கடல் சுவற வேல்விட்ட படலம் | Kadal suvara velvitta padalam story
கடல் சுவற வேல்விட்ட படலம் (Kadal suvara velvitta padalam story) உக்கிரபாண்டியன் மதுரையை அழிக்க வந்த கடலை சுந்தரபாண்டியனார் கொடுத்தருளிய வேலைவிட்டு வற்றச்செய்து மதுரையை காப்பாற்றியதை விளக்கிக் கூறுகிறது.
மதுரையை அழிக்க எண்ணிய இந்திரனின் சூழ்ச்சி, சோமசுந்தரர் பாண்டியனின் கனவில் தோன்றி மதுரையை காப்பாற்றக்கூறியது ஆகியவற்றை இப்படலம் விளக்குகிறது.
மேலும் சிவபெருமான் சித்தராக வந்து உக்கிரபாண்டியனை வேல்படையை கடலின் மீது எறியச் செய்து மதுரைக்கான ஆபத்தை விலகியது ஆகியவையும் இப்படலத்தில் விளக்கிக் கூறப்பட்டுள்ளன.
இப்படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தில் பதிமூன்றாவது படலமாகும்.
வஞ்சனை எண்ணம் கொண்டவர்களோடு சேர்ந்து மற்றவர்களுக்கு தீயது செய்தால் கண்டிப்பாக அவர்கள் தண்டிக்கப்படுவர் என்பதை இப்படலம் விளக்கிக் கூறுகிறது. இனி கடல் சுவற வேல்விட்ட படலம் பற்றிப் பார்ப்போம்.
இந்திரனின் சூழ்ச்சி
சுந்தரபாண்டியனார், தடாதகை ஆகியோரின் குமரனான முருக்கடவுளை ஒத்த உக்கிரபாண்டியன் மதுரையை சிறப்புற ஆட்சி செய்தார்.
மதுரையின் வளம் குன்றாது இருக்க உக்கிரபாண்டியன் 96 வேள்விகளைச் செய்து முடித்தார். இன்னும் நான்கு வேள்விகளைச் குறைவின்றி செய்து முடித்தால் உக்கிரபாண்டியனுக்கு இந்திரப்பதவி கிடைத்துவிடும் என்று எண்ணி தேவர்களின் தலைவனான இந்திரன் உக்கிரபாண்டியனின் மீது பொறாமை கொண்டான்.
இந்திரனின் பொறாமையால் அவனுடைய மனதில் சூழ்ச்சி ஒன்று உருவானது. அதன்படி அவன் கடல்அரசனை அழைத்து மதுரையை அழிக்கும்படி கூறினான். கடலரசனும் இந்திரனின் பேச்சுக்கு உடன்பட்டு மதுரையை அழிப்பதாக இந்திரனுக்கு வாக்குறுதி அளித்தான்.
சோமசுந்தரர் கனவில் உக்கிரபாண்டியனை எச்சரித்தல்
கடலரசன் இந்திரனுக்கு அளித்த வாக்குறுதிப்படி மதுரை அழிப்பதற்காக பெரும்சீற்றத்துடன் ஊழிக்காலத்தினை ஒத்த அழிவினை மதுரையில் உண்டாக்குவதற்காக பொங்கி எழுந்து மதுரையை நோக்கி வந்தான்.
கடலரசன் நள்ளிரவில் மதுரையின் கிழக்குப்பகுதியை அடைந்தபோது சொக்கநாதர் உக்கிரபாண்டியனின் கனவில் சித்தர் வடிவில் தோன்றினார்.
“பாண்டியனே உன்னுடைய மதுரை நகரினை அழிக்கும் பொருட்டு கடலானது பொங்கி எழுந்து வருகிறது. நீ உன்னுடைய வேல்படையை கடலின் மீது ஏவி அதனை வெற்றிபெற்று மதுரையைக் காப்பாயாக” என்று எச்சரிக்கை வார்த்ததை கூறி மறைந்தார்.
உக்கிரபாண்டியன் கடலினை வெற்றி கொள்ளல்
சித்தரின் எச்சரிக்கை வார்த்தை கேட்டு கண்விழித்த உக்கிரபாண்டியன் தனது அமைச்சர்களோடு கலந்து ஆலோசித்து விரைந்து சென்று பேரொலியோடு வருகின்றன கடலினைப் பார்த்து வியந்து நின்றான்.
அப்போது பாண்டியனின் கனவில் வந்த சித்தமூர்த்தி நேரில் அவ்விடத்திற்கு வந்தார். பின் உக்கிரபாண்டியனை நோக்கி “பாண்டியனே இனியும் காலம் தாழ்த்தாது உன்னிடம் உள்ள வேல்படையைக் கொண்டு பொங்கிவரும் கடலினை வெற்றி கொண்டு மதுரையை விரைந்து காப்பாய்” என்று கூறினார்.
சித்தமூர்த்தியின் வார்த்தைகளைக் கேட்டவுடன் உக்கிரபாண்டியன் தன்னிடம் இருந்த வேல்படையின் கூரியமுனை கடலில் படுமாறு வலஞ்சுழித்து வீசி எறிந்தான்.
கூரிய வேலின் நுனி கடலில் பட்டவுடன் கடலானது ‘சுர்’ என்ற ஒலியுடன் வற்றி வலிமை இழந்தது. உக்கிரபாண்டியனின் கணுக்கால் அளவுக்கு குறைந்தது. மதுரைக்கு கடலினால் வந்த பெரும் ஆபத்து விலகியது.
இறைவன் காட்சியருளல்
உக்கிரபாண்டியனின் அருகில் நின்றிருந்த சித்தமூர்த்தி மறைந்து அருளினார். அவர் வானத்தில் உமையம்மையோடு இடப வாகனத்தில் காட்சியருளினார்.
உக்கிரபாண்டியன் அவரைத் துதித்துப் போற்றினான். இறைவனார் திருக்கோவிலுள் புகுந்தருளினார். உக்கிரபாண்டியனும் இறைவனாரை திருகோவிலினுள் சென்று வழிபாடு செய்தான். பலவிளைநிலங்களை திருகோவிலுக்கு சொந்தமாக்கிய உக்கிரபாண்டியன் மதுரையை இனிது ஆட்சி புரிந்தான்.
கடல் சுவற வேல்விட்ட படலம் கூறும் கருத்து
வஞ்சனை எண்ணம் கொண்டவர்களோடு சேர்ந்து மற்றவர்களுக்கு தீயது செய்தால் தீயசெயலில் ஈடுபடுபவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவர் என்பதே கடல் சுவற வேல்விட்ட படலம் கூறும் கருத்தாகும்.
திருவிளையாடல் புராணம் என்பது சிவபெருமானது திருவிளையாடல்களைக் கூறும் பரஞ்சோதி முனிவர் எழுதிய நூல் ஆகும். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. மதுரை மீனாட்சியம்மை பராசக்தி பரஞ்சோதி முனிவரின் கனவில் தோன்றிச் சிவபெருமானின் திருவிளையாடல்களைப் பாடும் படி கூறியமையால் இந்நூலைப் பரஞ்சோதியார் இயற்றியதாக நம்பப்படுகிறது. பரஞ்சோதி முனிவர் திருமறைக்காடு (வேதாரணியம்) எனும் ஊரில் மீனாட்சி சுந்தர தேசிகர் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். மதுரையில் சற்குருவை ஏற்று சைவ சந்நியாசம் பெற்றார்.