு கையில் ருத்திராக்ஷ மாலையுடனும் அபய முத்திரையுடன் காட்சி தருகிறாள்.

 

இக்கோவிலில் உள்ள சட்டநாதர் சந்நிதியும், மலையீஸ்வரர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது. தலவிநாயகர் ராஜராஜ விநாயகர் சந்நிதி, தேவார மூவர் சந்நிதி, சனீஸ்வரன் சந்நிதி ஆகியவை இங்குள்ள மற்ற சந்நிதிகளாகும். திருவீழிமிழலை என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து அருகில் இருக்கிறது. இத்தலத்து கோவிலின் பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்த்தால் திருவீழிமிழலை கோவில் விமானம் தெரியும் என்று கூறப்படுகிறது.

 

ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால் இன்றும் கோவிலின் உள்ளே பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக கூறுகிறார்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்பரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது.

 

(4) கீழ்ப்பெரும்பள்ளம்

 

கேதுவுக்கான பரிகார தலம் நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம் பாடி வட்டத்தில் கீழ்ப்பெரும் பள்ளம் என்ற இடத்தில் உள்ளது. கிழக்கு நோக்கிய கோவில். இதற்கு ராஜகோபுரம் கிடையாது. கோவிலின் முன்பு நாகத் தீர்த்தம் அமைந்துள்ளது. அதன் கீழ்க்கரையிலும், மேல்கரையிலும் அரசும் வேம்பும் உள்ளது. நாகதோஷ முள்ளவர்கள் இம்மரத்தடியில் நாகப் பிரதிஷ்டை செய்யலாம். கோவிலைச் சுற்றி உயரமான மதில்கள் உள்ளன.

 

ஆலயத்தின் உள் நுழைந்து வலது பிரகாரத்திற்கு வந்தால் மேற்குப் பிரகாரத்தின் திருமாளிகைப் பத்தியில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி, துர்க்கை, லட்சுமி நாராயணர், மகேஸ்வரி, கஜலட்சுமி ஆகிய தெய்வங்களைக் காணலாம். கிழக்குப் பிரகாரத்தில் திருமாளிகைப் பத்தியில் சனீஸ்வரர், பைரவர், சம்பந்தர், நாகர், சூரியன் முதலானோர் சந்நிதிகள் உள்ளன. இங்கு மேற்கு நோக்கிய நிலையில் கேது எழுந்தருளியுள்ளார்.

 

தேகம் தெய்வ வடிவிலும் தலை ஐந்து தலை நாக வடிவிலும் இருகைகளும் கூப்பிய நிலையில் உள்ளார். இவரை வழிபட்ட பின் மூலவர் சந்நிதிக்கு எதிரே உள்ள நந்தியையும் பலிபீடத்தையும் வணங்கி மஹா மண்டபத்தில் உள்ள கருவறையில் எழுந்தருளி இருக்கும் லிங்கவடிவில் உள்ள நாகநாத சுவாமியையும் தரிசிக்கலாம்.

மூலவரை வணங்கியப்பின் அர்த்த மண்டபத்திலுள்ள, பஞ்சமூர்த்திகள், நடராஜப் பெருமாள் மற்றும் கேது ஆகிய தெய்வங்களைத் தரிசித்து, திரும்ப மஹா மண்டபத்திற்கு வரும்போது தெற்கு நோக்கியுள்ள சந்நிதியில் சவுந்தர நாயகியைத் தரிசிக்கலாம். இத்திருக்கோவில் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்து இருக்கும். நாலு காலப் பூஜை இங்கு நடைபெறுகிறது.

 

இத்தலத்திற்குச் செல்ல சீர்காழியிலிருந்து திருவெண்காடு வந்து அங்கிருந்து இத்தலத்திற்குச் செல்லலாம்.

 

மண் மருது

 

நெல்லை மாவட்டத்தில் உள்ளது சங்கரநாராயணர் ஆலயம். இங்கு அருளும் கோமதியம்மன் சந்நிதியின் புற்று மண் தீரா நோய் தீர்க்கும் மாமருந்து. வீடுகளில் விஷ பூச்சிகள் வராமல் இருக்க வெள்ளியினாலான பாம்பு, தேள் போன்ற உருவங்களை உண்டியலில் செலுத்துகிறார்கள். இவ்வாறு செலுத்தினால் நாகதோஷம் நீங்கப்பெறுவர்.

 

சித்ர குப்தரை வழிபடுங்கள்

 

மதுரையிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள கோடங்கிபட்டியில் அருளும் சித்திரகுப்தரை பவுர்ணமி தினங்களில் வழிபட்டால் கேது தோஷம் நீங்குகிறது. கேதுவின் அதிதேவதை சித்திரகுப்தர் ஆவார்.

 

தடைகள்விலகும்

 

சென்னை, பல்லாவரத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருநீர்மலை. இங்கு குளக்கரையில் தூமகேது கணபதி அருள்கிறார். தூமம் ராகுவையும் கேது கேதுவையும் குறிக்கும். ராகு-கேது அம்சமாய் விளங்கும் இவரை தரிசித்தால் அரவு கிரகங்களால் ஏற்படும் சுபகாரியத் தடைகள் விலகி மங்களங்கள் உண்டாகும்.

 

புனுகு சட்டம் சாற்றுங்கள்

 

நாகப்பட்டினம், வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 3 கி.மீ மணல்மேடு வழியில் கோயில் கொண்டிருக்கிறார் புற்று வடிவான சிவலோகநாதர். இவருக்கு திங்கட்கிழமைகளில் புனுகுச்சட்டம் சாற்றி வழிபட ராகு-கேது தோஷங்கள் விலகுகின்றன.

 

(5) திருவேற்காடு

 

சென்னை-பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில், வேலப்பன் சாவடி என்ற இடத்திற்கு அருகே திருவேற்காடு என்ற இடம் உள்ளது. இங்கு தேவி ஸ்ரீகருமாரி அம்மன் இரண்டு வடிவம் கொண்டு பக்தர்களை காக்க எழுந்தருளியுள்ளாள். ஓர் உருவத்தில் நாகப்பாம்பாக தோற்றம் அளித்து காக்கின்றாள்.

 

இரண்டாவது உருவத்தில், அம்பிகையாக- சுயம்புவாக அழகிய உருக்கொண்டு, நம்பும் பக்தர்களை பரிவுடன் காக்க தோன்றியுள்ளாள். ஒரு காலத்தில் பூவுலகில் ஈஸ்வரனும் அம்பிகையும் வாழ்ந்தனர். அகத்தியர் தேவியையும், ஈசனையும் வரவேற்று அன்புடன் உபசரித்தார்.

 

எழில்மிகு பாரத பூமியைக் கண்ட தேவி, பூவுலகில் தங்க விரும்பி அகத்தியரிடம் – தனக்கு ஐந்தொழில்களான ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை திறம்பட செய்திட சரியான இடத்தினை தேர்ந்தெடுக்கும்படி தன் விருப்பத்தைத் தெரிவித்தாள். அகத்தியரும் திருவேற்காடு என்ற பகுதியே அதற்கு சரியான இடமென்று கூறினார்.

 

தேவியும் மனம் மகிழ்ந்து காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, அந்தரக்கன்னி, ஆகாயக்கன்னி கருமாரி போன்ற எழில் கோலங்களுடன் ஏழு உருவங்களாக மாறிமாறித் தோன்றினாள்.

 

இவைகளில் கருமாரி என்ற அழகிய வடிவம் கொண்டு திருவேற்காட்டில் நிலைபெற்றாள். கருமாரி தெய்வமாக அம்மா- சுயம்பு உருவமாகவும் நாக உருவம் கொண்டும் இரண்டு வடிவத்தில் கருணைக்கடலாக காட்சியளிக்கிறாள்.

 

கருமாரி அம்மன் ஆலயம் அருகில் கரு நாகப்புற்று ஒன்று உள்ளது. பக்தர்கள் இந்தப் புற்றில் பால் ஊற்றி வழிபடுகின்றனர். அம்பிகை நாகரூபமாக இருப்பதாலும், புற்று வழிபாடு இருப்பதாலும் ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு தங்களது தோஷம் நீங்க வழிபடலாம்.

 

இந்த ஆலயத்தில் அம்மன் தனிச் சன்னதியில் காட்சி தருகிறார். இந்த அம்மனை வழிபட்டால், கடன் நீங்கி வளம் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

 

போகர் கூறிய நாகதோஷ பரிகாரம்

ஆன்மீக வினா விடைகள்

Share
ஆன்மிகம்

Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    மஞ்ச பொடவ கட்டி பாடல் வரிகள் | Manja Podava Katti song lyrics tamil

    மஞ்ச பொடவ கட்டி பாடல் வரிகள் | Manja Podava Katti song lyrics tamil மண்ணளந்த காளி அவள்… Read More

    10 hours ago

    மலையனூரு அங்காளியே பாடல் வரிகள் | Malayanooru Angaliyae amman song lyrics tamil

    மலையனூரு அங்காளியே  பாடல் வரிகள் | Malayanooru Angaliyae song lyrics in tamil மலையனூரு அங்காளியே பாடல் வரிகள்… Read More

    1 hour ago

    தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் | Onnam padi eduthu song lyrics in tamil

    தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் - Onnam Padi Eduthu Song lyrics தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் அல்லது… Read More

    11 hours ago

    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா | Karthigai deepam tiruvannamalai

    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா! Karthigai deepam tiruvannamalai   🏕✅ தினமும் பக்தர்களால் கூட்டம் நிரம்பி வழியும் மலை திருவண்ணாமலை.… Read More

    10 hours ago

    ஆடுக நடனம் ஆடுகவே சிவன் பாடல் வரிகள் | Aaduga nadanam lyrics in tamil

    ஆடுக நடனம் ஆடுகவே சிவன் பாடல் வரிகள் | Aaduga nadanam lyrics in tamil ஆடுக நடனம் ஆடுகவே… Read More

    1 week ago

    பகவான் ஶ்ரீ  கிருஷ்ணரை பற்றி 50 குறிப்புகள்

    பகவான் ஶ்ரீ  கிருஷ்ணரை பற்றி 50 குறிப்புகள் அருமையான பதிவு, முழுவதும் படியுங்கள் ..   1. மகாவிஷ்ணு எடுத்த… Read More

    3 weeks ago