காரடையான் நோன்பு -விளக்கம்-விரத முறை
*காரடையான் நோன்பு*
🙏🙏
*காரடையான் நோன்பு*
*சிறப்பு பதிவு*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*15.03.2023* *புதன் கிழமை*
*காருடையான் நோன்பு* –
*சரடு கட்டிக் கொள்ள வேண்டிய நேரம்* *விடியற்காலை 5 லிருந்து 6 மணிக்குள்*
*(திருக்கணித பஞ்சாங்கப்படி)*
மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக்காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும்.
மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி, வீரத்தில் சிறந்தவள். இவள் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்தில் இருந்த சாளுவதேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள். அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால், காட்டில் மகனுடன் வசித்தார். பார்வையற்ற பெற்றோரை சத்தியவான், அன்புடன் கவனித்துக் கொண்டான். அவனையே திருமணம் செய்வதென்று முடிவு செய்தாள் சாவித்திரி. மந்திர தேசத்திற்கு வந்த நாரதர், சாவித்திரியின் தந்தையிடம் இன்னும் ஓராண்டு காலத்தில் சத்தியவான் இறந்து விடுவான் என்றும், அதனால் சாவித்திரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார்.
ஆனால், சாவித்திரி விடாப்பிடியாக சத்தியவானையே திருமணம் செய்து கொண்டாள். கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் கவனித்துக் கொண்டாள். அரண்மனைவாசியான அவள் காட்டில் பல சிரமங்களை அனுபவித்தாலும், பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள்.
சத்தியவானின் ஆயுள் முடியும் நாள் வந்தது. அன்று அவள் கணவனைப் பிரியவே இல்லை. அவர்கள் காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தனர். திடீரென சத்தியவான், மயங்கி விழுந்து இறந்தான். அவனது உயிரை எமதர்மராஜா, எடுத்துச் சென்றார். சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார். அவரிடம், நான் என் கணவருடன் வாழ விரும்பு கிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும், எனக் கேட்டாள். இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது என மறுத்த எமதர்மர், அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார். சாவித்திரி சமயோசிதமாக,என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள். சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார். எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே! அவரது உயிரை திரும்பக் கொடுங்கள், என யாசித்தாள் சாவித்திரி. எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார். மாசியும், பங்குனியும் இணையும் சமயத்தில் காரடையான் நோன்பு நோற்பது வழக்கம்.
மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.
விரதமுறை: விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை காமாட்சியாக அல்லது சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும். அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். மாசிக்கயிறு பாசி படியும் என்று, பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது.
பலன்: காரடையான் விரதம் இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர்…
காரடையான் நோன்பு
‘காரடையான் நோன்பு’ பெயர்க் காரணம்:
கார்காலத்தில் கிடைக்கும் நெல்லைக் குத்தி, அரிசி எடுத்து, அதில் வெல்லம் சேர்த்துத் தயாரிக்கப்படும் அடையே ‘காரடை’ எனப்படுகிறது. அக்காலத்தில் தைமாத அறுவடை முடிந்து, வரும் புது நெல்லையே பொங்கலுக்கும் இந்த நோன்பிற்கும் உபயோகப்படுத்துவர். பார்ப்பதற்கு வடை போல இருந்தாலும், இது காரடை எனப்படுகிறது.
இந்த அடையை வைத்து நைவேத்தியம் செய்வதாலேயே இதற்கு ‘காரடையான் நோன்பு’ எனப் பெயர் வந்தது. கார்காலம் என்றால் ‘முதல் பருவம் ‘ என்றொரு பொருளும் கூறப்படுகிறது. சுமங்கலிகளும் கன்னிப் பெண்களும் இந்த நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டும்.
இந்த நோன்பின் பயன்:
கணவர் தீர்க்காயுளுடன் வாழவும், மாங்கல்ய பாக்கியம் பெருகவும், கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவர் கிடைக்கவும் இந்த நோன்பை நோற்க வேண்டும்.
சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாமே கண்மூடித்தனமானவை அல்ல. அவை மக்களின் நன்மையை முன்னிட்டும், அக்கால வாழ்வியல் முறையைக் கருத்தில் கொண்டுமே ஏற்பட்டவை.சில சம்பிரதாயங்கள் வேண்டுமானால், காலம் மாறிப் போனதால் மாறிப் போயிருக்கலாம். ஆனால் எல்லாவற்றையுமே அப்படிக் கூறிவிட முடியாது.
இந்திய பண்பாட்டின் சிறப்பே குடும்ப வாழ்க்கை முறைதான். திருமணம் இரு குடும்பங்களின் இணைப்பு. உயிரோடு இருப்பவர்கள் மட்டுமல்ல, இறந்து தெய்வமாக அருளுகிற முன்னோர்களுக்கும் இதில் பங்குண்டு. அதனால் தான், திருமணத்திற்கு முன் சுமங்கலிப் பிரார்த்தனை,சுப நாந்தி, மூதாதையர் படைப்பு என்று வழிபாடு செய்கிறோம். இல்லறத்தின் கூறுகளான, தேவகடன் தீர்த்தல், பித்ரு கடன் தீர்த்தல், விருந்தோம்புதல், உறவுகளைப் பேணல், முதலிய யாவற்றையும் நிறைவேற்றுவது, திருமணமான தம்பதிகளின் கடமை. ஒரு ஆணும் பெண்ணும் இந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக, வாழ்வில் இணைவதை ஊரறியச் செய்யும் நிகழ்ச்சிதான் திருமணம்.
பெண்கள் இரண்டாம் தரப் பிறவிகளென்றும் சம்பிரதாயச் சடங்குகளைச் செய்ய உரிமையற்றவர்களென்றும் நினைப்பது தவறு. மனைவியில்லாமல் ஆணும் எந்தச் சடங்குகளையும் செய்ய இயலாது.
அக்னிஹோத்திரத்திலிருந்து ஆரம்பித்து, வேள்விகள் வரை, எந்தச் சடங்கையும் செய்யத் தொடங்கும் போது, ‘என் மனைவியைத் துணையாகக் கொண்டு’ என்று பொருள்படும் மந்திரம் சொல்லித்தான் ஆரம்பிக்கவேண்டும்.
திருமணம் செய்த பிறகு, அந்தப் பெண், புகுந்த வீட்டின் ஒரு அங்கம். எக்காரணம் கொண்டும் அவளைக் கைவிடுவது கூடாது. அது, இப்பிறவியிலும், இறப்பிற்குப் பின்னாலும் ஒருவனுக்குத் தீராத துன்பத்தைத்தரும்.
மனுநீதி, கணவனின் புண்ணியத்தில் பாதி, மனைவிக்குக் கிடைக்கும்
என்றும் மனைவியின் பாவத்தில் பாதி,கணவனை அடையும் என்றும் கூறுகிறது.
இணைப்பறவைகள் போல குடும்ப வானில் பறந்து செல்ல வேண்டிய கணவன் மனைவி இருவரும் உடலால், மனதால், உயிரால் ஒன்றுபட்டவரே. இருவரும் குடும்பத்தில் சரிபாதி அல்லவா?
இயல்பாகவே செய்நேர்த்தி மிகுந்த பெண்களுக்கு, சம்பிரதாயங்களை அனுஷ்டிப்பதும்,பொறுமையாகக் கோபமின்றி விரதமிருப்பதும் பெரிய விஷயமில்லை. ஆகவே குடும்ப நன்மைக்காக விரதமிருப்பது, பெண்களின் கடமையாயிற்று என்பது பெரியோர்கள் கருத்து!.. தன்னில் சரிபாதியான கணவனின் நன்மைக்காக விரதமிருப்பது, நமது நன்மைக்காக விரதமிருப்பது போல்தானே…. இரண்டு கண்களில் ஒன்று நோயுற்றால் மற்றொன்று அழுவது இயல்பு தானே…..
இம்மாதிரி விரதங்கள் கணவன் மனைவி ஒற்றுமையைப் பலப்படுத்தும் சக்தி கொண்டவை. ‘நானும் நீயும் வேறு வேறல்ல,ஒன்றுதான்’ என்ற மனப்பான்மையே இன்று, பல தம்பதிகளிடம் தேவையாக உள்ளது.இந்த விரதத்தின் முக்கியப் பலனே, கணவன் மனைவி ஒற்றுமை தான்.
விரதம் இருக்கும் நாள்;
மற்ற விரதங்களைப் போல், குறிப்பிட்ட நாள், நட்சத்திரம் என்று இதற்கு எதுவும் இல்லை. மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நேரம் இந்த நோன்பைச் செய்யவேண்டும். சில சமயம், நடு இரவில் கூட இந்த நோன்பு வரும்.
தேவையான பொருட்கள்:
மஞ்சள்,குங்குமம், நோன்புச்சரடு, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், மாவிலை, வாழை இலை, பூ (சரம் மற்றும் உதிரி), கற்பூரம், விளக்கு ஏற்றத் தேவையான பொருட்கள் (திரி, எண்ணெய் முதலியன), மாக்கோல மாவு, சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் தருவதானால், அதற்குத் தேவையான கிஃப்ட்,ரவிக்கைத்துணி முதலியன.
நிவேதனத்திற்கு:
வெல்ல அடை, உப்படை, மற்றும் வெண்ணை.
வெல்ல அடை செய்ய:
அரிசி மாவு, வெல்லம், காராமணி, தேங்காய், ஏலக்காய், சிறிதளவு நெய்.
உப்படை செய்ய:
அரிசி மாவு, காராமணி, தேங்காய், இஞ்சி, பச்சைமிளகாய்,கறிவேப்பிலை, தாளிக்கும் சாமான்கள், மற்றும் உப்பு.
முதல் நாள் செய்ய வேண்டியது:
பூஜை அறையைத்துடைத்து, சுத்தம் செய்யவும். மாக்கோலமிடவும்.
சுவாமி படங்களைத் துடைத்து, சந்தனம் குங்குமம் இடவும்.
கலசம் வைக்கத் தேவையான சொம்பு, மற்றும் பூஜைப் பாத்திரங்களைச் சுத்தம் செய்து, பொட்டு வைக்கவும்.
ஒரு தேங்காயை மஞ்சள் பூசி,குங்குமம் வைத்து, தயார் செய்யவும்.
அடை செய்யத் தேவையான மாவு தயாரித்து, வறுத்து வைக்கலாம் (நேரமிருந்தால்).
தாலிக் கயிற்றை (மஞ்சள் கயிறில் திருமாங்கல்யம் அணிந்திருந்தால்)மாற்றிக் கொள்ளவேண்டும்.’ மாசிக் கயிறு பாசி படரும்’ என்பது நம்பிக்கை.
நோன்பன்று செய்ய வேண்டியது.
அதிகாலையில் எழுந்து, நீராட வேண்டும். வீடு,வாசலை மெழுகிக் கோலமிட வேண்டும். வாசலில் மாவிலை கட்டுவது விசேஷம்.
அவரவர்கள் சம்பிரதாயப்படி உடை அணிந்து, தலையை பின்னி அல்லது முடிந்து கொண்டு, ஒரு கிள்ளுப் பூவை தலையில் வைத்துக் கொண்டு, நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம் வைத்துக் கொண்டுதான் பூஜையை ஆரம்பிக்கவேண்டும். நம் இருதய கமலத்தில் தேவி உறைந்திருப்பதால், எந்தப் பூஜையானாலும் நம்மை சரியானபடி அலங்கரித்துக் கொண்டுதான் செய்ய வேண்டும்.
சொம்பில் நீர் நிறைத்து, அதில் ஏலக்காய், பன்னீர் போன்ற வாசனைத் திரவியங்கள் சேர்த்து, பின் மாவிலைக் கொத்து, மஞ்சள் பூசிய தேங்காய் வைத்து, ஒரு ரவிக்கைத்துணி சாற்றவும்.
ஒரு தட்டில் அரிசியைப் பரப்பி, அதில் கலசத்தை வைக்கவும்.
பக்கத்தில் அம்மன் படம் வைக்கவும் (துடைத்து, பொட்டு வைத்து வைக்க வேண்டும்).இதையே சாவித்திரி அம்மனாகக் கருதி வழிபடலாம். பொதுவாக, காமாக்ஷி அம்மனையே சாவித்ரி அம்மனாக வழிபடும் வழக்கம் இருக்கிறது.
கலசத்திற்கும், படத்திற்கும், பூ சாற்றவும்.நோன்புச் சரடில் ஒரு பசு மஞ்சளைத் துளையிட்டுக் கோர்க்கவும். இல்லாவிட்டால், பூ கட்டியும் வைக்கலாம். நோன்புச் சரடை, இரட்டைப்படை எண்ணில் வாங்கவேண்டும். இரண்டு சுமங்கலிகள் இருந்தால், நான்காக வாங்கவும். இரண்டை, கலசம், அம்மன் படத்துக்கு அணிவித்து விட்டு, இரண்டை உபயோகிக்கலாம். சிலர் துளசிச் செடிக்கும் கட்டுவதுண்டு.
பூஜை அறையில் அம்பாளுக்குப் பெரிய கோலமாக ஒன்றும், வீட்டில் சுமங்கலிகள் எண்ணிக்கைக்கேற்ப சிறிய மாக்கோலங்களும் போடவும்.
அம்மனின் கோலத்தில்,ஒரு தட்டில், தேங்காய் (உடைத்தது),வெற்றிலை, பாக்கு, பழம், பூ, அம்மனின் சரடு, முதலியவை வைக்கவும். மற்ற சிறிய கோலங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு சிறிய நுனி வாழை இலையை வைக்கவும்.
சில வீடுகளில், ஒவ்வொரு இலைக்கும், தனித்தனியாக வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து, சரடையும் வைத்து, இலை நுனியில் வைப்பர். இருப்பதில் வயதான சுமங்கலி, தன் இலையில் அம்மனின் சரடையும் சேர்த்து வைத்துக் கொள்வார். இது, அவரவர் வீட்டு வழக்கத்தைப் பொறுத்தது.
வாழை இலையை சிறிதாகக் கிழித்துத் தான்,அடையை வேக வைக்கவேண்டும். இட்டிலிப் பானை அல்லது குக்கரில் சிறிது வைக்கோல் சேர்த்து (கிடைத்தால்) வேக வைப்பது நல்லது. இதன் காரணம், இறந்த சத்தியவான் உடலை வைக்கோலால் மூடி விட்டுத் தான், சாவித்திரி எம தர்ம ராஜனின் பின் சென்றாள். வைக்கோல் சத்தியவானைப் பாதுகாத்தது போல், கணவனை தெய்வ அருள் காக்கும் என்பது நம்பிக்கை.
வேகவைத்த இலையோடு, அடையை எடுத்து (இரண்டு அடைகளாக
இருக்க வேண்டும்), நிவேதனம் செய்யும் நுனி வாழை இலையில் வைத்து, சிறிது வெண்ணையையும் வைக்கவும். உப்படையை தனியாக ஒரு தட்டில் வைக்கலாம்.
பூஜை செய்யும் வழக்கம் இருந்தால், கலசத்திற்கு பூஜை செய்யவும். மற்றவர்கள் முதலில் ஒரு விநாயகர் துதியைச் சொல்லி, பிறகு, கீழ் வரும் ஸ்லோகத்தை 21 முறை சொல்லவும்.
மங்களே மங்களாதாரே
மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி
மாங்கல்யம் தேஹிமே சதா
இதன் பொருள் :
‘மங்கள ஸ்வரூபமாகவும், சர்வமங்களங்களுக்கும் ஆதாரமாகவும், நித்ய மங்களங்களை அருளுபவளாகவும் இருக்கிற ஹே தேவி, எனக்கு, மாங்கல்யம் நிலைக்க அருளுவாய்’.
பிறகு, கணவனின் நலனுக்காக மனதார வேண்டிக் கொண்டு, ‘உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் வைத்து, நோன்பு செய்தேன். ஒருக்காலும் என் கணவன் என்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும்’ என்று கூறி, நீரைச் சுற்றி அடைகளை நிவேதனம் செய்ய வேண்டும்.
வெற்றிலை பாக்கையும் நிவேதனம் செய்ய வேண்டும். கற்பூரம் ஏற்றிக் காண்பிக்கவும். பிரதக்ஷிண நமஸ்காரம் செய்யவும். உதிரிப் பூக்களை சமர்ப்பித்து, தேவியை வேண்டிக் கொண்டபின், வயதில் பெரிய சுமங்கலிகள், அம்மன் படத்துக்குச் சரடு சாற்றிவிட்டு, சிறியவர்களுக்குக் கட்டவும். பிறகு அவர்கள் தங்களுக்குத் தாங்களே சரடு கட்டிக் கொள்ளலாம்.
சரடு கட்டும் போது, இலைக்கு எதிரில் ஒரு மணை போட்டு, அதில் உட்கார்ந்து கட்டவும். பிறகு சரடுக்கு மஞ்சள் குங்குமம் இட வேண்டும். நெற்றியிலும் இட்டுக் கொள்ள வேண்டும்.
நிவேதனம் செய்ததில் ஓர் அடையை வெண்ணையுடன் வைத்து கணவனுக்குக் கொடுத்து, நமஸ்கரித்த பின், இலையில் உட்கார்ந்து சாப்பிடலாம்.
பூஜை முடியும் வரை விளக்கு எரிய வேண்டும். எனவே தகுந்தபடி எண்ணை விடவும். மாசி முழுவதும் முடிவதற்குள் நோன்பைச் செய்துவிட வேண்டும்.
சாவித்திரி தேவியின் கதையைப் படிப்பது, மிகவும் நல்லது. அன்று, அக்கதையைப் படிப்பவர்களை சாவித்திரி தேவியே நேரில் வந்து ஆசீர்வதிப்பதாக ஐதீகம்.எமதர்ம ராஜனும் ‘தீர்க்க சுமங்கலியாக இருப்பாய் என்று ஆசி கூறுவாராம்.
இவ்வாறு முறையாக நோன்பு நோற்கும் அனைவருக்கும் தேவி, சகல சௌபாக்கியங்களும் தந்திடப் பிரார்த்திக்கிறேன்.
தீர்க்க சுமங்கலி பவ !
*காரடையான் நோன்பு அதிக விபரம்*
*ஸங்கல்பம் :*
மம தீர்க்க ஸௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம்
மம பர்த்துஸ்ச அந்யோந்ய ப்ரீதி அபிவ்ருத்யர்த்தம்
அவியோகார்த்தம்
ஸ்ரீ காமாக்ஷி பூஜாம் கரிஷ்யே
*த்யானம் :*
ஸந்த்ராபீடாம் ஸதுரவதநாம்
ஸஞ்ஜலாபாங்க லீலாம்
குந்தஸ்மேராம் குஸபரநதாம்
குந்தளோத்தூத ப்ருங்காம்
மாராராதே: மதனஸிகினம்
மாம்ஸளம் தீபயந்தீம்
காமாக்ஷீம் தாம் கவிகுலகிராம்
கல்பவல்லீ முபாஸே
( சந்திரனை சிரசில் ஆபரணமாக தரித்தவளும்
அழகிய திருமுகத்தை உடையவளும்
சஞ்சலமான கடாட்ச லீலையை உடையவளும்
குந்தபுஷ்பம் போல் அழகை உடையவளும்
ஸ்தன பாரத்தினால் வணங்கிய சரீரத்தை உடையவளும்
முன் நெற்றி முடியினால் விரட்டப்பட்ட கரு வண்டுகளை உடையவளும்
மன்மதனை சாம்பலாக்கிய ஈசனுக்கு காமாக்னியை விருத்தி செய்கிறவளும்
கவிகளின் வாக்கிற்கு கல்பவல்லியாக இருப்பவளும் ஆன காமாட்சி தேவியை உபாசிக்கிறேன் )
*த்யான ஸ்லோகம் :*
ஏகாம்பரநாத தாயிதாம்
காமாக்ஷீம் புவனேஸ்வரீம்
த்யாயாமி ஹ்ருதயே தேவீம்
வாஞ்சிதார்த்த ப்ரதாயிநீம்
காமாக்ஷீம் ஆவாஹயாமி
*சரடு கட்டும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் :*
தோரம் க்ருஷ்ணாமி ஸுபகே ச
ஹரித்ரம் தாராம்யஹம்
பர்த்துஹூ ஆயுஷ்ய ஸித்யர்த்தம்
ஸுப்ரீத பவ ஸர்வதா
*நைவேத்யம் செய்யும் போது …*
” உருகாத வெண்ணையும் ஓரடையும் நூற்று உனக்கு நான் தருவேன் ஒருநாளும் என் கணவர் என்னை விட்டு பிரியாது இருக்க அருள் தருவாய் அம்மா.💐🌷🌹🤲🙇♂️👣🕉️🙏🙏🙏
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏
ஓம் நமோ நாராயணாய 🙏
பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our 3rd WhatsApp group … Read More
வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More
செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி::°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா… Read More
🌻🙏ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் (4/5/23, வியாழக் கிழமை) 🌻🕉️ 🍒ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🌹 ஸ்ரீ லக்ஷ்மி… Read More
அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 23.4.2023 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை… Read More
Leave a Comment