திருத்தணி பாலசுப்பிரமணிய சுவாமி முருகன் கோவில் | Thirutani Murugan temple
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இத்தலத்தில் முருகப்பெருமான் தன் இச்சா சக்தியாகிய வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருப்பதுடன் இங்கு வரும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும் தந்தருள்கின்றார்.
அமைவிடம் :
திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து மும்பை செல்லும் ரயில்பாதை வழியில், அரக்கோணத்திற்கு வடக்கே 13 கிலோ மீட்டரிலும், சென்னையில் இருந்து வடமேற்கே 84 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருத்தணி. “தொண்டை நாடு” என்று அழைக்கப்படும் பகுதியில் திருத்தணி அமைந்திருப்பதாக தமிழ் நூல்கள் கூறுகின்றன.
தொண்டை நாட்டின் தலைநகரமாகிய காஞ்சிபுரம் தெற்கிலும்; விரிஞ்சிபுரம் – வள்ளிமலை – சோளிங்கபுரம் ஆகியவை மேற்கிலும்; திருவாலங்காடு கிழக்கிலும்; திருக்காளத்தி – திருப்பதி வடக்கிலும் சூழ்ந்திருக்க, அவற்றிற்கு மத்தியில் நடுநாயகமாகத் திருத்தணிகைத் தலம் அமைந்துள்ளது.
தணிகை :
முருகப்பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை மணந்துகொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுபோரும் முடிந்து, தணிந்து அமர்ந்த தலம் என்பதால் தணிகை எனப் பெயர் பெற்றதாக அறியப்படுகிறது.
தேவர்களின் அச்சம் தணிந்த இடம். முனிவர்கள் காம வெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம். அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடம் ஆதலாலும், இதற்குத் தணிகை என்று பெயரமைந்ததாகவும் கூறப்படுகிறது.
தணிகை என்னும் சொல்லுக்கு பொறுத்தல் (பொறை) என்பதும் ஒரு பொருளாதலின், “அடியார்களின் பிழைகளையும் பாவங்களையும் பொறுத்து அருள் புரியும் தலம், திருத்தணிகை” என்று கொள்ளுதலும் பொருந்தும்.
திருத்தணிகை மலை :
இத்தலத்தில், முருகப்பெருமான் மலைமீது எழுந்தருளி வீற்றிருக்கின்றார். ஒரு தனிமலையின் சிகரத்து உச்சியில், கோயில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முருகன் எழுந்தருளி விளங்கும் மலையின் இருபுறங்களிலும், மலைத் தொடர்ச்சிகள் பரவிப் படர்ந்துள்ளன. வடக்கே உள்ள மலை சிறிது வெண்ணிறமாக இருப்பதனால் “பச்சரிசி மலை” என்றும், தெற்கே உள்ள மலை கருநிறம் வாய்ந்திருப்பதனால் “பிண்ணாக்கு மலை” என்றும் கூறப்படுகின்றன.
ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் மலையடிவாரம் உள்ளது. “சரவணப் பொய்கை” என வழங்கும் புகழ்மிக்க “குமார தீர்த்தம்” என்னும் பெரிய திருக்குளம், மலையடிவாரத்தில் உள்ளது. யாத்திரீகர்களும், பக்தர்களும் இதிலேயே பெரும்பாலும் நீராடுவது வழக்கம். இத்தீர்த்தத்தை சுற்றிப் பல மடங்கள் உள்ளன. அதனால் இப்பகுதிக்கு “மடம் கிராமம்” என்று பெயர் வழங்குகிறது. திருக்குளத்தின் தென்மேற்கு மூலையில், மலையடிவாரம் இருக்கின்றது.
திருக்குளத்தின் கிழக்குக் கரையினின்று மலையைப் பார்த்தால், வளைவாக இடம்பெற்ற ஒரு மாலை போலவும், மூவுருவம் எடுத்த ஒரு பரம்பொருள் போலவும்; மூன்று மலைகள் விளங்கும். அவற்றின் மத்தியில் திருமுருகன் திருக்கோயில் நடுநாயகமாகச் சிறந்தோங்கி விளங்குவது மிகவும் அழகு நிறைந்த காட்சியாகும்.
அருணகிரிநாதர் தனது பாடலில் “அழகுத் திருத்தணிமலை” என்று புகழ்ந்து போற்றியிருக்கின்றார். திருமுருகனுக்கு இணையான தெய்வங்கள் எதுவும் இல்லை என்பது போலவே, திருத்தணிகைக்குச் சமமான தலமும் வேறெந்த தலமும் இல்லை எனலாம்.
தணிகைக்கோயிலின் தொன்மைச்சிறப்பு :
திருத்தணிகை முருகன் திருக்கோயில், மிகவும் தொன்மை வாய்ந்தது. முருக பக்தரான அருணகிரிநாதர், 63 திருப்புகழ்ப் பாடல்களால் இத்தலத்தினைப் பெரிதும் போற்றித் துதித்துள்ளார். அதனால் 600 ஆண்டுகளுக்கு முன்பே, இத்தலமும் கோயிலும் புகழோங்கித் திகழ்ந்திருந்தன என்பது திண்ணம்.
தவிர, சுமார் 900 ஆண்டுகளுக்கும் முன்பே வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார், தமது கந்தபுராணத்தில் “மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில் கங்கை நதி போலவும், தலங்களில் காஞ்சிபுரம் போலவும், மலைகளிலெல்லாம் சிறந்தோங்கித் திகழ்வது திருத்தணிகையே” என்று பாடியுள்ளார்.
சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருநாவுக்கரசர், திருப்புறம்பயம் தலத்துத் திருத்தாண்டகத்தில் “கல் மலிந்தோங்கும் கழுநீர்க் குன்றம்” என்று திருத்தணிகையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தேவேந்திரன் இங்கு முருகப் பெருமானை நீலோற்பலம் என்னும் கழுநீர் மலர்கொண்டு பூசித்தான் என்பது தலவரலாறு.
தலச்சிறப்பு :
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த நக்கீரர் என்னும் நல்லிசைப் புலவர் பெருமான், முருகனைப் பற்றித் திருமுருகாற்றுப்படை என்னும் சிறந்த துதி நூலைப் பாடியிருக்கின்றார். அதன்கண் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருவாவினன்குடி (பழனி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்ச்சோலை என்னும் ஆறு திருத்தலங்களும், முருகனின் ஆறுபடை வீடுகள் என்று சிறப்பாகப் போற்றப்பெறும்.
இவைகளுள் குன்றுதோறாடல் என்பது, முருகன் எழுந்தருளி விளங்கும் மலைத் தலங்கள் எல்லாவற்றையுமே குறிக்குமாயினும், திருத்தணிகை தலத்தையே தனிச்சிறப்பாகக் குறிக்கும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
முருகப்பெருமான், தன் கிரியா சக்தியாகிய தெய்வானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டாற்போல், திருத்தணிகையில் தன் இச்சா சக்தியாகிய வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருந்தருள்கின்றார். திருத்தணிகையின் சிறப்பிற்கு இதுவே சிறந்த பெருங்காரணமாகும்.
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், கந்தப்ப தேசிகர், கச்சியப்பமுனிவர், கச்சியப்ப சிவாசாரியர், அருணகிரிநாதர் ஆகிய அருட்பெருஞ் சான்றோர்கள் பலரும், திருத்தணிகை முருகனைப் பெரிதும் புகழ்ந்துப் பாடியுள்ளனர்.
வள்ளலார் பெற்ற அருள் :
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வடலூர் இராமலிங்க அடிகளார், திருத்தணி முருகப்பெருமானை நினைந்து உருகி அப்பெருமானையே ஞான குருவாகக் கொண்டார். வள்ளலார் இளம் வயதிலேயே கண்ணாடியில் திருத்தணி முருகப்பெருமானின் காட்சி கிடைக்கப் பெற்றவர். இதனால், பிரார்த்தனை மாலையில் திருத்தணி முருகனை போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.
பல லட்சக்கணக்கான மக்கள், திருத்தணிகை முருகனைத் தம் குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டு நலம் பெற்று வருகின்றனர்…
Sani peyarchi palangal 2023-2025 மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கும் திருக்கணிதப் படி சனிப்பெயர்ச்சி பலன்கள், மதிப்பெண்,… Read More
அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில், மாநில நெடுஞ்சாலை 114, திருவொற்றியூர் குப்பம், திருவொற்றியூர், சென்னை 600019 *இத்திருக்கோயில் திருவொற்றியூரில் எண்ணூர் விரைவு… Read More
வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம் | Thiruvilayadal Vanigar marriage story வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்… Read More
சமணரைக் கழுவேற்றிய படலம் | Thiruvilayadal Samanar Story சமணரைக் கழுவேற்றிய படலம் (Thiruvilayadal Samanar Story) இறைவனான சொக்கநாதரின்… Read More
பாண்டியன் சுரம் தீர்த்த படலம் | Thirugnana sambandar story in tamil பாண்டியன் சுரம் தீர்த்த படலம் (Thirugnana… Read More
மண் சுமந்த படலம் | Thiruvilayadal man sumantha padalam மண் சுமந்த படலம் (Thiruvilayadal man sumantha padalam)… Read More
Leave a Comment