கண்ணன் கதைகள் – 52
கம்ஸ மோக்ஷம் / கம்ஸ வதம்
குருவாயூரப்பன் கதைகள்
கண்ணனின் அவதார நோக்கம் நிறைவேறும் அந்த நாளும் வந்தது. மறுநாள் அதிகாலையில், கம்ஸனின் ஆணைப்படி, மல்யுத்தத்திற்கான போட்டிகள் முரசொலி செய்து அறிவிக்கப்பட்டது. அதனைக் காண, பல அரசர்கள் வந்தனர். நந்தகோபரும் உப்பரிகைக்குச் சென்றார். கம்ஸனும் உப்பரிகைக்குச் சென்றான். கிருஷ்ணனும் பலராமனும் அழகிய ஆடை அலங்காரங்களுடன் மல்யுத்த களத்தை அடைந்தார்கள். அங்கு ‘குவாலயாபீடம்’ என்ற யானை அவர்களை வழிமறித்து நின்றது. வழிவிட்டுச் செல் என்று அந்த யானையைப் பணித்தார் கிருஷ்ணன். அப்போது யானைப் பாகனான ‘அம்பஷ்டன்’, கிருஷ்ணனைத் தாக்க யானையை ஏவினான். அந்த யானை, விரைந்து கிருஷ்ணனைப் பிடித்தது. அதனிடமிருந்து லாவகமாகத் தன்னை விடுவித்துக்கொண்ட கிருஷ்ணன், அதன் மத்தகத்தில் அடித்தார். பின்னர் அதன் காலடியில் மறைந்து, பிறகு சிரித்துக்கொண்டு வெளியே வந்தார். யானைக்கு அருகில் இருந்தாலும், அதன் பிடியில் அகப்படாமல் நழுவி, வெகுதூரம் ஓடி, விளையாட்டாய் விழுவது போல் கீழே விழுந்தார். அந்த யானையும் கிருஷ்ணனைத் தாக்க எதிரே வந்தது. உடனே கிருஷ்ணன், அதன் தந்தங்களை வேருடன் பிடுங்கி எறிந்தார். யானையைக் கீழே தள்ளி, அந்த தந்தங்களால் யானையைக் குத்திக் கொன்றார். தந்தத்தின் அடிப்பகுதியிலுள்ள உயர்ந்த முத்துக்களை எடுத்து, ஸ்ரீதாமனிடம் கொடுத்து, “இவற்றை அழகிய முத்து மாலையாகச் செய்து ராதையிடம் கொடு” என்று கூறினார். பிறகு, யானையின் இரு தந்தங்களையும், கிருஷ்ணனும் பலராமனும் தங்களுடைய தோளில் சுமந்துகொண்டு, மல்யுத்த களத்திற்குச் சென்றார்கள். அவர்களைக் கண்ட மக்கள், அவர்களுடைய தேககாந்தியால் அபகரிக்கப்பட்டு, ஆச்சர்யம்! என்றும், நந்தகோபன் மஹாபாக்கியசாலி என்றும், சிலர் யசோதை பாக்கியசாலி என்றும், வேறு சிலர், இல்லை இந்த நகரத்து மக்களாகிய நாம்தான் பாக்கியம் செய்தவர்கள், என்றும் உவகையுடன் கூவினார்கள். அந்நகர மக்கள் கண்ணனைப் பரப்ரம்மமாக அறியவில்லை. ஆயினும், முதன்முதலாய் அவரைப் பார்த்த அவர்கள், உடனேயே பாபம் நீங்கியவர்களாய் ஆனார்கள். கிருஷ்ணனுடைய செய்கைகளைப் பற்றிப் போற்றிப் பாடினார்கள்.
கம்ஸனுடைய ஆணையின்படி, மல்யுத்தத்தில் சிறந்த சாணூரன் என்ற மல்லன் கிருஷ்ணனையும், முஷ்டி யுத்தத்தில் சிறந்த முஷ்டிகன் என்பவன் பலராமனையும் சவாலுக்கு அழைத்தார்கள். பலவிதமான தாக்குதல்களுடன் யுத்தம் தொடங்கியது. “இது என்ன போட்டி? ஒரு புறம் அழகான சிறுவர்கள். மல்லர்களோ கடினமானவர்கள். இந்த யுத்தத்தை நாம் பார்க்க வேண்டாம், போய்விடுவோம்” என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். அப்போது கிருஷ்ணன், சாணூரனைத் தூக்கிச் சுற்றி உயிரிழக்கச் செய்தார். உயிரிழந்த அவனை பூமியிலே ஓங்கி அடித்தார். பலராமனும் முஷ்டிகனை அடித்துக் கொன்றார். மீதமிருந்த மல்லர்கள் அங்கிருந்து ஓடினர். திகைத்த கம்ஸன், முரசுகளையும், வாத்தியங்களையும் முழங்க விடாமல் தடுத்தான். உக்ரசேனன், நந்தகோபன், வசுதேவன் ஆகியோரைக் கொல்லும்படியும், கண்ணனையும் பலராமனையும் வெகுதூரத்திற்கப்பால் விரட்டும்படியும் காவலர்களுக்கு உத்தரவிட்டான். இதைக் கேட்டுக் கோபமடைந்த கண்ணன், உப்பரிகையில் வீற்றிருந்த கம்ஸனை நோக்கி சிங்கம்போலப் பாய்ந்து சென்றார். கம்ஸன் வாளெடுத்துச் சுழற்றினான். அவனை அசையவிடாமல் வலுவாகப் பிடித்து, அவனுடைய கேசங்களைப் பிடித்து இழுத்து, சிம்மாசனத்திலிருந்து தலைக்குப்புற கீழே சாய்த்துத் தள்ளினார். பூமியில் தள்ளி, அவன் மார்பு மேல் அமர்ந்து, அவனுடைய அங்கங்களை அடித்து நொறுக்கினார். கம்ஸனுடைய கிரீடம் சிதறுண்டு தரையில் உருண்டது. மயங்கி விழுந்த கம்ஸன் மாண்டு போனான். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். கம்ஸன் எப்போதும் கிருஷ்ணனையே மனதில் நினைத்திருந்தபடியால் மோக்ஷத்தை அடைந்தான்.
பிறகு கிருஷ்ணன், பெற்றோரான வசுதேவரையும், தேவகியையும் சிறையிலிருந்து மீட்டு, அவர்களை நமஸ்கரித்தார். கம்ஸனின் தந்தையான உக்ரசேனனை அந்த நாட்டிற்கு அரசனாக ஆக்கினார். யாதவ குலத்தினர் மிகவும் மகிழ்ந்தார்கள். தேவர்களின் குருவான பிருகஸ்பதியிடமிருந்து வித்தைகளைக் கற்ற உத்தவரை நண்பராக ஏற்றுக் கொண்டார். மிக்க மகிழ்ச்சியுடன் மதுரா நகரில் வசித்து வந்தார்.