Temples

Sankarankovil Temple History Tamil | சங்கரன்கோவில் வரலாறு

Sankarankovil Temple History Tamil

இந்த பதிவில் சங்கரநாரயண சாமி கோவில் வரலாறு (Sankarankovil temple) மற்றும் கோவிலின் சிறப்புகளோடு, நடை திறக்கும் நேரம் போன்ற பல தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது…

சங்கரன்கோவில்  ஸ்தல வரலாறு:-
மணிக்ரீவன் என்ற தேவன் பார்வதி தேவியின் சாபத்தாற் பறையனாகிப் புன்னைவனக் காவலனாக இருந்தான். அதனால் அவன் காப்பறையன் என்றும், காவற் பறையன் என்றும் பெயர் பெற்றான்.

கரிவலம்வந்தநல்லூர்ப் பால்வண்ண நாதருக்குப் புன்னைவனத்திலே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் அவனே காவல்.

தோட்டத்தின் ஒரு பக்கம் புற்றொன்று வளர்ந்தது. அதை ஒரு நாள் அவன் வெட்ட அதிலிருந்த பாம்பின் வாலும் வெட்டுப் பட்டது. அப்போது அவன் புற்றில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டான்.

அதே சமயத்தில் உக்கிரபாண்டியர் அடுத்த வனத்தில் வந்திருப்பதாக அறிந்து செய்தி தெரிவிக்க ஓடினான்.

காவற்பறையன் புற்றை வெட்டிச் சிவலிங்கத்தைக் கண்ட அன்று, பாண்டியருடைய யானை கொம்பினால் தரையைக் குத்திக் கீழே விழுந்து புரண்டது. பாண்டியர் ஒன்றும் செய்ய அறியாது திகைத்திருந்த போதுதான் காவற்பறையன் ஓடிவந்து அரசரிடம் செய்தி தெரிவித்து உடன் வர அழைத்தான். உக்கிரபாண்டியர் சென்று புற்றினையும் புற்றிடங் கொண்டாரையும், கூழைவாலினதாக்கிய பாம்பினையும் கண்டார். சங்கரனார் அசரீரியாக ஆனைதர, காட்டை அழித்து, நாடாக்கி உக்கிரபாண்டிய மன்னர் 947 ஆண்டுகளுக்கு முன் இக்கோவிலை கட்டிச் சங்கரநயினார் கோவில் ஊரையும் தோற்றுவித்தார். சங்கரன் கோவில் முகப்பில் நூற்றி இருபத்தைந்து அடி உயரமுள்ள ஒரு பெரிய ராஜ கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் ஒன்பது நிலை கொண்ட கோபுரமாகும். கோபுரம் தென்வடக்காக 56 அடி நீளம், கீழமேல் அகலம் 15 அடி கொண்டது. உச்சியில் உள்ள குடம் 7 அடி நான்கு அங்குலம் உயரமாகும். கோவிலில் கோபுரத்தைத் தாண்டியதும் (கோவில் நிர்வாக அலுவலக இடப்புறத் தூணில்) காவற்பறையனுடைய திருவுருவத்தை இப்போதும் காணலாம்.

காவற்பறையனுக்கு ஊரில் தெற்கே ஒரு சிறு கோயில் இருக்கிரது. அது இருக்கும் தெரு காப்பறையந்தெரு என்று வழங்கிவந்தது. காப்பறையன் தெரு, தற்போது முத்துராமலிங்கம் தெருவென ஆகிவிட்டது. ஆனால், காவற்பறையன் கோவில் அதே தெருவில் இன்றும் உள்ளது. நித்திய பூஜைகளும் உண்டு. சித்திரைவிழா ஆரம்பமாகுமுன்பு, காவற்பறையனுக்குச் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னரே பெரிய கோயிலிலே கொடி ஏற்றம் நிகழும்.

சங்கரலிங்கப் பெருமான் திருச்சந்நிதிக்கு செல்லும்போது பலிபீடம், கொடிமரம் இவற்றைத் தாண்டியவுடன் தூண்களில் உக்கிரபாண்டியனையும், உமாபதி சிவாச்சாரியாரையும் காணமுடியும். உக்கிரபாண்டியர் கோயிற் பூஜைக்கு மிகுந்த நிலங்களைக் கொடுத்து ஒரு சித்திரை மாதத்திலே யானை மேலேறிக்கொண்டு தாம் இறைவனைக் காணக் காரணமாயிருந்த இடமாகிய பெருங்கோட்டூருக்குப் போய் யானை பிடிமண் எடுத்துத் தரக் கொண்டுவந்து பெருந்திருவிழா நடத்தி மகிழ்ந்தார். இத்திருவிழா இன்றும் நடைபெறுகின்றது.

பொதுவாக ஸ்ரீசக்ர பிதிஷ்டை அம்பாள் காலடிகளில் தான் இருக்கும்.
ஆனால் இங்கு கோமதி அம்மன் சன்னிதி முன் பெரிதாக சக்கரம் உள்ளது. பேய் பிசாசு மற்றும் துர்சக்தியால் பீடிக்கப்பட்டவர்கள் மனமாச்சர்யங்கள், பேதங்கள், மன நோய்கள் எல்லாம் நீங்கிட அதில் உட்கார்ந்து தியானித்துக் கொள்ளலாம். கோவிலின் உள்ளே அம்மன் சந்நிதியைச் சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தில் உள்ள பாம்பு புற்று வன்மீகம் என்று அழைக்கப்படுகிறது. இப்புற்றில் இருந்து எடுக்கப்படும் மணலை உடலில் தடவிக் கொண்டால் நோய்கள் நீங்கும். மருத்துவ குணமுடைய இந்த புற்றுமண் வேறு எங்கும் கிடைக்காத ஒன்றாகும். இந்த புற்று மண்ணை உடலில் பூசியும், தங்கள் வயல்கள், வீடுகளில் தெளித்தும் பலன் காண்பார்கள். இதனால் உடல் நோய்கள், பூச்சிக்கடியின் தாக்கம், சரும நோய்கள் நீங்கும். வயல், வீடுகளில் விஷ ஜந்துக்கள் வராது. , செல்வம் செழிக்கும் . கோவிலுக்கு வருவோர், தங்கம், பித்தளை, வெண்கல பொருட்கள், துணி, ஆடு, கோழி, உப்பு, மிளகாய், மிளகு, காய்கறிகள், பலவகைத் தானியங்கள் மற்றும் பாம்பு, தேள் ஆகியவற்றின் வெள்ளியால் செய்யப்பட்ட சிறு தகடுகளை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

சங்கரன்கோவில்  ஸ்தல வரலாறு 2:-
சங்கன், பத்மன் என்ற இரண்டு நாக அரசர்கள் இருந்தனர். நண்பர்களாக இருந்தாலும் எப்போதும் சர்ச்சைதான். சிவனா? விஷ்ணுவா? இருவரில் யார் பெரியவர்? என்பதுதான் அவர்களின் சர்ச்சைக்கு மூல காரணம். சங்கனோ சைவன், பத்மனோ வைணவன். இருவருமோ தங்களின் கருத்தை நிலை நிறுத்த வேண்டி அன்னை பார்வதியை சரணடைந்தனர்.

இருவரும் ஒருவர்தான் என்பதை நிரூபிக்க அன்னை அந்த சிவனிடமே வரம் கேட்டாள். சிவபெருமானும் மனமுவந்து, பொதிகை மலைப் பகுதியில் புன்னை விருட்சம் உள்ள புன்னை வனத்தில் பலர் தவம் இயற்றுவர். அங்கு நீயும் தவம் செய்தால், நீர் விரும்பிய திருவுருவில் காட்சி தருவேன்” என்றார்.

பார்வதியும் புன்னை வனத்தில் சிவனை நோக்கி தவமியற்றினார். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ஆடிப் பவுர்ணமியில் புன்னை வனத்தில் சங்கர நாராயணராக உமாதேவி, சங்கன், பத்மன் உள்ளிட்ட சகலருக்கும் காட்சி கொடுத்தார்.

ஒரு புறம் சிவப்பு. மறுபுறம் சியாமளம். ஒரு புறம் கங்கை-சந்திரன் சடைமுடி, மறுபுறம் வஜ்ர-மாணிக்க மகுடம். ஒரு புறம் மழு, மறுபுறம் சங்கு. ஒரு புறம் புலித்தோல், மறுபுறம் பீதாம்பரம். ஒரு புறம் ருத்திராட்சம், மறுபுறம் துளசி மாலை. ஒரு புறம் வைணவன் பத்மன், ஈசனுக்குக் குடை பிடிக்கிறான். மறுபுறம் சைவச் சங்கன் பெருமாளுக்குக் குடை பிடித்து நிற்கிறான். இப்படி அரிஹரனாய் காட்சி தந்த இறைவனை கண்டு உருகி நின்ற உமாதேவியாரிடம், ‘வேண்டிய வரங்களைக் கேள்’ என சிவ பெரு மான் கூறினார். அம்மனின் வேண்டுகோளின்படி, ஈசனும் சிவலிங்க வடிவமாக புன்னைவனத்தில் உமாதேவியாருடன் எழுந்தருளி, அங்கேயே தேவியருடன் தங்கினார்.

ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்குக் காட்சியளித்த நாளில் ஆடித் தபசு விழா கொண்டாடப்படுகிறது. நாகர் இருவரும் இறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர். நாகங்கள் அம்மனுடன் குடியிருப்பதால், இந்தத் தேவியை வணங்குவதன் மூலம்,
விஷஜந்துக்கள் பயம் நீங்கும். கோவிலின் உள்ளே அம்மன் சந்நிதியைச் சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தில் உள்ள வன்மீகம் என்ற பாம்பு புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது. புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள்.

ஒவ்ஒரு கோவிலிலும் அந்த தெய்வத்தை தரிசிக்க ஒரு முறை உண்டு. உதாரணமாக
♥ தில்லை சென்றால் காளியை தரிசித்து பின்னரே நடராஜரை தரிசிக்க வேண்டும்.
♥ பெருமாளை சேவிக்கும்போது பாதாதி கேசமாக முதலில் பாதம் பின் வயிறு பின் முகம் என தரிசிக்க வேண்டும்.
♥ காசி யாத்திரை சென்றால் ராமேஸ்வரத்தில் மண் எடுத்து காசியில் விட்டு பின் கங்கா ஜலத்தை ராமேஸ்வரம் கொண்டு வந்து அந்த நீரை ஸ்வாமிக்கு அபிஷேகித்து யாத்திரையை பூர்த்தி செய்வது மரபு.

அது போல கோமதியை தரிசிக்க ஒரு சம்பிரதாயம் உள்ளது.
♥ கோமதியை தரிசிக்க வருவோர் முதலில் மதுரையில் மீனாட்சியை தரிசிக்க வேண்டும். மீனாட்சியை தரிசித்து அனுமதி பெற்று பின் கோமதியை தரிசிக்க வேண்டும். கோமதியை தரிசித்து அவள் அனுக்கிரகத்தை பெற்று பின் மீண்டும் மீனாட்சியை தரிசித்து நன்றி கூறிவிட்டு தம் இல்லத்துக்கு திரும்ப வேண்டும்.

ஏன் என்றால் கோமதி மஹாத்ரிபுரசுந்தரியாக ராஜராஜேஸ்வரியாக அன்னை ஆவுடை நாச்சியார் பாண்டியநாட்டை ஆட்சி செய்கிறாள். இவளுக்கு மந்திரியாக இருப்பவள் தான் மீனாட்சி. ராஜமாதங்கியாக இருக்கும் ச்யாமளா மீனாட்சியை தரிசித்து அம்மா நான் உனது ராணியான கோமதியை பார்க்கனும் அனுமதி கொடு என்று வேண்டி அவள் அனுமதியை பெற்று பின் கோமதியை தரிசிக்க வேண்டும். பின் மீண்டும் மீனாட்சியை பார்த்து உன் அனுமதியால் நான் கோமதியை பார்த்துவிட்டேன் நன்றி என்று கூறிவிட்டு இல்லம் திரும்ப வேண்டும்.

பாமர மக்கள் கோமதி அக்கா மீனாட்சி தங்கை; அதனால் தங்கையை பார்த்துட்டு அக்காவ பாக்கனும்ன்னு சொல்வது பழக்கம்.

பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை உலகறியச் செய்தார். இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இத்தலம் தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத தலங்களில் மண்தலம் (ப்ரித்திவி) ஆகும்.

இந்த கோவில் செல்ல திருநெல்வேலி புது பஸ் நிலையத்தில் இருந்து 10 நிமிடத்துக்கு ஒரு பஸ் உண்டு. நெல்லையில் இருந்து 52 கிலோ மீட்டரில் இந்த கோவில் உள்ளது. கோவில் பட்டியில் இருந்து கழுகுமலை வழியாகவும் சங்கரன்கோயிலை அடையலாம். ராஜபாளையம் மற்றும் தென்காசியில் இருந்தும் சங்கரன்கோவிலுக்கு பாதை உள்ளது.

சங்கரன்கோவில் கோமதி அம்மனை தரிசிக்கும் முறை

♥♥ சங்கர நாராயணராக காட்சி தந்து கோவில் கொண்டு அரியும் சிவனும் ஒன்றுதான் என்று உலகிற்கு உணர்த்திய தலம் சங்கரன்கோவில். சங்கரன்கோவிலில் மூலவராக முதல் சந்நிதியில் சங்கர லிங்கமாகவும், இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணர் வடிவிலும், ஒரே உருவில் வலப்பக்கம் சிவனாகவும் இடப்பக்கம்
நாராயணனாகவும், மூன்றாவதாக, தனிச் சந்நிதியில் பார்வதி தேவியர் கோமதி அம்மனாக வீற்றுள்ளார்.

♥♥ கோமதி அம்மன் கோவிலின் முதன்மைப் பெண் தெய்வம். தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 பிரதான சக்தி பீட இடங்களில் அம்பிகையின் நெற்றியின் உள்பகுதி, அதாவது குண்டலினி எழும்பி பாம்பு போல் படம் விரித்து ஆடும் பகுதியான சஹஸ்ராரம் விழுந்த பகுதிதான் ஸ்ரீ கோமதி அம்மன் – மஹா யோகினி சக்தி பீடம் சங்கரன்கோவிலில் அமைத்துள்ள ஸ்ரீ கோமதி அம்மன் சன்னதி ஆகும். கோமதியம்மனுக்கு செவ்வரளிப் பூக்களைப் பரப்பி, அதன் மீது மாவிளக்கேற்றி வழிபடும் முறை சிறப்பாகக் கருதப்படுகிறது. அர்த்தஜாம பூஜை முடிந்த பின் தரப்படும் பிரசாதப்பாலை, தொடர்ந்து 30 நாட்கள் பருகினால் மகப்பேறு இல்லாதவருக்கு மகப்பேறு கிட்டும் என்கிறார்கள். ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமையிலும் கோமதியம்மனுக்கு தங்கப்பாவாடை சாத்தப்படுகிறது.

♥♥ சங்கரன்கோவிலில் காலை பூஜையின் போது துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள். மற்ற நேரங்களில் விபூதி வழங்கப்படுகிறது. பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலையை அணிவிக்கிறார்கள். புத்திரதோஷம் உள்ளவர்கள் மா விளக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கிறது. ராகு கேது தோஷம் நீங்கும் சிவன் சன்னதி எதிரில் உள்ள பஞ்சநாக சிலைகள் மீது பால் அபிஷேகம் செய்தால் நாகதோஷம் விலகும். இத்தலத்தில் சர்ப்ப விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை (4.30 முதல் 6.00) ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்தால் ராகு,கேது தோஷம் நீங்கும். வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லை இருந்தால், சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அதன் வெள்ளி உருவங்களை வாங்கி காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும். மனநலம் சரியாகும் அம்மன் சந்நதி பிராகார வாயு மூலையில் உள்ள புற்று மண்ணை நெற்றியில் இட்டுக் கொள்பவருக்கு கெடுபலன் குறையும். சங்கரநாராயணர் சந்நதியில் உள்ள வசனக்குழி எனும் தெய்வீக சக்தி மிக்க பள்ளத்தில் பேய், பிசாசு, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அமர்ந்து பூஜை செய்து நலம் பெறுகின்றனர். இந்தக்கோவிலில் ஐந்து தீர்த்தங்கள் உள்ளது. அவை அக்கினி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், வைரவ தீர்த்தம், கவுரி தீர்த்தம் என்பது ஆகும். இந்த கோவிலின் தல மரம் புன்னை மரமாகும். நாக சுனையில் எப்பேற்பட்ட பாவங்கள் செய்தவர்களும் மூழ்கி எழுந்தால் நற்கதியடையலாம்.

 

சங்கரன்கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:-
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் 8 மணி வரை

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி | Chitra Pournami

    செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி - Chitra Pournami ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும் (Chitra Pournami) .… Read More

    2 days ago

    ஆயுளை அதிகரிக்கும் சித்ரகுப்தன் வழிபாடு | chitra gupta pooja in tamil

    Chitra Gupta Pooja in Tamil ஆயுளை அதிகரிக்கும் சித்ரகுப்தன் வழிபாடு | chitra gupta pooja in tamil… Read More

    2 days ago

    Today rasi palan 24/04/2024 in tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் புதன் கிழமை சித்திரை – 11

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _ _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *சித்திரை - 11* *ஏப்ரல்… Read More

    19 hours ago

    Kolaru Pathigam Song lyrics in Tamil | கோளறு பதிகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

    Kolaru Pathigam Song lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால்… Read More

    6 days ago

    Karpaga Vinayagar Temple History | கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு

    அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207,  சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More

    6 days ago

    Ramar Slogam | ராமர் ஸ்லோகம்

    ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More

    1 month ago