Vinayaka Chathurthi Pooja Procedure Tamil

விநாயகர் சதுர்த்தி (7/9/2024) வழிபடும் முறைகள் (Vinayagar Chathurthi Pooja Procedure in Tamil)

சதுர்த்தியன்று பூஜை செய்யும் முறை
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பின் நீராடி வந்து பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை, அதன் நுனி வடக்குப் புறமாக இருக்கும்படி வைத்து அதில் அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும்.
மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும்.
நம் வீட்டுப் பிள்ளைகள் மூலமாக, களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி வரச் செய்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு அரையில் துண்டு கட்டி, பூமாலை, அறுகம்புல் மாலை அணிவித்து, மணைப் பலகையில் இருத்த வேண்டும். குன்றிமணியால் கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் பிள்ளையார் குடை வைத்து, விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும். கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள், அர்ச்சனை மலர்கள், பத்ரங்கள் 21 எனும் எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. இல்லாவிட்டாலும் நம்மால் முடிந்ததைக்கொண்டு பூஜை செய்யலாம். தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்யவேண்டும். பின்னர்,
ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே
வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா
எனும் கணபதியின் மூல மந்திரத்தை 21 முறை அல்லது 51 முறை சொல்லி பூஜையை முடிக்க வேண்டும். பூஜை முடிந்ததும் குழந்தைகளுக்கு நிவேதனப் பட்சணங்களை வழங்கி நாமும் சாப்பிடலாம். வீட்டில் பூஜை முடித்தபின் ஆலயம் சென்று விநாயகரை வணங்கி வரலாம்.
காலை-மாலை இருவேளையும் பூஜை செய்வது சிறப்பு. விநாயகர் சதுர்த்திக்குப் பின் விநாயகர் சிலையை விவர்ஜனம் செய்யவேண்டும். விநாயகர் சதுர்த்தியையும் சேர்த்து, அன்றைய தினமோ அல்லது ஒன்றைப் படையில் அமையும்படியாக 3,5,7-ஆவது நாட்களிலோ இதை மேற்கொள்ளலாம்.
ஆண்கள் மட்டுமே பிள்ளையாரை நீரில் கரைக்க வேண்டும். விநாயகர் வீட்டில் இருக்கும்வரை அவருக்கு இருவேளை பூஜை நைவேத்தியம் செய்ய வேண்டும். பிள்ளையார் சிலை சேதமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
தொப்பையில் பதித்த காசை எடுத்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும்; லட்சுமி கடாட்சம் கிட்டும்

பிரணவமே வேதத்தின் மூலம். ஓம் என்ற ஒலியின் வடிவமே விநாயகர். எனவே பிரணவப் பொருள் என்று விநாயகரை அழைக்கிறோம். ஈஸ்வரனின் மகனான விநாயகர் பூதகணங்களின் தலைவரும் ஆவார். அதனால் அவருக்கு கணபதி என்ற பெயரும் உண்டு. தேவர்களுக்கு துன்பம் கொடுத்த கஜமுகன் என்ற அரக்கனை அழிப்பதற்காக சிவபெருமான் அருளால் விநாயகப் பெருமான் அவதரித்தார்.

விநாயகர் கஜமுகனுடன் போர் புரிந்தார். அவன் ஆயுதங்களால் அழியாத வரம் பெற்றவன். விநாயகர் தனது வலக் கொம்பை ஒடித்து சிவமந்திரத்தை உச்சரித்து ஏவ, அது கஜமுகனை சாய்த்தது. அவன் பெருச்சாளி வடிவில் எதிர்த்து வந்தான். விநாயகர் அவன் மீது கருணை புரிந்தார். அவன் அறியாமை அகன்றது. விநாயகரை வணங்கி நின்றான்.

விநாயகர் அவனை தன் வாகனமாக்கி அருள்புரிந்தார். இதிகாச காவியமான மஹாபாரதத்தை தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப் பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார்.

பிள்ளையார் சுழி :
———————————

எழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும் –ஆதியும் அந்தமும் அவரே, தும்பிக்கையை நினைக்கவைக்கும் கோடும் – இணைந்து “உ” எனும் பிள்ளையார் சுழி உருவானது. பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடிந்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு.

விநாயகர் சதுர்த்தி வழிபடும் முறைகள்:
மஞ்சள் பொடியிலும், மண்ணிலும், சாணத்திலும் விநாயகரை பிடித்து வழிபடலாம். அருகம்புல், பூ, எருக்கம்பூ, விபூதி, குங்குமம், சந்தனம் போன்றவற்றால் அலங்கரிக்க வேண்டும். கொழுக்கட்டை பிரசாதம் மிகவும் பிடிக்கும். அவல், பொரி, வெல்லம், கடலை, பழம், தேங்காய், எள் உருண்டை முதலியன விநாயகருக்கு விருப்பமான பிரசாதமாகும்.

தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா, அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார். விநாயகர் சதுர்த்தி அன்று விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கி வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி , இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைத்து , பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மனையை வைக்க வேண்டும்.

அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும் , இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.

பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம். பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.

அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம். அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது.

மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம். உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.

விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி. பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம்.

அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம். பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம்.

நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.

21 வகை இலைகள்/ பலன்கள்:-
——————————————————–

விநாயகர் சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது என்பார்கள். அவற்றைக் கொண்டு அர்ச்சிப்பதால் அடையக்கூடிய பலன்களைப் பார்ப்போமா?

(1)முல்லை இலை கொண்டு வழிபட்டால், அறம் வளர்க்கும்.

(2)கரிசலாங்கண்ணி இலையால் அர்ச்சித்து வழிபட்டால், இல்லத்துக்குத் தேவையான பொருட்சேர்க்கை நிகழும்!

(3)வில்வம் இலையால் அர்ச்சித்து விநாயகரை வழிபட்டால், விரும்பிய அனைத்தும் கிடைக்கும்.

(4)அருகம்புல்லால் அர்ச்சித்து வணங்கினால் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம்!

(5)இலந்தை இலையால் அர்ச்சனை செய்து ஆனைமுகத்தானை வழிபட்டால், கல்வியில் மேன்மை பெறலாம்.

(6)ஊமத்தை இலையைக் கொண்டு அர்ச்சித்து வழிபட்டால், பெருந்தன்மையான மனம் பெறலாம்!

(7)வன்னி இலை கொண்டு வழிபட்டால், பூவுலகிலும் சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப் பெறும்.

(8)நாயுருவி இலையால் வழிபட்டால், முகப் பொலிவும் அழகும் கூடும். தேஜஸூடன் வாழலாம்!

(9)கண்டங்கத்திரி இலையால் கணபதியை வழிபட்டால், வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறலாம்.

(10)அரளி இலையால் ஆனைமுகனை வழிபட்டால், எல்லா முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.

(11)எருக்கம் இலை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால், கருவில் உள்ள சிசுவுக்கு பாதுகாப்பு கிடைக்கும். குழந்தை ஞானத்துடனும் யோகத்துடனும் வளரும்.

(12)மருதம் இலையால் வழிபட்டால், மகப்பேறு கிடைக்கும்.

(13)விஷ்ணுகிராந்தி இலையால் விநாயகப் பெருமானை வழிபட்டால், தேர்ந்த அறிவுடன் திகழலாம். காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

(14)மாதுளை இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டால், பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.

(15)தேவதாரு இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டால், எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்.

(16)மருக்கொழுந்து இலையால் மகேசன் மைந்தனை வழிபட்டால், இல்லற சுகம் கிடைக்கப் பெறும்.

(17)அரச இலை கொண்டு வழிபட்டால், உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.

(18)ஜாதிமல்லி இலை கொண்டு விக்னேஸ்வரனை வழிபட்டால், சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப் பெறலாம்!

(19)தாழம் இலையால் ஆனைமுகனை வழிபட்டால், செல்வச் செழிப்புடன் வாழலாம்! .

(20)அகத்தி இலையால் அர்ச்சித்து பார்வதிமைந்தனை வேண்டிக் கொண்டால், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்! பொருட்சேர்க்கை நிகழும்!

(21)தவனம் ஜகர்ப்பூரஸ இலை கொண்டு வழிபட்டால், நல்ல கணவன்- அல்லது மனைவி அமையப் பெறும். தாம்பத்தியம் சிறக்கும். நல்ல வாழ்க்கைத் துணையுடன் இனிதே வாழலாம்.

பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்.!!!
—————————————————————————————–

1: மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
காரிய சித்தி தருவார்

2: குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.
குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்

3: புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்.
விவசாயம் செழிக்கும்

4: வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.
வளம் தருவார்

5: உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும்.
எதிரிகளை விரட்டுவார்

6: வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும்.
செல்வம் உயரச் செய்வார்

7: விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.

8: சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.

9: சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.

10: வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.

11: வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழி பட்டால் கடன் தொல்லை நீங்கும்.

12: சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழி பட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.

13 பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்

14 கல் விநாயகர்- வெற்றி தருவார்

15 புற்றுமண் விநாயகர்- வியாபாரத்தை பெருக வைப்பார்

16 மண் விநாயகர்- உயர் பதவிகள் கொடுப்பார்.

விநாயகரின் 12 அவதாரங்கள்!
**********************************

விநாயகர் 12 அவதாரங்கள் எடுத்ததாகத் தெரிவிக்கிறது ஸ்ரீவிநாயக புராணம்.

1.வக்ரதுண்ட விநாயகர்: இவர் உலகம் ஒவ்வொரு முறை அழியும் போதும் தோன்றி, மீண்டும் உலகைப் படைப்பதற்கான வழிமுறைகளை பெருமாள், பிரம்மா, ருத்ரன் (சிவவடிவம்) ஆகியோருக்கு அருளுவார்.

2.கஜானன விநாயகர்: சிந்தூரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக அவதரித்தவர்.

3.விக்கிரனபராஜர்: காலரூபன் என்ற அரக் கனை கொல்வதற்காக பிறந்தவர்.

4.மயூரேசர்: பிரம்மாவிடம் இருந்த வேதங்களை கமலாசுரன் என்ற அசுரன் திருடிச்சென்றபோது மயில் வாகனத்தில் சென்று அவனை வென்று வேதங்களை மீட்டவர்.

5.உபமயூரேசர்:சிந்தாசுரன் என்ற அசுரன் தேவர்களை சிறை வைத்தபோது அவனை அழித்தவர்.

6.பாலச்சந்திரர்:தூமராசன் என்ற அசுரனை கொன்றவர்.

7.சிந்தாமணி:கபிலர் என்ற முனிவரிடம் இருந்த சிந்தாமணி என்ற அற்புதப் பொருளை கனகராஜன் என்பவன் திருடிச் சென்றான். உயிர்காக்கும் இந்த சிந்தாமணியை அவனிடமிருந்து மீட்டவர்.

8.கணேசர்:பலி என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தியபோது, ஐந்து முகத்துடன் தோன்றி அவனை அழித்தவர்.

9.கணபதி:கஜமுகாசுரனை வென்றவர்.

10.மகோற்கடர்:காசிராஜன் என்ற புகழ்பெற்ற அரசனுக்கு நராந்தகன், தேவாந்தன் என்ற கொடியவர்கள் துன்பம் செய்து வந்தனர். இதனால் உலகத்தில் தர்மம் அழிந்தது. அவர்களை நாசம் செய்ய அவதரித்தவர்.

11.துண்டி:துராசதன் என்ற அசுரனை வென்றவர்.

12.வல்லப விநாயகர்:மரீச முனிவரின் மகளான வல்லபையை திருமணம் செய்தவர். வல்லப விநாயகரை மனதார வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

1 Comment

  • அருமையான பதிவு!!. 
    ஆனை முகனே போற்றி!!!
    விநாயகர் மந்திரங்கள், பாடல்கள்…

Leave a Comment