Subscribe for notification
Temples

Kollur Mookambika temple history in tamil | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன் கோவில் வரலாறு

Kollur Mookambika temple history in tamil

கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன் – ஸ்தல வரலாறு | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன் கோவில் உருவான கதை | Kollur mookambika temple history in tamil

#மூகாம்பிகை_கோவில்
#கொல்லூர்_கர்நாடகா

கொல்லூர் மூகாம்பிகை ஆலயமும் தமிழக ஆலய அமைப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதை காண முடிகிறது. இந்த ஆலயம் முழுவதும் கேரளா ஆலய கட்டுமான பாணியில் உள்ளது.

#கோவில்_அமைப்பு

கோவில்களின் அமைப்பும், கட்டிட தொழில் நுட்பமும் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். தமிழ்நாட்டில் பிரமாண்ட பிரகாரங்கள், கலர்கள், கோபுரங்கள் இருக்கும். மற்ற மாநில ஆலயங்களில் அப்படி பார்க்க முடியாது.

அந்த வகையில் கொல்லூர் மூகாம்பிகை ஆலயமும் தமிழக ஆலய அமைப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதை காண முடிகிறது. இந்த ஆலயம் முழுவதும் கேரளா ஆலய கட்டுமான பாணியில் உள்ளது.

ஸ்ரீமூகாம்பிகை கோவில் கர்நாடகத்தில் இருந்தாலும் கேரள கோவில்களின் அமைப்புகளையும், பாணியையும் ஒத்திருக்கின்றது. கிழக்கு கோபுரவாயிலை 1996&ம் ஆண்டு புனர் நிர்மானம் செய்து பழைய அமைப்பு மாறாமல் கருங்கற்களால் கட்டியுள்ளார்கள். இக்கோவிலின் கருவறை விமானம் முழுவதும் தங்கத் தட்டினால் வேயப்பட்டதாகும்.

எல்லா கோவில்களை போல முதலில் நம் கண்ணில் தென்படுவது கொடிக்கம்பம். அம்பாளின் கர்பக்கிரகம் கொடிக் கம்பத்தை ஒட்டியிருப்பது விளக்குத்தூண். ஒரே கல்லினால் ஆன அழகிய தூண் இது. இதில் ஆயிரம் விளக்குகள் ஏற்றலாம்.

கேரள கோவில்களில் ஆண்கள் கோவிலின் உள்ளே& சன்னதி அல்லது கருவறை அருகில் சட்டை அணிந்து செல்லக்கூடாது என்ற மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கொல்லூர் மூகாம்பிகை கோவிலிலும் இந்த விதி கடைபிடிக்கப்படுகிறது.

அன்னையின் கருவறை& எதிரில் பணிவுடன் அமர்ந்த நிலையில் அம்மனின் சிம்ம வாகனம். கருவறையின் இருபுறமும் தியான மண்டபம் உள்ளது. பக்தர்கள் அங்கு அமர்ந்து தியானம் செய்கிறார்கள். அன்னைக்கு முன்பாக ஸ்வர்ணரேகையுடன் கூடிய ஜோதிர்லிங்கம் உள்ளது.

அன்னை பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் வேண்டும் வரம் அருள்கிறாள்.

முன்வாயிலைக் கடந்து மீண்டும் வெளிப்பிரகாரம் சுற்றினால் முதலில் சரஸ்வதி மண்டபம். இது மிகவும் விசேஷமான இடம். ஆதி சங்கரர் ஸ்ரீமூகாம்பிகையை நோக்கி மனமுருகி “சவுந்தர்ய லஹரியை” இங்கு அமர்ந்து எழுதியதாகவும் இங்கே தான் அரங்கேற்றி அருளியதாகவும் கருத்துக்கள் நிலவுகின்றன. இந்த சரஸ்வதி மண்டபம்& கலா மண்டம் எனப்போற்றப்படுகிறது. கேரளம் தந்த மாபெரும் ஓவியர் ரவி வர்மா இங்கு சித்திரங்கள் வரைந்துள்ளார்.

இன்று கூட இந்த சரஸ்வதி மண்டபத்தில் தமிழ்நாடு மராட்டியம், தெலுங்கானா, கேரள, கர்நாடக ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் யாராவது தங்களது கலா நிகழ்ச்சியை தினமும் இரவு ஏழு மணி அளவில் நடத்துகிறார்கள். அம்மன் சிவேலி முடிந்ததும் அம்பாளின் பஞ்சலோக விக்ரகத்தை இந்தச் சரஸ்வதி மண்டபத்தில் வைத்து வழிபாடு செய்வர். அந்த சமயங்களில் தான் இசை நடனம் என அரங்கேற்றங்கள் நடைபெறும்.

நவராத்திரி நாட்களில் இந்த சரஸ்வதி மண்டபம் தனி பொலிவு பெறும். விஜயதசமி அன்று இங்கு தங்கள் குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். அன்னையின் சன்னதிக்கு நேர் பின்புறம் அன்று ஆதிசங்கரர் தியானம் செய்ய அமர்ந்த இடம் இன்னும் சங்கரர் பீடம் என்று போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. நவராத்திரி சமயத்தில் ஆதிசங்கரரின் சிலைக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.

ஆலயத்தில் தனிச் சன்னதியில் முருகப்பெருமான் மேற்குப் பார்த்து அருள் பாலிக்கிறார். முருகன் சன்னதிக்கு அடுத்திருப்பது தான் சரஸ்வதி மண்டபம்.
மேற்கு கோபுரவாசல் அருகில் வடமேற்கு மூலையில் கிணறு உள்ளது. அதற்கு முன் ஆஞ்சநேயர் சன்னதி. இந்த தனிச்சன்னிதி வாயுதிசையில் அமைந்துள்ளது.
அதனை அடுத்து உள்ளது விஷ்ணு சன்னதி, கேரள பக்தர்கள் இந்த விஷ்ணுவை குருவாயூரப்பன் என்றே வணங்குகின்றனர்

அப்படியே வடக்கு பிரகாரத்திற்கு சென்றால் கோவில் அலுவலகம் உள்ளது. வழிபாடு சீட்டுகள் தருமிடம், இலவச உணவு சாப்பிடும் இடத்துக்கு போகும் வழி உள்ளது.

வடகிழக்கு மூலையில் துளசிமாடம். அதனை அடுத்து அம்பாளின் பரிவார தேவதைக்கு எல்லாம் தளபதியான வீரபத்திரர் சன்னதி அமைந்துள்ளது. இவர் தானே கம்ஹாசூரன் சம்ஹாரத்தில் அம்பாளுக்குப் படைத்தளபதியாக நின்றவர். மேலும் ஆக்ரோஷம் மிகுந்த வீரபத்திரரின் உக்கிரம் குறைக்கத்தான் அவருக்கு எதிரே ஆஞ்சநேயரைப் பிரதிஷ்டை செய்ததாக சொல்லுகிறார்கள். அதனால் தான் வீரபத்திரர் அமைதியாக இருக்கிறார் எனக் கூறுகிறார்கள்.

வீரபத்திரர் இந்த தலத்திற்கு ரட்சாதிகாரி, சிவேலி தவிர அன்னைக்குச் செய்யப்படும் அனைத்து பூஜைகளும் இவருக்கும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது…

ஆதி சங்கரரும் மூகாம்பிகையும்

ஜோதிர் லிங்கம் முன்னாள் அமர்ந்து ஆதிசங்கரர் தியானம் செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் அவர் முன் ஜெகஜோதியாக அம்பிகையின் உருவம் ஒளிர்ந்து காட்சி அளித்தது.

கேரளாவில் காலடியில் பிறந்த ஆதிசங்கரருக்கு எத்தனையோ பகவதி கோவில்கள் இருந்தும் கலைவாணிக்கு ஒரு கோவில் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது.

அவர் மைசூர் சமுண்டீஸ்வரி தாயை நோக்கி தவம் இருந்தார்.

மகனின் தெய்வீக தாகத்தைத் தீர்க்க அன்னை ஆதிசங்கரருக்கு காட்சியளித்தாள்.

தேவியின் திவ்ய ரூபம் கண்டு ஆதிசங்கரருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஆனந்தக் கூத்தாடினார்.

தேவியோ, ”நீ எங்கு என்னை குடி வைக்க விரும்புகிறாயோ அங்கு கொண்டுபோ.

ஆனால் ஒரு நிபந்தனை.

நான் உன்னைப் பின் தொடர்வேன். நீ என்னை திரும்பி பார்க்கக் கூடாது.

அப்படி திரும்பிப் பார்த்தால் அந்த இடத்திலேயே நின்றுவிடுவேன்” என்றாள்.

ஆதிசங்கரர் தேவியின் நிபந்தனையை ஒத்துக் கொண்டு தேவியின் கொலுசு ஒலியைக் கேட்டபடி நிம்மதியாக நடந்து சென்றார்.

எப்பொழுதுமே தேவி சித்தாடல் புரிவது தானே இயற்கை. போகும் வழியில் கோல மகரிஷி வழிபட்டு வந்த சுயம்பு லிங்கத்தைப் பார்த்து நின்றுவிட்டாள்.

கொலுசு ஒலி கேட்டுக் கொண்டே முன்னே நடந்து சென்று கொண்டிருந்த ஆதிசங்கரர் கொலுசு ஒலி நின்றுவிட்டதே எனத் திரும்பிப் பார்க்கிறார்.

அன்னை அருள்வாக்குபடி நீ திரும்பி பார்த்தால் நான் அங்கேயே நின்றுவிடுவேன் என்ற வரிகள் நினைவுக்கு வந்தன.

எனவே அங்கு ஜோதிர் லிங்கத்தில் தேவி அந்த இடத்திலேயே ஐக்கியமாகிவிட்டாள்.

அவள் குடியேறிய இடம்தான் கொல்லூர் என்ற சக்தியின் புண்ணியத்தலம் ஆகும்.

அடர்ந்த காடு, மலை, ஆறுகள் அமைந்த இடத்தில் சுயம்புவான ஜோதிர்லிங்கம் மட்டும் தான் இருந்தது. அதிலே அரூபமான முப்பெரும் தேவியரும் உடனுறைகிறார்கள்.

ஆதிசங்கரர் வந்தபோது கோல மகரிஷி பூஜித்து வந்த தங்க ரேகை மின்னும் சுயம்புலிங்கம் மட்டுமே இருந்தது.

அம்பாள் சிலை ஏதும் இல்லை. எனினும் அரூபரூபமாய் அந்த லிங்கத்தில் இருப்பதாக எத்தனையோ காலமாய் நம்பப்பட்டு வந்த ஸ்ரீமூகாம்பிகை தேவி என்ற அம்பாளின் முகம் அப்போது எப்படி இருக்கும் என்று யாரும் கற்பனை செய்து கூட அறியமுடியவில்லை.

mookambika

மூகாம்பிகை தேவியின் புகழினையும், பெருமைகளையும், மகிமைகளையும் கூறும் பல நிகழ்ச்சிகளையும், கதைகளையும் பக்தியுடன் பேசிவந்த ஊர் மக்கள் மன்தில் இது ஒரு பெருங்குறையாக இருந்தது.

இந்நிலையில் ஆதிசங்கரர் கொல்லூர் வந்திருப்பது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

சக்தியை வழிபடும் சாக்தமார்க்கத்தை வழிபட அருளிய மகான் ஆதிசங்கரர் அரூபரூபமாய் உள்ள ஸ்ரீமூகாம்பிகையின் திரு உருவத்தைக் காட்டுவார் என ஊர்மக்கள் பரவசமடைந்தார்.

கொல்லூரில் ஆதிசங்கரர் தங்கியிருந்து தினமும் தியானம் செய்தது மூலவரின் சன்னதிக்கு நேர் பின்புறம் அமைந்துள்ள ஒரு மேடை ஆகும்.

ஏகாந்த வெளியில் ஜோதிர் லிங்கம் முன்னாள் அமர்ந்து ஆதிசங்கரர் தியானம் செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் அவர் முன் ஜெகஜோதியாக அம்பிகையின் உருவம் ஒளிர்ந்து காட்சி அளித்தது.

ஆதிசங்கரர் தரிசித்த அம்பிகையின் உருவத்தை மனதில் கண்டார்.

அவ்வுருவம் சங்கு சக்கரம் அபயக்கரம் ஏந்திய சாந்த சொரூபியாக பத்மாசனத்தில் அமர்ந்து அருட்கடாச்சம் தந்ததைக் கண்டார்.

அன்னை தானே இத்தனை காலமாக இந்த சொர்ணரேகை மின்னும் சுயம்பு லிங்கத்தில் அரூபரூபமாய் முப்பெருந்தேவி மூகாம்பிகா என அடையாளம் காட்டிக் கொண்டாள்.

ஆதிசங்கரர் மனம் மகிழ்ந்து அம்பாளை துதித்தார். அக்காட்சி அவர் இதயத்தில் தத்ரூபமாக பதிந்தது.

உடனே இச்செய்தியை உரியவர்களிடம் கூறினார். விக்கிரகக் கலையில் விஸ்வகர்மா பரம்பரையில் கைதேர்ந்த ஸ்தபதி ஒருவரை அழைத்து விக்கிரகம் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.

மூலவரின் சிலையும் பஞ்சலோகத்தில் உருவானது. அம்மாளை பிரதிஷ்டை செய்வதற்காக தொடர்ந்து ஒருவருடம் உட்கார்ந்த நிலையிலேயே பூஜை செய்ததால் ஆதிசங்கரரால் எழ முடியவில்லை.

தவிக்கும் தன் பக்தனைப் பார்த்த அன்னை தன் கையாலேயே கஷாயம் செய்து சங்கரருக்குக் கொடுத்தாள்.

இன்றும் இந்த தலத்தில் இரவு நேரத்தில் கஷாயம் காய்ச்சி பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கி றார்கள்.

தியானத்திலே கண்ட திவ்ய சொரூபம் ஆதிசங்கரர் கண் முன் நின்று காட்சியளித்துக் கொண்டிருந்தது. விக்கிரகத்தை பார்த்தார். மெய்சிலிர்த்தது!

பத்மாசன தோற்றம்-நான்கு கைகள், சங்கு சக்கரம், ஒரு கை அருளையும் ஒரு கை தன் மலர் பாதத்தை சரணடையத் தூண்டும் வகையிலும் இருந்தன.

சாந்த சொரூபியாக சகல கலைகளையும் ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குபவளாக காட்சி தந்தார்.

சுயம்பு லிங்கத்தின் பின்னால் சிறிது இடைவெளி விட்டு மூகாம்பிகா சிலையை பிரதிஷ்டை செய்தார்.

அதனடியில் சக்தி மிகுந்த ஸ்ரீ சக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தார்.

அச்சக்கரத்தில் ஒன்பது சக்கரம் அடக்கம் அறுபத்து நான்கு கோடி தேவதைகளை ஆவாஹனம் செய்தார்.

ஸ்ரீ சக்கரத்தின் மீது அன்னையின் விக்கிரக ரூபத்தை நிறுவினார்…

 

#கருவறை_அமைப்பு

மூகாம்பிகை தனது இரு கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்திக் கொண்டு காட்சி அளிக்கிறாள். மேலும் இரண்டு கரங்களில் ஒரு கையில் அபயகரமும் மற்றொரு கையில் வரத கரம் தன் தாளை சுட்டிக்காட்டும் படி காட்டிக் கொண்டு பத்மாசனத்தில் அமர்ந்தபடி கருவறையில் வீற்றுள்ளாள். கருவறையின் விமானம் முழுவதும் கெட்டியான தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.

கருவறையில் அம்மையின் முன்னர் தரையோடு தரையாக சிவலிங்கம் உள்ளது. சுயம்பாகத் தோன்றிய அந்த சிவலிங்கம் பொற் கோடால் இரு பிளவுபட்டாற் போன்றும் இடப்பாகம் பெரிதாகவும் அமையப் பெற்றுள்ளார்.

துவாபரயுகத்தில் கோலமுனி தவம் புரிந்த பொழுது இத்தலம் தோன்றியது. உச்சிப் பொழுதின் போது கண்ணாடியின் மூலமாக இந்த லிங்கத்தின் மீது பிரதிபலிக்கச் செய்தால் அப்பொற்கோட்டைப் பார்க்கலாம்.

இடப்புறம் காளி, கலைமகள், அலைமகள் ஆகியோரை சுட்டுவதாக இந்த லிங்கம் அமைந்துள்ளது. வலப்புறம் அயன், அரன், அரி ஆகிய மூவரையும் சுட்டுவதாக அமைந்துள்ளது. இயக்கமில்லானும், இயக்கமே உருவாய் உடையாளும் இச் சிவலிங்கத்தில் ஒன்றி உள்ளனர். இவ்வாக்கியத்தின் ஆதாரமாக அமைந்துள்ளதே இப்பொற்கோடு ஆகும்.

இன்று காணப்படும் திருவுருவம் ஆதி சங்கரரால் பஞ்சலோகத்தில் தனக்கு கிடைத்த காட்சிப்படி அமைக்கப் பெற்றதாகும். அதற்கு முன்னர் இங்குச் சிவலிங்கமும் ஸ்ரீ சக்கரமும் மட்டுமே இருந்து வந்தன.

அன்னையை வழிபட்ட பின்னர் அனைவரும் வீரபத்திர சுவாமியை தவறாது வழிபடுகின்றனர். அன்னை அவ்வப் பொழுது நவமணியால் அலங்கரிக்கப்படுகிறார். அவள் பொன் வண்ணத்தாள், செவ்வாடை விருப்பமுடையாள்.

கன்னியாகுமரியில் பகவதி தேவியின் மூக்கில் மாணிக்க மூக்குத்தி அலங்கரிப்பது போல் கொல்லூரில் அவள் மார்பில், இடையில் மரகதம் பதித்த பொற்சரம் அலங்கரிக்கின்றது. பின் மகாகாளி கலைமகள், ஆகியோரின் உற்சவத் திருமேனிகளும் மூன்று முகமும் தசகரமும் பாம்பின் மீது கால் ஊன்றிய நிலையில் கணபதியின் திருவுருவம் உள்ளன.

முதல் பிரகாரத்தில் பஞ்சமுக சுயம்பு கணபதி உள்ளார். இங்கு காணப்படும் ஸ்ரீசக்கரம் மும்மூர்த்திகளால் அமைக்கப்பெற்றது என்பது மரபு. இது இறைவியின் அருவுருவ நிலையை சுட்டிக் காட்டுவதாகும்.

#வடை_நிவேதனம்

தொழிலில் வெற்றி பெற குங்கும அர்ச்சனை செய்கிறார்கள். நோய்களில் இருந்து விடுபட வடை நிவேதனம் செய்கிறார்கள். கல்வியில் சிறந்து விளங்க மகாதிருமதுர நிவேதனம் செய்கிறார்கள்.

இப்பிரசாதம் முன்பு யாரும் உட்கொள்ளாமல் கிணற்றில் வீசப்பட்டது. கருவறையில் வைத்து பூஜை செய்து தரப்படுவதை உட்கொண்டால் பல சிறப்புகள் அடையலாம்.

கிணற்றில் வீசப்பட்டு வந்த பிரசாதத்தை அதில் ஒளிந்து கொண்டு குஞ்சன் நம்பியார், முட்டன் நம்பூதிரி ஆகியோர் அப்பிரசாதம் வீசப்பட்ட போது பிடித்து உட்கொண்டமையால் கவித்துவ வல்லமை பெற்றனர் என்பது செவி வழி செய்தி.

#அசுரனை_அழித்த_ஆயுதம்

அன்னை மூகாம்பிகை அனைத்து வித சக்தியையும் பெற்று அசுரனை அழித்தாள். குடசாத்திரி மலையில் உள்ள இடத்தில்தான் அவள் அசுரனை அழித்தாள். அந்த இடம் கொல் லூரில இருந்து மலை மீது 4500 அடிகள் உயரத்தில் உள்ளது. இங்கு முகட்டில் ஓர் கருங்கல்லில் கட்டப்பட்ட கோவில் உண்டு. இதனை சர்வக்ஞபீடம் என்பர். இது கொல்லூரிலிருந்து 18 மைல் தொலைவில் உள்ளது.

ஒன்பது மைல் வரையில் பஸ்சில் செல்லலாம். பின் காட்டில் 6 மைல் நடந்து செல்ல வேண்டும். அதன்பின் மலை மீது மூன்று மைல் ஏறிச் செல்ல வேண்டும். சக்யாத்திரி மலைக்காடுகளில் நறு மணம் பரப்பும் மலர்கள் பல உள்ளன. அவற்றைக் கண்டுகளித்துக் கொண்டே செங்குத்தான மலை மீது ஏறிச் சென்றால் குடசாத்திரி மலை முகட்டை அடையலாம்.

இங்கு இரண்டு சிறிய கோவில்கள் முகட்டின் அடிவாரத்தில் உள்ளன. முதற்கோவிலில் சவுந்திர வடிவுடை காலபைரவியாக அம்பிகை உள்ளாள். இக்கோவிலின் முன் 25 அடி உயரத்தில் ஓர் துருபிடிக்காத இரும்புத் தூண் உள்ளது. இது மூகனை அழித்த திரிசூலம் என்று சொல்கிறார்கள்.

#பூஜைகளுக்கு_ஏற்ப_புரோகிதர்கள்

தேவியின் கர்ப்பகிரகத்தை, மூல விக்கிரகத்தைத் தூய்மைப்படுத்துதல் அலங்காரம் செய்தல், தேவியைத் தலையில் சுமந்து சீவேலி வருதல் போன்ற காரியங்கள் ஒரு குடும்பத்தினர் செய்தல் வேண்டும்.

பூஜை நெறிகள், சித்ய கருகங்கள் பலிபீட நைவேதத்யம் போன்றவை ஒரு குடும்பத்தினர் செய்தல் வேண்டும். இவர்களே தேவி ஆலயத்தின் தலைமை குருக்கள் ஆவார்கள்.

சண்டிகா ஹோமம் மற்றும் ஆகம நியமங்கள் செய்ய ஒரு குடும்பத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெண் கொற்றக் குடை ஏந்தி செல்ல ஒரு குடும்பத்தினர்.

கட்டியங்கூறவும் தேவியின் செங்கோலை ஏந்தி செல்ல ஒரு குடும்பத்தினர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இப்படி ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களுக்குள் ஒவ்வொரு பணியாகச் சிறப்பாக செய்து வருகின்றனர்.

#கசாய_நைவேத்தியம்

கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் இரவு 9 மணிக்கு கசாய தீர்த்தம் வழங்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் இஞ்சி, குரு மிளகு, ஏலக்காய் திப்பிலி, இலவங்கம், வெல்லம் ஆகிய மருத்துவ மூலிகைப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. நல்ல மருத்துவ குணம் கொண்ட இம்மூலிகை கஷாயத்தை பக்தர்கள் வாங்கிக் குடிப்பதற்கு தவறுவதில்லை. இக்கசாயம் ஸ்ரீ ஆதிசங்கரர் அவர்கள் கூறிய முறைப்படி தயார் செய்யப்பட்டு இன்றளவும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

#பிரதோச_பூஜை

கொல்லூரில் தினமும் இரவு 7 மணிக்கு நடத்தப்படும் பூஜை பிரதோச பூஜை

காலமாக கருதப்படுகிறது. எல்லா விசேஷமான பூஜைகளும் ஸ்ரீ வீரபத்திர சுவாமி திருச்சன்னதியிலும் நடைபெறுகிறது. அந்த நேரத்தில் உற்சவர் சிலை சரஸ்வதி மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு மங்கள ஆரத்தியும், அஷ்ட அவதான சேவையும் செய்யப்படுகிறது.

#அன்னைக்கு
#அணிவிக்கப்படும்_ஆபரணங்கள்

தாய் மூகாம்பிகைக்கு நெற்றி, கண்கள், மூக்கு, காது ஆகியவற்றில் விலை உயர்ந்த ரத்தினங்களால் செய்யப்பட்ட அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு வருகிறது. விசேஷ காலங்களில் அன்னையின் திருமார்பில் அணிவிக்கப்படும் ‘பச்சைக்கல் அட்டிகை’ சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் கெதளி ராஜ வம்சத்தை சேர்ந்த அரசன் ஒருவன் தேவிக்கு காணிக்கையாக அளித்த ஒன்றாகும். இதன்விலை மதிப்பிட முடியாதது ஆகும். சுயம்பு லிங்கத்திற்கும் விசேஷ பூஜை காலங்களில் அணிவிப்பதற்கு என்றே தனியாக அணிவிக்கப்படும் ஆபரணங்களும் உண்டு.

#கொல்லூரில்_நட்சத்திர_தரிசனம்

மாலை 6.30 மணிக்குமேல் கொல்லூரில் இருந்து நட்சத்திர தரிசனம் பார்க்கலாம். இது நட்சத்திரமல்ல. ஆனால் இது ஒரு ஒளிதரும் கிரகம். இதனை மங்கள கிரகம் என கேரள பக்தர்கள் அழைக்கின்றனர். இது மேற்குத்திசையில் அடிவானத்தில் தெரியும். 7 மணிக்கு ‘பளிச்’ என்று மிகத் தெளிவாகத் தெரியும்.

#சீவேலி

மூகாம்பிகை தேவியின் மூல விக்கிரகம் பக்கத்தில் சிறிய இரண்டு தேவிகளின் விக்கிரங்கள் உள்ளதைப் பார்க்கலாம். இதில் ஒரு தேவியின் திருவுருவத்தை தினத்திற்கு மூன்று வேளை அதாவது காலை, உச்சி, வேளை, இரவு ஆகிய மூன்று நேரங்களிலும் ஆலயத்தின் உள்ளேயுள்ள பிரகாரத்தைச் சுற்றி திருவுலா வருவது வழக்கம். இதனை “சீவேலி” என்பார்கள்.

உட்பிரகாரத்தில் சீவேலி வருவது போன்று குறிப்பிட்ட விசேஷ தினங்களில் அம்மன் ஆலயத்தைச் சுற்றியுள்ள முக்கிய தெருக்களில் நகர்வலம் வருவதும் உண்டு. அம்மன் சீவேலி வருவது கண்கொள்ளாக் காட்சி ஆகும்.

தேவியை தொட்டு அலங்காரம் செய்யவும் மூல கர்ப்பகிரக அறையைச் சுத்தம் செய்யவும் ஒரு குடும்பத்தினருக்கே பரம்பரை பரம்பரையாக உரிமை உள்ளது. இவர்களே சீவேலி சமயத்திலும் தேவியை தொட்டு சுமந்து செல்ல உரிமைப் பெற்றவர்களும் ஆவார்கள்.

முதலில் இந்த குடும்பத்தினரைச் சேர்ந்த புரோகிதர் ஒருவர் தனது தலையில் தேவியின் திருவுருவத்தை சுமந்தவாறு நடப்பார். இவருக்கு முன்னாள் கட்டியங் கூறுபவரும் அம்மனுக்கு வெண்கொற்றக்குடை எடுத்துச் செல்பவரும் தீபம் ஏந்திச் செல்பவரும் நடப்பார்கள்.

இவர்களின் பின்னால் பக்தர்கள் பக்தி பெருக்குடன் பின் தொடர்வார்கள். உட்பிரகாரத்தில் பலி பீடங்களுக்கு நைவேத்யம் படையலைத் தலைமை பூசாரி படைத்தவாறு அதற்குரிய பூஜைகளைச் செய்தவாறு செல்ல அதன் பின்னால் அம்மன் கொலுவிருக்கும் உட்பிரகாரத்திலேயே சீவேலி நடைபெறும்.

உட்பிரகாரத்தின் சீவேலி முடிந்ததும் வெளி பிரகாரத்தில் தேவியைத் தலையில் சுமந்தவாறு ஒரு முறையும் நீண்ட பல்லக்கில் ஒரு முறையும் பின்னர் வெள்ளி தகடு வேய்ந்த சிறிய பல்லக்கில் ஒரு முறையும் தேவி சீவேலியாக 3 தடவை வலம் வருவாள். காலை இரவு ஆகிய இரு நேரங்களில் மிக பெரிய மரத்தால் ஆன ரதத்தில் அம்மனை அமர்த்தி பக்தர்கள் வெளி பிரகாரத்தில் ஊர்வலமாக அழைத்து வருவார்கள்.

சீவேலி சமயத்தில் நகாரா என்ற இரட்டை சிறிய முரசும் நமது ஊரில் உள்ள நாகஸ்வரம் வகையை சார்ந்த சற்றே பெரிய செனாய் என்ற இசைக்கருவியும் வாசிக்கப்படும். உடன் ஒத்து என்ற ஸ்ருதி வாத்தியக் கருவியும் இசைக்கப்படும்.

#10_சன்னதிகள்

கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் 10 சன்னதிகள் உள்ளன. அதன் விபரம் வருமாறு:-

1. ப்ராணலிங்கேஸ்வர் சன்னதி
2. ப்ராத்தேஸ்வரர் சன்னதி. இந்த இரண்டும் லிங்கம். லிங்கத்தினுள் லிங்கம் என புதுமையாக இருக்கிறது. அருகில் சென்று பார்க்கலாம்
3. பஞ்சமுக கணபதி சன்னதி
4. சந்திர மவுலீஸ்வரர்
5. நஞ்சண்டேசுவரன் சன்னதி – இரண்டும் லிங்கம் தான்.
6. பெருமாள் சன்னதி
7. ஆஞ்சநேயர் சன்னதி
8. வீரபத்திரர் சன்னதி
9. முருகப்பெருமான்
10. சரஸ்வதி மண்டபம்

#குத்து_விளக்கு_தீபம்

‘இது சித்தி சேஷத்திரம் மனதில் பக்தியுடன் வேண்டியதை அம்பாள் பக்தர்களுக்கு வழங்குவாள்’ என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. பொதுவாக சக்தி தலங்களில் அகல் விளக்கு ஏற்றி பெண்கள் வழிபாடு செய்வார்கள். ஆனால் இங்கு குத்து விளக்கின் பஞ்சமுகத்திலும் திரிவைத்து நெய் விளக்கு ஏற்றி அம்பாளை வழிபடுவது விசேஷம்.

இதற்கு கட்டணமாக ரூ.300 வசூலிக்கிறார்கள். அந்த சீட்டை காட்டினால் குத்து விளக்கு தருவார்கள். அதில் 5 திரிகளில் விளக்கு ஏற்றி மூகாம்பிகையை வழிபடலாம். நித்திய உற்சவம் வாரத்தில் வெள்ளி உற்சவம் பௌர்ணமி அமாவாசை நவராத்திரி, மார்ச் இறுதி ஏப்ரல் முதல் வாரத்தில் எட்டு நாள் ரதோற்சவம். ஜூன் முதல் வாரம் சுக்லபட்சம் அஷ்டமி திதியில் அம்பாளின் ஜனமாஷ்டமி திருவிழா நடைபெறும்.

கட்டணம் செலுத்துவோர்ருக்கு தங்க ரதத்தில் அம்பாள் உலாவரும் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடத்திவைக்கப்படும்.

#திருவிழாக்கள்

கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் மார்ச் மாதம் வசந்த விழா நடைபெறும். அப்பொழுது தேர் திருவிழா நடைபெறும். ஜூன், ஜூலை மாதங்களில் வளர்பிறை அஷ்டமி நாளில் அம்பிகையின் திரு அவதாரத் திருவிழா நடைபெறும். புரட்டாசி மாதம் நவராத்திரித் திருவிழா நடைபெறும்.

மகாலட்சுமி விரதம். மகா சிவராத்திரி, கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஜ்வேஷ்டலட்சுமி சங்கர ஜெயந்தி ஆகிய நாட்களில் அம்பிகைக்கு சிறப்பான பூஜைகள் நடைபெறும்.

பங்குனி உத்திரத்தின் பொழுது மிகப்பெரிய விழாவான தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று கொடியேற்றுவிழா நடைபெற்று மூல நட்சத்திரத்தன்று தேர் திருவிழா முடிவடைகிறது. அன்று ஆற்றங் கரையில் மக்களுக்கு விருந்து கொடுக்கப்படுகிறது.

அன்னையின் விழாவிற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் மூகாசூரனுக்கு திருவிழா நடைபெறும். விழாகாலத்தில் சண்டிஹோமம் உருத்திராபிஷேகம் சகஸ்ரநாம அர்ச்சனை முதலிய சிறப்பு பூஜைகள் நடைபெறும். எட்டாம்நாள் தேர் திருவிழாவின்போது தேரிலிருந்து நாணயம் உலோகத்துண்டுகள் வீசப்படும் அவை கிடைப்பது பெரும் பேறாக மக்கள் கருதுகின்றனர்.

ஒன்பதாம் நாள் ”ஒகுலி” என்று ஓர் விளையாட்டு நடைபெறும். கலைமகள் மண்டபத்திற்கு அருகில் உள்ள குளத்தில் நீர் நிறைத்து, வாழைப்பழக்குலையை ஓர் கம்பில் கட்டி தொங்கவிடுவார்கள். அதனை பிடிக்க முயலும் பொழுது வாழைக்குலையை எட்டிப்பிடிப்பவர் வெற்றி பெற்றவராகிறார். இவ்விளை யாட்டிற்கு பின்னர் அம்பிகையை ஆற்றில் நீராட்டி ஆலயத்திற்கு அழைத்து வருவார்கள். அத்துடன் இத்திருவிழா நிறைவு பெறும்.

நவராத்திரி காலத்தில் சிறுதேரில் அம்பிகை கோவிலின் கண் இருக்கும் சிறு பிரகாரத்தில் பவனி வருவாள். கார்த்திகை தீபத்தன்று அம்பிகையை ஆற்றில் நீராட்டி அழைத்து வந்த பிறகு விருந்து அளிப்பர். இதற்கு வனவிருந்து என்று பெயர்.

#அன்னையின்_விழா_சிறப்பு

இத்தலத்தில் அன்னை மூகாம் பிகைக்கு நான்கு விழாக்கள் மிக சிறப்பாக நடைபெறுகின்றன. அவை: ஆனியில் அன்னையின் ஜெயந்தி விழா, ஆடியில் மகா வரலட்சுமி ஆராதனை விழா, புரட்டாசியில் 10 நாட்கள் நவராத்திரி விழா, மாசியில் மகா தேர்த்திருவிழா ஆகியவையாகும்.
இவ்விழா காலங்களில் பல மாநிலங்களில் இருந்தும் திரளான மக்கள் வந்து அன்னை மூகாம்பிகையின் விழா கோலத்தை கண்டு வணங்கி வாழ்வில் வளம் பெறுகின்றனர். அன்னை மூகாம்பிகையின் தேர்த்திருவிழா தொடங்கு வதற்கு ஒரு மாதத்திற்கு முன்னே, மூகாசுரனுக்கும் திருவிழா நடைபெறுகின்றது.

#தங்கும் விடுதிகள்…

கொல்லூருக்கு செல்பவர்கள் தங்குவதற்கு ஆலயம் சார்பில் 9 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. அதில் பக்தர்களுக்கு தேவைக்கேற்ப அறைகளை ஒதுக்கி தருகிறார்கள். ஆனால் தனி நபராக சென்றால் ஆலய விடுதிகளில் தங்க அனுமதி மறுக்கிறார்கள். கொல்லூரில் ஏராளமான தனியார் லாட்ஜுகள் உள்ளன. அங்கு தான் தனி நபராக தங்க முடியும். ஆனால் கட்டணம் அதிகமாக கொடுக்க வேண்டியது இருக்கும்.

#ஆலய_முகவரி

ஸ்ரீமூகாம்பிகை கோவில்,
கொல்லூர்,
குண்டப்புரா தாலுகா,
உடுப்பி மாவட்டம்,
கர்நாடகா பின்- 576220

#கொல்லூர்_செல்வது_எப்படி?

சென்னையிலிருந்து மங்களூர் சுமார் 800 கி.மீ. தொலைவில் இருக்கிறது. அங்கு செல்ல சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்கள் செல்கின்றன. சென்னையில் தினமும் மதியம் 12 மணிக்கு புறப்படும் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், மறுநாள் காலை 5 மணிக்கெல்லாம் மங்களூர் போய் சேர்ந்து விடுகிறது.

சென்னையில் இருந்து மங்களூருக்கு செல்ல ஆம்னி பஸ்களும் உள்ளன. ஆனால் அது 14 அல்லது 15 மணி நேர பயணமாக இருக்கும்.

எனவே சில பக்தர்கள் சென்னையில் இருந்து பெங்களூருக்கு பஸ்சில் சென்று , பிறகு பெங்களூரில் இருந்து மங்களூர் சென்று கொல்லூர் செல்வதுண்டு. ஆனால் ரெயில் பயணமே எளிதானதாக இருக்கும்.

மங்களூர் ரெயில் நிலையத்தில் இருந்து நீங்கள் வெளியில் வந்ததுமே ஏராளமான தனியார் பஸ்கள் கொல்லூர் செல்ல தயாராக நிற்கும். அதில் ஏறிச்சென்றால் சுமார் 4 மணி நேர பஸ் பயணத்துக்குப் பிறகு கொல்லூர் சென்று சேர்ந்து விடலாம்.

சென்னையில் இருந்து கொல்லூர் செல்லும் பக்தர்கள் பஸ், ரெயில் பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். பஸ் பயணத்துக்கு சுமார் 20 மணி நேரம் கூட ஆகிவிடலாம். அதற்கேற்ப தயாராக இருக்க வேண்டும்.

வசதி இருப்பவர்கள் சென்னையில் இருந்து கொல்லூருக்கு விமானத்தில் செல்லலாம். கட்டணமாக ரூ. 3 ஆயிரம் வரை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தால் மிகக்குறைந்த கட்டணத்தில் சென்றுவர முடியும். அதுபோல மங்களூரில் இருந்து கொல்லூருக்கு தனியார் பஸ்சில் சென்றால் 4 மணி நேரம் ஆகும்.

காரில் சென்றால் 2 1/2 மணி நேரத்தில் சென்றுவிடலாம். அதற்கு ரூ. 3 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். காரில் சென்றால் வழியில் உள்ள உடுப்பி கிருஷ்ணரையும் தரிசிக்க நேரமும் வாய்ப்பும் கிடைக்கும். சென்னையில் இருந்து மங்களூர் வரை விமானம் பிறகு அங்கிருந்து கொல்லூருக்கு கார் பயணத்தை தேர்வு செய்தால் சுமார் 5 மணி நேரத்துக்குள் சென்று சேர்ந்துவிட முடியும். எனவே அதற்கேற்ப கொல்லூர் பயணத்தை திட்டமிட்டு வகுத்துக் கொல்லுங்கள்.

மங்களூரில் இருந்து சென்னை திரும்பும்போது குருவாயூர் செல்ல விரும்புபவர்கள் குட்டிபுரம், பட்டாம்பி, சொரனூர் ஆகிய ஊர்களில் இறங்கி அங்கிருந்து செல்லலாம். இல்லையென்றால் சொரனூருக்கு அடுத்த நிறுத்தமான திருச்சூர் ரெயில் நிலையத்தில் இருந்தும் குருவாயூர் செல்லலாம்.

கோயம்புத்தூர் மற்றும் பாலக்காட்டில் இருந்தும் நிறைய ரயில்கள் மங்களூர் செல்கின்றன. மங்களூரில் இருந்து தனி வாடகை காரில் ஏறிச் சென்றால் உடுப்பி சென்று கண்ணபிரானையும், அன்னேகுட்டே சென்று விநாயகப் பெருமானையும் கண்டு தரிசனம் செய்யலாம். உடுப்பியில் இருந்து சிருங்கேரி சென்று சாரதாதேவியை தரிசிக்கலாம். மங்களூரில் இருந்தோ, உடுப்பியில் இருந்தோ தர்மஸ்தலா செல்லலாம்.

தர்மஸ்தலாவில் இருந்து சுப்ரமணியா செல்லலாம். சுப்பிரமணியாவில் இருந்து தலைக்காவேரி செல்லலாம். உடுப்பி, அன்னேகுட்டே, சிருங்கேரி, தர்மஸ்தலா, சுப்ரமணியா போன்ற இறைத்திருத்தலங்கள் பக்தப் பெருமக்கள் கண்டு தரிசிக்க வேண்டிய முக்கியமான திருத்தலங்கள் ஆகும்.
பெங்களூரில் இருந்தும் கூட உடுப்பி மற்றும் கொல்லூருக்கு செல்ல படுக்கை வசதியுடன் கூடிய நிறைய பஸ்கள் உள்ளன.

ஜகத் ஜனனி
தாய் மூகாம்பிகை

அன்னையின் அருளுடன்
எல்லா நாளும் பொன்னாள் ஆகட்டும்

 

மகாலட்சுமி வசிக்கும் 108 அபூர்வ இடங்கள்

அனைத்து துயரங்களுக்கும் பரிகார காயத்ரி மந்திரம்

Share
ஆன்மிகம்

Published by
ஆன்மிகம்
Tags: Lord Amman
  • Recent Posts

    Thirumeeyachur lalithambigai temple | திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பாள் திருக்கோயில்

    Thirumeeyachur lalithambigai temple பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தால் தான் வரமுடியும்... திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பாள் திருக்கோயில்... ஸ்ரீலலிதாம்பாள் எனும் இந்தத் திருநாமத்தில்… Read More

    1 week ago

    அன்பெனும் பிடியுள் பாடல் வரிகள் | Anbenum pidiyul lyrics in tamil

    Anbenum pidiyul lyrics in tamil வள்ளலாரின் புகழ் பெற்ற பாடல் வரிகள் அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும்… Read More

    2 weeks ago

    சென்னையின் நவக்கிரக ஸ்தலங்கள்

    சென்னையின் நவக்கிரக ஸ்தலங்கள்!!.. சென்னைக்கு அருகிலேயே பல ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் நவக்கிரக ஸ்தலங்களை அமைத்துள்ளனர். சென்னைக்கு அருகிலுள்ள… Read More

    2 weeks ago

    தை அமாவாசை தினத்தின் சிறப்பு | thai amavasai special

    தை அமாவாசை முன்னிட்டு  செய்ய வேண்டிய பித்ரு கடமைகள் thai amavasai special...   அமாவாசை தினம் நமது சமயத்தில்… Read More

    3 weeks ago

    தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி?

    தைப்பூசம் தைப்பூசம் அன்று முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி? 🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔… Read More

    4 weeks ago

    Today rasi palan 19/2/2025 in tamil | இன்றைய ராசிபலன் புதன்கிழமை மாசி – 7

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *மாசி - 07*… Read More

    15 hours ago