நான் மாடக்கூடலான படலம் | Nan madakoodalana padalam story – Thiruvilaiyadal
நான் மாடக்கூடலான படலம் (Nan madakoodalana padalam) வருணன் பெய்வித்த மழையிலிருந்து மதுரையைக் காக்க சோமசுந்தரர் நான்கு மேகங்களை மாடங்களாக மாற்றி மதுரையைக் காத்த திருவிளையாடலைக் கூறுகிறது. மாடங்கள் என்பவை உயர்ந்த கட்டிடங்கள் ஆகும். இப்படலம் இதற்கு முந்தைய படலமான வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலத்தின் தொடர்ச்சியாகும். மதுரை மாநகருக்கு நான் மாடக்கூடல் என்ற பெயர் ஏற்பட்ட காரணத்தை இப்படலம் விளக்குகிறது. கோபத்தினால் வருணனின் செயல்கள் தோற்றது, இறைவனின் கருணையால் வருணனின் வயிற்று வலி நீங்கியது ஆகியவையும் இப்படலத்தில் விளக்கிக் கூறப்பட்டுள்ளன.
இப்படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடற் காண்டத்தில் பத்தொன்பதாவது படலம் ஆகும்.
வருணனின் கோபம்
சோமசுந்தரக் கடவுளைச் சோதிக்க எண்ணிய வருணன் மதுரையின் மீது கடலினை ஏவி அழிக்க நினைத்தான்.
மதுரை மக்களின் வேண்டுதலால் இறைவனார் தன் சடையில் சூடியிருந்த மேகங்களை விடுத்து வருணன் விட்ட கடலை வற்றச் செய்து மதுரையைக் காத்தார்.
இதனைக் கண்டதும் கடல்களின் அரசனான வருணன் இது சோமசுந்தரரின் திருவிளையாடல் என்று உணராமல் அதிகம் கோபம் கொண்டான்.
பின் வருணன் ஏழு மேகங்களை அழைத்து “நீங்கள் மதுரையின் மீது அதிகமான இடி மின்னலுடன் கூடிய மழையினை பொழிந்து மதுரையை அழியுங்கள்” என்று கட்டளையிட்டான்.
மதுரையில் மேகங்கள் மழையைப் பொழிவித்தல்
தங்கள் அரசனின் கட்டளையை ஏற்ற ஏழு மேகங்களும் அதிகளவு கடல் நீரினை உறிஞ்சி கருமை நிறத்துடன் மதுரை நகரினை அடைந்தன.
ஊழிக்காலத்தில் ஏற்படும் கரிய இருள் போல் மதுரை நகரினை அவை சூழ்ந்து கொண்டன. பெரும் காற்று, இடி மின்னலுடன் மழையைப் பொழிவிக்கத் தொடங்கின.
பெரும் மழையைக் கண்டதும் மதுரை மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்தனர். அபிடேகப்பாண்டியன் தம் மக்களுடன் சொக்கநாதரின் சந்நதிக்குச் சென்று தம்மையும் தம்மக்களையும் பெரும் மழையிலிருந்து காப்பாற்ற வேண்டினான்.
நான் மாடக்கூடல்
மதுரை மக்களின் வேண்டுகோளுக்கு மனமிரங்கிய சொக்கநாதர் தம்முடைய திருமுடியிலிருந்து நான்கு மேகங்களை விடுவித்து “நீங்கள் மதுரை மாநகரின் நான்கு எல்லைகளிலும் சென்று மாடங்களாக மாறி ஒன்றுகூடி வருணன் விடுவித்த மேகங்கள் பெய்கின்ற பெரும் மழையிலிருந்து மதுரையை காப்பீர்களாக” என்று கட்டளை விடுத்தார்.
இறைவனாரின் கட்டளையின்படி நான்கு மேகங்களும் மதுரையின் நான்கு எல்லைகளையும் சூழ்ந்து மலைபோல் உயர்ந்து ஒன்று கூடி மாடங்கள் (உயர்ந்த கட்டிடங்கள்) ஆயின.
கோபுரங்களும், குன்றுகளும் அம்மாடங்களைத் தாங்கி நிற்கும் தூண்களாகின. உயர்ந்த மாடங்களான மேகங்கள் வருணன் விடுத்த பெரும் மழையானது மதுரையில் விழாதவாறு கூரையாக நின்று மதுரை மக்களைக் காப்பாற்றின.
நான்கு திக்கிலும் மேகங்கள் மலைபோல் உயர்ந்து ஒன்றுகூடி மாடங்களாகி மதுரையை காத்தமையால் மதுரையானது நான் மாடக்கூடல் என்று அழைக்கப்படுகிறது.
வருணன் வயிற்று வலி நீங்கப் பெறுதல்
தான் ஏவிய மேகங்களின் மழையிலிருந்து மதுரை காப்பாற்றப்பட்டதைக் கண்ட வருணன் உடல் நடுங்கினான். தன் செயலால் வெட்கி தலை குனிந்தான்.
பின் பொற்றாமரைக் குளத்தின் அருகே வருணன் வந்தான். அவ்வாறு பொற்றாமரைக் குளத்தருகே வரும்போதே வருணனின் வயிற்று வலியானது நீங்கியது.
வயிற்று வலி நீங்கியதும் வருணனின் மனதில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. பொற்றாமரைக் குளத்தில் இறங்கி நீராடினான். பின் சொக்கநாதரையும், மீனாட்சி அம்மையையும் முறைப்படி வழிபாடு நடத்தினான்.
வருணனின் வழிபாட்டில் மகிழ்ச்சி அடைந்த சொக்கநாதர் வருணனின் முன்தோன்றி “வருணனே நீ வேண்டுவது யாது?” என்று வினவினார்.
கடல்களின் தலைவனான வருணன் சொக்கநாதரிடம் “எம்தந்தையே யாராலும் நீக்க முடியாத வயிற்று வலியானது இந்த பொற்றாமரைக் குளத்தில் நீராடுவதற்கு முன்னே நீங்கப் பெற்றேன்.
நான் அறிவிலியாக உம்மை சோதிக்க நினைத்தது என்னுடைய தவறுதான். ஆனால் தாங்கள் என்னுடைய குற்றங்களிலிருந்து மதுரை மக்களையும் காத்து, என்னுடைய பிணிகளையும் (வயிற்று வலி, ஆணவம்) நீக்கி விட்டீர்கள்.
அடியேன் செய்த குற்றங்கள் இரண்டினையும் தாங்கள் பொருத்து அருள வேண்டும்.” என்று கூறி பலவாறு வழிபட்டு பலவரங்களைப் பெற்று மேற்கு திசையின் அதிபனான வருணன் தன் இருப்பிடத்தை அடைந்தான்.
நான் மாடக்கூடலான படலம் கூறும் கருத்து
வருணனின் கர்வம் பிடித்த செயலால் அவன் வெட்கித் தலைகுனிந்தான். எனவே ஆணவத்தால் ஒருவன் செய்யும் செயலானது அவனுக்கு இழிவையே தரும்.
உயர்பதவியில் இருப்பவர்கள் ஆணவத்தினால் எளியோர்களுக்கு துன்பம் விளைவித்தால் இறைவன் வலியவனின் செயல்களைத் தடுத்து எளியோர்களைக் காப்பாற்றுவார்.