ஐயடிகள் காடவர்கோன் நாயனார்.

காஞ்சி கச்சி என பல பெயர்களால் சிறப்பிக்கப்படும் காஞ்சி பல்வேறு சிறப்புமிக்க நகரமாகும். பஞ்சபூத திருத்தலத்தில் மண்ணிற்கு உரிய திருத்தலமாகும்.
நான்கு சமயங்கள் வளர்ந்ததற்கு காரணமாக இருந்தது காஞ்சி மாநகர்.சைவம் தவிர பிறசமயங்களுக்கான மொழிகளுக்கு எழுத்து வடிவம் மற்றும் இலக்கணம் உருவாக்கப்பட்டதும் இக்காஞ்சி மாநகரிலேதான்.
சைவம் தவிர்த்து பிறசமயங்களுக்கான மறைநூல்கள் ஆகியவற்றை உருவாக்கியதும் மற்றும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பல்கலைகழகம் உருவாக்கி வைத்திருந்தது என
பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே வைத்திருந்தமையால் சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, சமணகாஞ்சி, புத்தகாஞ்சி என நான்கு பகுதிகளாக வரையறுக்கப் பட்டிருந்தது காஞ்சி மாநகர்.

இத்தகைய புகழ்பெற்ற காஞ்சியினைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவர்கள் வழித்தோன்றலாக உதித்தவர் ஐயடிகள் காடவர்கோன் ஆவார்.

காடவர் என்பது பல்லவ மன்னர் குலத்தினைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனின் அடிகள் என்பதன் மரூவாகும். ஐயடிகள் காடவர்கோன் என்பது ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருளினை குறிக்கும்.

வீரத்தில் சிறந்த இவர் திறமையான ஆட்சியாளராகவும் விளங்கினார். தம்முடைய ஆட்சித் திறத்தால் குடிமக்களுக்கு வறுமை வாராமல் பாதுகாத்து வளமையான வாழ்வினை அளித்தார்.

தம்முடைய ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள எல்லா உயிர்களும் இனிது இருக்கும்படி செங்கோல் செலுத்தி, எங்கும் சைவநெறி விளங்கி இருக்கும்படி நல்லாட்சி செய்தார்.

இவர் தமிழிலும் வடமொழியிலும் பெரும் புலமை மிக்கவராக இருந்தார். இதனால் இரு மொழிகளிலும் இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல கலைகளைச் சிறந்தோங்கச் செய்தார்.

சிவனிடத்தில் கொண்டிருந்த பேரன்பு நாள்தோறும் அவருக்கு பெருகிக் கொண்டே வந்தது. இதனால் அரச பதவி சிவவழிபாட்டுக்கு இடையூறாக இருக்கும் என்ற எண்ணம் உண்டானது.

அதனால் தம்முடைய மகனுக்கு முடிசூட்டி, அரசநீதிப்படி நாடு காக்கும் பெருங்கடமையை இன்னவாறு ஆற்ற வேண்டுமென்று தம் மகனுக்கு அறிவித்து அரசாட்சியை அவன்பால் ஒப்படைத்து தாம் விரும்புகின்ற
சிவவழிபாட்டை செய்ய முற்பட்டார்.

சிவபிரான் எழுந்தருளியுள்ள திருத்தலங்களுக்கெல்லாம் சென்று சிவபெருமானை தரிசித்தார்.
ஒவ்வொரு சிவாலயத்திற்கும் சென்று தம்மால் இயன்ற திருத்தொண்டினைச் செய்தார்.
தமிழ்ப்புலமை படைத்தவராதலின் ஒவ்வொரு தலத்துக்கும் ஒவ்வொரு வெண்பாவைப் பாடி வழிபடும் வழக்கத்தை மேற்கொண்டார்.

அவர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பு ‘சேத்திர திருவெண்பா‘ என்ற பெயரில் தொகுக்கப்பட்டு பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் குருபூசை ஐப்பசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இறைவன்பால் அன்புகொண்டு ஒழுகியமையால் இறைவனின் திருவடிபேறு பெற்றதோடு அல்லாமல் அறுபத்துமூன்று நாயன்மார்களிலும் ஒருவரானார். ஐயடிகள் காடவர்கோன் திருவடிகள் போற்றி.
அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.

Leave a Comment