Pitha Pirai Soodi Lyrics Tamil

பித்தா பிறைசூடீ (pitha pirai soodi) எழுதியவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இந்த பாடல் பதிகம் திருவெண்ணெய்நல்லூர் திருமுறை பதிகம்! சுந்தரர் அருளிய தேவாரத் திருப்பதிகங்கள். இந்த பாடலின் திருமுறை ஏழாம் திருமுறை ஆகும்.

இறைவன் சிவபெருமான் சுந்தரரை தடுத்தாட்கொண்ட சிறப்புடையது இத்தலம். இறைவன் முதிய வேதியராய் வந்து வழக்குரைத்து சுந்தரர் தனக்கு அடிமை என்று நிரூபித்து தன்னுடன் அழைத்துச் சென்று அவரை ஆட்கொண்டார். இறைவன் அடியெடுத்துத் தர சுந்தரர் “பித்தா பிறைசூடி” என்ற திருப்பதிகத்தை அருளிய தலம். தலத்தின் பெயர் திருவெண்ணெய்நல்லூர் என்றும் கோவிலின் பெயர் அருட்டுறை என்றும் பதிகத்தில் குறிப்பிடப் பெறுகிறது. அருணகிரிநாதர் இத்தலத்தில் முருகப் பெருமான் மயில் மீது நடனம் புரிதலைக் கண் குளிரக் கண்டு திருப்புகழ் ஒன்றும் பாடியுள்ளார்.

பித்தா பிறை சூடீ பாடல் வரிகள்

பித்தா! பிறை சூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 1

நாயேன் பலநாளும் நினைப்பு இன்றி, மனத்து உன்னை
பேய் ஆய்த்திரிந்து எய்த்தேன்; பெறல் ஆகா அருள் பெற்றேன்
வேய் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
ஆயா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 2

மன்னே! மறவாதே நினைக்கின்றேன், மனத்து உன்னை
பொன்னே, மணிதானே, வயிர ,ம், மே, பொருது உந்தி
மின் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
அன்னே! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 3

முடியேன்; இனிப் பிறவேன்; பெறின் மூவேன்; பெற்றா ஊர்தீ!
கொடியேன் பலபொய்யே உரைப்பேனைக் குறிக்கொள்,
செடி ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
அடிகேள்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 4

பாதம் பணிவார்கள் பெறும் பணம் ,ம், அது பணியாய்
ஆதன் பொருள் ஆனேன்; அறிவு இல்லேன்; அருளாளா
தாது பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
ஆதி! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 5

தண் ஆர் மதிசூடீ! தழல் போலும் திருமேனீ
எண்ணார் புரம் மூன்றுய்ம் எரியுண்ண ,ந், நகைசெய்தாய்
மண் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
அண்ணா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 6

ஊன் ஆய், உயிர் ஆனாய், உடல் ஆனாய்; உலகு ஆனாய்
வான் ஆய்; நிலன் ஆனாய்; கடல் ஆனாய்; மலை ஆனாய்
தேன் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
ஆனாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 7

ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ணச் சில தொட்டாய்
தேற்றாதன சொல்லித் திரிவேனோ? செக்கர்வான் நீர்
ஏற்றாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
ஆற்றாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 8

மழுவாள் வலன் ஏந்தீ! மறை ஓதீ! மங்கைபங்கா!
தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே
செழுவார்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
ஆரூரன்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 9

கார் ஊர் புனல் எய்தி, கரை கல்லித் திரைக்கையால்
பார் ஊர் புகழ் எய்தி, திகழ் பல் மா மணி உந்தி
சீர் ஊர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே? 10

இத்திருப்பதிகம், சிவபிரானை நோக்கி, “அடியேன் உனக்கு முன்பே ஆளாகி, இப்பொழுது நீ வந்து என்னை உனக்கு அடியான் என்று சொல்லியபொழுது, ‘அடியவன் அல்லேன்’ என எதிர்வழக்குப் பேசியது தகுமோ” என இரங்கி அருளிச்செய்தது.

பித்தா பிறை சூடீ பாடல்  விளக்கம்‬:

பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய, “அருட்டுறை” என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய், அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, “உனக்கு அடியவன் அல்லேன்” என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

மூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, நாய் போலும் கீழ்மையுடையேனாகிய யான் உன்னை எனது இளைய நாள்கள் பலவற்றினும் மனத்தால் நினைத்தல் இன்றிப் பேய்போல அலைந்து இளைத்தேன், ஆயினும், இதுபோழ்து, பெறுதற்கு அரிய உனது திருவருளை நான் பெற்றேன். இப்பேற்றை எனக்கு அளிக்க வந்த உனக்கு, முன்பே நான் அடியவனாகி, இப்பொழுது, “அடியவன் அல்லேன்” என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

தலைவனே, கரையை மோதி, பொன்னும் மணியும், வயிரமும் ஆகிய இவற்றைத் தள்ளிக்கொண்டு, ஒளிமிக்கு வருகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள தாய் போன்றவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, “அடியவன் அல்லேன்” என்று எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ! இனிமேல், உன்னை என் மனத்தில் ஒருபோதும் மறவாமலே நினைப்பேன்.

இடபத்தை ஊர்பவனே, ஒளி நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, “அடியவன் அல்லேன்” என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாமையை அகற்றி என்னை நீ தெளிவித் தருளினமையால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழப் பெறின் மூப்படைந்து வருந்தவும் ஆற்றேனாகின்றேன். நெறிகோடினேனாகிப் பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறாது ஏற்றருள்.

அருளாளனே, பூக்களின் மகரந்தம் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள முதல்வனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, “அடியவன் அல்லேன்” என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாச் செய்கையைச் செய்தமையால் அறிவில்லேனாயினேன்; அதனால், “ஆதன்” என்னும் சொற்குப் பொருளாயினேன்; ஆயினும், என்னை இகழாது உன் திருவடியை வணங்கி வாழ்கின்ற அறிவர் பெறும் பேற்றை அளித்தருள்.

தட்பம் நிறைந்த திங்களைச் சூடியவனே, நெருப்புப் போலும் திருமேனியை உடையவனே, உன்னை மதியாதவரது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும் படி சிரித்தவனே, மூழ்குவோரது பாவத்தைக் கழுவுதல் பொருந்திய பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, “அடியவன் அல்லேன்” என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

பூக்களின் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே, நீ உடலிடத்து நின்று பொருள்களை உணர்ந்து வருகின்ற உயிர்கள் ஆகியும், அவைகள் நிற்கின்ற அவ்வுடல்களாகியும், வானாகியும், நிலமாகியும், கடலாகியும், மலையாகியும் நிற்கின்றாய்; இப்பெற்றியன் ஆகிய உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, “அடியவன் அல்லேன்” என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் நன்னெறியானவனே, நீ உனக்குப் பகையாய் எதிர்ந்தவர்களது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி, போர் செய்து அழித்தாய். சிவந்த சடையிடத்து ஆகாய கங்கையைத் தாங்கினாய். அப்பெருமைகளை அறியாமை காரணமாகத் தோன்றும் சொற்களைச் சொல்லி நான் வீணே உழல்வேனோ! அங்ஙனம் உழலும் நெறியானே, முன்பு உனக்கு அடியவனாயதற்கு மாறாக இப்பொழுது, “அடியவன் அல்லேன்” என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

மழுப்படையை வலப்பக்கத்தில் ஏந்தியவனே, வேதத்தை ஓதுபவனே, உமையை ஒரு பாகத்தில் உடையவனே, செழுமை வாய்ந்து இடையறாது ஒழுகுகின்ற பெண்ணையாற்றின் தென் பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அழகேன, உன்னை வணங்குவாரது துன்பங்களை நீக்குதல் உனது தொழில் என்பதனால், என்னை வலிந்து ஆட்கொள்ள வந்தாய். அதனை அறியாது, முன்பே உனக்கு அடியவனாகியதனை மறுத்து, இப்பொழுது, “அடியவன் அல்லேன்” என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

மேகத்தினின்றும் ஒழுகும் தன்மையை உடைய நீர் திரண்டு பொருந்தி, அலைகளாகிய கைகளால் கரையைக் குத்தி, நிலம் முழுதும் பரவிய புகழைப்பெற்று, ஒளி விளங்குகின்ற பல சிறந்த மணிகளைத் தள்ளி வந்து, அழகு மிகுகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு, ஆரூரன் “அடியவல்லேன்” என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

நன்றி: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்

திருவெண்ணெய்நல்லூர் திருமுறை பதிகம் முற்றிற்று…

பித்தா பிறை சூடீ பாடல் காணொளி:

Leave a Comment