கண்ணன் கதைகள் – 27
ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்

நந்தகோபரும், யசோதையும் மிகுந்த சந்தோஷமடைந்தனர். தேவகியும் வசுதேவரும் ஒரு புறம் மகிழ்ச்சியுடனும், மறுபுறம் கம்ஸன் குழந்தை பிறந்தால் கொன்றுவிடுவானே என்று கலக்கமும் அடைந்தனர். ஆவணி மாதம், கிருஷ்ணபட்சம், அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தில், விருச்சிக லக்கினத்தில், நடு இரவில், மூவுலகங்களின் துன்பங்களையும் போக்க எண்ணம்கொண்டு, ஆனந்த வடிவான திவ்யமேனியுடன், வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது மகனாக கிருஷ்ணன் சிறையில்அவதரித்தான். அப்போது,வானம் மழைக்கால மேகங்களால் மூடியிருந்தது. கண்ணனின் நீலநிற மேனியில் இருந்து தோன்றிய ஒளியால் அவ்வாறு மூடியிருந்ததுபோல் தோன்றியது. கருமேகங்கள் மழைநீரைக் கொட்டித் தீர்த்தன. மழைநீரால் அனைத்து திசைகளும் குளிர்ந்திருந்தது. வேண்டிய வரம் கிடைத்ததால் தேவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்.

குழந்தை ரூபத்தில் இருந்த கண்ணன், தனது திருமேனியில், கிரீடம், கடகம், தோள்வளை, ஹாரம் ஆகியவற்றோடும், சங்கு, சக்கரம், தாமரை, கதை தரித்த கைகளுடனும் காட்சி அளித்தான். அவனது நீலமேனி இந்த எல்லாச் சின்னங்களையும் தரித்து பிரசவ அறையில் விளங்கியது. கம்ஸனுடைய அந்த அறை சோபையற்று இருந்தாலும், அவனது மார்பில் நிரந்தரமாக வசிக்கும் மகாலக்ஷ்மியின் பார்வையால் அந்த அறை லக்ஷ்மிகரமாக விளங்கியது.

ஞானிகளின் மனதிற்கும் எட்டாத அந்த திவ்யஸ்வரூபத்தை வசுதேவர் கண்களால் தரிசித்தார். மயிர்க்கூச்சலுடன், ஆனந்தக் கண்ணீர் வடித்துத் துதித்தார்.“தேவனே! துன்பங்களை அறுப்பவனே! மாயையினால் லீலைகளைச் செய்கிறவனே! தங்கள் கடைக்கண் பார்வையால் என் துக்கங்களைப் போக்கி அனுக்ரஹிக்கவேண்டும்” என்று துதித்தார். தாயான தேவகியின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அவளும் துதித்தாள். கருணை வடிவான குழந்தைக் கண்ணன், அவர்கள் இருவருக்கும், அவர்களது முந்தைய இரண்டு ஜன்மங்களைப் பற்றிச் சொன்னார். “நீங்கள் இருவரும், முன்பு திரேதாயுகத்தில்,

பன்னீராயிரம் ஆண்டுகள் தவம் செய்ததால், பிரஸ்னிகர்ப்பன் என்ற பெயருடன் உங்களுக்கு மகனாகப் பிறந்தேன். அதன்பிறகு அடுத்த பிறவியில் நீங்கள் காசியபராகவும் அதிதியாகவும் பிறந்தீர்கள். நான் உங்களிடத்தில் வாமனனாக அவதாரம் செய்தேன். தற்போது மீண்டும் உங்களுக்கு மகனாகப் பிறந்திருக்கிறேன்” என்று கூறினார். இவ்வாறு, மூன்று பிறவிகளிலும் பகவானையே மகனாக அடைந்த அவர்கள் மிகுந்த பேறு பெற்றவர்கள் ஆனார்கள். பின்னர், சங்கு சக்ரங்களைத் தரித்து விளங்கிய அக்குழந்தை, தாயின் வேண்டுகோளுக்கிணங்க மனித உரு எடுத்தார்.

பிறகு, வசுதேவரிடம், ” என்னை கோகுலத்தில் நந்தகோபன் வீட்டில் விட்டுவிட்டு, அவரது பெண் குழந்தையை எடுத்து வா” என்று ஆணையிட்டார். ஞானிகள் மனதில் இருப்பவரும், தாமரை மலரில் இருக்கும் அன்னக்குஞ்சு போல் அழகானவருமான அந்தக் கண்ணனை வசுதேவர் கையில் எடுத்துக்கொண்டார். திருமாலின் ஏவுதலால், கோகுலத்தில் யோகநித்ரையானவள், நந்தகோபர் வீட்டில் யசோதையிடத்தில் அவதரித்தாள்.

நகரமக்கள் அனைவரும் மாயையினால் தூங்கினர். அறிவற்ற கதவுகள் கூட  திருமாலின்  கட்டளையால் தாமே திறந்து கொண்டன! ஆச்சர்யம்!

பாக்யசாலியான வசுதேவர், கண்ணனை ஒரு துணியில் சுற்றி, கூடையில் சுமத்து, கோகுலம் எடுத்துச் சென்றார். ஆதிசேஷன் தன் படங்களால் மழையைத் தடுத்துக் குடை பிடித்தான். அவன் தலைகளில் இருந்த ரத்னமணிகளின் ஒளியால், இருட்டில் வழிகாட்டிக் கொண்டு வந்தான். யமுனை உயர்ந்த அலைகளுடன் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. வசுதேவர் அருகே சென்றதும், மாயவித்தையைப் போல் வடிந்து கணுக்கால் அளவாக ஓடியது. ஆச்சர்யம்!

கோகுலத்தில் எல்லாரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். கதவுகள் திறந்திருந்தன. குழந்தை அழும் சத்தம் கேட்ட வீட்டிற்குள் வசுதேவர் சென்று, யசோதையின் அருகே கண்ணனைப் படுக்க வைத்துவிட்டு, அங்கிருந்த பெண் குழந்தையான யோகமாயாவை எடுத்துக் கொண்டு வேகமாகத் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தார்.

சிறையில், குழந்தையின் அழுகுரல் கேட்டு காவற்காரர்கள் எழுந்தனர். அரசனிடம் சென்று தகவல் கூறினர். அவிழ்ந்த தலையுடன் கம்ஸன் விரைந்தோடி வந்தான். தேவகியின் கைகளில் பெண் குழந்தை இருப்பதைக் கண்டு சந்தோஷப்படுவதற்குப் பதில் கலக்கமடைந்தான்.  இது நாராயணனின் மாயை என்று நினத்த கம்ஸன், அந்தக் குழந்தையை, தேவகியின் கரத்திலிருந்து வலுவாகப் பிடுங்கி இழுத்து, கற்பாறையில் அடித்தான்.

யமனுடைய பாசக்கயிற்றில் இருந்து விடுபடும் நாராயண பக்தர்கள் போல, அக்குழந்தை கம்ஸனுடைய கையிலிருந்து விடுபட்டு, வேறு உருவத்துடனும், ஆயுதம் ஏந்திய எட்டுக் கரங்களுடனும் வானில் பரந்து விளங்கினாள்.
“கொடிய கம்ஸனே! உன்னைக் கொல்லப் பிறந்தவன் வேறு எங்கோ இருக்கிறான், அதை நீயே தேடி அறிந்து கொள்” என்று சொன்னாள். பின்னர், தேவர்கள் துதிக்க பூவுலகில் உள்ள அனைத்து ஆலயங்களையும் அடைந்தாள்.
மாயை கூறியவற்றை கம்ஸன் அசுரர்களுக்குச் சொன்னான். அதை கேட்ட பிரலம்பன், பகன், பூதனை முதலிய அசுரர்கள், பிறந்த அனைத்து ஆண் குழந்தைகளையும் கொன்று குவித்தார்கள். கருணையில்லாதவர்களுக்கு செய்யக் கூடாதது என்று எதுவும் இல்லை.

நந்தகோபன் வீட்டில் யசோதையின் பக்கத்தில் கால்களை அசைத்துக் கொண்டு கண்ணனும் அழுதான். கண் விழித்த யசோதையும், கோபியர்களும் செய்தியை நந்தகோபனிடம் கூறினார்கள். கோகுலம் முழுவதும் ஆனந்தக் கடலில் மூழ்கியது. காயாம்பூ போன்ற குழந்தையின் மேனியைக் கண்டு யசோதை மகிழ்ந்தாள். சந்தோஷத்துடன் பாலூட்டினாள். தொட்டுப் பார்த்து ஆனந்தமடைந்தாள். இத்தகைய பேற்றைப் புண்ணியசாலிகளும் அடையவில்லை!!  நந்தகோபனும் மிக்க மகிழ்ச்சி அடைந்து, அனைவருக்கும் தானங்கள் செய்தார். எல்லா இடையர்களும் மங்கள காரியங்கள் செய்தனர். கண்ணனைக் கண்டு, கோகுலத்தில் அனைவரும், அளவற்ற மகிழ்ச்சியில் ஆடிப் பாடி கண்ணன் பிறந்ததைக் கொண்டாடினார்கள்.

Leave a Comment