💐18 சித்தர்களில் பதினெழாவது சித்தர் சிவவாக்கியர் வாழ்க்கை வரலாறு | sivavakkiyar siddhar life history

சிவவாக்கியர்

சமாதி:கும்பகோணம்

சிவ சிவ என்று கூறியபடியே பிறந்ததால் சிவவாக்கியர் என அழைக்கப்பட்டார். வைத்தியம், வாதம், யோகம், ஞானம் பற்றி பாடல் இயற்றியுள்ளார். இவரது பாடல்கள் சிவவாக்கியம் என அழைக்கப்படுகிறது

சித்தர் சிவவாக்கியரின் வாழ்க்கை வரலாறு ……………

தாம் பிறக்கும் போதே ‘சிவ சிவ’ என்று உச்சரித்தபடியே பிறந்தமையால் இவரை சிவாக்கியர் என்று அழைத்ததாகக் கூறுவர். இவர் கால தத்துவம், மகா தத்துவம் முதலானவற்றைத் தம் இளம் வயதிலேயே நன்கு உணர்ந்தவர். இவரது பாடல்கலை சரியாக உணராத பலர் இவரை நாத்திகர் என்கின்றனர். இவர் பாடிய…

சிவவாக்கியர் சித்தர் பாடல்கள்

நட்ட கல்லை தெய்வம் என்று புட்பம் சாத்தியே

சுற்றிவந்து மொணமொன என்று சொல்லும் மந்திரம் ஏதடா

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ

என்ற பாடலே பலர் இவரை நாத்திகர் என்று கூறக் காரணமாகும். இப்பாடலின் பொருளை நன்கு உணர்ந்தால் இவர் நாத்திகர் அல்லர் என்ற உண்மை புரிய வரும். அதாவது தரையில் நட்டு வைத்திருக்கும் உணர்ச்சிகள் ஏதுமற்ற கருங்கல்லை தெய்வ வடிவங்களாக வடித்து அதன் மீது பலவித பூக்களைச் சாற்றியும் பலவித மந்திரங்களை மொண மொண என்று முணுமுணுத்தவாறு அத்தெய்வ வடிவைச் சுற்றிச் சுற்றி வந்து வணங்குவதை அத்தெய்வ வடிவம் அறிந்திடுமோ அல்லது அந்தத் தெய்வ வடிவம் உன்னிடம்தான் பேசிடுமோ…. எப்படி கறி சமைக்கப் பயன்படுத்தும் சட்டுவம் கறியின் சுவையை அறியாதோ அதுபோன்றேதான் நீ வணங்கி வழிபடும் வழிபாடும் என்று மட்டுமே பொருள் கொள்கிறார்கள். ஆனால் அந்த பாடலில் இருக்கும் ஒரு வரியை அவர்கள் உணரவில்லை. அது நாதன் உள்ளிருக்கையில் என்பதே ஆகும். சிவ வாக்கியர் ஒரு போதும் கடவுள் இல்லை என்று கூறவே இல்லை. இவ்வாறு நட்டு வைத்த கல்லை தெய்வம் எனக் கருதி வழிபடுவதை விட எல்லாம் வல்ல இறைவனான அந்த நாதன் உன்னுள்ளேயே உள்ளான் என்பதை நீ உணரவேண்டும் என்பதே அவர் இப்பாடலில் கூறிய கருத்தாகும். இதனை நன்கு உணர்ந்தால் அவர் நாத்திகர் என்ற வாதம் தானே விலகிடும்.

காசியம்பதியின் புகழைப் பற்றி அன்று தொட்டு இன்று வரைப் போற்றிக் கூறாதோர் எவருமே இல்லை. அத்தகைய பெருமையை உடைய காசியம்பதி பற்றிச் சிவாக்கியரும் கேள்விப்பட்டு அங்கு சென்று காசி விஸ்வநாதரின் தரிசனத்தைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டார். உடனே எத்தயக்கமும் இன்றிப் புறப்பட்ட சிவாக்கியர் பல நாட்களுக்கு பின் காசிக்கு வந்தடைந்தார்.

காசியம்பதிக்குச் சிவாக்கியர் வந்து சேர்ந்த சமயத்தில் அங்கு ஒரு சித்தர் வாழ்ந்து வந்தார். செருப்பு தைக்கும் தொழிலைச் செய்து வந்த அச்சித்தர் தன் மூச்சுக் காற்றினைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவர். பிராணயாம வித்தைகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர்.

நற்குணங்கள் பல பெற்ற அச்சித்தர் பெருமானை அறிந்தோர் அவரைப் போற்றி வணங்கி வந்தனர். ஆனால் அவரது பெருமைகளைப் பொறுத்திடாத துன்மார்க்கர் சிலர் அவரை இகழ்ந்து பேசியதுடன் அவர் செய்து வந்த தொழிலையும் இழிவாகப் பேசி வந்தனர். ஆனாலும் அவர், தமக்குக் கிடைத்த பெருமைகளுக்காக மகிழ்ந்திடவும் இல்லை, தூற்றுதலுக்காக வருந்தவும் இல்லை. மேலும் அச்சித்தரது நோக்கம் தனக்கு ஓர் நல்ல சீடனையே எதிர்பார்த்துக் கொண்டிருப்பதுதான்.

சித்தர் பெருமானின் புகழ் காசியம்பதி நகரை வலம் வந்த சிவவாக்கியரை எட்டியதுய அவரைக் கேவலம் செருப்பு தைப்பவர்தானே என்று இழிவாகக் கருதாது அவர் இருக்கும் இடத்தை அடைந்தார். அவரைக் கண்ட உடனே சிவவாக்கியர் அவருடைய மகிமையை மனதார உணர்ந்தார். நல்லதொரு சீடனைத் தேடிய அச்சித்தரும் தம்மை நாடி வந்த சிவவாக்கியரைக் கண்டதுமே, இவர்தான் தாம் தேடிய சீடர் என்பதை உணர்ந்தார். ஆனாலும் சிவவாக்கியரது பக்குவப்பட்ட நிலையை அறிந்திட அவர் விரும்பினார். அதனால் தன் எதிரில் வந்து நின்ற சிவவாக்கியரை அன்போடு வரவேற்றுப் பலகை ஒன்றைச் சுட்டிக் காட்டி அதில் அமருமாறு கூறினார்

சித்தர் பெருமானின் கனிவான பேச்சும் அன்பான உபசரிப்பும் சிவவாக்கியரை அவர்பால் ஈர்த்தன. சித்தர் சுட்டிக் காட்டிய பலகை மீது சிவவாக்கியர் அமர்ந்ததுமே, இவ்வுலகமே தம்மை விட்டு நழுவுவதைப் போன்று உணர்ந்ததுடன் இனம் புரியாத பேரானந்த நிலையைத்தாம் அடைந்ததைப் போன்றும் உணர்ந்தார்.

இவ்வாறு பேரின்ப நிலையில் இருந்த சிவவாக்கியரை நோக்கி அச்சித்தர் தான் செருப்பு தைத்து சம்பாதித்த காசு தன்னிடம் இருப்பதாகவும் அதனைத் தன் தங்கையான கங்கையிடம் கொண்டு சேர்க்குமாறு கூறித் தன்னருகே இருந்த பேய்ச் சுரைக்காயைக் காட்டி, அக்காய் வெகு கசப்பாக இருப்பதாகவும் அதனால் அக்காயின் கசப்பைக் கழுவி வருமாறும் கூறினார்.

சித்தரின் தரிசனம் கண்டதால் பேரின்ப நிலையில் இருந்த சிவவாக்கியர் சித்தரது கூற்றைக் கேட்டதும் அவர் கூறியவாறு நடக்குமா அல்லது அவர் இட்ட பணியைத் தன்னால் செவ்வனே நிறைவேற்ற இயலுமா என்றெல்லாம் சந்தேகம் கொள்ளவில்லை. உடனே சித்தர் தன்னிடம் தந்த காசையும், பேய்ச் சுரையையும் எடுத்துக் கொண்டு கங்கைக் கரைக்கு வந்து சேர்ந்தார்.

சிவவாக்கியர் கங்கைக்கரைக்கு வந்து சேர்ந்ததுமே, பெருஞ்சுழலுடன் வேகமாக ஓடியபடி இருந்த அப்புனித ஆற்றிலிருந்து வளையலணிந்த ஓர் பெண்ணின் கரம் வெளிவந்தது. ஆற்றிலிருந்து வெளிவந்த அக்கரத்தில் சித்தர் தம்மிடம் அளித்த காசுகளை சிவவாக்கியர் வைத்தார். உடனே அக்காசுகளுடன் அந்த வளையலணிந்த பெண்ணின் கரம் ஆற்றினுள் சென்று மறைந்தது. அடுத்து தாம் கொண்டு வந்த பேய்ச் சுரைக்காயையும் ஆற்று நீரில் கழுவி எடுத்துக் கொண்டு சித்தரிடம் சிவவாக்கியர் திரும்பி வந்து அவரைப் பணிந்து நின்றார்.

சிவவாக்கியரின் பக்குவப்பட்ட நிலை அந்த சித்தரைப் பெரிதும் கவர்ந்தது. சிவவாக்கியரிடம் தான் அவசரப்பட்டு விட்டதாகவும், தனது தங்கை மிகவும் வைதீகமானவள். அதனால் தான் வைத்திருக்கும் தோல் பையில் இருக்கும் நீரிலும் அவள் தோன்றுவாள், எனவே கங்கை ஆற்றில் சிவவாக்கியர் கொடுத்த காசை அவளிடம் கேட்டால் அவள் தாமதிக்காது தந்திடுவாள் எனவுரைத்து மீண்டும் சிவவாக்கியரைத் தூண்டினார்.

சித்தரின் கட்டளைப்படியே சிவவாக்கியர் தாம் ஆற்றில் கொடுத்த காசைக் கங்கையிடம் இருந்து திரும்பக் கேட்டார். உடனே சித்தரது தோல் பையில் இருந்த நீரிலிருந்து வளைக்கரம் வெளிவந்து சிவவாக்கியர் தன்னிடம் தந்த காசுகளை அவரிடமே தந்து மறைந்தது. இச்செயல் சிவவாக்கியரின் மனதில் எவ்வித சலனத்தையும் உண்டு பண்ணாத நிலையைக் கண்டு சித்தர். அவரின் பக்குவப் பட்ட நிலையை உணர்ந்தார். அவரை அன்போடு ஆரத்தழுவிய சித்தர் அவருக்கு உபதேசமும் செய்தருளினார்.

மேலும் சித்தர் பெருமான் சிவவாக்கியரிடம் அவர் முக்தி நிலை சித்திக்கும் வரையில் இல்லற வாழ்க்கை வாழுமாறு கூறியதுடன் சிறிதளவு மணலுடன் சிவவாக்கியர் ஆற்றுநீரில் கழுவி எடுத்து பேய்ச் சுரைக்காயையும் கொடுத்து அவற்றைப் பக்குவமாய்ச் சமைத்துத் தந்திடும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுமாறும் கூறியருளினார்.

தம் குருநாதரின் கட்டளையை ஏற்று வணங்கிய சிவவாக்கியர் தம்மிடம் அவர் தந்த பொருட்களுடன் காசியிலிருந்து புறப்பட்டார்

அவர் செல்லும் வழியெங்கும், தன் குரு உபதேசித்தபடி தவம் இயற்றினார். இச்சாதனையின் பயனாய் கலைமகள் அவரது நாவிலிருந்து நடமிட்டாள். தாம் அனுபவித்து அறிந்த அற்புத விபரங்கள் அனைத்தையும் அரிய பாடல்களாக இயற்றினர்.

அவர் செல்லும் இடங்களில் வாடும் மக்களுக்கு மெய்யறிவைச் சிவவாக்கியர் புகட்டினார். அவர் காட்டியருளிய அறநெறியை ஆங்காங்கே வாழ்ந்த மக்களில் சிலர் அலட்சியம் செய்ததுடன் தூற்றவும் செய்தனர். பெண்களில் சிலர் சிவவாக்கியரின் இளமை ததும்பும் எழிலொடு கூடிய உடலை நோக்கியவாறு இருந்தனர். இவ்வாறு தம்மை நோக்கிய பெண்களிடம் தாம் கொண்டு வந்த மணலையும், பேய்ச்சுரையையும் எவளொருவள் பக்குவமாய்ச் சமைத்துத் தருகிறாளோ அவளைத் தாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறியதும் இது நடக்க கூடியதா…. என்று ஏளனம் செய்தவாறு அப்பெண்கள் ஒதுங்கிச் சென்றனர். அவ்வாறு ஒதுங்கிச் சென்றிட முயன்ற பெண்களிடம் அவர், எண்ணத்தில் தூய்மை இருக்குமானால் எதையுமே செய்திட இயலும், என்றுரைத்து விட்டுத்தம் பயணத்தைத் தொடர்ந்தார்.

ஒரு நாள் பகல் பொழுதில் சிவவாக்கியர் குறவர் குலத்தவு வாழும் பகுதியை வந்தடைந்தார். அவரது வருகையைக் கண்ட குறவர் குலத்துக் கன்னி ஒருத்து ஏதோ ஒர் தூண்டுதலால் வெளிவந்து அவரைப் பணிந்து வணங்கி நின்றாள். அவளிடம் சிவவாக்கியர் அவளது பெற்றோர் பற்றி வினவினார். அதற்கு அவள், எனது பெற்றோரும் மற்றவர்களும் காட்டில் மூங்கில் வெட்டி எடுத்து வரப் போயுள்ளனர். அவர்கள் வெட்டி எடுத்து வரும் மூங்கில்களைப் பிளந்து கூடை, முறம் முதலானவற்றைச் செய்து விற்றுப் பிழைப்பது எங்கள் குலத் தொழில், எனக் கூறினால். மேலும் அவள் தன் பெற்றோர் அவ்விடத்தில் இல்லாதிருந்தாலும், அவர் இடும் பணி எதுவாயிருந்தாலும் அதனை ஒரு மனதாய்த் தான் முடித்து வைப்பதாகவும் கூறினாள்.

தன்னைப் பணிந்து வணங்கியதுடன் தான் இடும் கட்டளை எதுவாயினும் அதனை ஒருமனதாய் முடித்து வைக்கத் தயாராக இருந்த அக்குறவர் குலத்துக் கன்னியிடம், சிவவாக்கியர், தனக்கு மிகுந்த பசியாக இருப்பதாகவும் தன்னிடம் இருக்கும் மணலையும், பேய்ச் சுரையையும் கொண்டு தனக்கு உணவு சமைத்துத் தர அவளால் முடியுமா? , என்று வினவினார். அது கேட்டதும் அப்பெண் பிற பெண்களைப் போன்று அவரை ஏளனம் செய்து ஒதுக்காது, தன்னிடம் கேட்பது தவமுனிவர். அவர் கூறுவது எதுவாயினும் அதன்படி நடப்பது தனது கடமை என எண்ணிச் சிவவாக்கியர் தன்னிடம் அளித்த பொருள்களைக் கொண்டு சமைக்கத் துவங்கினாள். சற்றுநேரத்தில் எவ்விதக் குறையுமின்றி அவள் சமையலை முடித்துத் தான் சமைத்த உணவை உண்ண சிவவாக்கியரை வணங்கி நின்றாள்.

தான் அவளிடம் தந்த பொருள்கள் இன்னது என அறிந்திருந்தபோதும் ஒரு வார்த்தைகூட எதிர்த்துப் பேசாது தான் உரைத்தபடி செவ்வனே சமையலை முடித்து நிற்கும் இக்கன்னியே தம் குருநாதர் வாக்குப்படி தாம் மணந்து கொள்ள ஏற்ற குலமகளாவாள் என்று உணர்ந்தார்ய பின் அவள் தமக்குப் பரிமாறிய உணவை உண்டு பசியாறிய சிவவாக்கியர் அங்கேயே அமர்ந்து ஓய் வெடுத்தார். மாலைப் பொழுதானது

காட்டிற்க்கு மூங்கில் வெட்டச் சென்றிருந்த அப் பெண்ணின் பெற்றோரும் பிறரும் தங்கள் இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தனர். தங்கள் இருப்பிடத்தில் ஓய்வெடுத்தபடி இருந்த சிவவாக்கியரைக் கண்டதும் அவர்கள் பயந்து, சற்று தொலைவில் இருந்தபடியே அவரைப் பணிந்து வணங்கினர்.

இவ்வாறு பணிந்து நின்ற குறவர் குலத்துப் பெண்ணின் பெற்றோரும் மற்றவர்களும் சிவவாக்கியர் தங்கள் இருப்பிடம் தேடி வந்தது தாங்கள் செய்த தவப்பயனே என்று வியந்து அவர் வந்த நோக்கம் அறிந்து கொள்ள வேண்டினர். அதற்கு சிவவாக்கியர் தாம் அப்போதுதான் உணவு அருந்தியதாகவும், தவம் இயற்றும் தமக்குத் துணையாக ஒரு பெண்ணைத் தேடிக் கொண்டு வந்ததாகவும், தாம் கூறியவற்றைக் கேட்டு பெண்களும், மற்றவர்களும் தம்மை ஏளனம் செய்ததாகவும், பொறுமையில் பூமா தேவியை ஒத்திருக்கும் அவர்கள் குலப் பெண்ணோ தாம் வேண்டியதை மறுப்பேதும் கூறாது செய்து கொடுத்ததாகவும், அதனால் அவளைத் தமக்கு குறவர்குல மக்கள் மணம் முடித்துத் தர வேண்டும் என்றும் அவ்வாறு செய்து கொடுப்பதும், மறுப்பதும் அவர்களது விருப்பம் என்றும் கூறினார்.

அவரது கூற்றை கேட்ட அப்பெண்ணின் பெற்றோரும், மற்றவர்களும் தங்கள் குலத்துப் பெண்ணை அவருக்கு மணம் முடித்துத் தருவது தாங்கள் செய்த புண்ணி்யம் என்றும், அவ்வாறு செய்து கொடுப்பதென்றால், சிவவாக்கியர் தங்களுடனேயே வாழ்ந்திட வேண்டும் என்று தயக்கத்துடன் கூறினர். அவர்கள் இட்ட நிபந்தனையோடு கூடிய வேண்டுகோளுக்குச் சிவவாக்கியர் சம்மதித்தார். சிவவாக்கியருக்கும் குறவர் குலக் கன்னிக்கும் இனிதே திருமணம் நடந்து முடிந்தது. தம் குருநாதர் இட்ட கட்டளைப் படியே தமது இல்லறம் அமைந்தது சிவவாக்கியருக்கு மனநிறைவினைத் தந்தது.

இல்லற வாழ்க்கையில் தம் மனைவியோடு சிவவாக்கியர் ஈடுபட்ட போதும், அவர் தமது தவத்தைக் கை விடவில்லை. அவரது மனைவியும் அவரின் தவத்துக்குத் தன்னால் எந்த ஒரு இடையீடும் நேராதபடி நடந்து கொண்டாள். இவ்வாறு இல்லற நெறி என இரண்டிலும் ஈடுபட்டுவந்த சிவவாக்கியர் வெகு விரைவில் அக்குறவர் குலத்தோரின் தொழிலான மூங்கில் கூடை, முறம் முடைதல் போன்றவற்றையும் கற்றுக் கொண்டார். இதனால் அவரது இல்லற வாழ்க்கை சிரமமின்றி நடந்தது.

ஒரு நாள் சிவவாக்கியர் தமது தொழிலுக்காக மூங்கில்களை வெட்ட வேண்டி காட்டுப் பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த பழமையான மூங்கிலை அவர் வெட்டியதும் அதிலிருந்து தங்கத் துகள்கள் பொடிப் பொடியாகச் சிதறிக் கீழே விழுந்தது. அதைக் கண்டதும் சிவவாக்கியர் திகைத்தார். உடனே அவர் இறைவனை நோக்கித் துதிக்கலானார். தாம் முக்தியை வேண்டிக் கொண்டிருக்கும் போது, அதனைத் தமக்கு இறைவன் அருளாது ஆட்டைக் காட்டி வேங்கையைப் பிடிக்க முயல்வதைப் போன்று இந்தத் தங்கத் துகள்களைத் தமக்குக் காட்டித் தம்மை மதிமயங்கச் செய்வது நியாயமோ….. என்றும், எப்படி வாழ வேண்டும் என்ற நெறியை அறியாதோர் சிதறி விழும் இந்தத் தங்கத் துகள்களைக் கண்டு மதிமயங்கக் கூடும். ஆனால் உழைத்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் வாழ வேண்டும். அதுவே சிறந்த நெறி எனவும், இவ்வாறு ஒருவனிடம் செல்வம் எதிர்பாராது அதிகமாகுமானால் அவனது கவலைகளும் அதிகமாகிடுமே, என்று பயந்து இறைவனிடம் முறையிட்டபடியே சிறிது தொலைவுக்கு ஓடிச் சென்று மூங்கிலிலிருந்து கீழே சிதறி விழும் தங்கத் துகள்களை பயந்த படியே பார்த்தார்

இவ்வாறு பயந்தபடி சிவவாக்கியர் நின்று கொண்டு இருந்தபோது, நான்கு இளைஞர்கள் அவ்வழியே வந்தனர். சிவவாக்கியரைக் கண்டதும் அவர்கள் எதனால் சிவவாக்கியர் அவ்வாறு நின்று கொண்டுள்ளார் என்பதை அறிந்து கொள்ள வேண்டி அவரிடம் வினவினர். அந்த இளைஞர்களிடம், தாம் வெட்டிய மூங்கிலிருந்து தங்கத் துகள்கள் வீழ்வதைக் கூறியபோது, அவை அந்த மூங்கிலிலிருந்து மனித இனத்தையே அழித்திடும் ஆட்கொல்லி வந்து வீழ்ந்து கொண்டுள்ளது. அதைக் கண்டு தாம் பயந்து கொண்டு நிற்பதாகக் கூறி அவர்களுக்குத் தங்கத் துகள்கள் விழும் மூங்கிலையும் காட்டினார்.

சிவவாக்கியர் சுட்டிக் காட்டிய மூங்கிலைக் கண்டதும் இளைஞர்கள் விபரம் புரிந்து, அவரைத் தங்கத்தின் அருமை, மதிப்பு போன்றவற்றை அறியாத பைத்தியக்காரன் என்று எண்ணி நகைத்தனர். பின் அவர்கள் சிவவாக்கியரிடம், ஆம்! அந்த மூங்கிலிலிருந்து ஆட்கொல்லி தான் வீழ்கிறது… நீர் இங்கேயே நின்றால் அந்த ஆட்கொல்லி உம்மையே கொன்றுவிடும்.. என்று பயமுறுத்தினர். அது கேட்ட அவரும் பயந்தபடியே அங்கிருந்து அகன்று சென்றார்.

பயந்தபடி அவர் சென்றதைக் கண்டு அந்த இளைஞர்கள் அவரை எள்ளி நகைத்தபடி அம்மூங்கிலருகே சென்றனர். கீழே சிதறிக் கிடந்த தங்கத் துகள்ககளை அள்ளி மூட்டையாகக் கட்டினர். அவர்கள் அவ்வாறு செய்து முடிப்பதற்குள் இருள் சூழ்ந்தது. இராப் பொழுதில் காட்டு வழியே செல்லப் பயந்த அவர்கள் அங்கேயே தங்கிவிடுவது என்றும், தங்கத்துகள் மூட்டைக்கு இருவர் காவலாக இருப்பது என்றும், மற்ற இருவர் அருகில் உள்ள கிராமத்துக்குச் சென்று இரவு உணவை முடித்து, காவலிருக்கும் இருவருக்கான உணவை வாங்கி வருவது என்றும் முடிவு செய்தனர்.

அதன்படி அவர்களில் இரண்டு பேர் அருகிலிருக்கும் கிராமத்துக்குச் சென்று உணவை உண்டு முடித்து மற்ற இருவருக்கும் உணவை வாங்கினர். அப்போது அவர்கள் காட்டில் கிடைத்த தங்கத் துகள்களை நான்கு பேருமாகப் பங்கிட்டுக் கொள்வதை விட தாங்கள் இருவருமே பங்கிட்டுக் கொண்டால் அதிக அளவு தங்கம் கிடைக்கும் என்று எண்ணினர்.

இந்த தீய எண்ணம் காரணமாய் மற்ற இருவருக்கும் வாங்கிய உணவில் விஷத்தைக் கலந்துச் சென்றனர். அவர்கள் அவ்வுணவை எடுத்துக் கொண்டு வரும்போது, காவலுக்கு இருந்த இருவரது மனதிலும் இதே தீய எண்ணம் உருவானது. அதனால் உணவு வாங்கச் சென்ற இருவரும் திரும்பி வந்ததும் அவர்களை அங்கிருந்த கிணற்றில் தள்ளிக் கொன்றுவிடத் தீர்மானித்தனர்.

உணவுப் பொட்டலங்களோடு வந்த இருவரையும் காவலுக்கு இருந்த இருவரும் வரவேற்று நாங்கள் உணவை உண்ணும் போது குடிக்கத் தண்ணீர் வேண்டும். அதனால் நீங்கள் அருகிலிருகிகும் கிணற்றில் தண்ணீர் எடுத்து வாருங்கள், என்று கூறினர். இவர்களது சூழ்ச்சியை அறியாத அவ்விருவரும் தண்ணீர் கொண்டு வர கிணற்றின் அருகே சென்றனர். அவர்கள் அறியாதபடி பின் தொடந்து சென்று அவர்களைக் கிணற்றுக்குள் தள்ளி அவர்களது கதையை மற்ற இருவரும் திட்டமிட்டபடி முடித்தனர். பின் இருவரும் சந்தோஷமாக தங்களது விதியும் முடியப் போகிறது என்ற உண்மை புரியாது வயிறு புடைக்க உண்டனர். ஆனால் அவ்வுணவில் இருந்த விஷமோ அவர்களின் உயிரைப் பறித்துத் தன் பணியைச் செய்து முடித்தது.

பொழுது புலர்ந்தது

மறுநாள் மூங்கில் வெட்ட வந்த சிவவாக்கியர் தாம் முதல் நாள் மூங்கிலை வெட்டிய இடத்திற்கு வந்தார். அங்கு இளைஞர்கள் நான்கு பேரும் பிணமாகக் கிடப்பதைக் கண்டார். தாம் பயந்தபடியே ஆட்கொல்லியான தங்கத் துகள்கள் அவ்விளைஞர்களைக் கொன்றுவிட்டது எனக் கருதித் தம் வழியேச் சென்று வேறிடத்தில் மூங்கிலை வெட்டி வரச் சென்றார்.

இவ்வாறு தமது இல்லற வாழ்க்கையோடு தவத்திலும் ஈடுபட்டு வந்தார் சிவவாக்கியர். தாம் அன்றாடம் சந்தித்த மக்களது நடவடிக்கைகளைக் கண்டு வேதனைப்பட்ட சிவவாக்கியர் அவ்வப்போது பாடிய பாடல்களே பிற்காலத்தில் தொகுக்கப்பட்டுச் சிவவாக்கியம் என்ற பெயரைப் பெற்றது. திருமழிசை ஆழ்வாரே சிவவாக்கியர் என்று ஒரு சிலரும் ஞானம் பெற வேண்டிய கடுந்தவம் மேற்கொண்ட சிவனடியார் ஒருவர் தம் தவம் முடிவதற்குள் இறந்து விட்டதாகவும் அவரே சிவவாக்கியராக மறுபிறப்பு எடுத்தார் என்று ஒரு சிலரும், கூறுகின்றனர். இக்கூற்றுக்கள் எப்படி இருந்தாலும் சிவவாக்கியரின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் அவர் நாத்திகரா அல்லது ஆத்திகரா என்பதை நிச்சயம் உலகுக்குத் தெளிவபடுத்தும். இவர் கும்பகோணத்தில் சித்தி அடைந்தார் என்று கூறப்படுகிறது.

பதஞ்சலி சித்தர் வாழ்க்கை வரலாறு

Leave a Comment