Siththarkal

பாம்பாட்டி சித்தர் வாழ்க்கை வரலாறு மற்றும் பெருமைகள் | Pambatti siddhar

பாம்பாட்டி சித்தர் வாழ்க்கை வரலாறு மற்றும் பெருமைகள் | Pambatti siddhar history paadalgal

பாம்பாட்டி சித்தர் (Pambatti siddhar) பிறந்தது கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில். 123 வருடம் 14 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். சங்கரன்கோவிலில் சமாதியடைந்துள்ளார்

பாம்பாட்டி ஒருவர் பாம்புகள் பிடிப்பதில் வல்லவர். எத்தகைய கொடிய விஷமுள்ள பாம்பும் இவர் கண் பார்வைக்கும், கைப்பிடிக்கும் தப்பித்துச் செல்ல முடியாது. பக்கத்திலுள்ள காடு ஒன்றில் நவரத்தினப் பாம்பொன்று இருப்பதாகக் கேள்விப்பட்டு அக்காட்டினுள் சென்றார்.
இரவு நேரம். இருட்டில் பாதை தெரியாமல் தட்டுத்தடுமாறிக்கொண்டு காட்டினுள் நடந்து கொண்டிருந்த பாம்பாட்டியின் எதிரே பிரகாசமான ஒளியுடைய பாம்பொன்று மெல்ல ஊர்ந்து கொண்டு சென்றது.

அதன் அழகில், அதன் ஒளியில் ஆட்பட்டு அதனைப் பிடிக்கவும் செய்யாமல் பிரமிப்புடன் நின்று கொண்டிருந்தார். தேடிப்போன புதையலைக் கண்ணெதிரே கண்டுங்கூடக் கைப்பற்ற
முடியாதவராகி ஏதோ சிந்தைனையில் அப்படியே ஆடாமல்அசையாமல் நின்றார். கொஞ்ச நேரத்தில் அந்தப் பாம்பு தவயோகி ஒருவராக வடிவமெடுத்து நின்றது. அவர்தான் சட்டைமுனி சித்தர். இந்த சட்டைமுனி சித்தர் அந்தப் பாம்பாட்டிக்கு நல்லறிவு புகட்டினார்.
உலக நிலையாமையைக் கூறினார். பின்னர் அவருக்குத் தீட்சையளித்து மறைந்தார்.

நடந்தது கனவா! நினைவா! என்று திகைத்து நின்ற பாம்பாட்டி மெய்ஞானம் கைவரப்பெற்று நாட்டினுள் சென்றார். அக்காலத்தில் அந்நாட்டு அரசன் மரணமடைந்து விடவே அனைவரும் பெருந்துக்கத்தில் இருந்தனர். அவர்களின் துக்கம் தீர்க்கவும், தாம் பெற்ற தவ சக்தியைப் பரிட்சித்துப் பார்க்கவும் இறந்த அரசனின் உடலில் புகுந்து அதிசயம் நிகழ்த்தினார். எல்லோருக்கும் மகிழ்ச்சி. பிழைத்து எழுந்த மன்னர் அருகில் இருந்த செத்த பாம்பொன்றைக்

கண்டார். பாம்பே! நான் எழுந்து விட்டேன். நீயும் எழுந்திரு என்றார். என்ன ஆச்சிரியம்; செத்த பாம்பு நெளிந்தது. அனைவரும் வியப்படைந்தனர். பாம்பு, கூட்டத்தைப் பார்த்துப் பயந்து ஓட முயற்சித்தது. மன்னர் அந்தப் பாம்பைப் பார்த்தார். பாம்பே எங்கே போகிறாய். இறந்துபோன நீ இப்பொழுது எழுந்து விட்டாய். இன்னுமா உலக ஆசை உனக்கு விடவில்லை? உலக வாழ்வில் ஏமாந்து போகாதே என்று சொன்னவர். ‘ஆடு பாம்பே’ என்று ஆணையிட்டார். மன்னரின் கட்டளைக்குக் கட்டுப்பட்ட பாம்பு மகுடி வாசிக்காமலேயே ஆடத் தொடங்கியது. பாம்பை முன்னிலைப்படுத்தி அற்புதமான தத்துவப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். தான் ஒரு சித்தர் என்பதையும் மன்னர் உடம்பில் தான் புகுந்திருப்பதையும் குறிப்பாக உணர்த்திப்பாடினார். ஆனால் அவர் பாடியதன் பொருள் யாருக்கும் புரியவில்லை. பிழைத்து விட்டாரே தவிர, அவருக்குக் கிறுக்கு பிடித்து விட்டது போலும் என்று கூறிக் கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.

மன்னரின் செயல்கள் மகாராணிக்கு ஆச்சரியமாயிருந்தது. முரட்டுப் பிடிவாதமும், பெண்கள் சுகமும் என்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்த இவர் எப்படி இப்படி தத்துவ அறிவு பெற்றார் என்று சந்தேகப்பட்டாள்.

“நாடுநகர் வீடுமாடு நற்பொருளெல்லாம்
நடுவன் வரும்பொழுது நாடிவருமோ கூடுபோனபின் பவற்றாற் கொள்பயனென்னோ கூத்தன் பதங்குறித்துநின் றாடாய்பாம்பே”

ராணிக்கு ஒரே அதிர்ச்சி. தன் மனதில் எழுந்த சந்தேகத்திற்குப்
பதிலளிப்பது போல் இப்படிப் பாடுகின்றாரே, மா, பலா, வாழை, பெண்கள் என்று கனிரசமும் காமரசமும் பருகி வாழ்ந்தவர் இன்று கூத்தன் பதத்தை அல்லவா பாடுகின்றார் என்று வியப்படைந்தாள். அவர் வியப்பை அதிகமாக்குவதைப் போல் மேலும் சில பாடல்களைப் பாடினார்.

“மாடகூட மாளிகைகள் வண்ண மண்டபம்
மதில்சூழ்ந்த வரண்மனை மற்றும் முள்ளவை
கூடவாரா வென்றந்தக் கொள்கை யறிந்தோர்
குலவாமல் வெறுப்பாரென் றாடாய் பாம்பே”

“மலைபோன்ற செம்பொற்குவை வைத்திருப்பவர்
மறலி வருகையில் வாரிச்செல்வரோ
அலை யாமலகத்தினை யத்தன் பால்வைத்தோர்
அழியாரென்றே நீ துணிந்தாடாய் பாம்பே”

“பஞ்சணையும் பூவணையும் பாயலும் வெறும்
பாழ்சுடு காடதிலே பயன் பெறுமோ
மஞ்சள் மணம்போய் சுடு நாறு மணங்கள்
வருமென்று தெளிந்து நின்றாடாய் பாம்பே”

“முக்கனியுஞ் சக்கரையு மோதகங்களும்
முதிர்சுவைப் பண்டங்களு முந்தியுண்டவாய்
மிக்கவுயிர் போனபின்பு மண்ணை விழுங்க
மெய்யாகக் கண்டோமென் றாடாய் பாம்பே”

ஆகா எத்தனை தத்துவார்த்தமான பாடல்கள். பெண்ணாசை
விலக்கலைப் பற்றியும் பாடத் தொடங்குகின்றார்.

“வெயில்கண்டமஞ்சள் போன்ற மாதரழகை
விரும்பியே மேல்விழுந்து மேவுமாந்தர்
ஒயில்கண்டே யிலவுகாத் தோடுங்கிளிபோல்
உடல் போனாலோடு வாரென்றாடாய் பாம்பே”

போதும் என்று அவரை கையெடுத்துக் கும்பிட்ட ராணி, ஐயா, தாங்கள் யார்? எங்கள் அரசரா? அல்லது யாராவது மகானின் ஆத்மா இந்த உடலில்புகுந்துள்ளீரா? என்று கேட்டாள்.
சித்தரும் அவளுக்கு நடந்த உண்மைகளைக் கூறினார்.

சில காலம் இவ்வுடலில் வசிக்க வேண்டிய கட்டாயத்தையும் கூறி அவளுடன் இல்வாழ்க்கையைத் தாமரை இலைத் தண்ணீர் போலத் தொடர்ந்தார். இவர் சித்தராய்த் திரிந்த காலத்து இவருடைய சீடர்களாய் இருந்தவர்கள் தம் குருநாதர் நீண்ட நாட்களாய் வராமை கண்டு பின்னர்த் தம்குருவருளால் அவரிருக்குமிடமறிந்து, அவர் தம் பழைய உடலுக்குத் திரும்பும்வண்ணம் பொருளமைந்த சில பாடல்களைப் பாடினார்கள். பின்னர் அன்றிரவு வெட்டியான் வேடம் பூண்டு நான்கு சாமத்துக்கும் பின்வரும் நான்கு வெண்பாக்களைப் பாடிப் பறையடித்துக் குருவை மீட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

“ஆலஞ்சரீரம் அநித்தியம் என்று எண்ணாக்
காலன் தினம் வருவான் காணுங்கள் – காலன்
கலங்காத கண்டன்நற் கண்மணியைப் போற்றி
உறங்கி யுறங்காது இரு”

“வானமணித் தேவர் வனத்திலுள வைவேடர்
ஞானமணி யைத்திருட நன்னினார் – ஞானம்
நிறுங்காலம் தானறிந்து நல்லுணர்வை நாடி
உறங்கி உறங்காது இரு

ஆசையினால் பாசம் அளவிறந்த கர்மமிது
ஆசைவிட்டுப் போவது அரிதரிது – ஆசை
அறுங்காத லாகி அரனடியைப் போற்றி
உறங்கி உறங்காது இரு”

“தந்தைதாய் பந்துசனம் தாரம் சகோதரர்கள்
விந்துநிலை அறியா வீணரே – விந்து
வெறும் பாழ் என்று எண்ணியே மெய்யுணர்வை நாடி
உறங்கி உறங்காது இரு”

பாம்பாட்டிச் சித்தர் விருத்தாசலத்தில் சித்தியடைந்ததாகச் சில
நூல்களும் துவாரகையில் சித்தியடைந்ததாக சில நூல்களும் கூறுகின்றன. பாம்பாட்டி சித்தரின் பாடல்கள் பெரும்பாலும் தாயுமான சுவாமிகளின் பாடல்களை அடியொற்றியே இருப்பதால் இவர் அவரின் காலத்திற்குப் பிற்பட்டவராக இருக்கலாம் என்ற முடிவுக்கு வரவேண்டி உள்ளது. தாயுமானவரின் சித்தர் கனம் பகுதியைப் போலவே இவரும் ‘சித்தர் வல்லபங்கூறல்’ பகுதியைப் பாடியுள்ளார். இஃதோர் கலம்பக உறுப்பாய் பிரபந்தம் பாடுதலின் பாற்பட்டதாகும். நாங்களெல்லாம் சித்தர் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாவோம். எங்களுக்கு அபூர்வ சக்திகள் பல உண்டு. அவைகள் என்ன தெரியுமா?

தூணைச் சிறுதுரும்பாகத் தோன்றிடச் செய்வோம், துரும்பைப் பெருந்தூணாகத் தோன்றிடச் செய்வோம், ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றிக் காட்டுவோம். எட்டுமலைகளைப் பந்தாய் எடுத்தெறிவோம், ஏழுகடல்களையும் குடித்து, ஏப்பம் விட்டுக் காட்டுவோம், வானத்தை வில்லாக வளைத்திடுவோம்,மூண்டெரியும் அக்கினிக்குள்ளே மூழ்கிவருவோம், தண்ணீருக்குள் மூச்சடக்கியும் இருப்போம், இந்த நிலவுலகை மட்டுமல்லாது இன்னுமுள்ள உலகமத்தனையும் பொன்மயமாக்கிக் காட்டுவோம், பிரம்மா போல புதுப்புது உயிர்களைப் படைத்துக் காட்டுவோம், சூரியனின் செங்கதிரையும் நிலவைப் போல தன்கதிராய் மாற்றிக் காட்டுவோம், கொடிய மிருகங்களான புலி, யானை, யாளி, சிங்கம் முதலான விலங்குகளை எங்களுக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம். சக்தி வாய்ந்த கடவுளுக்குச் சமமாக நாங்கள் இருப்பதால் அவரை எங்களுடன் விளையாடவும் அழைப்போம், இந்த

உலகத்தை இல்லாமற்கூட செய்து காட்டுவோம், எத்தனை பெரிய வித்தகரும் அறுபத்து நான்கு கலைகளை மட்டுமே அறிவார். நாங்களோ அதற்கும் மேலாக ஒரு கலையையும் அறிவோம். இதற்கெல்லாம் காரணம் நாங்கள் இறைவன் மேல் பற்றும் ஏனைய பொருள்களின் மேல் பற்றும் இல்லாதவர்களாயிருப்பதே என்று சித்தர்களின் வல்லபத்தைக் கூறி முடிக்கின்றார் பாம்பாட்டிச் சித்தர்.

பாம்பாட்டிச்சித்தரின் விடுகதைகள்

பெரும்பாலானப் பாடல்கள் விடுகதை நோக்கிலேயே அமைந்துள்ளன. உதாரணமாக சருர குணம் சொல்லும் பகுதியில்,

பரியாசம் போலவே கடித்த பாம்பு
பலபேரறியவே மெத்தவீங்கிப்
பரியார மொருமாது பார்த்தபோது
பையோடே கழன்ற தென்றாடாய் பாம்பே

என்ற பாடலில் பெண்ணொருத்தி விளையாட்டு போலவே
ஆடவனொருவனைப் புணர அது கர்ப்பமாய் உருக்கொள்ள இதற்குப் பரிகாரம் என்னவென்று யோசிக்கும் வேளையில்

அது பிரசவமாகி குழந்தை பிறந்து விட்டது என்பதுதான் தெளிபொருள். விடுகதையில் வரும்போது பாம்பு ஒன்று விளையாட்டாய் ஒன்றைக் கடித்துவிட, அதனால் பாம்புக்கு வீக்கமேற்பட்டு விட்டது. இதற்கு என்ன வைத்தியம் என்று தேடியபோது, கடிபட்ட அந்த விறப்பையிலிருந்த வீக்கத்திற்குக் காரணமான பொருள் வெளியேறி விட்டது.

அது என்ன?

இதற்கு விடையறிய பாடலிலேயே ‘மாது’ என்ற வார்த்தையை யூகத்திற்கொரு பொருளாகச் சொல்லிப் பார்க்கிறார். மேலே சொன்ன விடுகதையை பெண்ணுக்குப் பொருத்திப் பார்க்க வேண்டும். பெண்களின் அல்குலை பாம்புக்கு ஒப்பிடுவர். அந்தப் பாம்பானது விளையாட்டாய் கடித்த பொருள் ‘ஆணின் கற்பு’. பெண்ணானவள் ஆணோடு புணர்ந்தது. யாருக்கும் தெரியாமல் இரகசியமாய்ச் செய்த இந்தச் செயல் பலரறியும்படி உடலானது வீங்கிக் காட்டிக் கொடுத்து விட்டது. அதாவது கர்ப்பமடைந்து வயிறு வீங்கி விட்டது. இதனை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் கர்ப்பத்தில் தங்கியிருக்கும் சிசுவானது கர்ப்பபையை விட்டு வெளியே பிரசவமாகி வந்துவிட்டது. அவளது பிரச்சனையும் தீர்ந்தது.

எப்படி இருக்கிறது விடுகதை?

‘நாலுத்தெருவிலே நாலுகம்பம்
நடுத்தெருவிலே பொன்னுக்கம்’

என்று விடுகதையொன்று போட்டுவிட்டு நம்மை விடை காணச் சொல்கின்றார் பாம்பாட்டிச் சித்தர்.

கடுவெளிச் சித்தரைப் போன்று இவரும் குயவனார் மண் தோண்டி விடுகதையைப் பாடுகின்றார்.

‘ஊத்தைக் குழிதனிலே மண்ணையெடுத்தே
உதிரப் புனலிலே யுண்டை சேர்த்தே
வாய்த்த குயவனார் அவர் பண்ணும் பாண்டம்
வறையோட்டுக்கு மாகாதென் றாடாய் பாம்பே’

இதில் மட்பாண்டம் செய்யும் மூலப்பொருள் கூறப்படுகிறது. இப்படி ஊத்தைக் குழியிலே மண்ணை எடுத்துக் குருதிப்புனலிலே உண்டையாக்கி குயவனார் செய்த மட்பாண்டம் இறுதியில் பிச்சையெடுக்கும் திருவோடு அளவுக்குக்கூடப் பயனாவதில்லை என்று கூறுகின்றார்.

இரண்டு பேர் மண் சேர்த்துப் பிசைய ஒருவர் பானை செய்து அவரே
பத்து மாதம் சூளையில் வைத்துப் பக்குவமாய் இறக்கி வைத்தாலும் அந்தப் பானையானது இறுதியில் அரைக்காசுக்குக்கூட உதவாது என்று இந்த உடல்
நிலையாமையைக் கூறுகின்றார் பாம்பாட்டிச் சித்தர்.

‘இருவர் மண்சேர்த்திட வொருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையா யிருப்பினு மந்தச்சூளை
அரைக்காசுக் காகா தென் றாடாய்ப் பாம்பே’

மனிதர் என்னதான் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடினாலும் அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு என்று இந்தச் சித்தர் அறுதியிட்டுக் கூறுகின்றார்.

நாறுகின்ற மீனைப் பல தரம் நல்ல தண்ணீர் ஊற்றிக் கழுவினாலும் அதனது இயல்பான நாற்றம் போகாது. அதுபோல மனிதன் என்னதான் பரிகாரங்கள் செய்தாலும் அவன் செய்த பாவ வினைகள் அவனை விட்டகலாது அவனைத் தண்டித்தே தீரும் என்பதை,

“நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
நாளுங் கழுவினு மத னாற்றம் போமோ
ஊறுமுடல் பலநதி பாடிக் கொண்டதால்
கொண்டமல நீங்கா தென்றா டாய் பாம்பே”

என்னதான் புனித நீராடினாலும் பாவங்கள் தண்டனைக் குரியவையே என்பது பாம்பாட்டியாரின் தீர்ப்பாகும்.

பொம்மலாட்டம் தெரியுமா? திரைக்குப் பின்னாலிருந்து சூத்திரதாரி ஒருவன் இயக்க, பாவைக் கூத்தாடும் நாடகக் காட்சியைப் போன்றது நமது வாழ்க்கை என்பதைப் பின் வரும் பாடலால் விளக்குகின்றார்.

“மரப்பாவை போலவொரு மண்ணுருச் செய்து
வளமான சீவனென்னுந் சூத்திர மாட்டித்
திரைக் குள்ளிருந்தசைப் போன் தீர்ந்த பொழுதே
தேகம் விழுமென்று தெளிந் தாடு பாம்பே”

இன்னும் இந்த உடல் நிலையில்லாது என்பதை,

“சீயும் மலமுஞ் செந்நீரும் நிணமும்
சேர்ந்திடுதுர் நாற்றமுடைக் குடமதுஉடைந்தால்
நாயும் நரியும் பேயும் கடுகும்
நமதென்றே தின்னு மென்றடாய் பாம்பே”

எவ்வளவு சீரும் சிறப்புமாய் வளர்த்த இந்த உடலானது உலகில்
பார்க்கின்ற பொருளையெல்லாம் தனதென்றே சொந்தம் கொண்டாடும், சீழும் குருதியும் மலமும் சேர்ந்த இந்த நாற்றக்குடமான உடல் இறந்து விட்டால் நாயும், நரியும், பேயும், கழுகும் என்னுடையது இந்த உடல் என்று பங்கு போட்டுச் சாப்பிட ஆரம்பித்து விடும். இப்பொழுது சொல்லுங்கள், இந்த உடல் நம்முடையதா? அல்லது நாய் நரிகளுக்குச் சொந்தமானதா? என்று
கேள்வி விடுக்கின்றார் பாம்பாட்டிசித்தர்

இந்தப் பாடலானது பட்டினத்தாரின் உடற்கூற்று வண்ணப் பாடல்களுடன் ஒப்பு நோக்கி ஆராயத்தக்கது.

“எரியெனக் கென்னும் புழுவோவெனக் கென்று மிந்த மண்ணுஞ் சரியெனக் கென்னும் பருந்தோ வெனக் கென்னும் தான் புசிக்க
நரியெனக்கென்னும் புன்னாயெனக் கென்னும் இந்த நாறுடலைப் பிரியமுடன் வளர்த்தே னிதனாலென்ன பேறெனக்கே”

இருவர் மண்சேர்த்திட வொருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமை யாயிருப்பினு மந்தச்சூளை
அரைக்காசுக் காகா தென்றாடாய் பாம்பே

இந்தப் பாடலும்,

பரியாசம் போலவே கடித்த பாம்பு
பலபேரறியவே மெத்த வீங்கிப்
பரியார மொருமாது பார்த்தபோது
பையோடே கழன்ற தென்றாடாய் பாம்பே

இந்தப் பாடலும் பட்டினத்தாரின் உடற்கூற்றுப் பண்ணப் பாடலுடன் ஒப்பு நோக்கத்தக்கது.

ஒருமடமாதும் ஒருவனும் ஆகி இன்பசுகம்தரும்
அன்பு பொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து
ஊறுசுரோணிதம் மீது கலந்து
பனியில் ஓர் பாதி சிறுதுளிமாது பண்டியில் வந்து

என்ற பாடல் பாம்பாட்டிச் சித்தரின் மேற்கண்ட பாடலுடன் ஒத்துப் போவதை ஒருங்கு காணலாம். இன்னும்,

மனையாளும் மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயின் மட்டே
யினமான சுற்ற மயான மட்டே வழிக்கேது துணை

என்ற பட்டினத்தாரின் பாடல் கருத்து பாம்பாட்டியின்

“மக்கள் பெண்டிர் சுற்றமரு மக்கண் மற்றவர்
மாளும் போது கூடவவர் மாள்வதில்லையே”

பாடலோடு ஒத்து விளங்குவது இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

பழமொழிகள்

வாழ்க்கை என்பது பற்றற்று இருக்க வேண்டுமென்பதற்கு ‘அகப்பற்று நீக்கல்’களாகச் சில பழமொழிகளை உதாரணங்களாகக் கூறுகின்றார்
பாம்பாட்டி.

“தாமரையிலை யினிலே தண்ணீர்தங்காத் தன்மை போல”

தண்ணீரிலே இருந்தாலும் தாமரை இலையிலே தண்ணீர் தங்காத் தன்மை போல ஆசாபாசங்கள் நிறைந்த இந்த உலக வாழ்க்கையிலே வாழ்ந்துங்கூட ஆசாபாசங்கள் பாதிக்கப்படாதவாறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு இறைவன் ஒருவனே நித்தியமானவன் என்பதை உணர வேண்டும் என்கிறார்.

சேற்றிற் றிரிபிள்ளைபூச்சி சேற்றை நீக்கல்போல்

பிள்ளைப் பூச்சியானது சேற்றினில் இருந்தாலும் அதன்மேல் ஏதும்
சேறு ஒட்டிக்கொள்ளாமல் வாழ்வது போல நாமும் உலக இச்சைகளின் மேல்
பற்று வைக்காமல் தேசத்தாரோடு ஒத்து வாழ்தல் வேண்டும் என்றும்,எண்ணெய்க்குந் தண்ணீர்க்குந் தொந்தமில்லாவாறு போல்

தண்ணீருக்குள் என்னதான் எண்ணெயை இரண்டறக் கலந்து விட்டாலும் அது அதனுள் ஐக்கியமாகாது. அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாது தனியே மிதப்பது போல உலக ஆசாபாசங்களில் மூழ்காது தனித்திருத்தல் வேண்டும் என்கிறார்.

இன்னும்,

“சொல்லும் புளியம்பழத்தி னோடு போலீவ”

என்ற உதாரண முகத்தான் எத்தனை சொந்தங்கள் நமக்குத் துணை நின்றாலும் அவையெல்லாம் உண்மையான சொந்தங்கள் அல்ல என்றும் இறைவன் ஒருவனே நம்முடைய உண்மையான சொந்தம் என்றும் உணர்ந்து மேல் ஓட்டினுள் ஒட்டாத புளியம் பழம் போல வாழ்க்கை நடத்த வேண்டும் என்று பாம்பாட்டிச் சித்தர் அறிவுரை கூறுகின்றார்.

இவை போல இன்னும் சில பழமொழிகள் ஆழ்ந்த கருத்துடையனவாய் இவர் பாடல்களில் பின்னிப் பிணைந்துள்ளன.

‘தேனில் விழுந்த ஈயைப் போல’ (81)
‘ஏட்டுச் சுரைக்காய்க் கறிக் கெய்திடாது போல்’ (94)
‘காந்தம் வலி இரும்பு போல்’ (91)
‘உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி’ (92)
‘கண்டவர்கள் ஒருகாலும் விண்டிலர்
விண்டவர் ஒருகாலும் கண்டிலர்’ (105)
‘உள்ளங் கையிற் கனிபோல’ (12)

இவர் பாடலில் எல்லாப் பாடல்களுமே ஆடு பாம்பே என்று முடிவதற்கு செத்த பாம்பை ஆட்டுவித்து தத்துவங்களைச் சொன்னதுடன் இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. குண்டலினியாகிய பாம்பை இவர் ஆட்டுவித்து இறை இன்பம் காணுதலால் ஆடுபாம்பே என்று குண்டலினியை முன்னிலைப்படுத்திய சித்தர் பாடல்கள் இவையென்றும் சிறப்பிக்கப்படுகின்றன…

பாம்பாட்டி சித்தர் ஜீவசமாதி அமைவிடம்:

சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கர நாராயணசாமி கோவில் பாம்பாட்டி சித்தரின் ஜீவசமாதி மிக அருகில் உள்ளது


18 சித்தர்களின் பிறப்பும் மறைவும்

சித்தர்கள் ஜீவ சமாதி இருப்பிடம்

உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு எந்த சித்தர்களை வழிபாடு செய்ய வேண்டும்?

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
 • Recent Posts

  108 Ayyappan Saranam | 108 Saranam in Tamil | 108 ஐயப்பன் சரணம்

  108 Ayyappan Saranam in tamil 108 ஐயப்ப சரண கோஷம் 1.  ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 2.… Read More

  3 weeks ago

  சக்தி வாய்ந்த ஐயப்பன் ஸ்வாமியின் அனைத்து ஸ்லோகங்கள் | ஐயப்பன் ஸ்லோகம் | Ayyappan slokam

  ஐயப்பன் ஸ்லோகம் - சக்தி வாய்ந்த ஐயப்பன் ஸ்வாமியின் அனைத்து ஸ்லோகங்கள் - Ayyappan slokam‌ ஸ்ரீ ஐயப்ப மூலமந்திரம்:… Read More

  3 weeks ago

  லோக வீரம் மஹா பூஜ்யம் பாடல் வரிகள்!!! Loka veeram mahapoojyam lyrics in Tamil

  *சாஸ்தா சதகம்* -லோக வீரம் மஹா பூஜ்யம் - Loka veeram Lyrics ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கூறி சுவாமியே சரணமய்யப்பா… Read More

  3 weeks ago

  பள்ளிக் கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் | pallikattu sabarimalaiku lyrics Tamil

  Pallikattu sabarimalaiku lyrics Tamil பள்ளிக் கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்... pallikattu sabarimalaiku lyrics Tamil இருமுடி தாங்கி… Read More

  3 weeks ago

  ஹரிவ ராஸனம் பாடல் வரிகள் | Harivarasanam song lyrics tamil and video

  Harivarasanam song lyrics in Tamil, ஹரிவ ராஸனம் பாடல் வரிகள்... கம்பங்குடி சுந்தரம் குளத்து அய்யர் பிரசுரித்த சாஸ்தா… Read More

  3 weeks ago

  கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்!! Kandha sasti kavasam lyrics in Tamil

  Kandha sasti kavasam lyrics Tamil கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் Kandha sasti kavasam lyrics in… Read More

  4 weeks ago