Kundadam bairavar temple |கோவை குண்டடம் ஸ்ரீ காலபைரவர் கோயில்

குண்டடம் ஸ்ரீ காலபைரவர் கோயில் (kundadam bairavar temple) தரிசனம் மற்றும் ஆலய தகவல்களை பதிவு செய்துள்ளோம்.

காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள்! காசு இல்லாவிட்டால் குண்டடத்தக்கு வாருங்கள்!’ என்று சொன்னவர் யார் தெரியுமா? திருமுருக கிருபானந்த வாரியார். அதற்கு என்ன அர்த்தம்? காசிக்குச் சென்று கால பைரவரை தரிசிக்க ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால் காசியில் இருக்கும் அதே கால பைரவரைதான், சிவபெருமானின் ஆணையால் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் குண்டடத்துக்கும் வந்து, அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அதனால் ரொம்ப செலவில்லாமல் காசி காலபைரவரை இந்தக் குண்டடத்திலேயே கொங்கு வடுகநாதராக வழிபடலாம் வாருங்கள் என்று அழைத்தார் வாரியார். இக்கோயிலில் விடங்கீஸ்வரர், விசாலாட்சியம்மன் சன்னதிகளும், விநாயகர், காளபைரவர், சுப்பிரமணியர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. குண்டடம் கால பைரவர் கோவில் காணொளி இந்த பதிவில் கிழே கொடுக்கப்பட்டுள்ளது……

காசி செல்ல முடியாதவர்கள் இங்கே வரலாம். பைரவர் மிகுந்த சக்தி வாய்ந்தவர்.

யார் இந்த பைரவர்?

சிவனின் வீர அம்சம்தான் பைரவர். காலச் சக்கரத்தை இயக்கும் பரம்பொருள் இவர். காலனாகிய எமனையே நடுங்க வைப்பவர் என்பதால் கால பைரவர் என்ற பெயர் எழுந்தது. அதாவது பைரவரை வணங்குபவருக்கு எம பயம் இல்லை. சிவாலயங்களுக்கும், ஆலயம் அமைந்துள்ள ஊருக்கும் இவர்தான் காவல்காரர். அதனால் க்ஷேத்திரபாலகர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. நான்கு வேதங்களே நாய் வடிவில், இவரது வாகனமாக இருக்கிறதுஅத்தனை சிறப்பு மிக்க காசி கால பைரவர் எப்படி இந்த குண்டடம் கிராமத்துக்கு வந்தார் என்பது, உங்களுக்கு தெரியுமா?

அதேபோல், இது என்ன ஊரின் பெயர் குண்டடம் என்று வித்தியாசமாக இருக்கிறதே? என்று நினைக்கிறீர்களா?

kundadam bairavar temple history in tamil – குண்டடம் ஸ்ரீகாலபைரவர் கோவில் வரலாறு

அந்தக் காலத்தில் இந்தப் பகுதி அரச மரங்களும், இலந்தை மரங்களும் நிறைந்த அடர்ந்த காடாக இருந்தது. அப்போது இதற்கு இந்து வனம் என்று பெயர். இந்த இடத்தில் ஆசிரமம் அமைத்து விடங்கி முனிவர் தவம் செய்து வந்தார்.

அமைதியாக இருந்த இந்தப் பகுதியில் திடீரென சீசகன் என்ற அசுரன் ஒருவன் உள்ளே நுழைந்து, ஆட்டம் காட்ட ஆரம்பித்தான். கண்ணில் பட்டவரகளையெல்லாம் அடித்து துரத்தினான்.

அமைதி தவழும் இடத்துக்கு இப்படி ஓர் ஆபத்து வந்ததே என்று, முனிவர் பதறிப் போனார். தவத்தைப் பாதியில் நிறுத்தினால் நல்லதில்லையே என்று தவித்தார் முனிவர்.

உடனே காசி விஸ்வநாதரையும், விசாலாட்சி அம்மனையும் மனமார வேண்டினார். விடங்கி முனிவரின் பிரார்த்தனை விஸ்வநாதர் காதில் விழுந்தது. முனிவரின் தவத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணமும், அரக்கர்களின் அழிச்சாட்டியத்தையும் அடக்கும் வண்ணமும் காசி விஸ்வநாதர் தன்னுடைய கால பைரவரை மூர்த்திகளில் ஒருவரான வடுக பைரவரை இந்த வனத்திற்கு அனுப்பி வைத்தார். நெகிழ்ந்து போனார் விடங்கி முனிவர்.

தன்னுடைய தவத்துக்கு மதிப்பு கொடத்து பைரவரையே அனுப்பியிருக்கிறாரே ஈசன் என்று மகிழ்ந்து, இனி கவலை இல்லை என்பதை உணர்ந்து, கண் மூடி தவத்தைத் தொடர்ந்தார்.

அப்புறம் என்ன? முனிவரின் தவத்துக்கு இடையூறு செய்ய வந்தான் சீசகன். சிவ பூஜையைத் தொடரவிடாமல் முனிவரை துரத்த முயன்றான். பார்த்தார் வடுக பைரவர். கோபத்தின் உச்சிக்கே போன அவர், அரக்கன் சீசகனின் முகத்தில் ஓங்கி ஒரே அறைதான்! ஒன்றரை லட்சம் டன் வேகம். கீச் கீச் என கத்தியபடி அந்த விநாடியே மாண்டான் சீசகன்.

காசி விஸ்வநாதரால் அனுப்பப்பட்ட பைரவர், மேலும் யாரும் வந்து தொந்தரவு தரக்கூடாது என்பதற்காக நிரந்தரமாக அங்கேயே தங்க விரும்பினார். ஓர் இலந்தை மரத்தின் அடியில் அப்படியே குடி கொண்டார்.

விடங்கி முனிவரின் தவம் நிறைவு பெற்றது. இறைவன் அருளால் சொர்க்கத்திற்குப் புறப்படுமுன், பைரவர் குடிகொண்ட இலந்தை மரத்தைச் சுற்றி சின்னதாய் ஆலயம் எழுப்பினார்.

விடங்கி முனிவர் பூஜித்த காசி விஸ்வநாத லிங்கம் என்பதால் விடங்கீஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால் பைரவருக்கு கொங்கு வடுகநாதர் என்ற பெயர் எழுந்தது.

அதுமட்டுமல்ல, அட்டகாசம் செய்த அசுரன் சீசகனை பைரவர் கொன்ற இடம் என்பதால் இந்தப் பகுதியும் ‘கொன்ற இடம்’ என்றே வழங்கப்பட்டது. அதுவே நாளடைவில் ‘குண்டடம்’ என்று மருவிவிட்டது.

பஞ்ச பாண்டவர்கள், இந்தப் பகுதியில் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டபோது, திரெளபதி மேல் அரக்கன் ஒருவன், ஆசை கொண்டதாகவும், அதனால் கோபப்பட்ட பீமன், அரக்கனை அடித்துக் கொன்ற இடமும் இதுதான் என்பதால் ‘குண்டடம்’ என்ற பெயர் எழுந்ததாகவும் இன்னொரு புராணம் சொல்கிறது.

எது உண்மையாக இருந்தாலும் போர் நடந்த பூமி இது என்பதற்கு ஆதாரமாக சுற்றுப்பக்கத்தில் உள்ள தோட்டங்களின் பெயர்களே போதும். அவற்றின் பெயர் என்ன தெரியுமா? ரத்தக்காடு! சாம்பல் காடு! களரிக்காடு!

காலங்கள் கடந்தன. வனப்பகுதி என்பதால் மக்கள் யாருக்கும் தெரியாமல், விடங்கி முனிவிர் எழுப்பிய சிற்றாலயமும் மண்ணுக்குள் புதைந்து விட்டது.

பூமிக்குள் மறைந்த காலபைரவர் தனக்கு மாபெரும் ஆலயம் எழுப்ப, மிளகை பயறாக்கிய அற்புத சம்பவத்தை நான் சொல்வதற்கு முன்னால் குண்டடம் ஆலயத்தை வலம் வருவோமா?

எட்டு பிராகாரங்களுடன், எட்டுத் தெப்பக்குளங்களுடன் பிரமாண்டமாக இந்தக் குண்டடம் ஆலயம் அமைந்திருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. அவையெல்லாம் எங்கே போயின என்பது காலச்சக்கரத்தைச் சுழற்றும் கால பைரவருக்கே வெளிச்சம்!

Kundadam Bairavar gopuram

ஆலயத்தின் எதிரில் அழகுற அமைந்திருக்கிறது திருக்குளம். நடுவில் அழகிய மண்டபம். அங்கே ஒரு நந்தி. கொஞ்சம் நடந்தால் பழமையான விளக்குத்தூண் காட்சியளிக்கிறது. அதில் விநாயகர், திரிசூலம், லிங்கத்தின் மேல் பால் சுரக்கும் பசு போன்ற வடிவங்கள் பளி்ச்சிடுகிறது.

ராஜகோபுரத்திற்குத் தலைவணங்கி உள்ளே நுழைந்து பிராகாரத்தை வலம் வரலாம். சூரியன், சந்திரன், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, பட்டக்காரர், வரதராஜ பெருமாள், சனீஸ்வரர், நவகிரக நாயகர்கள் ஆகியோரைக் காணலாம். நந்தவனத்தில் மரங்கள் அசைந்தாடுகின்றன.

இங்கே முருகப் பெருமானின் வாகனமான மயிலின் தலை, வழக்கத்துக்கு மாறாக, இடதுபக்கம் நோக்கி அமைந்திருக்கிறது. சூரசம்ஹாரத்திற்கு முன்பு, இந்திரன் மயிலாக இருந்து போருக்குச் சென்ற வடிவம்.

தனித்தனி கோயில்களில் விசாலாட்சி அம்மனும், விடங்கீஸ்வரரும் அருள்பாலிக்கிறார்கள். காசி விசாலாட்சியும், காசி விஸ்வநாதருமே இவர்கள். முனிவருக்காக பைரவரை அனுப்பியவர்கள் இவர்கள்தான் என்று நினைக்கும்போது நெஞ்சம் நெகிழ்கிறது.

அடுத்ததாய், இந்த ஆலயத்தின் கதாநாயகனான கால பைரவ வடுகநாதரின் சன்னதி. காசியிலிருந்து வந்தவர் இங்கேயே தங்கி, இங்கே லீலைகளைப் புரிந்து கொண்டிருக்கிறார். தேய்பிறை அஷ்டமி தினங்களில் கால பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் மிகச் சிறப்பாக நடைபெறுகினறன. இப்போது மிளகைப் பயறாக்கிய கால பைரவரின் கதை!

மிளகு:

மன்னர்கள் காலத்தில் பாலக்காட்டு கணவாய், கொங்கு தேசம் வழியாக வணிகப் பொருட்கள் வண்டியில் வரும். பின்னர் சேர, சோழ, பண்டிய நாட்டுக்கு அவை பயணிக்கும், கொங்கு நாடு வழியாகச் செல்லும் வணிகர்கள், இரவு நேரங்களில் குண்டடம் பகுதியில் இருந்த மேடான பகுதியில் பாதுகாப்பாகத் தங்கிக் கொண்டு, காலையில் புறப்பட்டுச் செல்வார்கள். அப்போது அங்கே அரசமரத்தடியில் பாம்படீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் மட்டும் உண்டு.

அந்த இடத்திற்கு சற்றுத் தள்ளித்தான் காலபைரவரும் விடங்கிஸ்வரரும் பூமிக்குள் புதைந்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. அப்படி ஒரு முறை சேர நாட்டு வணிகர் ஒருவர் ஏராளமான மிளகு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பாண்டிய நாட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் பாதுகாப்பாக ஒரு நாள் குண்டடம் மேட்டில் தங்கினார்.

அப்போது ஒரு கூன் விழுந்த முதியவர் இருமியபடியே வியாபாரியை நெருங்கினார். ‘ஐயா, எனக்கு உடல் நலம் சரியில்லை. மிளகுக் கஷாயம் குடித்தால் இருமல் சீர் பெறும். தயவு செய்து எனக்குக் கொஞ்சம் மிளகு தாருங்கள்’ என்றார்.

அந்த வியாபாரி, இதற்காக மூட்டையை அவிழ்க்க வேண்டுமே என்று சோம்பல் பட்டு, ‘பெரியவரே இது மிளகு அல்ல. பாசிப் பயறு’ என்று பொய் சொன்னார். ‘அப்படியே ஆகட்டும்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் பெரியவர்.

கொங்கு வடுகநாதா!

மறுநாள் வியாபாரி, மிளகு வண்டியுடன் மதுரை சென்றார். பாண்டிய மன்னனிடம் நல்ல விலை பேசி விற்றார். பணமெல்லாம் கொடுத்த பிறகு, ஏதோ ஒரு சந்தேகம் வந்து, பாண்டிய மன்னன், மிளகு மூட்டைகளை பரிசோதிக்கச் சொன்னார். வீரர்கள் அப்படியே செய்ய, எதிலுமே மிளகு இல்லை. எல்லாம் பச்சைப் பயிறுகள்!

சினம் கொப்பளித்தது மன்னனுக்கு உடனே வியாபாரியைக் கைது செய்ய உத்தரவிட்டார். வியாபாரி கதறினான், பதறினான். குண்டடத்தில் நடந்த சம்பவத்தை மன்னனிடம் கூறினார்.

அதையெல்லாம் நம்பும் நிலையிலா மன்னன் இருந்தான்? ‘பொய் மேல் பொய் சொல்லும் இந்த வியாபாரியை நாளைக் காலை சிரச்சேதம் செய்யுங்கள்’ என்றான் கோபத்துடன். கதறினான் வியாபாரி. ‘கொங்கு வடுகநாதா! என்னை மன்னித்துவிடு’ என்று புலம்பினான். அழுதான். அவனது அழுகை குரல் பைரவருக்குக் கேட்டது!

Kundadam bairavar temple Video

எல்லா நலனும் தருவேன்!

நள்ளிரவில் மன்னன் கனவில் வந்தார் வடுகநாதர். ‘நான்தான் மிளகைப் பயிறாக்கினேன். அந்த வியாபாரி உண்மை பேசாததால் நான் அப்படி அவனை தண்டித்தேன். அவனை விட்டுவிடு!’ என்றார். மன்னன் அதையும் சந்தேகப்பட்டான். சேர நாட்டு வணிகராயிற்றே. ஏதும் மந்திரம் செய்கிறாரோ என்று ஐயப்பட்டான்.

‘என்னுடைய பெண், பிறந்ததில் இருந்தே வாய் பேச முடியாமலிருக்கிறாள். என் மகனும் ஊனமுற்றவன், நடக்க இயலாமல் இருக்கிறான். அவர்கள் இருவரையும் குணப்படுத்தினால் நான் எல்லாவற்றையும் நம்புகிறேன்’ என்றான் மன்னன்.

வடுகநாதர் புன்னகைத்தார்.

அடுத்த வினாடியே மஞ்சத்தில் படுத்திருந்த மன்னன் மகள், தந்தையே! என்று சந்தோஷக் கூக்குரலிட்டபடியே ஓடி வந்தாள். நடக்க முடியாமல் இருந்த மன்னன் மகனும், தந்தையை நோக்கி நடந்து வந்தான்!

பரவசமடைந்தான் பாண்டிய மன்னன், ‘என்னை மன்னித்து விடுங்கள் பைரவரே, நான் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்’ என்று துதித்தான். வடுக பைரவர் புன்னகைத்தார். ‘நானும், விடங்கீஸ்வரரும் இப்போது குண்டடத்தில் பூமிக்குள் மறைந்திருக்கிறோம். எங்களை வெளியில் கொண்டு வந்து ஆலயம் எழுப்புவாயாக. வியாபாரி கொண்டு வந்த அத்தனை பயறுகளும் இப்போது மிளகுகளாக மாறி இருக்கும். அந்த மிளகுகளிலிருந்து கொஞ்சம் எடுத்து வந்து, குண்டடத்தில் இருக்கும் எனக்கு பாலாபிஷேகம் செய்து, மிளகு சாத்தி வழிபட்டாலே போதும். அப்படிச் செய்பவர்களுக்கு நான் எல்லா நலன்களையும் நல்குவேன்’ என்று சொல்லி மறைந்தார் பைரவர்.

அதுபோலவே, கிடங்குக்குச் சென்று மன்னன் பார்த்தபோது, பயறு பழையபடி, மிளகாக மாறியிருந்தது. அதை எடுத்துக் கொண்டு, குண்டடம் சென்றான். பைரவர் சொல்லியிருந்த இடத்தில் குழி தோண்ட, விடங்கி முனிவர் நிர்மாணித்த சிறிய ஆலயம் கிடைத்தது. கொங்கு பைரவரும், விடங்கீஸ்வரரும் அங்கே இருந்தார்கள். மன்னன் உடனே அங்கே எட்டுப் பிராகாரங்களுடன் எட்டுத் தெப்பக் குளங்களுடன் மிகப்பெரிய கோயிலைக் கட்டி், கொங்கு பைரவருக்கு பாலாபிஷேகம் செய்து மிளகு நைவேத்தியம் செய்து வழிபட்டான். மன்னன் மட்டுமல்ல, யார் கால பைரவரை மனமார வேண்டி மிளகு சாற்றி வழிபட்டாலும் அவர் எல்லா நன்மைகளையும் அருளுகிறார் என்பது கண்கூடு. அது மட்டுமல்ல, காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இங்கே வந்து வழிபட்டாலே போதும் காசிக்கு சென்ற பலன் கிடைக்கும் என்கிறது புராணம்.

சரி, உங்கள் குறைகள் எல்லாம் தீர நீங்கள் எப்போது கொங்கு நாட்டுக் காசியான குண்டடம் சென்று கொங்கு கால பைரவ வடுகநாதரை தரிசனம் செய்யப் போகிறீர்கள்?

ஒரு விஷயம் மறக்காமல் மிளகு எடுத்துச் செல்லுங்கள். யாராவது உங்களிடம் கொஞ்சம் மிளகு கேட்டால் கொடுத்துவிடுங்கள். ஜாக்கிரதை, ஒரு வேளை மிளகு கேட்பவர் காலபைரவராகவும் இருக்கக்கூடும்.

பைரவர் கோவில் குண்டடம் இருப்பிடம்: kundadam bairavar temple address

கோவை – மதுரை நெடுஞ்சாலையில் பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில் அமைந்துள்ளது.

சென்னையிலிருந்து 487 கி.மீ. தொலைவு மற்றும் கோவையிலிருந்து 82 கி.மீ. தொலைவு.

 

குண்டடம் கோவில் ஆலய நேரம்: kundadam bairavar temple timings

காலை 7 மணி முதல் 1 மணி வரை; மாலை 5 மணி முதல் 8 மணி வரை.

தொலைபேசி: 04258-263301

குண்டடம் பைரவர் கோவில் சிறப்பு: kundadam bairavar temple special informaiton

காசி செல்ல முடியாதவர்கள் இங்கே வரலாம். பைரவர் மிகுந்த சக்தி வாய்ந்தவர்.

ஓம் பைரவா போற்றி ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி

ஸ்ரீகால பைரவர் 1008 போற்றி

வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்

 

Leave a Comment