சிவபெருமானின் பாதம் பார்க்க வேண்டுமா?

மதுரை மீனாட்சி அன்னை உடனுறை சொக்கநாத பெருமான் ஆலய சன்னிதியில் உள்ள வெள்ளியம் பல நடராஜரின் சபைக்கு நீங்கள் சென்றால் சிவனின் பாதத்தை பார்க்க முடியும்.

சிவபெருமான் பார்வதி தேவிக்கு தனது உடலில் இடப்பாகத்தை வழங்கி அர்த்த நாரீஸ்வரராக ஆனது உங்கள் எல்லோருக்கும் தெரியும்தானே!

அர்த்த நாரீஸ்வர தத்துவத்தின்படி சிவபெருமானின் இடப்பகுதி, அம்பாளின் அம்சமாகும்.

எனவே சிவனின் இடக்கால் அம்பிகைக்குரியது ஆகிறது.

நடராஜர், தமிழகத்தில் உள்ள ரத்ன சபையான திருவாலங்காடு, பொன்னம்பலமான சிதம்பரம், தாமிர சபையான திருநெல்வேலி, சித்திர சபையான குற்றாலம் ஆகிய இடங்களில் இடது காலை,
தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது ஏன் தெரியுமா?

மனைவி மேல் கொண்ட பாசத்திற்காக!

இதென்ன புதுக்கதையாக இருக்கிறதே என்று நினைக்கின்றீர்களா?

நடராஜரின் வலது கால், முயலகன் என்பவன் மீது இருக்கிறது.

இவனை, அபஸ்மாரன்’ என்பர்.

இவன் வளைந்து நெளிந்து, அஷ்ட கோணலாகப் படுத்திருப்பான்.

அபஸ்மாரம்’ என்றால், வளைந்து நெளிதல்’ என்பர்.

காக்கா வலிப்பு நோய் வந்தவருக்கு, கையும், காலும் இழுத்து, எந்த நிலையில் தரையில் கிடப்பாரோ, அப்படி ஒரு நிலை.

முசலகம்’ என்றால், காக்கா வலிப்பு!’

இதனால், அவன், முசலகன்’ என்றாகி, தமிழில் முயலகன் ஆனான்.

முயலகன், ஆணவத்தைக் குறிப்பவன்.

மனிதனுக்கு, தன்னிடமுள்ள அகங்காரத்தை,
நடராஜர், காலில் இட்டு மிதித்திருப்பது போல், தனக்குள் புதைத்துக் கொள்ள வேண்டும்.

அதை, வெளியே காட்ட அனுமதிக்கவே கூடாது என்பது இதன் தத்துவம்.

நடராஜரின் தூக்கிய
இடது காலை, குஞ்சிதபாதம்’ என்பர்.

குஞ்சிதம்’ என்றால், வளைந்து தொங்குதல்’ எனப் பொருள்.

ஆம்!அவரது இடது கால் வளைந்து தொங்குகிறது.

தஞ்சாவூரில், பாபவிநாச முதலியார் என்ற கவிஞர் வசித்தார்.

அவர், பாடல் ஒன்றில், நடராஜர், ஏன் இடது காலைத் தூக்கியிருக்கிறார் என்பதற்கு, பல காரணங்களைச் சொல்கிறார்…

சக்தி சிவகாமவல்லி தன் பாதம் நோகுமென்றே தரையில் அடிவைக்க தயங்கி நின்றதுவோ?’ என்பது அதில் ஒரு வரி.

நடராஜரின் துணைவியான சிவகாமி, அவர் அருகில், இரண்டு கால்களையும் நன்றாக ஊன்றித்தான் நிற்கிறாள்.

ஆனால், அவளுக்கு பாதம் வலிக்குமென, இவர் காலை தூக்கிக் கொண்டாராம்.

எப்படி தெரியுமா?
சிவனே, நடராஜர் எனும் பெயரில் நடனமாடுகிறார்.

அவரது இடது பாகத்தை, தன் மனைவிக்கு கொடுத்து விட்டார்.

இவர் நடனமிடும் போது, மனைவிக்குரிய இடது பாதம், தரையில் பட்டால் வலிக்குமே என, காலை உயர்த்திக் கொண்டாராம்.

எவ்வளவு உயரிய பாசம் பார்த்தீர்களா!

இந்த இடத்தில், சிவகாமி அம்மையார் பற்றி, மற்றொரு தகவலையும் அவர் சொல்கிறார்.

சிவகாமியை, சிவகாமவல்லி’ என்று அவர் அழைக்கிறார்.

வல்லி’ என்றால், கொடி!’ கொடி வளைந்து வளைந்து படர்ந்திருக்கும் தன்மையுடையது.

அதனால், பெயருக்கேற்றாற் போல், நடராஜர் அருகிலுள்ள சிவகாமி அம்மையின் சிலையின் இடுப்பை, வளைத்து செதுக்கியிருப்பர்.

அந்த அம்பாள், சிவனுடன் இணைந்து, தன் அருளை கொடி போல படர விடுவாளாம்.

அதனால், சிவகாமவல்லி’ என்று பெயர் பெற்றாள்.

நடராஜரைத் தரிசிக்கச் சென்றால், அவரது இடது திருவடியை அவசியம் தரிசிக்க வேண்டும்.

ஏனெனில், அந்த தரிசனம், நம் பாவங்களை எல்லாம் போக்கி, சொர்க்கத்தை தந்து விடும். மேலும், தீர்க்காயுளையும் தரும்.

சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு,
16 வயதில், ஆயுள் முடிந்து விடும் என்ற நிலை இருந்தது. இதனால், அவரது தந்தை, மிகுந்த வருத்தத்தில் இருந்தார்.

குறிப்பிட்ட நாளில், எமன் வர, தன் பிரிவால், தந்தை துக்கப்படக் கூடாதே என்பதற்காக, சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார்.

லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவனின் இடது கால், எமனை
எட்டி உதைத்தது. மார்க்கண்டேயன் தப்பித்தார்.

சிவனின் இடது கால் ஏன் எமனை எட்டி உதைத்தது
தெரியுமா?

எமதர்மன் சர்வேஸ்வரனான சிவனை தினமும் உபாஸிப்பவன்.

தேவர்கள், மானிடர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள், தெய்வத்தை நம்புகிறவர்கள், நம்பாதவர்கள் என்ற பாகுபாடின்றி, அவரவரின் கர்மவினைகளுக்கேற்ப, காலமறிந்து நீதி வழங்கும் பொறுப்பு அவனுக்கு உண்டு.

சிந்தனையின் இருப்பிடம் மூளை என்றால், ஆசாபாச உணர்ச்சி களின் இருப்பிடம் இதயம்.

எல்லோரும் இறைவனின் திருவடிகளைச்
சிரத்தில் ஏற்க விரும்பினார்களென்றால், இறைவனின் திருவடிகள் தன் மார்பிலேயே பதிய வேண்டுமென்று தவமிருந்தான் எமதர்மன்.

உணர்ச்சிகளுக்கும் ஆசாபாசங்களுக்கும் இடம் கொடுக்காமல், சத்தியத்தின் பிரதிநிதியாக நீதி பரிபாலனம் செய்ய, ஈஸ்வரனின் திருவடிகள் தன் இதயத்திலேயே பதியவேண்டும் என, தினமும் ருத்திர தேவனைப் பிரார்த்தித்தான் எமதர்மன்.

அந்தப் பிரார்த்தனை நிறைவேற, மார்க்கண்டேயன் ஒரு கருவியானான்.

எமன் பாசக் கயிற்றை மார்க்கண்டேயன் மீதுதான் வீசினான்.

அதே நொடியில் மார்க்கண்டேயன் இறைவனின் திருமேனியைத் தழுவிவிட்டான்.

பாசக்கயிறு இறைவனையும் பிணைத்துவிட்டது.

எல்லாமே ஈஸ்வரனின் சங்கல்பப்படிதான் நடந்தது.

மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை முதலிலேயே தழுவிக் கொண்டிருந்தால், நிச்சயமாக எமதர்மன்
தன் பாசக் கயிற்றை தான் வணங்கும் தெய்வத்தின் மீது வீசத் துணிந்திருக்கமாட்டான்.

மார்க்கண்டேயன் மீது வீசிய பாசக்கயிறு தன் மீது விழும்படி செய்து, இருவருக்கும் தரிசனம் தந்து, தன் திருவடியை எமதர்மனின் இதயத்திலேயே வைத்து, அவன் தவத்தைப் பூர்த்தி செய்தான் இறைவன்.

ஆனால், அந்தத் திருவடி அம்பிகையின் அம்சமாக அமைந்தது எமதர்மன் செய்த பாக்யம்!

ஈசனின் இடப் பாகம் சக்தியினுடையது.

எனவே, இது சிவனின் திருவடியல்ல; சக்தி பார்வதியின் திருவடிதான்.

கடமையைச் செய்த காலதேவனை சிவபெருமான்
தன் காலால் உதைக்கவில்லை.

மாறாக, தர்மம் தவறாமல் அவன் தன் கடமைகளை தொடர்ந்து செய்ய, அன்னை சக்தியின்
அருள் அவனுக்குக் கிடைப்பதற்காக, அன்னையின் பாதமே தர்மதேவனின் இதயத்தைத் தொட்டு, அவனை வைராக்கியம்
உள்ளவனாகச் செய்தது.

அதற்கு இறைவன் ஒரு வாய்ப்பளித்தான்.

இது திருக்கடவூர் ஸ்தல புராணம் சொல்லும் கதை.

கடமையைச் செய்யும்போது, கடவுளென்றும் பாராமல் நீதி தருகிறவன் எமதர்மன்.

அவன் வெறும் மரண தேவன் அல்ல; உயிர்களை மனிதக் கூட்டிலிருந்து விடுதலை செய்யும் தர்மதேவன்.

சிவசக்தியின் சங்கல்பத்தின்படி,
அவன் உயிர்களைக் கவருகிறான்.

அவன் நெருங்கும் வேளையிலும்கூட, சிவசக்தியின் அருள் இருந்தால், ஆரோக்கியமும் ஆயுளும் நீடிக்கும் என்பதே இப் புராணக் கதை சொல்லும் தத்துவம்.

ஈஸ்வரனின் திருவடிகள் தன் இதயத்திலேயே பதியவேண்டும் என, தினமும் ருத்திர தேவனைப் பிரார்த்தித்த எமனின் வேண்டுதல் நிறைவேறியதால் இதய நோய் உள்ளவர்கள் பலரும் இத்தலம் வந்து வழிபட்டு உயிர் பிழைத்திருக்கிறார்கள் என்பது கலியுக உண்மை

அம்பிகையின் அம்சமான இடது திருவடி பட்டதால், எமனுக்கும் மீண்டும் உயிர் பிழைக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆருத்ரா தரிசனத்தன்று, உங்கள் ஊரிலுள்ள நடராஜரின் இடது திருவடி தரிசனம் பெற்று, வாழ்க்கைத் துணைவியை இன்முகத்துடன் நடத்துங்கள்; தீர்க்காயுளும் பெறுங்கள்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் வெள்ளி அம்பலம் என்று அழைக்கப்படுகிறது.

மற்ற இடங்களில் எல்லாம் நடராஜரின் வலது கால் ஊன்றி, இடது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சியே சிலையாய் வடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஆனால் இந்த வெள்ளி அம்பலத்தில் மட்டுமே, நடராஜர் வழக்கத்திற்கு மாறாக இடது கால் ஊன்றி வலது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சி சிலையாய் வடிக்கப்பட்டுள்ளது.

எனவே, மதுரையை தவிர மற்ற நான்கு சபைகளிலும் அவரது தூக்கிய இடது கால் திருவடியை அம்பாளின் பாதமாகவே கருதுவர்.

ஆனால்,மதுரை வெள்ளியம்பல சபையில் மட்டும் நடராஜர் இடது காலை ஊன்றி வலதுகாலை தூக்கி ஆடிய கோலத்தில் இருப்பதால் மதுரையில் வெளியம்பலத்தில் உள்ள நடராஜரின் வலது கால் தூக்கிய பாதத்தை சிவனின் பாதமாக கருதுகின்றனர்.

சிவத்தலங்களில் இங்கு மட்டுமே நடராஜரின் வலது பாகமான பாதத்தை தரிசிக்கலாம் என்பது சிறப்பு.

இங்கு மதுரையை ஆண்ட ராஜசேகர பாண்டிய மன்னனின் வேண்டுதலை ஏற்ற சிவன், அவனுக்காக இங்கு இடக்காலை ஊன்றி, வலது காலை தூக்கி ஆடினார் என்பது வரலாறு.

இது பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

1.பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம்
2. கூடற் காண்டம்
24. கால் மாறி ஆடின படலம்
1480.

‘நின்ற தாள் எடுத்து வீசி எடுத்ததாள் நிலமீது ஊன்ற
இன்று நான் காண மாறி ஆடி என் வருத்தம் எல்லாம்
பொன்று மாசு எய்தி அன்றேல் பொன்றுவல் என்னா
அன்பின் குன்று அனான் சுரிகை வாள் மேல் குப்புற வீழ்வேன் என்னா”

1481.

“நாட்டினான் குறித்துப் பாய நண்ணும் முன் இடத்தாள் ஊன்றி
நீட்டினான் வலத்தாள் வீசி நிருமலன் மாறி ஆடிக்
காட்டினான் கன்னி நாடன் கவலையும் பாசம் மூன்றும்
வீட்டினான் பரமானந்த வேலையுள் வீட்டினானே”

மதுரை வெள்ளியம்பலத்தில் உள்ள பெரிய நடராஜ மூர்த்தி:

பஞ்ச சபைகளிலுள்ள நடராஜர்களில் மதுரையிலுள்ள வெள்ளியம்பல நடராஜரே பெரிய மூர்த்தியாவார்.

சிதம்பரம், திருவாலங்காடு, திருநெல்வேலி தலங்களில்
சிறிய மூர்த்தியாக பஞ்சலோக விக்ரகமாகவும், குற்றாலத்தில்
ஓவிய வடிவிலும் இருக்கிறார்.

இங்கு மட்டும் சிலாவிக்ரகமாக, பெரிய வடிவில் காட்சி தருகிறார்.

இவர்,பத்து கரங்களுடன் ஆயுதம் ஏந்தி காட்சி தருவது விசேஷம். அருகில் சிவகாமி அம்மை இருக்கிறாள்.

வெள்ளியம்பல சபை முழுக்க வெள்ளியால் உருவாக்கப்பட்டுள்ளது.

தனி வாசலும் இருக்கிறது.

முன்புறம் வியாக்ரபாதரும்,
பதஞ்சலி மகரிஷியும்
வணங்கியபடி இருக்கின்றனர்.

உற்சவ நடராஜர்
அருகில் இருக்கிறார்.

இவரது சன்னதி
எதிரே நின்று சுந்தரேஸ்வரரையும், நடராஜரையும்
ஒரே நேரத்தில் தரிசிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.

வியாக்ரபாதர், பதஞ்சலிக்காக
ஆடிய ஆனந்த தாண்டவமும், மன்னனுக்காக கால் மாற்றி ஆடிய தாண்டவமும் நடராஜர் சன்னதி எதிரேயுள்ள சுவரில் சித்திரமாக வரையப்பட்டுள்ளது.

நடராஜரின் இடது கால் கால் மாறி வலது கால் ஆடிய தோற்றம் உணர்த்தும் தேவ ரகசியம்

நடராஜரின் கால் மாற்றி நடனமாடும் இருவேறு தோற்றங்களை நீங்கள் கூர்ந்து கவனித்தால் அபஸ்மாரன் (முயலகன்)என்ற அசுரனின் தலை வெவ்வேறு பக்கங்களில் உள்ளது புலப்படும்.

நடராஜரின் காலின் கீழே இருப்பது ‘அபஸ்மாரன்‘ எனும் அசுரன் ஆணவத்தினால் மனித மனம் கொள்ளும் இருளை இவன் குறிக்கிறான்.

இவன் மனித மனம் கொள்ளும் இருளை அகற்ற சிதம்பரம்,
திருவாலங்காடு,
திருநெல்வேலி,
மற்றும் குற்றாலம் ஆகிய நான்கு சபைகளில் இறைவனின் தஞ்சம் வேண்டி நடராஜரின் தூக்கிய இடது காலைப் பார்த்து இருக்கிறான்.

ஆனால் மதுரை வெள்ளியம்பலத்தில்
நடராஜர் வலதுகால் தூக்கி ஆடிய கோலத்தில் நடராஜரின்வலது பக்கமும்,மற்ற இடங்களில்
நடராஜர் இடதுகாலை தூக்கி ஆடிய கோலத்தில் நடராஜரின் இடது பக்கமும்,அதாவது இரண்டு வித்தியாசமான கோலங்களிலும் அவரின் தூக்கிய கால் பக்கமே அபஸ்மாரனின் தலை உள்ளது.

நடராஜர் நடனம்

இதன்மூலம் நடராஜரின் பாதாரவிந்தமே மனித மனம் கொள்ளும் இருளை அகற்ற வல்லது என்பது தேவ ரகசியமாக நமக்கு உணர்த்தபடுகிறது.

ஊன்றி நிற்கும் நடராஜரது வலது கால் ‘ம’ என்ற எழுத்தை குறிக்கிறது.

மேலும் வலது கால், திரோதண சக்தியை காட்டுகிறது.

இந்த சக்தியால் தான் மனிதர் உயர் ஞானத்தை தேடலினால் அனுபவ அறிவாக பெறுகிறார்.

நடராஜரின் தூக்கிய இடது கால், ஆணவம் மற்றும் மாயை ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்டு ஆண்டவனின் அனுக்கிரஹத்தினை அடைந்திட வழி வகை செய்யும் எனபதை உணர்த்துகிறது.

பொதுவாக நடராஜரின் ஒரு கால் தூக்கி இருப்பது என்னவெனில் நம்முடைய மூச்சுக் காற்றானது இடது பக்கம் இயங்கினால் வலது பக்கம் நிற்கும் என்றும் வலது பக்கம் இயங்கினால் இடது பக்கம் நிற்கும் என்றும் காட்டுவது குறிக்கின்றது.

இவ்வாறு மூச்சு மாறி,மாறி ஓடுவதையே மதுரையில் கால் மாறி ஆடுவதாகக் காட்டப்பட்டது என்றும் தத்துவ ஞானிகள் கூறுகின்றனர்.