Arthamulla Aanmeegam

திருநாவுக்கரசு நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

திருநாவுக்கரசு நாயனார்.

பல்லவ தேசத்தில் அமைந்துள்ள திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்னும் திருத்தலத்தில் புகழனார் மற்றும் மாதினியார் ஆகிய சிவஅன்பர்களுக்கு மகனாக பிறந்தவர் மருள்நீக்கியார். திருவாமூர் தற்போது கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.
இவருடைய தமக்கையார் பெயர் திலகவதியார்.

திலகவதியாரும், மருள்நீக்கியாரும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார்கள். திலகவதியார் வளர்ந்தும், அரசனிடம் சேனாதிபதியாக விளங்கிய கலிப்பகையார் என்பவர்க்கு மணம் பேசி நிச்சயத்தனர்.இந்நிலையில் புகழனாரும், மாதினாரும் அடுத்தடுத்து மறைந்தனர். திலகவதியாருக்கும், மருள்நீக்கியாருக்கும் மீளாத்துயர் உண்டானது. அச்சமயத்தில் போருக்குச் சென்ற கலிப்பகையார் இறைபதம் எய்தினார். இதனை அறிந்த திலகவதியார் கணவனாக மனதில் நினைத்தவர் மறைந்ததால் தானும் உயிர் நீக்க எண்ணினார்.

அப்போது மருள்நீக்கியார் “தாயும், தந்தையும் நம்மைவிட்டு சென்றபின் நான் உன்னையே அவர்களாக எண்ணி வாழ்கிறேன். இப்போது நீயும் உலகைவிட்டு செல்லத் துணிந்ததால் உனக்கு முன்பு நானே இவ்வுயிரை நீப்பேன்” என்றார்.அதனைக் கேட்டதும் திலகவதியார் தன்னுடைய மனமுடிவினை மாற்றிக் கொண்டார். நகைகளையும், பட்டாடைகளையும் தவிர்த்து உலக பற்றற்று, எல்லோரிடத்தும் அன்பு கொண்டு மனைத்தவம் புரியும் பெண்மணியாக விளங்கினார்.

இவ்வுலகில் உடல், பொருள், செல்வம் எதுவும் நிரந்தரமில்லை என்பதை உணர்ந்த மருள்நீக்கியார் அறசாலைகளை நிறுவி, தண்ணீர்ப்பந்தல், சாலைகள், நீர்நிலைகள் ஆகியவற்றை அமைத்து எல்லோரும் பயன்படும் வகையில் வாழ்ந்து வந்தார்.

அப்போது திருவாமூர் அமைந்திருந்த நாட்டின் அரசன் சமண சமயத்தைப் பின்பற்றியிருந்தான்.ஆதலால் சமண சமயத்தவர் தம்முடைய மதத்தினைப் பரப்புவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். மருள்நீக்கியார் அவர்களுடன் வாதில் ஈடுபட்டு சமண சமயத்தில் சேர்ந்தார்.
ச‌மண மடத்தில் தங்கியிருந்த மருள்நீக்கியார் தம்முடைய அறிவுத்திறத்தால் சமண குருவானார். சமண சமய‌த்தில் மருள்நீக்கியாருக்கு தருமசேனர் என்ற பெயர் சூட்டப்பட்டது.

திலகவதியார் திருவதிகையில் திருமடம் அமைத்து திருவதிகை வீராட்டான நாதரை வணங்கி ஏழைகள் தொழுநோயாளிகள் பெற்றோரை இழந்த பிள்ளைகள் என அனைவருக்கும் தாம் பணிசெய்வதால் கிட்டும் வருமானம் கொண்டும் பணி இல்லாத நாட்களில் பலரிடம் யாசகம் கேட்டு அதன்மூலம் கிடைத்த வருமானம் கொண்டும் தொண்டுகள் பல புரிந்து வந்தார். அன்னையின் பணி அளவிடற்கரியது. அன்னையும் அறுபத்துமூவர் வரிசையில் இடம்பெற வேண்டியவரே. அம்மை இல்லையேல் நாவுக்கரசர் இல்லை.

அம்மை திலகவதியார் வீரட்டானநாதரிடம் சமண சமயத்தை பின்பற்றும் தம்முடைய தமையனார் மீண்டும் சைவத்திற்கு வர அருள வேண்டும் என்பதை வேண்டுகோளாகக் கொண்டு வழிபட்டார்.
சிவனாரும் அம்மையாருக்கு அருள்புரிய எண்ணினார். ஆதலால் தருமசேனருக்கு தீராத சூலை நோய் (வயிற்றுவலி)தந்து அருள் புரிந்தார். அவரின் வயிற்றுவலியைப் போக்க சமணர்கள் தங்களால் முடிந்ததைச் செய்தனர். ஆனால் தருமசேனரின் சூலை நோய் குறையவில்லை. மாறாக அதிகரிக்கவே செய்தது.

சமணர்களால் தன்னுடைய சூலை நோயைப் போக்க இயலாது என்று எண்ணிய தருமசேனர் ஆளை தூது அனுப்பி தன்னுடைய நிலையைப் பற்றி தமக்கைக்கு சொல்லி, தமக்கையை அழைத்து வரச்சொன்னார்.
தமையனாரின் நிலையை கேட்டறிந்த திலகவதியார், தம்மை வந்து தருமசேனரைப் பார்க்கச் சொல்லி சமண மடத்திற்கு வர மறுத்து விட்டார்.

சூலை நோயின் கொடுமை தாங்க முடியாமல் மருள்நீக்கியார் சமணசமயத்தை ஒதுக்கிவிட்டு திருவதிகை திருமடத்தில் திலகவதியாரைச் சந்தித்தார்.
திலகவதியார் மருள்நீக்கியாரை திருவதிகை வீரட்டானநாதர் திருக்கோவிலுக்கு அழைத்துச் சென்று திருவெண்ணீறு அணிவித்து திருவைந்தெழுத்தை ஓதும்படி பணித்தார்.
திருவைந்தெழுத்தை ஓதியதும் அவருக்குள் சிவனார்பால் அன்பு மேலிட்டது. ‘கூற்றாயினாவாறு விலக்கலீர்’ என்ற திருப்பதிகத்தைப் பாடினார். இறைவனின் கருணையால் அவருடைய சூலைநோய் உடனே தீர்ந்தது.

‘ஐயனே, உம்முடைய கருணையால் உயிரையும், அருளையும் பெற்றேன்’என்று எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அப்போது இறைவனார் ஒலி வடிவில் “செந்தமிழ் பாக்கள் பாடிய நீ இனி நாவுக்கரசு என்ற பெயருடன் உலகில் நிலைத்திருப்பாய்” என்று அருளினார். அது முதல் மருள்நீக்கியார் திருநாவுக்கரசு ஆனார். அது முதல் திருநாவுக்கரசர் சைவத் தொண்டு செய்யலானார்.

மருள்நீக்கியார் மனதில் சிவத்தையே பூசித்து மனத்தாலும், அன்னைத்தமிழால் பண்ணிசை பாடல் பாடி மொழியாலும், உழவாரம் எனும் ஆயுதம் கொண்டு ஆலய சுவற்றில் முளைக்கும் சிறுசிறு செடிகளை அகற்றி தூய்மை செய்யும் பணிமூலம் உடலாலும் இறைவனுக்கு தொண்டு செய்த உத்தமஅடியார் ஆவார்.

இதனைக் கண்ட சமணர்கள் அரசர் மகேந்திரவர்மனிடம் தருமசேனர் சைவ சமயத்திற்கு மாறியதால் அவரைத் தண்டிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.ச‌மண சமயத்தைப் பின்பற்றியிருந்த அம்மன்னனும் அதற்கு இசைந்தான்.உடனே காவலர்கள் திருநாவுக்கரசரை மன்னர் அழைப்பதாக கூறி அழைத்தார்கள். அதனைக் கேட்டதும் நாவுக்கரசர் ‘யாமர்க்கும் குடியல்லோம் யமனை அஞ்சோம்‘ என்ற மறுமாற்ற திருதாண்டகத் திருப்பதிகம் பாடி அவர்களுடன் புறப்பட்டார். சமணர்கள் நாவுக்கரசரை சுண்ணாம்பு வேகவைக்கும் காளவாய் அறையில் ஏழுநாட்கள் அடைத்துவைத்தனர். பின்னர் அறையை திறந்தபோது மாசில் வீணையும் எனும் பாடலை இசைத்தவாறு ஆனந்தமாக அசைந்தவாறு வெளியில் வந்தார். சமணர்களும் சலைக்காமல் நஞ்சுகலந்த பால்சோறு உண்ண வைத்தும், மதயானை கொண்டு மிதிக்க செய்தும் கொடுமை செய்தனர். யாவற்றிலும் இறையருளால் நாவரசர் வெற்றி கண்டார்.இறுதியில் கல்லில் கட்டி கடலில் வீசினர். ஆழியில் கல்மிதந்து அடியாரை கரைசேர்த்தது.

பின்னர் பென்னாடகம் திருத்தலத்தில் இறைவனை பாடி விடை சூல முத்திரைகளை பொறிக்கப்பெற்றார். பின்னர் தில்லை அம்பலக்கூத்தனை கண்டு களித்தார்.நாவர பாடினார். அங்கிருத்து சீர்காழி சென்று ஞான சம்பந்த பெருமானை சந்தித்து தோணியப்பரை வழிபட்டனர்.

பின்னர் இருவரும் திருமறைக்காடு சென்று வேதத்தால் பூட்டப்பட்ட ஆலய மணிக்கதவை தமிழ் பண்ணிசைப்பாடி திறக்கவும் மீண்டும் மூடவும் செய்தனர்.
ஞான சம்பந்தபெருமான் நாவரசரை அப்பரே(அப்பா) என்று அழைத்தார். அதுமுதல் நாவரசரை அனைவருமே அப்பர் என அழைக்கலாயினர்.

திருநாவுக்கரசர் பெயரால் தொண்டுகள் பல செய்து வரும் அப்பூதி அடிகளைச் சந்தித்தார்.
திருவமுது செய்ய அப்பூதி அடியாரின் வீட்டிற்கு சென்ற போது அரவத்தால் மாண்ட அப்பூதியாரின் மூத்த மகனை திருப்பதிகம் பாடி உயிர் மீண்டெழச் செய்து அற்புதம் படைத்தார்.

நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் திருகடவூர் சென்று குங்குலியக்கலய நாயனார் திருமடத்தில் தங்கி காலனை உதைத்த காலகாலனை வழிபட்டனர். பின்னர் திருவீழிமிழலையை அடைந்தனர்.
அங்கிருந்தோர் அவ்விருவரையும் மகிழ்வுடன் வரவேற்றனர். திருவீழிமிழலையானை வழிபட்டு அப்பரடிகள் திருவீழிமிழலையானைச் சேராதார் தீயநெறிக்கே சேர்கின்றாரே என்ற திருதாண்டவ திருப்பதிகத்தைப் பாடினார்.
அப்போது அவ்வூரில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற அடியார்கள் இருவரும் இறைவனிடம் வேண்டினர்.
அவர்களின் வேண்டுதலை ஏற்று கிழக்கு பலிபீடத்தில் ஞானசம்பந்தருக்கும், மேற்கு பலிபீடத்தில் நாவுக்கரசருக்கும் படிக்காசுகளை வழங்கினார் இறைவர். அப்படிக்காசுக்களைக் கொண்டு இருவரும் வேண்டிய பொருட்களை வாங்கி மக்களின் பசிப்பிணியைப் போக்கினர்.

மதுரையில் இருந்து சிலர் ஞானசம்பந்தரைத் தேடி வந்தனர்.
மதுரையில் சமணத்தை அழித்து சைவத்தை வளர்க்க மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
அதனை அறிந்த அப்பரடிகள் சமணர்கள் மிகவும் கொடுமையானவர்கள்.அத்தோடு இப்போது கோளும் நாளும் இப்போது சரியில்லை. ஆதலால் மதுரை பயணம் செல்வது தள்ளி வைக்குமாறு ஞானசம்பந்தரிடம் கேட்டுக் கொண்டார்.
சிவனடியார்களுக்கு நாளும் கோளும் கிடையாது என்று கூறிய ஞானசம்பந்தர் மதுரை புறப்பட்டார். கோளறு திருப்பதிகம் பாடி மதுரையில் சைவத்தையும் தமிழையும் தழைக்க செய்தார்.

அப்பரடிகள் திருப்பைஞ்சீலியை நோக்கி புறப்பட்டார்.
நாட்கணக்காக நடந்ததால் அவர் மிகவும் சோர்வடைந்திருந்தார். பசியும்,தாகமும் மிகுந்திருந்தது.
இறைவனார் தம்முடைய அடியவரின் துன்பத்தைப் போக்க வழியெங்கும் பொய்கைகளையும், சோலைகளையும் உருவாக்கினார். சிவனடியார் உருவில் நாவுக்கரசரை எதிர்பார்த்து அவர் வரும் வழியில் பொதிச்சோற்றுடன் இறைவனார் காத்திருந்தார். நாவுக்கரசர் வந்ததும் அவருக்கு பொதிச் சோற்றை அளித்தார். அதனை உண்ட நாவுக்கரசர் தண்ணீரை குடித்து சோர்வு நீக்கினார்.
எங்கே செல்கிறீர் என்று வினவிய சிவனடியாரிடம் திருப்பைஞ்சீலி நாதரைக் காணப் போவாதாக நாவுக்கரசர் தெரிவித்தார்.
அதனைக் கேட்டதும் தானும் அங்கே செல்வதாகக் கூறிய சிவனடியார் திருக்கோவில் அருகே சென்றதும் மறைந்தருளினார்.

அதன் பின்னர் காளத்தியப்பரையும், கண்ணப்ப நாயனாரையும் தரிசித்துவிட்டு திருசைலத்திற்கு சென்று மல்லிகார்ச்சுனரை வழிபட்டு தெலுங்கு மற்றும் மாளவ தேசத்தின் வழியாக காசி விசுவநாதரைத் தரிசித்துவிட்டு திருக்கயிலையை நோக்கிப் பயணமானார்.நீண்ட நடை மற்றும் களைப்பினால் அவருடைய பாதங்கள் தேய்ந்தன. ஆதலால் கைகளை ஊன்றி நடந்தார். கைகளும் தேய உடலினை இழுத்துக் கொண்டு சென்றார்.
அடியவரின் உடலும் தேய்ந்த துயரத்தை கண்ட இறைவனார் அவர் முன் முதியவராகத் தோன்றி எங்கே செல்வதாக என வினவினார். திருக்கயிலை தரிசனம் காணச் செல்வதாக நாவுக்கரசர் கூறினார்.

தேவர்களாலும் காண இயலாத கயிலாய தரிசனத்தை மனித உடலால் சென்று காண்பது கடினம் என முதியவர் கூற, அதற்கு நாவுக்கரசர் மனித உடல் அழியும் வரை இறைவனைக் காணும் முயற்சி தொடரும் என்று உறுதிபடக் கூறினார்.
அங்கு வயதோதிகர் மறைந்தார். அங்கு பொய்கை ஒன்று உருவானாது. “இப்பொய்கையில் மூழ்கி திருவையாற்றில் எழுவாயாக. அங்கு உமக்கு யாம் திருக்கயிலைக காட்சியை காட்டி அருளுவோம்.” என்ற மறைஒலி கேட்டது.

அப்பரடிகள் உடல் பழைய நிலைக்கு மாறியது. இறைவனாரின் ஆணைக்கு இணங்க அப்பரடிகள் பொய்கையில் மூழ்கி திருவையாற்றில் எழுந்தார்.
அங்கு இறைவனார் உமையம்மையோடு திருக்கயிலை காட்சியை நாவுக்கரசருக்கு காட்டியருளினார். சிறிது நேரத்தில் கயிலைக்காட்சி மறைந்தது. அதனைக் கண்டு திகைத்தார் அப்பர்.

ஐயாரப்பரைக் காண திருக்கோவிலுக்குச் சென்று அம்மையையும், அப்பனையும் கண்டு ‘மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி‘ என்னும் பதிகத்தைப் பாடி அருளினார்.

திருப்புகலூரில் உழவாரப் பணி செய்து வந்த அப்பரடிகள் பெருமானின் திருவடியை அடையும் நிலைக்கு வந்ததை உணர்ந்து ‘எண்ணுக்கேன் எனச் சொல்லி‘ என்னும் திருத்தாண்டகத்தை பாடினார்.
பின்னர் ஒரு சித்திரை சதயத்தில் திருநாவுக்கரசு நாயனார் இறைவனின் திருவடிப்பேற்றை பெற்று சிவபுரம் சார்ந்தார். நால்வர் பெருமக்களில் ஒருவராகவும், அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் விளங்கும் அருளைப்பெற்றார்.

திருநாவுக்கரசு நாயனார் குருபூசை சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகின்றது.

திருநாவுக்கரசு நாயனார் திருவடிகள் போற்றி

அன்னை திலகவதியார் மலரடிகள் போற்றி

அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
 • Recent Posts

  அருள்மிகு விருத்தாச்சலேஸ்வரர் ஆலயம் | Venganur shiva temple virudhachaleswarar temple

  Venganur shiva temple வெங்கனூர் அருள்மிகு விருத்தாச்சலேஸ்வரர் ஆலயம் - சேலம் மாவட்டம் தமிழ்நாடு (venganur shiva temple) தல… Read More

  6 hours ago

  50 வருடங்களுக்கு பிறகு வரும் அற்புதமான இந்த மாசி மகம்

  50 வருடங்களுக்கு பிறகு வரும் அற்புதமான இந்த மாசி மகம் - 24/02/2024 மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் மாசி… Read More

  7 hours ago

  வில்வம் அதன் பயன்களும் மருத்துவ குணங்களும் | Vilvam leaves benefits

  வில்வம் அதன் பயன்களும் மருத்துவ குணங்களும் | Vilvam leaves benefits வில்வம் -ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு… Read More

  6 hours ago

  சிவனுக்கு உகந்த நமசிவாய மாலை | Namashivaya Malai Lyrics in Tamil

  Namashivaya Malai Lyrics in Tamil சிவனுக்கு உகந்த நமசிவாய மாலை (Namashivaya Malai Lyrics tamil) தினமும் சிவனுக்கு… Read More

  8 hours ago

  வியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் | Vilvashtagam benefits

  வில்வாஷ்டகம் பாடல் வரிகள் சிவபெருமானை வழிபடுவதற்கு, வில்வத்துக்கு இணையான அர்ச்சனை இல்லை. வில்வாஷ்டகத்துக்கு இணையான பாராயணம் இல்லை என்று சொல்லிச்… Read More

  8 hours ago