கலிக்கம்ப நாயனார்.

கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பெண்ணாகடம் என்னும் திருத்தலத்தில் அவதரித்தவர் கலிக்கம்பர். தேவகன்னியர் என்றழைக் கப்படும் பெண், ஆ என்று குறிக்கப்படும் காமதேனு பசுவும், கடம் என்று அழைக்கப்பட்ட வெள்ளை யானையும் எம்பெருமானை வழிபட்டதால் இத்தலம் பெண்+ஆ+கடம் சேர்த்து பெண்ணாகடம் என்றழைக்கப்பட்டது. இது இத்திருத்தலத்தின் சிறப்பாகும்.

அந்நகரில் உள்ள தூங்கானைமாடம் எனும் சிவாலயத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைத் துதித்து வாழ்ந்து வந்தவர் கலிக்கம்பர். அவ ருக்குத் தொண்டு செய்வதோடு அவரை நினைத்து உருகும் அடியாருக்கும் தொண்டு செய்பவர். சிவனை வழிபடும் சிவனடியார்களை வழி படாவிட்டால் சிறிதும் பலனில்லை என்னும் உறுதியை உண்மையாக கொண்டிருந்தார் கலிக்கம்பர்.

சிவனடியார்கள் யாராக இருந்தாலும் எத்தகைய குலத்தைக் கொண்டவராக இருந்தாலும் அவர்கள் சிவனடியார்கள். அவர்களை உபசரிப்பதில் எத்தகைய குறையும் நேர்ந்துவிடக் கூடாது என்று நினைப்பவர்களே உண்மையான சிவத்தொண்டர்கள். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் வாழ்ந் தவர் கலிக்கம்பர்.

தம்மை நாடி வரும் சிவனடியார்களுக்கு வீட்டில் அமுது அளித்து அவர்களுக்கு வேண்டிய பொருளையும் பொன்னையும் அவர்கள் வேண்டுவன வற்றையும் மனமுவந்து அளித்து மகிழ்வோடு வழியனுப்பி வைப்பார்.ஒருமுறை அவரை நாடி சிவனடியார் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு மகிழ்வோடு திருவடி பூசை செய்தார் கலிக்கம்பர்.அவரது மனைவி சிவனடியாருக்கு மனையைச் சுத்தமாக்கி அறுசுவை விருந்து படைக்க கணவருடன் கலயத்தில் நீர் எடுத்து வந்தார். அமர்ந்திருந்த சிவனடியாரைக் கண்டதும் நொடியில் அவர் முகம் மாறியது. முகத்தில் அருவெறுப்பை உமிழ்ந்தார். ஏனெனில் அந்த தொண்டர் முன்பு கலிக்கம்பரிடம் பணியாற்றிய பணியாள் என்பதே.

பணியாளனுக்கு தண்ணீர் வார்க்க தயங்கிய மனைவியின் தயக்கத்தைப் புரிந்து கொண்ட கலிக்கம்பர் அவரது முகத்தில் தெரிந்த அருவெறுப்பைக் கண்டதும் கோபம்கொண்டு அருகில் இருந்த வாளை எடுத்து வந்து மனைவியின் கரத்தைப் பற்றி வெட்டினார். இதனால் மயக்கமுற்று சிவனைத் துதித்தப்படி மயங்கி கீழே விழுந்தார் அந்த அம்மையார். நடந்ததைக் கண்டு சிவனடியார் மனம் பதைத்து எழுந்தார். கரங்களை வெட்டியதால் அம்மையாரின் கரங்களிலிருந்து இரத்தம் பெருகி வழிந்தது.அடியாரும் எம்மால்தானே இவ்வம்மையின் கரம் துண்டிக்கலானது. இறைவா இக்கொடுமை நிகழ யானே காரணம். யாம் உமது அடியாராக இருக்கும் தகுதியற்றவனாவேன். எம்மை இக்கணமே அழித்து விடுங்கள் என மனமுருகி வேண்டினார்.

அடியாரின் துயர் தீர்க்கவும், இதுநாள்வரை அடியார்க்கு தொண்டு செய்த அன்னையின் திருக்கரம் வெட்டு பட்டதை பொறுக்க முடியாமலும், கலிக்கம்பரின் சிறப்பை உலகறியச் செய்யவும் இறைவன் சித்தம் கொண்டார். திடீரென்று அந்த இடமே ஒளிவெள்ளமானது. கலிக்கம்பரின் அன்பை உலகுக்கு உணர்த்தவே இத்தகைய நாடகத்தை அரங்கேற்றிய சிவபெருமான் அடியவர்கள் முன் தோன்றினார். உறக்கத்திலிருந்து எழுந்தது போல் எழுந்து நின்றார் கலிக்கம்பரின் இல்லத்தரசியர். மூவரும் இறைவனின் பாதம் பணிந்து மனமுருகி நின்றார்கள். எம்பெருமானின் அருளால் இயன்றவரை தமது மனைவியுடன் இணைந்து சிவத்தொண்டுகள் செய்து வந்தார். இறுதியில் இறைவனின் திருவடி பேறுபெற்று சிவபுரம் சேர்ந்தார் கலிக்கம்ப நாயனார். அறுபத்துமூன்று நாயன்மார்களிலும் ஒருவராகும் சிறப்பை இறைவன் கரிகம்பருக்கு நல்கினார்.கலிக்கம்ப நாயனாரின் குருபூசை தைமாதம் ரேவதி நட்சத்திரத்தில் அனைத்து சிவாலயங்களிலும் கொண்டாடப்படுகிறது.

கலிகம்ப நாயனார் திருவடிகள் போற்றி.
அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.

Leave a Comment