Angala Parameswari History in Tamil

அங்காள பரமேஸ்வரி வரலாறு மற்றும் துதி -Angala Parameswari History in Tamil

அருள்தரும் அன்னை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருவரலாறு

சதுர்யுகத்தில் ஆதி கிரேதாயுகத்திற்கு முன் சரஸ்வதியின் சாபத்தால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. அந்த தோஷத்தை நீக்கும் பொருட்டும், உலக மக்களுக்கு அருள்பாலிக்கும் பொருட்டும் அன்னை அங்காள பரமேஸ்வரி எழுந்தருளிய தலம் தான் மேல்மலையனூர். இந்த அருள் தரும் அங்காள பரமேஸ்வரிக்கு தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆலயங்கள் உள்ளன. அப்படிப்பட்ட ஆலயம் ஒன்று நாகப்பட்டினம் மாவட்டம் வரகடை என்ற ஊரில் உள்ளது. அங்காள பரமேஸ்வரியின் கதை என்ன?

அருள்தரும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அன்னையின் கதை

தனக்கு ஐந்து தலை வேண்டுமென சிவபெருமானிடம் வரம் பெற்றார் பிரம்மன். ஒரு முறை பிரம்மன் கயிலாயம் சென்ற போது பார்வதி அவரைத் தொலைவில் இருந்து பார்த்தாள். சிவபெருமான்தான் வருகிறார் எனத் தவறாக நினைத்தாள். அவருக்கு பாத பூஜை செய்தாள் பார்வதி. அந்த நேரம் பார்த்து சிவபெருமான் அங்கு வரவே பார்வதிக்கு குழப்பம் ஏற்பட்டது. கோபம் கொண்டாள் பார்வதி. பிரம்மனுக்கு ஐந்து தலை இருப்பதால்தானே இந்தக் குழப்பம் என்றெண்ணினாள் பார்வதி. பிரம்மனின் ஐந்தாவது தலையை அகற்றிவிடுங்கள் என சிவபெருமானிடம் முறையிட்டாள் பார்வதி. சிவபெருமானும் பிரம்மாவின் ஐந்தாவது தலையை கொய்து எறிந்துவிட்டார்.

இதையறிந்த சரஸ்வதிக்கு கோபமேற்பட்டது. இந்த செயலுக்குக் காரணமான சிவபெருமான் மீதும் பார்வதி மீதும் அளவிலா சினம் கொண்டாள்.

‘‘நீர் பிரம்மஹத்தி தோஷம் பிடித்து மயானம் தோறும் அலைந்து திரிவீராக’’ என சிவபெருமானுக்குச் சாபமிட்ட சரஸ்வதி ‘‘இதற்கு காரணமான நீ அகோர உருவம் கொண்டு, செடி கொடிகளை அணிந்து கொண்டு பூத கணங்களுடன் காடு மேடெல்லாம் அலைவாயாக’’ என பார்வதிக்கு சாபமிட்டாள். அதன்படி இருவரும் மயானத்திலும் காடுமேடுகளிலும் அலையத் தொடங்கினர். இவர்களின் நிலைமையை உணர்ந்த மகாவிஷ்ணு மோகினி உருவம் எடுத்து சரஸ்வதியிடம் சென்றார். இவர்களது சாப விமோசனம் பற்றி தெரிந்து கொண்டு அதை இருவரிடமும் தெரிவித்தார். சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்க பார்வதி அங்காள பரமேஸ்வரியாக உருவெடுத்தாள். மகாலட்சுமி உதவியுடன் பிரம்மாவின் கபாலத்தை தனது காலால் மிதித்து தன்னிடம் வைத்துக் கொண்டாள். சிவபெருமானின் தோஷம் நீங்கியது.

———————————————————————–
அங்காள பரமேஸ்வரி பற்றிய இன்னொரு வரலாறும் உண்டு.

மாபெரும் யாகம் ஒன்றை நடத்தத் தொடங்கினான் தட்சன். அனைவருக்கும் அழைப்பு அனுப்பிய தட்சன், சிவபெருமானுக்கு மட்டும் அழைப்பு அனுப்பவில்லை.

தன் தந்தையான தட்சனின் செயலைக் கண்டு கோபமடைந்த பார்வதி நேரே தட்சனிடம் சென்றாள். தாட்சாயணியான தனக்கும் தன் கணவரான சிவபெருமானுக்கும் உரிய பங்கை தர வேண்டும் என தந்தையிடம் போராடினாள். தாட்சாயணிக்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் தர மறுத்தான் தட்சன். சினம் கொண்ட பார்வதிதேவி, தட்சனை சபித்தாள். அதே வேள்வித் தீயில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டாள்.

நடந்ததை அறிந்த சிவபெருமான் கோபம் கொண்டார். அவரது நெற்றிக் கண்ணில் இருந்து வீரபத்ரரும், பார்வதியிடமிருந்து அங்காள பரமேஸ்வரியும் தோன்றினார்கள். அவர்கள் இருவரும் தட்சன் யாகத்திற்காக தயார் செய்திருந்த யாக குண்டத்தை துவம்சம் செய்தார்கள்.

அங்காள பரமேஸ்வரி
எங்கு அநீதி நடந்தாலும் முதலில் அங்கு போய் நீதி கிடைக்கச் செய்வது அங்காள பரமேஸ்வரியின் குணம். அதனால்தான் பெரும்பாலும் அங்காளப் பரமேஸ்வரியின் ஆலயம் ஊரின் எல்லையில் அமைந்திருக்கிறது…
அங்காளம்மனிடம் எப்படி வேண்டிக்கொள்வது? குடும்பத்தில் குழப்பம், நோய், நொடிகள், பேய் பிசாசு, பில்லி,சூன்யம், வைப்பு, ஏவல், காட்டேரி போன்ற பிணிகள் பிடித்து இருந்தால் அங்காளபரமேசுவரியை மனதில் நினைத்தாலே போதும், அவள் வந்து துன்பத்தைத் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் கருதுகின்றனர். பொதுவாக எந்த பாதிப்பு வந்தாலும் அம்மா தாயே எங்கள் குடும்ப கஷ்டங்கள், தொல்லைகள், துயரங்கள் போன்றவற்றை எல்லாம் விலக்கி விடு என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி துதி.

ஓம் சக்தி! ஸ்ரீ அங்காளம்மா!
அங்காளம்மா! ஓம் சக்தி!
அம்மா தாயே! அருள் புரிவாயே!
ஓம் ஓம் சக்தியே!
அங்காளம்மா சக்தியே!
அங்காளம்மா சக்தியே!
ஓம் ஓம் சக்தியே!
ஜெய ஓம் ஜெயம்!
அங்காளியே ஜெயம்!
ஜெயமே ஜெயம்!
அங்காளியே ஜெயம்!
தாயே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி
அருள் புரிவாய் அம்மா!!!

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி 108 போற்றி

காமாட்சி அஷ்டகம் பாடல் வரிகள்

Leave a Comment