Krishna Jayanti Pooja Procedure at Home
கிருஷ்ணரை எப்படி எளிமையாக வீட்டிலேயே முறையாக வழிபாடு செய்வது?
ஆவணி மாதத்தில் ரோகிணி நட்சத்திரத்தில், அஷ்டமி திதியில் அர்த்த ஜாமத்தில் பிறந்தவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். இரவில் பிறந்ததால் கிருஷ்ணரை வழிபட இரவு நேரம் தான் மிகவும் உகந்தது. அந்த வகையில் இவ்வருடம் திங்கட் கிழமையில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நன்னாளை எந்த நேரத்தில் கொண்டாடுவது? வீட்டிலேயே எப்படி கிருஷ்ணரை முறையாக வழிபாடு செய்வது? வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்கிற அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
**கோகுலாஷ்டமி யாரெல்லாம் கொண்டாடலாம்?**
விஷ்ணுவின் அவதாரங்களில் ஸ்ரீ ராம அவதாரம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் ஆகிய இந்த இரண்டு அவதாரங்கள் தர்மத்தை நிலை நாட்ட நிகழ்ந்தது ஆகும். நம்மை சுற்றியிருக்கும் அதர்மத்தை அழிக்கவும், நாம் அதர்மத்தை எதிர்த்து தர்மத்தின் வழியில் நடக்கவும், கிருஷ்ணர் அருள் பெறவும், எல்லா செல்வங்களும், மழலைச் செல்வமும் பெற வேண்டியவர்கள் இந்த வழிபாட்டை செய்யலாம்.
**கோகுலாஷ்டமி விரதம் இருப்பது எப்படி?**
கோகுலாஷ்டமியில் காலை முதல் பூஜை முடியும் வரை உணவேதும் உண்ணாமல் கிருஷ்ண லீலைகள் படித்தும், கேட்டும் விரதம் இருக்கலாம். முழு விரதம் இருக்க முடியாதவர்கள் அரிசி உணவைத் தவிர மற்ற எளிய உணவுகளை எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.
**கோகுலாஷ்டமியில் நைவேத்யம் படைப்பது எப்படி?**
கோகுலாஷ்டமியில் கிருஷ்ணரை மையப்படுத்தி அவருக்கு மிகவும் பிடித்தமான பால், தயிர், வெண்ணெய், நெய், முறுக்கு, சீடை, தட்டை, அப்பம், அவல் பாயாசம், அவல் லட்டு, நாட்டு சர்க்கரை, விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றை வைத்து வழிபடுவது சிறப்பு. இதில் அவல் மற்றும் வெண்ணை மிகவும் முக்கியம். எனவே எதுவும் செய்ய முடியாதவர்கள் இந்த இரண்டினை வைத்து வழிபட்டாலே கிருஷ்ணருடைய பரிபூரண அருளைப் பெறலாம்.
**கோகுலாஷ்டமி வழிபாடு முறை:**
ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி திதியில் இரவு வேளையில் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு கிருஷ்ணருடைய படம் அல்லது விக்ரகத்தை மஞ்சள் தடவிய மனையில் அமர்த்த வேண்டும். அவருக்கு முன்பாக வாழை இலை விரித்து அதில் பச்சரிசியை பரப்பி கொள்ளுங்கள். அதன் மீது செம்பு கலசம் ஒன்றை வைத்து அதில் தண்ணீரை முழுவதுமாக நிரப்பிக் கொள்ளுங்கள். பின்னர் அதில் மாவிலை விரித்து, தேங்காயை கலசம் போல் வையுங்கள். கலசத்திற்கு வலது புறத்தில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வையுங்கள். எல்லாவற்றிற்கும் மஞ்சள் மற்றும் குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள்.
பின்னர் வாசற்படியில் இருந்து பூஜை அறை வரை ஸ்ரீ பாதம் வரைய வேண்டும். நீங்கள் வரையும் பாதம் சின்னஞ்சிறு குழந்தையின் பாதமாக இருப்பது சிறப்பு. எனவே உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுடைய காலடி தடத்தை வரையலாம். அல்லது உங்கள் கைகள் கொண்டு படம் வரைந்து விரல்களை இடலாம். கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த நைவேத்தியங்களை இலையில் வைத்து படைக்கவும். அன்றைய நாளில் ஏழை குழந்தைகளுக்கு தானம் செய்ய விரும்புபவர்கள் பூஜையில் நோட்டு, புத்தகம் போன்றவற்றை புதிதாக வாங்கி வையுங்கள். பின்னர் நெய் ஊற்றி விளக்கை ஏற்றவும். முதலில் பிள்ளையாரை வழிபட்டு பின்பு கிருஷ்ணருடைய ஸ்தோத்திரங்களையும், மந்திரங்களையும் பாராயணம் செய்து கொண்டே தூப, தீப, ஆரத்தி காண்பியுங்கள்.
**ஸ்ரீ கிருஷ்ணரின் முக்கியமான மந்திரங்கள்:**
ஓம் ஸ்ரீம் நம: ஸ்ரீ கிருஷ்ண பரிபூர்ணத்மயே ஸ்வாஹா!!!
**கிருஷ்ணர் காயத்ரி மந்திரம்:**
ஓம் தேவகிநந்தனாய வித்மஹே,
வாசுதேவாய தீமஹி,
தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்!
**கிருஷ்ணர் ஸ்தோத்திரம்:**
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண..
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!!
ஹரே ராம ஹரே ராம..
ராம ராம ஹரே ஹரே!!
**கிருஷ்ணர் சுலோகம்**
ஓம் நமோ விஸ்வரூபாய
விஸ்வ சித்யந்த ஹேதவே l
விஸ்வேஸ்வராய விஸ்வாய
கோவிந்தாய நமோ நமஹ ll
நமோ விக்ஞான ரூபாய
பரமானந்த ரூபிணே l
கிருஷ்ணாய கோபிநாதாய
கோவிந்தாய நமோ நமஹ!’
**குழந்தை வரம் பெற என்ன செய்யலாம்?**
‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கிருஷ்ணாய கோவிந்தாய கோபிஜனவல்லபாய சந்தான பாக்கியம் தேஹிமே ஸ்வாஹா.
கிருஷ்ணர் மந்திரத்தை கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு 108 முறை ஜபித்து பின்னர் தம்பதியராக அந்த வெண்ணெயை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ய விரைவில் கிருஷ்ணரே உங்களுக்கு பிள்ளையாக அவதரிப்பார் என்பது ஐதீகம்.
**பூஜையை எப்படி நிறைவு செய்வது?**
பூஜைகள் முடிந்த பின்பு குழந்தைகளுக்கு கிருஷ்ண லீலை, கிருஷ்ணன் பிறந்த கதை ஆகியவற்றை கண்டிப்பாக அருகில் அமர வைத்து சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இறை நம்பிக்கையும் மேம்படும். கிருஷ்ணன் அவதரிக்கும் பொழுது தாய், தந்தை ஆகிய தேவகி, வசுதேவரும் உடன் சந்திரனும் மட்டுமே விழித்து இருந்ததாக புராணங்கள் கூறுகிறது. எனவே ஜன்மாஷ்டமியில் சந்திர தரிசனம் செய்வது எல்லா வகையான நன்மைகளையும் பெற்று தரும். நம் உள்ளத்தையும், உடலையும் தூய்மைப்படுத்தும். பின்னர் கலசத்தை வலது புறமாக நகர்த்தி எல்லாவற்றையும் கலைத்துப் பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். அருகில் இருக்கும் ஏழை குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்கள், உணவு, உடை, கல்விக்கு உதவி செய்தல் போன்ற தானங்களை செய்து மகிழலாம். இதனால் குழந்தை கிருஷ்ணருடைய அருள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
கிருஷ்ண ஜெயந்தி அன்று எப்படி விரதம் இருக்க வேண்டும்?