om namah shivaya

மகிமை நிறைந்த ஓம் நம சிவாயா என்ற வார்த்தை | om namah shivaya

மன வேதனைகளையும், கவலைகளையும் நீக்க வல்ல ‘ஓம் நம சிவாயா’ என்ற வார்த்தையை மனதினிலேயே சொல்லி பழகுவது சிறந்த ஆக்கப்பூர்வ அலைகளை நம்முள் நிரந்தமாக்கி விடும்.

இந்த நாமம் ஒலியின் ஒலி. ஆத்ம சுத்தம் செய்யும் ஆன்ம கீதம். உங்கள் உள் ஒளிந்து கிடக்கும் சக்திகளை வெளி கொணரும் பிராண நாமம். ‘ஓம் நம சிவாயா’-இது வேதத்தின் இருதயம். நம்மை புனிதப்படுத்தும் சப்தம். நாமம், காம, க்ரோத, மோகங்களை அழிக்கும் நாமம். பிறப்பினை அழிக்கும் நாமம் என சொல்லிக் கொண்டே போகலாம். இது வார்த்தை ஜால பேச்சல்ல. வாழ்வின் உண்மை.

‘ஓம் நம சிவாயா’- நான் சிவ பிரானை வணங்குகிறேன் என்ற இந்த வார்த்தைக்கு இத்தனை மகிமைகள் உள்ளது. மன வேதனைகளையும், கவலைகளையும் நீக்க வல்லது. இதனை மனதினிலேயே சர்வ காலமும் சொல்லி பழகுவது சிறந்த ஆக்கப்பூர்வ அலைகளை நம்முள் நிரந்தமாக்கி விடும்.

* ந-நிலம், * ம-நீர், * சி-அக்னி, * வா-காற்று, * ய-ஆகாயம் சிவபிரான் பஞ்ச பூதங்களின் அதிபதி. இந்த மந்திரம் அண்ட சராசரங்களின் கருப்பையான சிவபிரானின் அருளினைப் பெற்றுத்தரும். இந்த கருப்பையில் இருந்தே அனைத்தும் வெளி வருகின்றன. பின்னர் அதனுள்ளே செல்கின்றன. அப்பேர்பட்ட அதிசக்தியான சிவபிரானை வணங்குவது தான் ‘நம சிவாய’.

* இந்த மந்திரம் மனிதன் மனதில் இருக்கும் அனைத்து பயங்களையும் நீக்கும்.

* மனிதனை நோய்களிலிருந்து காக்கின்றது.

* மனிதன் சிந்தனை, செயலினை தெளிவாக்குகின்றது.

* வாழ்க்கை வழியினை நற்பாதையில் திருப்பி விடுகின்றது.

* 108, 1008 என ஆரம்பித்து பின் இந்த நாமத்தினை தனது மூச்சாக மாற்றி வாழ்பவர்கள் இன்றும் கணக்கற்றோர் உள்ளனர்.

மேற்கூறப்பட்ட அனைத்தும் மிகப்பெரிய மகான்களால் வழி வழியாய் கூறப்பட்டவை.

விஞ்ஞான ரீதியாக தியானமும் மந்திரம் சொல்வதும்.

* கவனத்திறனையும் செயல் திறனையும் கூட்டுவதாக கூறப்பட்டுள்ளது.

* ‘ஓம்’ என்ற வார்த்தை மன அமைதி குறைந்தவர்கள், வலிப்பு நோயாளிகள் இவர்களுக்கு சிகிச்சை முறையாக பயிற்சி அளிக்கப்படுகின்றது.

* ‘ஓம்’ ஜபிப்பது உயர் ரத்த அழுத்தத்தினை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்து மத பிரிவினருக்கு யோகா பயிற்சி மூலம் ‘ஓம் நம சிவாய’ ஜபிக்க வைப்பது உயர் ரத்த அழுத்த சிகிச்சையாக அளிக்கப்படுகின்றது.

பொதுவில் நல்ல ஒலி சப்தங்கள் மூளை செயல்திறனை சீராக்குகின்றது.

* மந்திரம் ஜபிக்கும் (எந்த மதம், மொழி, எந்த மந்திரமாயினும்) மக்கள் ஆரோக்கிய இருதயத்துடன் இருக்கின்றார்கள்.

* நோய் கட்டுப்படுகின்றது.

மந்திரங்கள் பிரிவிலும், தனிப்பட்ட முறையிலும் ‘ஓம் நம சிவாய’ மிகுந்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது.

இத்தனை பெருமைகள் கூடிய, சக்தி கூடிய ‘சத்யம், சிவம், சுந்தரமாய்’ விளங்கும் சிவ பிரானை நாம் வழிபடுகின்றோம். உண்மையே இறை சொரூபமாய் கொண்ட அழகு சிவபிரானை நாம் வணங்குகின்றோம். பூரணத்துவம் கொண்டவரை நாம் வணங்குகின்றோம்.

இவரை அன்றாடம் நொடிக்கு நொடி சிந்தையில் கொண்டு வணங்குபவர்கள் இன்றும் ஏராளம். ஆயினும் ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை, கார்த்திகை சோமவாரம் இவையெல்லாம் அனைத்து இந்துக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. சிவராத்திரியை பொறுத்த மட்டில் மாத சிவராத்திரி என ஒவ்வொரு மாதமும் சிறப்பு பெற்றாலும் மகா சிவராத்திரி விழா வருடந்தோறும் மிக மிக சிறப்பாக நமக்குத் தெரிந்து பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகின்றது.

மகா சிவராத்திரி பற்றி பல புராண குறிப்புகள் உள்ளன. குறிப்பாக ஸ்கந்த புராணம், லிங்க புராணம், பத்ம புராணம் இவைகளைக் கூறலாம். இந்த குறிப்பிட்ட நாளன்று சிவ பிரானின் இறை நடனம் நிகழ்வதாகக் கூறப்படுகின்றது. வட மாநிலங்களில் இந்நாளை சிவ, பார்வதி திருமண நாளாகக் கொண்டாடுகின்றனர். ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என நாம் பக்தியின் காரணமாக நம்மோடு இறைவனை வைத்துக் கொண்டாலும், பாரதம் முழுவதிலும் மற்றும் பாரத தேசத்தினைத் தாண்டியும் சிவ வழிபாடு அதே பக்தியோடு நடைபெறுகின்றது. ‘சிவ ராத்திரி’ இருளையும், அறியாமையும் விட்டு வெளி வருதல் என்று பொருள் கூறப்படுகின்றது.

ஒரே ஒரு நாள் விழா என்றாலும் அது எத்தனை சிறப்பு பெற்று விளங்குகின்றது. எத்தனை முக்கியத்துவம், பெறுகின்றது என்று பார்ப்போம். சிவராத்திரி அன்று காலை பொழுதிலிருந்தே பழமோ, பாலோ மட்டும் எடுத்துக் கொண்டு விரதத்தினை அனுஷ்டிப்பவர்கள் அநேகர். காலையிலேயே சிவன் கோவிலுக்குச் சென்று அபிஷேக பூஜையில் கலந்து கொள்வர்.

பால், பன்னீர், சந்தனம், தயிர், தேன், சர்க்கரை, வில்வ இலை, நெய் என தன்னால் இயன்றவைகளை அளிப்பர். பூஜை செய்து வீடு வந்து அன்றைய இரவு பூஜைக்குத் தயார் செய்வர். சுத்த மண்ணால் லிங்கம் செய்து நெய்யால் அபிஷேகம் செய்பவர்களும் உண்டு. முதலில் சிவ வழிபாடு பற்றின சங்கல்பம் செய்து பிள்ளையார் பூஜை செய்ய வேண்டும். இவை செய்யும் பொழுது சாமி அறையில் கோலமிட்டு விளக்கேற்றி, ஊதுவத்தி, சாம்பிராணி காட்டி, சந்தன, குங்குமம் இட்டு, பூ, மாலை சாற்றி வெற்றிலை, பாக்கு, தேங்காய், முடிந்த பழங்கள் வைத்து பூஜிக்க வேண்டும்.

கணபதி பூஜை முடித்த பின்பு நந்தி பூஜை செய்யுங்கள். அதன் பின்னரே சிவ பூஜை ஆரம்பிக்கு. கோவில்களில் கால பூஜை நடக்கும். வீடுகளில் சிவ புராணம், சிவநாமம் ஜெபிப்பர். வீட்டில் பூஜை செய்பவர்கள் இருக்கும் அனைத்து சாமி படங்களுக்கும் சிறிது பூ வைத்து சந்தன, குங்குமம் இட்டு அனைத்து தெய்வங்களுக்கும் நைவேத்தியம் செய்யுங்கள். அதுவே முறை. இரவு முழுவதும் விழித்திருந்து செய்வர். இவை அனைத்தும் அவரவரர் பொருளாதார நிலை, உடல்நிலை, மனநிலையினை பொறுத்ததே. அமைதியாய் தியானத்தில் அமர்ந்து ‘ஓம் நமசிவாய’ நாமத்தினை மனதினுள் உச்சரிப்பதும் மிக உயர்ந்தது. உன்னதமானது.

இத்தனை உயர்வால் நாம் செய்யும் சிவ பூஜையினை லிங்க வடிவில் வழிபடுவதினையே மிகவும் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிதம்பர நடராஜ நடன வடிவமும் சிறப்பாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த ரூபம் என்பது முக்கியமல்ல. ரூபத்தினால் அவரை வசபடுத்த முடியாது. எங்கும் எதிலும் நிறைந்திருக்கும், முதலும், முடிவும் இல்லாத பிரபஞ்சத்தை தன்னுள் கொண்ட சக்தி. சக்தியின் ஒரு பாதி என்றாலும் சக்தியே சிவன்தான். இந்த எல்லையிலா சக்தியே சிவம் என்பதால்தான் சிவ வழிபாடு மிக உயர்ந்ததாகப் போற்றப்படுகின்றது.

சிவபிரான் நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கை பாடங்களாக சில செய்திகள் கூறப்படுகின்றன. சிவபிரானை ‘ஆதியோகி’ என வழிபடும் முறையும் இங்குள்ளது.

* சிவபெருமான் அழிப்பவர். தீயவைகளை அழிப்பவர். எது வந்தாலும் தீமைகளை சகிக்காதே.

* எப்பொழுதும் அமைதியாய் இரு.

* உலகில் நிலையற்ற பொருள் மீது ஆசைவைக்காதே. அவரது ஆடை, தோற்றமே இதனைக் கூறிவிடும். நிச்சயமற்ற இந்த உடல் மீதும், பொருட்கள் மீதும் பற்று வைக்காதே.

அவை உன்னிடம் இருக்கலாம்.

நீ அவைகளிடம் இருக்காதே.

* அழிவுப் பூர்வமானவைகளை கட்டுப் படுத்தி வைக்கத் தெரிய வேண்டும். கொடும் வி‌ஷத்தினையே தன் தொண்டையில் காலத்திற்கும் கட்டுப்படுத்தி வைத்திருப்பவர் அல்லவா.

* தனது வாழ்க்கைத் துணைக்கு சம உரிமை கொடுங்கள். அர்த்தநாரீஸ்வரர் தோற்றம் சொல்லும் உண்மை இதுவே. ஆக ஆசைகள் இன்றி இருத்தலே சிறந்தது. ஆசை அழிவினைத்தரும்.

* அகங்காரத்தினை அடக்குவதே திரிசூலம்.

* தவமும், தியானமும் கர்ம வட்டத்திலிருந்து நம்மை நீக்கி உயர்த்தும்.

மேலும் சிவபிரானின் அவதாரங்களாக 19 அவதாரங்கள் கூறப்படுகின்றன.

* பிப்பலாத் அவதாரம்: தாதிஷி முனிவருக்கு மகனாய் பிறந்தார். இவரது தந்தை இவர் பிறக்கும் முன்பே வீட்டை விட்டு வெளியேறுகிறார். பிப்பலாத் வளர்ந்த பின் சனிதோ‌ஷம் தன் தந்தை வெளியேற காரணம் என்று அறிந்து சனிபகவானை சபித்தார். பின்னர் அவரே 16 வயது வரையுள்ள சிறுவர்களை சனிபகவான் எந்த தொந்தரவும் செய்யகூடாது என கூறி அருளினார். எனவேதான் பிப்லாத் ரூப சிவனை வழிபட்டால் சனிதோ‌ஷம் நீங்கும் என்பர்.

* நந்தி அவதாரம்: சிவ பிரான் நந்தி பகவானாக இந்தியாவின் பல இடங்களில் வழிபடப்படுகின்றார்.

* வீரபத்ர அவதாரம்: அன்னை சதி தீயில் குதித்தபின் சிவபிரான் மிகுந்த கோபம் கொண்டார். அவரது தலையிலிருந்து வீரபத்திரரும், ருத்ர காளியும் தோன்றினர். வீரபத்திரர் கோபமான கண்களும் மண்டை ஓடு மாலையும், பயங்கர ஆயுதங்களும் கொண்டவர். தக்‌ஷன் தலையினை கொய்தவர்.

* பைரவர் அவதாரம்: பிரம்மனின் தலையை கொய்த அவதாரம். பிரம்மனின் தலையை கையில் கொண்டு 12 ஆண்டுகள் பிக்ஷாந்தேஷியாக இருந்தார். அனைத்து சக்தி பீடங்களையும் காத்தார்.

* அஸ்வத்தாமா: துரோணச்சாரியாரின் மகனாகப் பிறந்தவர்.

ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒரு புராண செய்தி இருப்பதால் ஒரு சில அவதாரங்களை கோடிட்டு மட்டுமே காட்டியுள்ளோம்.

* சிவன், இந்துக்களின் மிக முக்கிய பொக்கி‌ஷ தெய்வம். சைவத்தின் உயர்நிலை. தீயதினை அழிப்பவர். சிவபிரானின் உயர் நிலை உருவமற்றது. எல்லையற்றது. ஆழ்நிலை கொண்டது. என்றும் மாறாதது. சுத்தப் பிரம்மம். எங்கும் நிறைந்த ஆதியோகி. கைலாயமலையில் இருப்பவர். எல்லாம் இவருள் அடக்கம்.

இவரை இந்த சிவராத்திரி நன்னாளில் வணங்கி நல்லன பெறுவோம்.

‘ஓம் நம சிவாய’

Leave a Comment