Arthamulla Aanmeegam

ஸ்ரீசக்ரமும் அதன் சிறப்புக்களும் | sri chakra special information in tamil

Sri chakra special information in tamil

ஸ்ரீவித்யா பூஜை (Sri Chakra Special Information) என்றாலே “ஸ்ரீசக்ரம் வெச்சுப் பூஜை பண்றாளா?”என்றுதான் கேட்கிறோம். ”ஆமாம்”என்றே பதில் வரும். எல்லா ஸ்வாமிக்கும் – ஒவ்வொரு ஸ்வாமிக்கும் – ப்ரத்யேகமாக யந்த்ரம் உண்டு. ஆனாலும் சிவ பூஜை, விஷ்ணு பூஜை என்றெல்லாம் பண்ணுகிறவர்கள் பெரும்பாலும் அந்த மூர்த்திகளுக்கான யந்த்ரங்கள் வைத்துப் பண்ணுவதில்லை. ஆலயங்களில் வேணுமானால் ஸந்நிதிகளில் விக்ரஹங்களுக்குக் கீழே அந்தந்த யந்த்ரம் பூமிக்குள் – சில இடங்களில் வெளியிலேயேகூட – ப்ரதிஷ்டையாகி இருக்குமே தவிர அகங்களில் அப்படியில்லை. [சிவனுக்கு]பாணம், [விஷ்ணுவுக்கு] ஸாளக்ராமம் என்று வைத்துப் பூஜை பண்ணுபவர்களே நிறைய இருக்கிறார்கள். இப்படிப் பஞ்சாயதன மூர்த்திகளில் அம்பாளுக்கு இயற்கையில் கிடைக்கிற கல் ‘ஸ்வர்ண ரேகா சிலா’என்பது. ஆனால் அதை வைத்துப் பூஜிப்பவர்கள் துர்லபமாகவே இருப்பார்கள். ஸுப்ரஹ்மண்ய பூஜை செய்கிறவர்கள் வேலை வைத்தே பூஜிப்பதுண்டு. ஆனாலும் பொதுவில் மற்ற ஸ்வாமிகளுக்கு ஒன்று, அவயவங்களோடு கூடின மூர்த்தி, அல்லது இயற்கையில் கிடைக்கும் கல்லு ஆகியவற்றை வைத்தே பூஜிப்பது வழக்கமாயிருக்க அம்பாளுக்கு மாத்திரம் ஸ்ரீசக்ரம் என்றே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சம் அதோடுகூட – தனியாயில்லை, ஸ்ரீசக்ரத்தோடு கூட – அவயங்களோடு கூடிய விக்ரஹமும் வைப்பது வழக்கத்திலிருக்கிறது.
ஒவ்வொரு தேவதைக்குமான எந்த தந்த்ரத்தை [வழிபாட்டு முறையை]எடுத்துக் கொண்டாலும் அதில் ‘மந்த்ரம்’, ‘யந்த்ரம்’என்று இரண்டு இருக்கும். ஒவ்வொரு விதமான சப்தக் கோவையை ஜபித்து ஜபித்து ஸித்தி பெற்றால் அதற்குரிய தேவதையை ஸாக்ஷ£த்கரிக்கலாம். அப்படியுள்ள சப்தக் கோவையே அந்த தேவதைக்கான மந்த்ரம் கர சரணாகதிகள் கொண்ட அவயவ ரூபம் போலவே ஒரு தேவதைக்கு இந்த அக்ஷர ஸமூஹமும் ஒரு ரூபம்;சப்த ரூபம், மந்தர ரூபம் என்பது. அதோடுகூட யந்த்ர ரூபமும் இருக்கிறது. ஏதோ கோடும், கோணமும், கட்டமும், வட்டமுமாகத் தெரிகிற யந்த்ரத்தில் அந்த ஒவ்வொன்றுக்கும் அர்த்தமுண்டு; அபார சக்தியுண்டு. ஒவ்வொரு யந்த்ரமும் பரமாத்மாவை ஒரு குறிப்பிட்ட தேவதையாகப் பிடித்துத் தர ஏற்பட்டது. மந்த்ரத்தை மனஸுக்குள் ஜபிப்பது மாத்திரமின்றி யந்த்ரத்திலும் அர்ச்சன, ஆவாஹனாதிகளில் ப்ரயோஜனப்படுத்துவதுண்டு. அந்தந்த யந்த்ரத்தின் கோணங்களுக்கும், தளங்களுக்கும் உள்ளேயே அந்த தேவதைக்கான மந்த்ராக்ஷரங்களைப் பொறித்து வைப்பதும் உண்டு. அவயங்களோடுள்ள விக்ரஹ ரூபத்திற்குப் பண்ணுவதுபோலவே யந்த்ரத்திற்கு அபிஷேகம், அர்ச்சனை, நைவேத்யம் என்று எல்லா உபசாரங்களுடனும் பூஜை பண்ணவேண்டும். ஏனென்றால் அந்த விக்ரஹத்தின் உயிராகவுள்ள தேவதையேதான் இப்படி யந்த்ர ரூபத்தில் இருப்பதும். அந்த தேவதை மட்டுமில்லாமல் அதனுடைய வாஸ ஸ்தானம், அதனுடைய ஸகல பரிவாரங்கள் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து இந்த யந்த்ர ரூபம் ஏற்பட்டிருக்கிறது.
அம்பாளுக்குப் பல ரூபமிருப்பதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு யந்த்ரமும் உண்டு. ஆனாலும் மீனாக்ஷி, துர்கை, புவனேச்வரி, சாரதாம்பிகை என்று மூர்த்தி வைத்திருப்பவர்களுங்கூட [அந்தந்த மூர்த்திக்கான யந்த்ரமாக இன்றி]ஸ்ரீசக்ரமே வைத்துப் பூஜை பண்ணுவதையும் பார்க்கிறோம். அகங்களில் மாத்திரமில்லை;ஆலயங்களிலும் இப்படி இருக்கிறது. திருவண்ணாமலை கிரிப்ரதக்ஷிணத்தில் ஒரு ப்ரஸித்தமான துர்க்கையம்மன் கோவிலிருக்கிறது.
அங்கே யந்த்ரத்தைப் பார்த்தால் ஸ்ரீசக்ரமாகவே இருக்கிறது. சிருங்கேரியில் சாரதாம்பாள் மூர்த்தியாக இருந்தாலும் ஸ்ரீசக்ரமே பூஜை நடக்கிறது.
இப்படி மற்ற எந்த ஸ்வாமியையும்விட அம்பாளுக்கே யந்த்ரம் விசேஷமாகவும், அம்பாளுக்கே இருக்கப்பட்ட அநேக ரூபங்களுக்கான யந்த்ரங்களிலும் ஸ்ரீயந்த்ரத்திற்கே விசேஷம் என்றும் இருக்கிறது.
கோடுகள், வட்டங்கள், சதுரங்கள், அந்தக் கோடுகளாலான கோணங்கள் இவை எல்லாம் ஒரு சக்ர ரூபத்தில் அமைந்து, மத்ய பிந்துவோடு [நடுப் புள்ளியோடு]இருப்பதே யந்த்ரம் என்பது. இந்த மாதரி டிஸைனுக்கே ஒவ்வொரு தேவதையின் சக்தியை க்ரஹித்துக் கொடுக்கும் சக்தி – அபரிமிதமான சக்தி – இருக்கிறது. [சிரித்து] Divine Design !கெட்ட சக்திகளைத் துரத்தியடிக்கவும், திவ்ய சக்திகளை ஆகர்ஷித்துத் தருவதற்கும் சக்தி படைத்தவையாக அந்த டிஸைன்கள் இருக்கின்றன.
ஸ்ரீ சக்ரத்தில் சக்ரம் என்று வட்டமாக இருக்கும் மத்ய பாகத்தில் ஒன்பது முக்கோணங்கள் ஒன்றையன்று வெட்டிக் கொள்வதில் நாற்பத்து மூன்று முக்கோணங்கள் உண்டாயிருக்கும். மத்ய பிந்துவையும் கோணமாகவே சேர்த்து நாற்பத்து நான்கு கோணங்கள் ஆறு ஆவரணங்களாக அமைந்திருக்கின்றன. ஆவரணம் என்றால் மறைப்பு என்பது நேர் அர்த்தம். இங்கே சுற்று, ப்ராகாரம், row என்று அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டும். ஒருத்தரைச் சுற்றிப் பல பேர் நின்றால் ஆஸாமி தெரியாமல் மறைக்கத்தானே செய்யும்?அதனால் ஆவரணம் என்று பேர். மத்ய பிந்துவையும் கோணம் என்று சொன்னாற் போலவே ஆவரணம் என்றும் சொல்கிறது. வாஸ்தவத்தில் அதைச் சுற்றி நாற்பத்து மூன்று கோணங்களே ஐந்து ஆவரணங்களாக அமைந்திருக்கின்றன. அதையும் சேர்த்து ஆறு ஆவரணம். ‘நவாவரணம்’, ‘நவாவரணம்’என்று ஒரு வார்த்தை பல பேர் கேட்டிருக்கலாம். இப்போது தீக்ஷிதரின் நவாவரண க்ருதிகளுக்கு மவுஸு ஏற்பட்டு ரேடியோவில் ஒலி பரப்புவதால் அந்த வார்த்தை ப்ரசாரத்தில் வந்திருக்கிறது. நவாவரணம் என்பது ஸ்ரீசக்ரத்திலுள்ள ஒன்பது சுற்றுக்கள் தான். அந்த ஆவரணம் ஒவ்வொன்றிலும் யாரார் இருக்கிறார்கள், என்னென்ன தத்வங்கள் இருக்கின்றன, அதற்கு அதிதேவதை யார், அவர்கள் என்ன அநுக்ரஹம் செய்கிறார்கள், அங்கே என்ன முத்ரை காட்ட வேண்டும் என்றெல்லாம் சாஸ்திரங்களில் இருக்கிறது. அதையே சுருக்கமாக தீக்ஷிதர் கீர்த்தனத்தில் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு ஆவரணத்திற்கு ஒரு க்ருதி. இப்போது அதில் ஆறு சொன்னேன். இந்த ஆறில் தான் 44 கோணங்கள் இருப்பது. இந்த ஆறுக்கு வெளியிலே இன்னும் மூன்று சுற்று. அதையும் சேர்த்தாலே நவாவரணம். அதிலே இரண்டு, தாமரை இதழ்கள் வட்ட வடிவமாக அமைந்துள்ள சுற்றுக்கள். இந்த எட்டு ஆவரணத்திற்கும் சேர்த்து வெளி மதிலாக ஒரு ஆவரணம். அது மூன்று காம்பவுண்டுச் சுவர்கள் எழுப்பினாற்போல மூன்று கோடுகளாக வெளியே இருக்கும். அவை சக்ராகாரமில்லை. சதுரம், சதுரமாகவே இருக்கும். இப்படி ஒரு டிஸைன், அபரிமிதமான திவ்ய சக்தியோடு….
ஆனால் இதில் ஜாக்ரதை வேண்டும். ஒரு யந்த்ரம் என்றால் அதில் ஒவ்வொரு கோடும், கோணமும் என்ன பரிமாணத்தில் இருக்க வேண்டுமோ அப்படிக் கணக்காக இருக்க வேண்டும். கொஞ்சங்கூட முன்னே, பின்னே இருக்கக் கூடாது. ஒரு மந்திரத்தில் சப்தம் கொஞ்சம் மாறுபட்டால்கூடப் பெரிய தோஷமாகிவிடலாம் என்பது போலவே யந்த்ரத்திலும் டிஸைனில் சின்னத் தப்பிதம் இருந்தாலும் கெடுதல் உண்டாகிவிடும். டிஸைன் முழுக்க ஸரியாயிருந்தால் கூட, ஸ்ரீ யந்திரத்தில் நடு முக்கோணம் கிழக்கு நோக்கி இல்லாமல், மேற்கு நோக்கியிருக்கும்படி வைத்துவிட்டால் பலனே மாறிவிடும். (பூஜா மூர்த்திகளைக் கிழக்குப் பார்க்க வைப்பதே கிரமம். எனவே ஸ்ரீசக்ரத்தையும் அவ்வாறே வைக்கவேண்டும். அதாவது நடு முக்கோணத்தின் கூர்முனை கிழக்குப் பார்க்க இருக்கவேண்டும்.
அதற்கு எதிரே அமர்ந்து பூஜகர் பூஜிக்கும்போது, ஸ்ரீசக்ரத்தின் ஒன்பது முக்கோணங்களில் நடு முக்கோணம் உள்பட ஐந்தின் முனை அவரை நோக்கியும், மீதம் நான்கின் முனைகள் எதிர்த் திசை நோக்கியும் இருக்கும்.)
இன்னொரு அம்சம், ஜாக்ரதை தேவைப்படும் அம்சம், என்னவென்றால், விக்ரஹம் வைத்துப் பூஜை செய்வதை விடவும் யந்திரத்திற்குச் செய்யும்போது சாஸ்திரோக்தமாகவும், மடி ஆசாரங்களோடும் செய்ய வேண்டும்.
தற்காலத்தில் தெரியாத்தனத்தால் கொஞ்சம், ஜம்பத்துக்காகக் கொஞ்சம், இது ஒரு ஃபாஷன் என்று கொஞ்சம் என்பதாகப் பல ‘கொஞ்சம் பேர்’. சேர்ந்து அதுவே ‘நிறைய’ஆகி, ரொம்ப வீடுகளில் ஸ்ரீ சக்ர பூஜை என்ற பேரில் ஒன்று நடக்கிறது. ஆனால் நியமங்கள் போதாததால் துர்பிக்ஷம், அசாந்திகளும் விருத்தியாகிக் கொண்டேயிருக்கின்றன!
ஆசைப்பட்டால் மட்டும் போதாது, அது அதற்கு எப்படி சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறதோ, பெரியவர்கள் செய்து காட்டியிருக்கிறார்களோ அப்படி நாமும் செய்தால்தான் பலன் வரும். ஸ்ரீசக்ரத்தின் விசேஷத்தைப் பற்றி சாஸ்திரத்தில் நிரம்பச் சொல்லியிருப்பது வாஸ்தவம். ஆனால் அதை எப்படிப் பூஜிக்க வேண்டுமென்றும் அதே சாஸ்திரத்தில் சொல்லியிருப்பதைத் தள்ளிவிட்டு, ”இஷ்டப்படி, ஸெளகர்யப்படி [பூஜை]பண்ணுவேன்!”என்றால் பலன் கிடைக்காது. விபரீத பலனே கிடைக்கலாம்….
யந்த்ரம் என்பது ஒரு தேவதையின் இருப்பிடமாகவும், அது மாத்திரமில்லாமல், ஸாக்ஷத் அந்த தேவதைக்கு ப்ரதிநிதியாகவுமே இருப்பது ‘ப்ரதி’நிதி என்பதுகூட ஸரியில்லை. ‘ப்ரதி’- ‘காப்பி’- இல்லை; அஸலே அந்த தேவதைதான் இப்படி டிஸைன் ரூபத்திலிருப்பதும்.
அதிலும் அம்பாள் ஸ்ரீவித்யா தேவதையாக இருக்கும் போது யந்த்ர ரூபத்திலேயே விசேஷமாக ஸாந்நித்யம் கொண்டிருக்கிறாளென்பதால்தான் அந்த ஸ்ரீயந்த்ரத்திற்கு அலாதியான சிறப்பு இருக்கிறது. அம்பாளுடைய பரம ஸெளந்தர்யமான அவயவ ரூபத்தைவிடக் கூட இந்த யந்த்ர ரூபத்திற்கே சிறப்புத் தந்து பூஜிப்பதாக இருக்கிறது. (நாமம், ரூபம் என்ற இரண்டை விசேஷமாகச் சொல்கிறோம். ஆனால் பொதுவாகவே தாய்த் தெய்வத்தின் மந்திரங்களில் நாமம் என்பதே மிகப் பெரும்பாலும் இல்லை. ஸ்ரீவித்யா மந்திரங்களிலோ அடியோடு இல்லை. பீஜாக்ஷரங்களே உள்ளன. அவ்வாறே ஸ்ரீவித்யா தேவதை த்ரிபுர ஸுந்தரி என்று அழகு உருவத்தாலேயே பெயர் பெற்றிருந்தும் அவளுக்கு உருவம் அமைக்காமல் யந்திரத்திலே வழிபடுவதே அதிகம் காண்கிறது. ஏன் இவ்வாறு நம் அன்னை விஷயத்தில் மட்டும் நாமம், ரூபம் இரண்டும் முக்யம் பெறாமலுள்ளன என்று ஸ்ரீசரணர்களிடம் கேட்கப்பட்டதுண்டு. ஆனால் அவர்களோ இவ்விதம் இருப்பதைத் தாமும் திரும்பச் சொல்லி வியந்து கொள்வதாகக் கட்டினார்களே தவிர விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.)
அம்பாளுக்கு இரண்டு வாஸ ஸ்தானம். அம்ருத ஸாகரத்தில் ஒன்றும், மேரு மத்தியில் ஒன்றுமாக என்றேனல்லவா?அதோடு மூன்றாவது வாஸஸ்தானமாக ஸ்ரீசக்ரத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்…..
இப்போது நான் சொன்னதில் இரண்டு தப்பு. ஒன்று, ஸ்ரீ சக்ரம் அம்பாளுடைய வாஸஸ்தானம் மட்டுமில்லை;அவளுமேதான்!வாஸஸ்தானம் + வஸிக்கிற ஆஸாமியாக அது இருக்கிறது!இன்னொரு தப்பு என்னவென்றால் அம்ருதஸாகரம் மாதிரியும், மேரு சிகரம் மாதிரியும் இது மூன்றாவது [வாஸ ஸ்தானம்]இல்லை. அம்ருத ஸாகரமானாலும் ஸரி, மேரு சிகரமானாலும் ஸரி, அங்கே சிந்தமணி க்ருஹம் என்ற அரண்மனையிலே இந்த ஸ்ரீ யந்த்ரம் இருக்கும். நம் அகங்களில் ஒரு கையளவு இருக்கும் யந்த்ரம் அங்கே ஆயிரம், பதினாயிரம் மடங்கு பெரிசாக ஆவரணம் என்று சொல்லும் ஒன்பது சுற்று அங்கணங்களோடு இருக்கும்.
அந்த ஒன்பதிலும் அநேக தேவதைகள், தத்வங்கள் அம்பாளின் பரிவாரங்களாக இருப்பார்கள். ஒன்பதாவதாக உள்ள மத்ய பிந்துதான் பஞ்ச ப்ரம்மாஸனத்தில் அம்பாள் இருக்கிற இடம்.
மேரு சிகரத்திலே அம்பாள் இருக்கும்போது இந்த ஒவ்வொரு ஆவரணமும் அந்த சிகர மத்தியிலே சிகரத்திற்கு மேல் சிகரங்களாகத்தானே எழும்பியிருக்கும்?அந்த அமைப்பில்தான் ஸ்ரீ சக்ரத்தையே ஸமதளத்தில் நீளம், அகலம் ஆகிய இரண்டு பரிணாமத்தில் பண்ணுவது மாத்திரமில்லாமல் உயரமும் சேர்த்து, அடுக்கடுக்காக, மூன்று தளத்தில் cone -ஆக [கூம்பாக]ப் போய்முடிகிற விதத்திலும் பண்ணுவதாக இருக்கிறது. இப்படி மூன்று பரிணாமத்தில் உள்ள ஸ்ரீ சக்ரத்திற்கு மேரு ப்ரஸ்தாரம் என்றே பேர். மேரு என்று மாத்திரம் அதைச் சொல்வதாகவும் ஏற்பட்டுவிட்டது. ஸமதளமாக பூமி மட்டத்தோடு இருக்கும் ஸ்ரீசக்ரத்திற்கு பூப்ரஸ்தாரம் என்று பெயர். இரண்டும் கலந்து, ஆரம்ப ஆவரணங்கள் உயரவாட்டிலும் பிற்பாடு வருபவை ஸம தளமாகவும் அமைந்ததை அர்த்த மேரு என்பார்கள். எல்லா ஆவரணமும் மேரு ப்ரஸ்தாரமாயிருந்தால் பூர்ண மேரு. காஞ்சீபுரத்தில் காமகோஷ்டத்தில் இருப்பது பூப்ரஸ்தாரம். நம் மடத்தில் பூர்ண மேரு. மாங்காட்டில் அர்த்த மேரு. திருவிடைமருதூர் மூகாம்பாள் ஸந்நிதியில் பூர்ண மேரு…

ஸ்ரீ ஸூக்தம் பாடல் வரிகள்

108 அம்மன் போற்றி

கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன் கோவில் வரலாறு

அம்மன் பாடல்கள்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
Tags: Lord Amman
  • Recent Posts

    கோளறு பதிகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம் | Kolaru Pathigam lyrics in Tamil

    Kolaru Pathigam lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால் உண்டாகும்… Read More

    2 days ago

    Karpaga Vinayagar Temple History | கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு

    அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207,  சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More

    2 weeks ago

    Ramar Slogam | ராமர் ஸ்லோகம்

    ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More

    2 weeks ago

    Komatha Stothram | பசுமாடு ஸ்தோத்ரம்

    பசுமாடு ஸ்தோத்ரம்       ஸ்ரீமன் நாராயணனும், பரமனும், இந்திரனும், ஆதி விஷ்ணுவும், அவருடைய அச்சுதரும், “பசுவம்மா ஸ்தோத்திரத்தை… Read More

    2 weeks ago

    Asta Kaali Deviyar Varalaru | அஷ்ட காளி தேவியர் வரலாறு

    அஷ்ட காளி தேவியர் வரலாறு! *தொடர் பகுதி-5* *5வதாக பிறந்த அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி* *வரலாறு*! அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி… Read More

    2 weeks ago

    Shri Narashimma vaibhavam | ஸ்ரீ நரஸிம்ம வைபவம்

    ஸ்ரீ நரஸிம்ம வைபவம்*!  வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணனின் ‘*ஸ்ரீ நரஸிம்ம வைபவம்*! -26- *அடியவர்க்கு எளியவன்*! தூணிலிருந்து நரசிம்மமாக பகவான்… Read More

    2 weeks ago