பழி அஞ்சின படலம் | Pazhi Anjina padalam story – Thiruvilaiyadal

பழி அஞ்சின படலம் (Pazhi Anjina Padalam) இறைவனான சோமசுந்தரர், கொடும்பழிக்கு அஞ்சிய குலோத்துங்க பாண்டியனுடைய தெளியாத மனத்தினைத் தெளிவித்த நிகழ்வினைப் பற்றிக் கூறுகிறது.

ஊழ்வினையால் நிகழ்ந்த அந்தணப்பெண்ணின் மரணம், பெண்ணின் மரணத்திற்கான காரணம்என வேடனை எண்ணுதல், குலோத்துங்கன் இறைவனின் திருவருளால் எமதூதர்களின் மூலம் உண்மையை உணர்தல் ஆகியவை இதில் விளக்கப்பட்டுள்ளன.
பழி அஞ்சின படலம் திருவிளையாடல் புராணத்தில் மதுரைக் காண்டத்தில் இருபத்து ஐந்தாவது படலமாக அமைந்துள்ளது.

வேதியனின் மதுரையை நோக்கிய பயணம்
வெள்ளியம்பலவாணரின் கால் மாறிய நடனத்திற்கு காரணமான இராசசேகரப் பாண்டியனுக்குப் பின் குலோத்துங்கப் பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தான்.
அப்போது மதுரையை அடுத்த திருப்பத்தூரில் வேதியன் ஒருவன் தனது மனைவி குழந்தையுடன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மதுரையில் இருக்கும் தனது மாமன் வீட்டிற்கு காட்டின் வழியாக வந்து கொண்டிருந்தான்.
அவ்வாறு வரும்போது வேதியனின் மனைவிக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. எனவே வேதியன் தனது மனைவி மற்றும் குழந்தையை ஒரு ஆலமரத்தின் நிழலில் விட்டுவிட்டு தான் மட்டும் தண்ணீர் தேடிச் சென்றான்.
இலைகள் நிறைந்த ஆலமரத்தில் முன்னொரு நாளில் யாரோ ஒரு வேடன் விட்ட அம்பு சிக்கிக் கொண்டு இருந்தது. ஆலமர இலைகளில் அம்பு சிக்கி இருந்ததை அப்பெண் கவனிக்கவில்லை.
வேதியனின் மனைவி தனது குழந்தையை அருகில் விட்டுவிட்டு ஆலமரத்தின் நிழலில் அயர்வுடன் படுத்தாள். காற்றினால் அசைந்து அக்கூரிய அம்பு கீழே படுத்திருந்த வேதியனின் மனைவியின் வயிற்றில் ஊடுருவியது.
ஊழ்வினையால் வேதியனின் மனைவி மாண்டாள். அப்பொழுது ஆலமரத்தின் மற்றொரு புறத்தில் வேடன் ஒருவன் இளைபாறிக் கொண்டிருந்தான். அவ்வேடன் மரணமடைந்திருந்த வேதியனின் மனைவியைக் கவனிக்கவில்லை.

அரசனிடம் சென்று முறையிடுதல்
தண்ணீர் தேடிச் சென்ற வேதியன் தண்ணீருடன் ஆலமரத்தடிக்கு திரும்பினான். அங்கே அவனுடைய மனைவி அம்பால் கிழிக்கப்பட்டு இறந்து கிடந்ததையும், அவனுடைய குழந்தை அருகில் விளையாடிக் கொண்டிருந்ததையும் கண்டான்.
பின் வேதியன் மரத்தைச் சுற்றிப் பார்த்தபோது இளைபாறிய வேடனைக் கண்டான். அவ்வேடன்தான் தன்னுடைய மனைவியைக் கொன்றதாகக் கருதி அவனை அரசனிடம் முறையிட அழைத்தான்.
அவ்வேடனோ தனக்கும், வேதியன் மனைவியின் இறப்பிற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தான். ஆனால் வேதியனோ வேடனின் அம்பால்தான் தன்மனைவி இறந்தாகக் கருதி அவனை வல்லுக்கடாயமாக அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.
அரண்மனையை அடைந்த வேதியன் குலோத்துங்கப் பாண்டியனிடம் நடந்தவைகளைக் கூறி தன்னுடைய மனைவியின் இறப்பிற்கு இவ்வேடனே காரணம் என்று கூறினான்.
குலோத்துங்கப் பாண்டியனும் வேடனிடம் விசாரிக்க வேடனோ தனக்கும் வேதியன் மனைவியின் இறப்பிற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தான்.
அரசனோ வேடனை சந்தேகப்பட்டு சிறையில் அடைத்தான். சிறையில் வேடனை சித்திரவதை செய்தபோதும் வேடன் வேதியனின் மனைவியைக் கொல்லவில்லை என்பதையே கூறினான்.
இதனை அறிந்த மன்னன் மிகவும் வேதனையடைந்து சோமசுந்தரரின் சந்நிதியை அடைந்து இறைவனிடம் ‘வேதியன் மனைவியின் இறப்பில் உள்ள சந்தேகத்தை தீர்த்தருள’ வேண்டினான்.

குலோத்துங்கப் பாண்டியனின் சந்தேகம் நீங்கியது
அப்போது இறைவன் “பாண்டியா, கவலை வேண்டாம். மதுரை நகரில் உள்ள செட்டி தெருவில் இன்று திருமணம் நடைபெற உள்ளது. நீ அங்கு வேதியனோடு வருவாயாக. அங்கே வேதியன் மனைவியின் இறப்பில் உள்ள சந்தேகம் தீரும்” என்று திருவாக்கு அருளினார்.
இறைவனின் திருவாக்கின்படி குலோத்துங்கப் பாண்டியனும், வேதியனும் செட்டிதெருவில் நடைபெற இருந்த திருமண மண்டபத்தினை அடைந்தனர். அப்போது இறைவனின் திருவருளால் எமதூதர்கள் பேசுவதை குலோத்துங்கப் பாண்டியனும், வேதியனும் கேட்டனர்.
எமதூதர்களில் ஒருவன் “இங்கே மணமகனாக அமர்ந்திருப்பவனின் உயிரினை எடுத்துவர நமது தலைவர் கட்டளையிட்டுள்ளார். எவ்வாறு இவனுடைய உயிரினை எடுப்பது?” என்று கேட்டான்.
அதற்கு மற்றவன் “ஆலமரத்தில் சிக்கியிருந்த கூரிய அம்பினை காற்றால் அசைத்து கீழே படுத்திருந்த வேதியன் மனைவியின் வயிற்றினை கிழிக்கச் செய்து அவளுடைய உயிரினை எடுத்தோம் அல்லவா?.
அதுபோல திருமண மண்டபத்திற்கு வெளியில் நிற்கும் கன்று ஈன்ற பசுவிற்கு இவ்விழாவின் ஆரவாரத்தால் கோபம் மூட்டி, மணமகனை முட்டச் செய்து அவனுடைய உயிரினைப் பறிப்போம்.” என்று கூறினான்.
எமதூதர்களின் பேச்சினைக் கேட்ட குலோத்துங்கப் பாண்டியனும் வேதியனும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது வேதியன் அரசனிடம் “இங்கு கூறியபடியே மணமகன் இறந்தால் என் மனைவியும் அவ்வாறு இறந்ததாக ஏற்றுக் கொள்வேன். ஆகையால் இங்கு நடக்கும் நிகழ்ச்சியைக் காண்பேன்” என்றான்.
குலோத்துங்கப் பாண்டியனும், வேதியனும் அங்கே நடப்பதை அறிய இருந்தனர்.
திருமண விழாவிற்காக எல்லோரும் கூடினர். அங்கே பலவித இசைக்கருவிகள் முழங்கின. இதனால் அவ்விடத்தில் பேரிரைச்சல் ஏற்பட்டது.
பேரிரைச்சலால் கன்று ஈன்ற பசு கோபம் கொண்டு திருமணம் நடக்கும் இடத்திற்குள் புகுந்தது. மக்கள் எல்லோரும் நாலாபக்கமும் சிதறி ஓடினர்.
பசுவானது மணமகனை கோபத்தில் முட்டியது. மணமகன் அவ்விடத்திலேயே இறந்தான். இதனைக் கண்ட வேதியன் பெரிதும் வருத்தம் கொண்டான்.
அரசன் அரண்மனையில் எல்லோருக்கும் நடந்தவைகளை விளக்கிக் கூறினான். வேதியனுக்கு பொன்னும் பொருளும் அளித்து மறுமணம் செய்து கொள்ளச் சொன்னான்.
வேடனை விடுதலை செய்து “என்னுடைய பிழையைப் பொறுத்துக் கொள்வாயாக” என்று கூறி அவனுக்கு பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பினான்.
குலோத்துங்கப் பாண்டியன் திருக்கோவிலை அடைந்து “எம்பெருமானே எனக்காக தாங்கள் பழி அஞ்சிய நாதராய் இருந்தீர்” என்று கூறி பலவாறு போற்றி வழிபட்டான்.

பழி அஞ்சின படலம் கருத்து
நம்முடைய முன்வினைப் பயனையே இப்பிறவியில் நாம் அனுபவிக்கிறோம். முற்பிறவியில் செய்த பாவங்களால் நம்முடைய மரணம் துர்மரணமாக அமையும். ஆதலால் நம்மால் இயன்றவரை அடுத்தவர்களுக்கு துன்பம் இழைக்கக்கூடாது.
இக்கதையானது நம் பெரியோர் கூறும் ஏமன் பழி சுமக்க மாட்டான் என்பதை நினைவு படுத்துகிறது.