Aadi Masam special
தேவர்களின் பகல் பொழுது முடிந்துவிட்டது. நாளை முதல் தேவர்களின் இரவுப்பொழுதான தக்ஷிணாயன புண்ய காலம் ஆரம்பிக்க போகிறது. அதனை முன்னிட்டு பித்ருகாரகனான சூரிய பகவான் இன்று மாலையே மாத்ருகாரகனான சந்திரனின் வீட்டில் தஞ்சம் அடைய போகிறார். இன்னும் ஒருமாதத்திற்க்கு அங்கிருந்து ஆடிமாதத்தை சிறப்பிக்கப்போகிறார்.
தக்ஷிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில்தான் பூமாதேவி அவதரித்ததாகச் சொல்கின்றன புராணங்கள். இந்த மாதத்தில் வரும் திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகள் யாவும் மகிமை வாய்ந்தன என்று ஜோதிட சாஸ்திர நூல்கள் பலவும் சிறப்பிக்கின்றன. ஆடிப்பிறப்பு, ஆடி பதினெட்டில் ஆடி பெருக்கு, நாக தோஷ பூஜை, புதுமணத் தம்பதிக்கு ஆடிப்பால் அளித்தல்… இப்படி, நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஆடி மாத விசேஷ வைபவங்கள் பல உண்டு. தெரிந்துகொள்வோமா?
ஆடிப்பட்டம்:
ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி. சித்திரை முதல் ஆனி வரை வெய்யிலின் ஆர்ப்பாட்டம். ஆடியில் காற்றுடன். மழையும் பெய்யும்.அதனால் ஆடியில் நெல் விதைத்தால் தை மாதத்தில் நல்ல மகசூல்…இதனால் வந்தது..இந்த பழமொழி.. எனவே விவசாய நாடான நமது நாட்டில் பொன்னேரு பூட்டும் வழக்கம் மரபில் இருந்தது.
ஆடிப்பண்டிகை
“ஆடி அழைக்கும். உகாதி ஓட்டும்” என ஒரு சொலவடை உண்டு. அதாவது தமிழ் வருடத்தில் ஆடி மாதத்திலிருந்துதான் அனைத்து பண்டிகைகள் திருவிழாக்கள் தொடங்குகின்றன. யுகாதியோடு பண்டிகைகள் முடிந்துவிடும். அதன்பிறகு சித்திரை வருட பிறப்பை தவிர வேறு பண்டிகைகள் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதை சிறப்பிக்கும் விதமாக ஆடி முதல் நாளில் ஆடிப்பண்டிகை என கொண்டாடப்படுகிறது. வாசலில் கோலம் செம்மண்(காவி) என களை கட்டத்தொடங்கிவிடும்.
தக்ஷிணாயனத்தின் முதன் நாளான ஆடிப்பண்டிகையின் போதும் கடைசி நாளான போகிப்பண்டிகையின் போதும் “போளி” எனும் இனிப்பு செய்வது பிராமணர் இல்லங்களில் இன்றும் வழக்கத்தில் உள்ளது.
ஆடி மாதப் பிறப்பில், ஆடிப்பால் தயாரிப்பார்கள். புதிதாக திருமணம் ஆன மணமகனை அழைத்து, ஆடியில் ஆடிப்பால் கொடுப்பது வழக்கம்.
திருமணமாகி கருவுற்றிருக்கும் பெண்களுக்கு ஐந்தாமாதத்தில் வளைகாப்பு செய்வது வழக்கம். அந்த மரபுபடி பங்குனி உத்திரத்தில் திருமணம் கண்ட அன்னையர் தெய்வங்களுக்கு ஐந்தாமாதமான ஆடியில் வளைகாப்பு செய்யப்படுகிறது.
ஆண்டாளின் அவதாரத் திருநாள் ஆடிப்பூரம். இந்தத் திருநாளில் சுமங்கலி பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய் பழம், வெற்றிலை-பாக்கு, ரவிக்கை வைத்து கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஸ்ரீவில்லிபுத்தூர், மன்னார்குடி ஸ்ரீராஜ கோபாலசாமி திருக்கோயில் மற்றும் திருவண்ணாமலை கோயில்களில் பத்து நாட்களும், கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் மூன்று நாட்களும் ஆடிப்பூரத் திருவிழா நடைபெறும்.
ஆடிப்பூரத்தன்று அனைத்து ஆலயங் களிலும் அம்பாள் சந்நிதிகளில் வளையல்கள் சாற்றி வழிபாடுகள் சிறப்புற நடைபெறும். இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், பிரசாதமாகத் தரப்படும் வளையலை பெற்றுச் சென்று வீட்டில் வைத்தால், அங்கு சர்வ மங்கலங்களும் பொங்கிப்பெருகுகம்; பிள்ளை இல்லாதவர்களுக்கு விரைவில் பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
குறிப்பாக திருச்சி உறையூர் குங்குமவல்லி ஆலையத்தில் அம்பாளுக்கு வளையல் அணிவித்து ப்ரார்தித்தால் திருமண பாக்கியமும் குழந்தை பாக்கியமும் கிட்டும்.
கருடன் பிறந்த ஆடிச் சுவாதி!
பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வ தாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். ஸ்ரீரங்கத்தில் பெரிய கருடன் மற்றும் அமிர்த கலச கருடன், கும்பகோணம் நாச்சியார் கோயில் கல் கருடன் ஆகியவை கருடாழ்வாரின் சிறப்புமிக்க ஸ்தலங்களாகும்.