Lyrics

சகலகலாவல்லி மாலை பாடல் வரிகள் | Sakalakalavalli Maalai Tamil Lyrics

Sakalakalavalli Maalai Tamil Lyrics

உங்கள் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க, குமரகுருபரருக்கு வேண்டிய கலைகளை அருளிய சகலகலாவல்லி மாலையின் (sakalakalavalli maalai tamil lyrics) பத்துப் பாடல்களையும் பாடி, சரஸ்வதிதேவியை மனதார வழிபட அன்னையின் அருள் கிடைக்கும் என்பது பெரிய நம்பிக்கை… இந்த சகலகலாவல்லி மாலை பாடல் வரிகளின் கிழே சகலகலாவல்லி மாலை பாடல் பிறந்த கதை / வரலாறு பதிவு செய்துள்ளோம்

சகலகலாவல்லி மாலை பாடல் வரிகள்

​கட்டளைக் கலித்துறை

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10

சகலகலாவல்லிமாலை பிறந்த கதை​

குமரகுருபரர் காசிக்குச்சென்று அங்கோர் மடத்தை நிறுவ முயன்றார். அதற்கான இடம் வேண்டும்; பொருளும் வேண்டும். அப்போது ஷா ஜஹான் டில்லி/ஆக்ராவில் முகலாய பாத்ஷாவாக இருந்தார்.
அவருடைய மூத்த மகனாகிய தாரா ஷிக்கோஹ் காசி உட்பட்ட பிரதேசங்களில் பாத்ஷாவின் பிரதிநிதியாக ஆளுனராக இருந்தார். அவரைப் பார்த்து தமக்கு வெண்டிய உதவியையும் அனுமதியையும் குமரகுருபரர் பெறவேண்டியிருந்தது. தாரா ஷிக்கோஹ்வுக்குத் தமிழ் தெரியாது. குமரகுருபரருக்கு ஹிந்துஸ்தானி தெரியாது. தமக்குப் பன்மொழியாற்றல் வேண்டும் என்பதால் குமரகுருபரர் சரஸ்வதியை வேண்டி ‘சகலகலாவல்லி மாலை’யைப் பாடினார். சரஸ்வதியின் அருளால் அவருக்குப் பன்மொழியாற்றல் ஏற்பட்டது.தம்முடைய சித்த ஆற்றலால் ஒரு புலியை வசப்படுத்தி அதன் மீது அமர்ந்துகொண்டு தாரா ஷிக்கோஹ்வைக் காணச்சென்று அவருடன் ஹிந்துஸ்தானியிலேயே உரையாடினார். அவருடைய விருப்பத்தை அறிந்துகொண்ட தாரா ஷிக்கோஹ்மடம் கட்டிக்கொள்ள இடமும் தந்து பொருளும் கொடுத்து உதவினார்.அக்காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தில் இந்துக்கள் கோயில் முதலானவற்றைக் கட்டுவதற்குத் தடைகள் இருந்தன. அதனால்தான் குமரகுருபரர் தாரா ஷிக்கோஹ்விடம் விசேஷ அனுமதியையும் உதவியையும் பெறவேண்டியிருந்தது. காசியில் கட்டப்பட்ட அந்த மடம் ‘காசிமடம்’ என்ற பெயரில் மிகவும் சிறந்து விளங்கியது.

சரஸ்வதி அஷ்டோத்திர சத நாமாவளி

தேவி கவசம் பாடல் வரிகள்

லலிதா சஹஸ்ரநாமம் பாடல்

108 சரஸ்வதி தேவி போற்றி

விஜயதசமி ஏன் கல்விக்கு உகந்த நாள்?

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits

    வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More

    6 hours ago

    செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி | Chitra Pournami

    செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி::°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா… Read More

    4 weeks ago

    ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல்

    🌻🙏ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் (4/5/23, வியாழக் கிழமை) 🌻🕉️ 🍒ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🌹 ஸ்ரீ லக்ஷ்மி… Read More

    4 weeks ago

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 23.4.2023 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை… Read More

    1 month ago

    Guru Peyarchi Palangal 2023-24 Parigarangal | குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-2024

    Guru Peyarchi Palangal 2023-24 Parigarangal குரு பெயர்ச்சி பலன்கள் 2023 - 2024 (Guru Peyarchi Palangal 2023-24)… Read More

    1 month ago