கண்ணன் கதைகள் – 51
மதுரா நகரப்ரவேசம்
குருவாயூரப்பன் கதைகள்
கிருஷ்ணன் நண்பகலில் மதுராநகரம் அடைந்தார். அருகிலுள்ள தோட்டத்தில் உணவுண்டு, நண்பர்களுடன் நகரைச் சுற்றிப் பார்க்க முடிவு செய்தார். அந்த நகரிலுள்ளவர்கள் .கண்ணனைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால் அவரை நேரில் காண ஆவல் கொண்டனர். கிருஷ்ணன் இப்போது ராஜவீதியை அடைந்தார். அவரைக் காண வந்த பெண்கள், எப்பொழுதும் கண்ணனையே மனதால் நினைத்துக் கொண்டிருந்ததால் அவரை நேரில் காண ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அப்பெண்கள் கள்ளமில்லாத தூய்மை உள்ளம் படைத்தவர்களாய் இருந்தார்கள். தனது கடைக்கண் பார்வையால், கிருஷ்ணன் அப்பெண்களை ஆனந்திக்கச் செய்தார். மக்களும் மகிழ்ச்சியுடன் கிருஷ்ணனைக் காணக் கூடினார்கள். அப்போது எதிரே வந்த கம்ஸனுடைய வண்ணானிடம் உடைகள் வேண்டும் எனக் கிருஷ்ணன் கேட்க, அவன், “ராஜாவின் உடைகளை உனக்கு எவன் கொடுப்பான்? தள்ளிப்போ” என்று கேலியாகக் கூறினான். உடனே கிருஷ்ணன் அவன் தலையைக் கிள்ளி எறிந்தார். அவனும் நற்கதியை அடைந்தான்.
அப்போது, ஒரு துணி நெய்பவன் கண்ணனுக்குப் பொருத்தமான ராஜஉடைகளைக் கொண்டு வந்து கொடுத்தான். அவற்றை அணிந்தார். மாலை கட்டும் ‘சுதாமா’ என்பவன், கண்ணனுக்கு மலர் மாலைகளை அணிவித்துப் போற்றித் துதித்தான். அவனுக்கு அவன் விரும்பிய பக்தியையும், அளவற்ற செல்வத்தையும் வரமாகஅளித்தார். இவ்வாறு செல்லும்போது, வழியில், அழகான கண்களை உடையவளும், முதுகில் கூன் உடையவளுமான ‘திரிவிக்ரா’ என்ற ஒரு பெண்ணைக் கண்டார். அவள் கிருஷ்ணருக்கு சிறந்த சந்தனத்தையும், வாசனைத் திரவியங்களையும் பூசினாள். மனமகிழ்ந்த கண்ணன், அவளிடம் அன்பு கொண்டு, தனது கால் விரலால் அவள் காலை அழுத்திக் கொண்டு, அவளைக் கையினால் மெதுவாகப் பிடித்து அவள் கூனை நிமிர்த்தினார். அவள் உலகிலேயே அழகானவளாக ஆனாள். பரிசுத்தமான, பாபமற்ற அந்நகர மக்கள், கண்ணன் வரும் வழி நெடுக நின்றுகொண்டு, பூமாலை, தாம்பூலம் முதலிய தமது சக்திக்குத் தகுந்த ஏதாவது ஒரு பொருளை கண்ணனுக்குக் கொடுத்தார்கள். கண்ணன் கோட்டைவாயிலில் நுழைந்தார். மக்களின் ஆரவாரத்தினால் கிருஷ்ணனுடைய வருகையை அறிந்த தேவகி, மிகுந்த குதூகலம் அடைந்தாள். அவளது ஸ்தனங்களிலிருந்து பால் சுரந்தது.
கிருஷ்ணன் மதுரா நகருக்குள் பிரவேசித்தபோது காவலர்களும், மக்களும் அவருடைய அழகைக் கண்டு மயங்கி வழி விட்டார்கள். தனுர்யாகம் நடந்து கொண்டிருக்கும் இடத்தை அடைந்தார். அங்கே அந்த வில்லானது, மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு ஒரு அறைக்குள் வைக்கப்பட்டிருந்தது. அந்த வில் வைத்திருந்த அறைக்குள் பிரவேசித்த கண்ணன், நொடிப்பொழுதில் அந்த வில்லை எடுத்து நாணேற்றி முறித்தார்.
வில் முறிந்த பெரிய ஒலியைக் கேட்டு தேவர்கள் மெய்சிலிர்த்தனர். அந்த ஓசையானது கம்ஸ வதத்திற்கு முன் வாசிக்கப்படும் மங்கள வாத்தியம் போல் இருந்தது. அந்த ஓசையைக் கேட்ட கம்ஸனுக்கும் நடுக்கம் ஏற்பட்டது. முறிந்த வில்லினால் அடிபட்ட காவலர்களின் கூக்குரல் கம்ஸனுடைய பயத்தை அதிகரித்தது. சிஷ்டர்களைப் பரிபாலனம் செய்யவும், துஷ்டர்களை நிக்ரஹம் செய்யவும் அவதரித்த கிருஷ்ணன், நகரத்தின் அழகைப் பார்த்துக் கொண்டே மாலையில், பூந்தோட்டத்தில் உள்ள தனது கூடாரத்தை அடைந்தார். அன்று இரவு, தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீதாமாவிடம், ராதையின் பிரிவால் ஏற்பட்ட துயரத்தைக் கூறிக் கொண்டு, பல கதைகளைப் பேசிக் கொண்டு அங்கு தங்கினார். அவதார நோக்கம் நிறைவேறும் அந்த நாளும் வந்தது.