Sabarimalai 18 steps history and meaning. பதினெட்டு படிகள் சொல்லும் பாடம்…
சபரிமலை யாத்திரையில் மிக முக்கியமானது பதினெட்டு படிகள். பொன்னம்பல வாசனான ஐயப்பனை காண, விரதமிருந்து இருமுடி சுமந்து இந்த பதினெட்டு படிகளையும் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷ முழக்கத்துடன் கடந்து செல்வது, நினைக்கும் போதே பரவசத்தை தரும் பேரானந்த அனுபவம்.
நமக்கு பக்தி தரும், ஞானம் தரும், முக்தி தரும் இது அத்தனையும் நிச்சயம் தரும் பதினெட்டு படிகளின் தரிசனம் வாழ்வின் அதிமுக்கியமான தருணம். இப்படி அற்புத அனுபவம் தரும் அய்யனின் 18 படிகள் குறித்து தெரிந்துகொள்வோம்…
வில், வாள், வேல், கதை, அங்குசம், பரசு, பிந்தி, பாவம், பரிசை, குந்தம், ஈட்டி, கை வாள், முன்தடி, பாசம், சக்கரம், ஹலம், மழு, முஸலம் இப்படி ஐயப்பன் தனது 18 போர்கருவிகளை கொண்டே 18 படிகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது
வாழ்வின் பல கூறுகளை குறிப்பிடும் பதினெட்டுப் படியின் முக்கிய தத்துவம் இதோ.
ஐந்து இந்திரியங்கள் – (கண், காது, மூக்கு, நாக்கு, கை கால்கள்)
ஐந்து புலன்கள் (பார்த்தல், கேட்டல், சுவாசித்தல், ருசித்தல், ஸ்பரிசித்தல்),
ஐந்து கோசங்கள் – (அன்னமய கோசம், ஆனந்தமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், ஞானமய கோசம்)
மூன்று குணங்கள் – (ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம்) இப்படி பதினெட்டு அம்சங்களை கட்டுப்படுத்தி வெற்றி பெற 18 படிகள் நமக்கு வழிகாட்டுகின்றது.
18 படிகளில் உள்ள தேவதாக்கள்
ஒன்றாம் திருப்படி: சூரிய பகவான்
இரண்டாம் திருப்படி: சிவன்
மூன்றாம் திருப்படி: சந்திர பகவான்
நான்காம் திருப்படி: பராசக்தி
ஐந்தாம் திருப்படி: அங்காரக பகவான்
ஆறாம் திருப்படி: முருகன்
ஏழாம் திருப்படி: புத பகவான்
எட்டாம் திருப்படி: விஷ்ணு
ஒன்பதாம் திருப்படி: வியாழ (குரு) பகவான்
பத்தாம் திருப்படி: பிரம்மா
பதினொன்றாம் திருப்படி: சுக்கிர பகவான்
பன்னிரெண்டாம் திருப்படி: லட்சுமி
பதிமூன்றாம் திருப்படி: சனி பகவான்
பதினான்காம் திருப்படி: எம தர்ம ராஜன்
பதினைந்தாம் திருப்படி: ராகு பகவான்
பதினாறாம் திருப்படி: சரஸ்வதி
பதினேழாம் திருப்படி: கேது பகவான்
பதினெட்டாம் திருப்படி: விநாயகப் பெருமான்
ஒற்றைப்படை வரிசையில் நவக்ரஹ தேவதாக்களும் இரட்டைப்படை வரிசையில் தெய்வக் குடும்பமும் உள்ளதாக ஐதீகம்.
18 படிகளிலும் ஐயப்பன் 18 வகையான திருநாமங்களுடன் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
அவை:
ஒன்றாம் திருப்படி: குளத்துப்புழை பாலகன்
இரண்டாம் திருப்படி: ஆரியங்காவு ஐயன்
மூன்றாம் திருப்படி: எரிமேலி சாஸ்தா
நான்காம் திருப்படி: அச்சன்கோயில் அரசன்
ஐந்தாம் திருப்படி: புவனேஸ்வரன்
ஆறாம் திருப்படி: வீரமணி கண்டன்
ஏழாம் திருப்படி: பொன்னம்பல வாஸன்
எட்டாம் திருப்படி: மோஹினி பாலன்
ஒன்பதாம் திருப்படி: சிவ புத்ரன்
பத்தாம் திருப்படி: ஆனந்த சித்தன்
பதினொன்றாம் திருப்படி: இருமுடிப் பிரியன்
பன்னிரெண்டாம் திருப்படி: பந்தள ராஜகுமாரன்
பதிமூன்றாம் திருப்படி: பம்பா வாஸன்
பதினான்காம் திருப்படி: வன்புலி வாஹனன்
பதினைந்தாம் திருப்படி: ஹரிஹர சுதன்
பதினாறாம் திருப்படி: ஸத்குரு நாதன்
பதினேழாம் திருப்படி: பிரம்மாண்ட நாயகன்
பதினெட்டாம் திருப்படி: ஸத்ய ஸ்வரூபன்
18 படிகளும் ஒரே கல்லினால் ஆனது. எல்லாப் படிகளும் 9 அங்குல உயரமும் 5 அடி நீளமும் உடையது. பல காலத்துக்கு முன்பு வரை படிகளில் தேங்காய் உடைக்கும் வாடிக்கை இருந்தது.பதினெட்டு படிகள் இதனால் தேய்மானம் அடைவதால் 1985-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருவாங்கூர் தேவஸ்தானம் பஞ்ச லோகத்தினால் – தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஈயம் ஆகியவற்றை கொண்டு தகடுகள் செய்து படிகளின் மேல் அமைத்தனர். இருந்தாலும் பல லட்சக்கணக்கான பக்தர்களின் பாதங்கள் பட்டு பட்டு படிகளின் மேல் தகடுகள் தேய்மானம் கண்டதால் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் பஞ்சலோக தகடுகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
பந்தள ராஜ குடும்பத்தினர், தந்திரிகள், மகர சங்கராந்தியன்று திருவாபரணப் பெட்டியை சுமந்து வரும் ராஜ பிரதிநிதி, திருவாபரணப் பெட்டியையும் தங்க அங்கியையும் வரவேற்கும் தேவஸ்தான உறுப்பினர்கள் – வரவேற்கும் சமயத்தில் இவர்கள் ஐயப்பன் அனுமதி பெற்று மாலையணிந்திருக்க வேண்டும். படிபூஜையின் போது மேல்சாந்தி, தந்திரி, கீழ்சாந்தி மற்றும் கட்டளைதாரர் 3பேர், பலிகளை அர்ப்பணிக்கும் குருக்கள் ஆகியோருக்கு மட்டும், பதினெட்டு படிகளில் இருமுடிக் கட்டு இல்லாமல் படியேறி வர உரிமையுண்டு.
சாமியே சரணம் ஐயப்பா…
very nice message