சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை! தீவிரமாகும் ஓகி புயல்… CYCLONE OCKHI
பத்தனம்திட்டா : ஓகி புயல் தீவிரமடைந்து வருவதால் பாதுகாப்பு கருதி சபரிமலை வரும் பக்தர்கள் இரவு பயணத்தை தவிர்க்குமாறு பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கன்னியாகுமரி, கேரள கடல் எல்லைப் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஓகி புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்தப் பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இரண்டாம் வகை புயல் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம் புயலானது திருவனந்தபுரம் கடலுக்கு அருகே 70 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே அசம்பாவிதங்களை தவிர்க்க சபரி மலை பக்தர்கள் இரவு நேர பயணத்தை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மலைப்பாதைகள் மற்றும் காடுகளை கடந்து கட்டாயம் இரவு நேர பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
போலீசார் எச்சரிக்கை
மரங்கள் வேறோடு சாய்வது மற்றும் மின்பாதிப்புகள் இருப்பதால் பக்தர்கள் முன் எச்சரிக்கையுடன் தாங்கள் இருக்கும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நீர்நிலைகள், மரங்கள் சூழ்ந்த பகுதிகள், டிரான்ஸ்பார்மளுக்கு அருகில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு போலீசார் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கியிருப்போரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
காட்டு வழி பயணம் கூடாது
சன்னிதானம் அல்லது பம்பையில் இருக்கும் பக்தர்கள் அங்கேயே தங்கி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மலையை விட்டு கீழே இறங்குவதாக காட்டு வழியில் பயணம் செய்து அசம்பாவிதத்தை தேடிக் கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
திடீரென உயர்ந்த நீர்மட்டம்
பம்பை திரிவேணி சங்கமத்தில் மாலையில் திடீரென நீர்மட்டம் அதிகரித்ததால் பக்தர்களை போலீசார் உடனடியாக அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். எனினும் பக்தர்களுக்கு சில எச்சரிக்கைகளை அதிகாரிகள் விடுத்துள்ளனர்.
குளம், ஆறுகளில் குளியலிடக் கூடாது
மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை மலைப்பாதையில் பயணிக்கக் கூடாது. புயல் எச்சரிக்கை திரும்பப் பெறும் வரை காட்டுப்பாதையை பயன்படுத்தக் கூடாது. நீர் நிலைகள், மரங்களுக்கு அருகில் நிற்கக் கூடாது, குளம், ஆறுகளில் குளியலிடக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் சபரிமலை பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நன்றி: oneindia