கண்ணன் கதைகள் – 63
வாகைச்சார்த்து / வாகச்சார்த்து
சில ஆண்டுகளுக்கு முன் குருவாயூர் சென்ற பொழுது அதிகாலை நிர்மால்ய தரிசனம் செய்ய சன்னதிக்குச் சென்றோம். கூட்டம் அதிகமாக இருந்ததால், நாங்கள் சென்ற சமயம் நிர்மால்யம் முடிந்துவிட்டது, ஆனால் வாகைச்சார்த்து சேவிக்கும் பாக்கியம் பெற்றோம்.
வாகைச்சார்த்து என்றால் என்ன? குருவாயூரில் தரிசனம் தரும் குழந்தைக் கண்ணனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தமும், தைலமும், தோல் நோய்களையும், அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் என்பது நம்பிக்கை. பகவானின் திருமேனியில் வாகை மரத்துப் பட்டையின் பொடியைக் கொண்டு எண்ணெய் போகத் தேய்க்கிறார்கள். இதைத்தான் ‘வாகைச்சார்த்து’ என்று கூறுகிறார்கள். இந்த வாகைச்சார்த்து வழிபாடு வழக்கம் எப்படி வந்தது?
இது பற்றி ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு காலத்தில், ஒரு கிராமத்தில், காஷு என்ற சிறுவன் இருந்தான். பத்து, பனிரெண்டு வயதிருக்கும். தாய் தந்தை யாரும் இல்லை. மிகுந்த வறுமை. அந்த கிராமத்தில் சிறு சிறு வேலைகள் செய்து அதனால் கிடைக்கும் பணத்தை வைத்து தனக்கு வேண்டிய உணவை வாங்கி உண்பான். ஒரு சமயம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் உணவில்லாமல் இருக்க நேரிட்டது. பசியின் கொடுமையைத் தாங்க முடியாத அந்த சிறுவன், அருகிலுள்ள நதிக்குச் சென்று அதில் மூழ்கி இறந்துவிட நினைத்தான். அப்போது நாரதர் அவன் முன் தோன்றி ஒரு பாத்திரத்தைக் கொடுத்து, அவன் விரும்பும் போதெல்லாம் அந்த பாத்திரத்திலிருந்து அவனுக்கு வேண்டிய உணவு கிடைக்கும் என்று கூறினார். அந்தப் பாத்திரத்தில் இருந்து அவனுக்கு வேண்டிய உணவை அவன் பலகாலம் பெற்று வந்தான்.
இந்நிலையில் ஒருநாள் காஷுவுக்கு வீடு, செல்வம் வேண்டும் என்ற பேராசை ஏற்பட்டது. மீண்டும் தண்ணீரில் மூழ்குவது போல நடித்தால், நாரதர் வருவார் என்ற எண்ணத்தில், நதியில் மூழ்கினான். நாரத முனிவரும் வரவில்லை, பாத்திரமும் மறைந்துவிட்டது. மீண்டும் பசியின் கொடுமையில் வாடினான். தனது பேராசை பெரு நஷ்டமாகிவிட்டதை உணர்ந்த காஷு, மிகவும் வருந்தினான். அப்போது நாரதர் மீண்டும் அவன் முன் தோன்றி, அவனிடம், ‘உன்னுடைய முன்ஜென்மத்தில் உனக்கு சாம்பு என்று ஒரு மகன் இருந்தான், அந்த மகனின் பக்தியால்தான் இப்போது என்னைப் பார்க்க முடிகிறது, நீயும் பக்தி செய்து முக்தியடை’ என்று கூற, அதன் பிறகு காஷு, எப்போதும் பகவானின் திருநாமங்களை உச்சரித்துக் கொண்டு தனது வாழ்நாளைக் கழிக்க ஆரம்பித்தான்.
அவனது நிலையைக் கண்ட மஹாலக்ஷ்மி, அந்தச் சிறுவனுக்கு உதவி செய்யுமாறு பகவானிடம் வேண்டினாள். அதற்கு பகவான் அவன் பாவங்கள் இன்னும் தீரவில்லை, முன்ஜென்மத்தில் அவன் ஒரு பூசாரியாய் இருந்தான். வேசிகளுடன் சுற்றிக்கொண்டு, கோவிலையும் கவனிக்கவில்லை. அப்போது அவன் மகன் சாம்பு, கோவிலில் பூஜைகளை பக்தியுடன் செய்து என்னை வந்தடைந்தான். முன்பைப் போலவே இப்போதும் காஷு தனது ஆசை நிறைவேறியதும் என்னை மறந்துவிடுவான். ஆகையால் அவனை சிறிது காலம் சோதித்துப் பிறகு ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார். காஷுவும் பகவானின் திருநாமங்களை உச்சரித்துக் கொண்டே இருந்தான். மீண்டும் மஹாலக்ஷ்மி பகவானிடம் வேண்ட, பகவானும் அதற்கு இணங்கினார்.
இதற்கிடையே, காஷு சுயநினைவை இழந்துவிட, பகவான் அவன் முன்னே தோன்றினார். அவன் தலையைத் தடவிக் கொடுத்தார். தன்னை அவரது திருவடிகளில் சேர்த்துக்கொள்ளுமாறு காஷு வேண்டினான். தன்னைப் போலத் துன்பமடைபவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் தானும் உதவ அருள் புரியுமாறும் வேண்டினான்.
பகவானும் அதை ஏற்றுக் கொண்டு, “கலியுகத்தில் நீ ஒரு வாகை மரமாகப் பிறப்பாய். அப்போது குருவாயூர் கோவிலில் குருவாயூரப்பனாக இருக்கும் எனக்கு, தினமும் காலையில் எனக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, பின் என்னை வாகைத் தூளினால் தேய்ப்பார்கள். அந்த வகையில் நீ எனக்கு சேவை செய்வாய். என் மூலமாக எனது பக்தர்களின் தோல் நோய்களும் தீரும்” என்று கூறி காஷுவை ஆசீர்வதித்து விட்டு மறைந்தார்.
குருவாயூரப்பனுக்கு “வாகை சார்த்து’ வழக்கம் இவ்வாறுதான் ஏற்ப்பட்டது. அதன்படியே இன்றும், நிர்மால்யம் முடிந்தவுடன், தைலாபிஷேகம் செய்து, பின்னர் வாகை மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பொடியை குருவாயூரப்பனின் திருமேனியில் போட்டு எண்ணெய் போகத் தேய்க்கிறார்கள். இதைத் தான் வாகைச் சார்த்து என்கிறார்கள். பிறகு பகவானுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்கின்றனர். இந்த அபிஷேக தீர்த்தமும் தைலமும் பல நோய்களைக் குணப்படுத்தும் சக்தி பெற்றவை என்பது நம்பிக்கை.
குருவாயூரப்பனை வழிபட்டு, வாழ்வில் நோய்களும், தோஷங்களும் நீங்கப் பெறுவோம்! ஓம் நமோ நாராயணாய! நாராயண! நாராயண!