தீராத கொடிய நோயிகள் விலக செல்ல வேண்டிய கோவில் – Theeratha kodiya noigal vilaga sella vendiya temples 

நித்திய சுந்தரேசுவரர் கோயில் :

திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோயில்  சம்மந்தரால் பாடல் பெற்ற  சிவாலயம். திருச்சி மாவட்டத்தில் துவாக்குடியிலிருந்து  5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் நித்தியசுந்தரர்; இறைவி ஒப்பிலா நாயகி.

தவஞ்செய்த அம்பிகையை இறைவன் கள்ள உருவில் தோன்றி கந்தர்வ மணம் செய்ய முற்பட , அச்சமுற்று அம்பிகை ஓடியொளிந்த இடம் என்பதால் ஒளிமதிச்சோலை என்று வழங்குகிறது.

வந்தியச் சோழன் எனும் மன்னனுக்கு சிவபெருமான் அருள் பாலித்த திருத்தலம்.

இத்திருத்தலத்திலுள்ள கல்வெட்டுகள் மூலம் ஆதித்த சோழன், உத்தம சோழன், முதலாம் ராஜராஜ சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன், சுந்தரபாண்டியன், விஜயநகர பேரரசின் மன்னர்கள், படைத்தலைவர்கள் முதலானோர் இத்திருக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளது அறியப்படுகின்றது.

வழிபட வேண்டிய முறை :

ஈசனுக்கும் , அம்பாளுக்கும் ,மாதுளம்பழத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டு , சுந்தர தீர்த்தக் கரையில் உள்ள கருப்பண்ண சாமிக்கு பானகம் நெய்வேத்தியம் செய்து பலருக்கும் வழங்கினால் தீராத நோய் தீரும் என்பது நம்பிக்கை . காசியில் உள்ளது போலவே கருவறை மேல் இரண்டு விமானங்கள் உள்ளன .

நம்பிக்கையுடன் சொல்ல வேண்டிய பாடல் :

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என் அடியான் உயிரை வௌவேல் என்று அடற் கூற்றுதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூவோடு நீர் சுமக்கும்
நின் அடியார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே.

 

வீரராகவபெருமாள் திருக்கோயில் :

திருவள்ளூர் வீரராகவபெருமாள் திருக்கோயில் 108 வைணவத்தலங்களில் ஒன்றாகும் . சென்னைக்கு அருகில் திருவள்ளூரில் இக்கோயில் அமைந்துள்ளது.

இங்குதான் இறைவன் அரசன் தர்மசேனனின் மகள் வசுமதியைத் திருக்கல்யாணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இங்குள்ள கல்வெட்டுகள்  9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவர்களின் இரண்டாவது பாதியைக் குறிப்பிடுகின்றன. இக்கோவில் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என உள்ளூரில் புழக்கத்திலுள்ள புராணக் கதைகள் தெரிவிக்கின்றன. விஷ்ணுவே வீரராகவப் பெருமாளாக இக்கோவிலில் குடி கொண்டுள்ளார்.

இக்கோயிலின் இறைவன் ”வைத்திய வீரராகவர்” என்றும் அழைக்கப்படுகிறார். தீராத நோய்களை வீரராகவர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் மக்கள் சிறிய உலோகத் தகட்டில் நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்பைச் செதுக்கி அந்நோயைத் தீர்த்து வைக்குமாறு கடவுளிடம் கோரிக்கை சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இறைவனுக்கு இங்கு சந்தன எண்ணெயால் மட்டும் அபிசேகம் செய்யப்படுகிறது. இத்திருக்கோயில் திருக்குளம் நோய் தீர்க்கும் திருக்குளமாகவும், பெருமாள் வைத்திய வீரராகவப் பெருமாளாகவும் பக்தர்களால் கூறப்படுகின்றனர்.

வழிபட வேண்டிய முறை :

அமாவாசை அன்று புஷ்கரணியில் நீராடி விட்டு வைத்திய வீர ராகவரையும் , விஜயகோடி விமானத்தையும் சேவித்தால் நோயிகள் பூண்டோடு கழியும் . இங்குள்ள திருக்குளத்தில் 3 அமாவாசைகள் வெல்லத்தை கரைத்தால் தீராத கொடிய நோயிகள் தீரும் என்பது ஐதீகம்

வழித்தடம் :

சென்னை அரக்கோணம் ரயில் பாதையில் சென்னையிலிருந்து 45 கி மீ ல் உள்ளது.

நம்பிக்கையுடன் சொல்ல வேண்டிய பாடல் :

முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த
புனிதன்,பூவை வண்ணனணல்புண்ணியன் விண்ணவர்கோன்
தனியன் சேயன் தானொருவன் ஆகிலும் தன்னடி யார்க்கு
இனியன் எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே .