Arthamulla Aanmeegam

பொன், பொருள், புகழ் தரும் லலிதா சகஸ்ரநாமம் | Lalitha sahasranamam reading benefits tamil

பொன், பொருள், புகழ் தரும் லலிதா சகஸ்ரநாமம்… Lalitha sahasranamam reading benefits

எத்தனை தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் இருந்தாலும் அம்பிகையினை குறிப்பிடும் பொழுது ‘லோக மாதா’ என்றே குறிப்பிடுவர்.

நம்நாட்டில் இந்துக்களின் வழிபாட்டு முறை நீண்ட கால பாரம்பரியம் கொண்டது. புராணங்கள், வேதங்கள் இவற்றினை தான் ஆணி வேராகக் கொண்டது. மாத விழாக்கள், வருட விழாக்கள் என தெய்வங்களை விடாது கொண்டாடும் வழிமுறை வந்தது.

கணபதி வழிபாடு, சுப்ரமண்ய வழிபாடு, சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு, அம்பிகை வழிபாடு கிராம முறை வழிபாடு என பல பிரிவுகளை கொண்டது. இதில் அம்பிகை வழிபாடு முறை நம் நாட்டின் மிகப்பெரிய கலாசார முறையாகும். எத்தனை தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் இருந்தாலும் அம்பிகையினை குறிப்பிடும் பொழுது ‘லோக மாதா’ என்றே குறிப்பிடுவர்.

Lalitha

பொதுவில் செவ்வாய், வெள்ளி என்ற வார நாட்களில் அநேக இந்து குடும்பங்கள் அம்பிகை பூஜை, அம்பிகை கோவில், விளக்கு பூஜை, மாவிளக்கு, நாகவழிபாடு, எலுமிச்சை விளக்கு என அம்பிகையின் வழிபாடு ஊரே களைகட்டி விடும்.

நவராத்திரியும், ஆடி மாதவழிபாடும் அம்பிகை வழிபாட்டில் பிரசித்தி பெற்றவை. இவை சக்தி வழிபாடு. அம்பிகையினை லலிதா திரிபுரசுந்திரியாகவும் தீமைகளை அழிக்கும் ‘காளி மாதா’ வாகவும் இருமுறைகளில் வழிபடுவர். அதில் ஆடி மாத ஆரம்பத்தினை தட்சணாயன புண்ய காலம் என்பர். அதாவது தேவர்களின் இரவு நேரம் என்பர் இக் காலத்தில் இறைவழிபாட்டிற்கே குறிப்பாக ‘அம்மாள்’ வழி பாட்டிற்கே முக்கியத்துவம் கொடுப்பர்.

மேலும் சூரிய வெப்பம் குறைய ஆரம்பிக்கும் காலம் இது. மழை ஆரம்பிக்கும் காலம் இது. அம்பிகை என்றாலே குளுமைதானே. ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு இவை அனைத்துமே சிறப்பு வாய்ந்தவை. ஆடிப்பூரம் ஆண்டாள் பிறந்ததினம். சைவ கோவில்களில் ஆடிப்பூரம் அன்று அம்பாளுக்கு வளையல் அணிவித்து கொண்டாடுவர்.

அம்பாளுக்கு இந்த வளையல் அணிவிப்பது அவரவர் சந்ததியினரை நன்கு காக்கும். தீமைகளை விலக்கி விடும் என்பது ஐதீகம்.
பவுர்ணமிக்கு முன்னர் வரும் வெள்ளிக்கிழமையை வரலட்சுமி பூஜையாக கொண்டாடுவர். கேட்கும் வரங்களை தரும் லட்சுமி என்ற பொருள் படும் பண்டிகை இது. அம்பாளை நினைத்து நாக தேவதையாக புற்றுக்கு பால் ஊற்றுவர்.

இப்படி கொண்டாடப்படும் காலங்களில் அபிஷேகங்கள் ஆராதனைகள், பூ அலங்காரம், மாலை நேரங்களில் பாட்டு கச்சேரி என நகரம், கிராமம் இரண்டுமே களை கட்டி நிற்கும். தமிழ்பாடல்கள், மகிஷாசூர மர்த்தி ஸ்லோகங்கள் அபிராமி அந்தாதி,லலிதா சகஸ்ரநாமம் என அவரவர் குடும்ப வழக்கத்திற்கேற்ப ஸ்துதிகளை மேற்கொள்வர். இதில் மிக விசேஷமாக போற்றப்படும் ‘லலிதா சகஸ்ரநாமம்‘ என்று அம்பிகையை ஆயிரம் நாமங்கள் கொண்டு துதிக்கும் முறையின் சிறப்பினை பற்றி சிறிதளவேனும் பார்ப்போம்.

லலிதா என்றால் ‘விளையாடுபவள்’ என்று பொருள் படும். ஆம் இந்த உலகில் அன்னை லோக மாதா நம் அம்மாதானே. அவ்வன்னையின் குழந்தைகள் நாம். நாம் ஏன் வாழ்க்கையை சுமையாகவும், கடினமாகவும் கொண்டு வாழவேண்டும். மகிழ்வாக, சகல நன்மைகளையும் நம் அன்னையிடம் பெற்று வாழ்ந்து பின் அன்னையையே சேர்ந்து விடலாம்.

லலிதா சகஸ்ரநாமம் பிரம்மாண்ட புராணத்தில் 36 வது பிரிவாக லலிதோபகன்யா என்று வருகின்றது. அகத்திய மாமுனிவருக்கும் ஹயக்கிரீவருக்கும் இடையே நடைபெறும் சம்பாஷனையாக இடம் பெற்றுள்ளது. ஹயக்கிரீவர் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் மறு உருவமே. ஹயக்கிரீவர் அகத்தியரிடம் லலிதமகா திரிபுர சுந்தரியின் மகிமைகளையும் விளையாடல்களையும் கூறுகின்றனர். ஸ்ரீபுரம் எனும் அம்பிகையின் இருப்பிடமான ஊரினைப்பற்றி விவரிக்கின்றார். அம்பிகையினை உச்சரிக்கும் மந்திரங்களின் மகிமையைப்பற்றிக் கூறுகின்றார்.

பஞ்சசடாஷ்சரி என ஒன்று படும் ஸ்ரீயந்த்ரம், ஸ்ரீவித்யா, லலிதாம்பிகா, ஸ்ரீகுரு மற்றும் தேவியை உபசரிக்கும், தேவியின் பணிகளைச் செய்யும் மற்ற தெய்வங்கள் தேவதைகளைப்பற்றி கூறுகின்றார். இத்தனையும் கூறினாலும் ஹயக்கிரீவர் அகத்தியரிடம் லலிதா சகஸ்ரநாமத்தினைப் பற்றிகூறவில்லை. அகத்திய மாமுனி பலமுறை ஹயக்கிரீவரிடம் கேட்ட பிறகே ஹயக்கிரீவர் அம்பிகையின் ஆயிரம் நாமங்களைப் பற்றிச் சொல்கின்றார். இதிலிருந்தே இந்த ஆயிரம் நாமங்களின் புனிதத்தினை நாம் உணரலாம் அல்லவா
ஒரு சமயம் லலிதாம்பிகை வாசினி மற்றும் வாக்கு

தேவதைகளை நோக்கி ‘நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்றேன். யார் யார் ஸ்ரீ சக்ரம், ஸ்ரீ வித்யா மற்றும் பிற மந்திரங்களை அறிந்தவர்களோ அவர்கள் என்னைப் பற்றிக் கூறும் ஆயிரம் நாமங்கள் கொண்ட சுலோகங்களை உருவாக்குங்கள். என் பக்தர்கள் இதனைச் சொல்லி என்னை வந்து அடையும் பாதையாக அமையட்டும் எனக் கூறினார்.

அதன்படி வாசினி உட்பட எட்டு வாக்கு தேவதைகள் மிக ரகசியமான மந்த்ரமாக ‘லலிதா சகஸ்ரநாமம்’ ஸ்லோகத்தினை உருவாக்கினர். ஒரு நாள் தன்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்தாள். இது கணக்கற்ற பரம்மாக்களும், கணக்கற்ற விஷ்ணுக்களும், கணக்கற்ற ருத்ரர்களும் மந்த்ரினி, டந்தினி போன்ற தேவதைகளும் அம்பிகையை கண்டு வணங்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதன் பின்னர் லலிதாம்பிகை வாசினி உட்பட எட்டு தேவதைகளையும் லலிதா சகஸ்ரநாமத்தினை உச்சரிக்க கண்களால் ஆணையிட்டாள்.

கைகளையும் கூப்பி அவர்கள் லலிதா சகஸ்ரநாமத்தினைக் கூற அனைவரும் தெய்வ அருளில் நனைந்தனர். லோக மாத மனம் குளிர்ந்து கூறினாள். ‘ குழந்தைகளே, வாசினி உட்பட எட்டு வாக்கு தேவதைகளால் கூறப்பட்ட இந்த சகஸ்ரநாமம் உலக நன்மைக்காக என் இசைவால் கூறப்பட்டது. இதனை படிப்பவர்கள் என்னை அடைந்து அனைத்து நன்மைகளையும் பெறுவர் என்றார். இன்று வரை லலிதா சகஸ்ரநாமம் மிக சக்திவாய்ந்த ஸ்லோகமாக பல தீமைகளை நீக்க, நன்மைகளைப்பெற வேண்டும் வழிபாட்டு முறையாக பின் பற்றப்படுகின்றது.

பக்தியோடு இதனைச் சொல்ல நோய் நீங்கும். லலிதா என்றால் அழகு என்றும் பொருள்படும். ஞான மார்க்கமாக வழிபடும் பொழுது ‘ஸ்ரீ வித்யா’ எனப்படும். ஞான அறிவு கிட்டும். அனைத்து ஆத்மாவினுள்ளும் இருக்கும் அம்பிகையினை உணர முடியும். அளவிடமுடியாத அம்பிகையின் அருளினை உணர முடியும்.

உள்ளுணர்வு கூடும். அந்த உள்ளுணர்வே அம்பிகைதான் என்று புரியும். சக்தி வழிபாட்டினை ‘ஸ்ரீ’ என்ற எழுத்தின் மூலம் வழிபடுவது ஸ்ரீவித்யா. பிரபஞ்சமே ஸ்ரீசக்கரம் தான். மந்த்ர, யந்த்ர, தந்தர என்ற மூன்றும் இணைந்ததே ஸ்ரீ வித்யா வழிபாடு. பிரம்ம வித்தையும், ஸ்ரீ வித்தையும் ஒன்றே.

லலிதாம்பிகையின் வழிபாட்டினை பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம் என எந்த முறையிலும் வழிபடலாம். இல்லற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம். துறவற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம். எல்லா வழியும் அம்பிகையின் வழிதான். அம்பிகையும் எவ்வழியிலும் செய்யும் வழிபாட்டினை ஏற்றுக்கொள்கின்றன. மனித உடலில் குண்டலினி சக்திதான் மிகவும் உயர்ந்தது. லலிதா சகஸ்ரநாமம் உடலில் உள்ள ஆறு சக்கரங்களையும் குண்டலினி சக்தியினையும் கூறுகின்றது.

‘லலிதாம்பிகை சிவ சக்தி ஒன்றாய் இணைந்தவள்’லலிதா சகஸ்ர நாமத்தினையும், ஸ்ரீவித்யாவினையும் படிக்க அரிய ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது உயர் பண்புகளை தன்னுள் வளர்த்துக் கொள்வோர் அனைவரும் படிக்கலாம். லலிதா சகஸ்ரநாமத்தின் முக்கியத்துவத்தின் மேலும் கூறும் பொழுது

* லலிதாசகஸ்ரநாமம் சொல்வது லலிதாம்பிகைக்கு மிகவும் பிடித்தமானது. வேதத்திலும், தந்திரத்திலும் இதற்கு நிகரானது இல்லை.

* இதனை தினமும் சொல்வது புனித நீரில் நீராடிய புண்ணியத்தினை தரும்.

* உணவுப்பொருள், நிலம், பசு தானம் செய்த புண்ணியம் கிடைக்கும்

* குழந்தைவரம் வேண்டுவோர் குழந்தை பாக்கியம் பெறுவர்.

* அன்றாடம் சொல்வதில் தீமைகள் விலகும்.

* பூஜை செய்யும் முறைகளில் செய்யும் தவறுகளால் ஏற்படும் பாவம் நீங்கும்.

* அன்றாட நித்திய பூஜை முறைகளையும், அவரவர் குடும்ப வழி பூஜைகளையும் செய்யாது இருப்போருக்கு ஏற்படும் பாவம் நீங்கும்.

* கிரக தோஷங்களால் ஏற்படும் தீமைகள் நீங்கும்.

* எதிரிகள் நீங்குவர்.

* வெற்றி கிட்டும்.

* பொன், பொருள், புகழ் சேரும்.

* லலிதா சகஸ்ரநாமம் அன்றாடம் சொல்வது ஒரு தவம்.

* இறைவனுக்கு வேறு எதனையும் அளிக்க வழி இல்லை. எனினும் இந்த நாமத்தினைச் சொல்வதே போதும்.

* தன்னம்பிக்கை கூடும்.

* லலிதாம்பிகையே ஸ்ரீகாளிமாதா, துர்காதேவி, பராசக்தி, பகவதி, பிரபஞ்சத்தின் தாய்.

* ஒவ்வொரு நாமமும் மிகவும் சக்தி வாய்ந்தது.

படிக்க ஆரம்பித்தால் 1000 நாமத்தினையும் முழுமையாக சொல்லி முடிக்க வேண்டும். பகுதி பகுதியாக இடைவெளி விட்டு சொல்ல வேண்டாம். காலை மாலை இருவேளையும் உகந்த நேரம். ஒருகுரு மூலம் ஆரம்பித்துக்கொள்வது மிகவும் நல்லது.

இத்தனை சக்தி வாய்ந்த லலிதாம்பிகை பற்றி பிரம்மாண்ட புராணத்தில் உள்ளது. பண்டாசுரன் என்ற மிக கொடிய அரக்கனை அம்பிகை அழித்ததனைப் பற்றிக் கூறுகின்றது. லலிதா சகஸ்ரநாமம் 1000 நாமங்களைக் கொண்டது. லலிதா த்ரிஸதி 300 நாமங்களைக் கொண்டது. அம்பிகையின் பெருமையினைப்பற்றி ஸ்ரீ ஆதி சங்கரரும், ஸ்ரீ பாஸ்கராச்சார்யா அவர்களும் உரை எழுதியுள்ளனர்.

வெகுகாலம் முன்பு நாரகாசுரன் என்ற அரக்கன் இருந்தான்.அவனது தீய சக்தியால் பிரபஞ்சத்தினை அவன் ஆட்டிப்படைத்தான். கந்த பிரானின் தோற்றமே இவ்வரக்கனை அழிக்க முடியும் என துன்பப்பட்ட தேவர்கள் உணர்ந்தனர். கந்தனின் பிறப்பு தாமதமாகியது. காரணம் சிவ பிரான் நீண்ட ஆழ்ந்த தவத்தில் இருந்தார். சிவபிரான் எழுப்ப வேண்டிய தேவர்கள் மன்மதனை வேண்டினர். மன்மதனும் அவ்வாறே செய்ய தவம் கலந்த கோபத்தால் சிவ பிரான் தன் நெற்றிக் கண்ணைத் திறக்க மன்மதன் சாம்பலானார். கூடவே கந்தனும் தோன்றினார் மன்மதன் மறைந்ததால் பூ உலகில் மனிதகுலம் தோன்றுவது தடைப்பட்டது.

இதனை உணர்ந்த சிவபிரான் ஆசிர்வாதத்தால் மன் மதன் உயிர் பெற்றான். கூடவே பண்டாசுரன் என்ற அரக்கனும் தோன்றினான். அவனால் மூவுலகமும் பாதிக்கப்பட்டது. சிவபிரானின் அறிவுரைப்படி இந்திரன் மிகப்பெரிய யாகம் ஒன்றினை செய்ய அந்த அக்னியிலிருந்து. லலிதாம்பிகை தோன்றினாள். பண்டாசுரனை அழித்தாள். சிவபிரானை மணந்தாள்.

இப்பிரபஞ்சத்தின் மகாசக்தி யான லலிதாம்பிகையை ‘ ஸ்ரீ மாத்ரே நமஹ’ என்று தாயாக வணங்கத்தான் ஸ்லோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. லலிதாம்பிகையின் அழகினை வர்ணிக்கப் படும் பொழுது நாம் அதில் லயித்து விடுவோம். கரிய நீண்ட கூந்தல், கஸ்தூரி திலகம், அன்பான கண்கள், அந்த கரு விழிகள் ஏரியில் மீன்கள் உலவுவது போல் உலவுகின்றன.

மூக்கில் நட்சத்திரங்கள் மின்ன காதில் சந்திர சூரியன் ஒளிர, கன்னங்கள் பளிங்காய் ஜொலிக்க, பளீர் என முத்துப்பற்கள் பிரகாசிக்க வாசனை கற்பூரம் சேர்த்த தாம்பூலம் தரித்தவளாய் காட்சி தருகின்றாள் என அம்பிகை விவரிக்கும் பொழுது மனம் அதில் ஒடுங்கும். அம்பிகையின் குரல் சரஸ்வதி மீட்டும் வீணையின் ஒலியினை விட இனிமை என்று படிக்கும் பொழுது மனம் அக்குரலைக் கேட்க ஆசைப்படும்.

அந்த புன்முறுவலின் அழகு கண்டு சிவபிரானே தன் கண்களை நகர்த்த முடியவில்லையாம். இப்படியெல்லாம் கூறப்படும் அம்பிகையினை நம் கவனத்தால் உள்ளுணர்வால் ஒருமித்து தியானம் செய்தால் காண முடியும் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அம்பிகையைப்பற்றி குறிப்பிடுகையில் ‘நான் ஒரு யந்திரம் நீயே அதனை இயக்குபவன்’ எனக் கூறியுள்ளார்.

இத்தனை பெருமைகள் நிறைந்த லலிதாம்பிகையை லலிதா சஹஸ்ரநாமம், லலிதாத்ரிஸதி சொல்லி வழிபட்டு அனைத்து உயர்வுகளும் பெறுவோமாக.

‘ஸ்ரீ மாத்ரே நமஹ

லலிதா சஹஸ்ரநாமம் பாடல் வரிகள்

லலிதா சகஸ்ரநாமம் படிப்பதால் கிடைக்கும் பலன்கள்

Share
ஆன்மிகம்

Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    மஞ்ச பொடவ கட்டி பாடல் வரிகள் | Manja Podava Katti song lyrics tamil

    மஞ்ச பொடவ கட்டி பாடல் வரிகள் | Manja Podava Katti song lyrics tamil மண்ணளந்த காளி அவள்… Read More

    3 hours ago

    மலையனூரு அங்காளியே பாடல் வரிகள் | Manjalilae neeradi song lyrics

    மலையனூரு அங்காளியே  பாடல் வரிகள் | Malayanooru Angaliyae song lyrics in tamil மலையனூரு அங்காளியே பாடல் வரிகள்… Read More

    3 hours ago

    தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் | Onnam padi eduthu song lyrics in tamil

    தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் - Onnam Padi Eduthu Song lyrics தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் அல்லது… Read More

    4 hours ago

    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா | Karthigai deepam tiruvannamalai

    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா! Karthigai deepam tiruvannamalai   🏕✅ தினமும் பக்தர்களால் கூட்டம் நிரம்பி வழியும் மலை திருவண்ணாமலை.… Read More

    3 hours ago

    ஆடுக நடனம் ஆடுகவே சிவன் பாடல் வரிகள் | Aaduga nadanam lyrics in tamil

    ஆடுக நடனம் ஆடுகவே சிவன் பாடல் வரிகள் | Aaduga nadanam lyrics in tamil ஆடுக நடனம் ஆடுகவே… Read More

    7 days ago

    பகவான் ஶ்ரீ  கிருஷ்ணரை பற்றி 50 குறிப்புகள்

    பகவான் ஶ்ரீ  கிருஷ்ணரை பற்றி 50 குறிப்புகள் அருமையான பதிவு, முழுவதும் படியுங்கள் ..   1. மகாவிஷ்ணு எடுத்த… Read More

    3 weeks ago