கண்ணன் கதைகள் – 15

மானவேடன்

வில்வமங்கலம் ஸ்வாமிகள் கண்ணனை நேரிலேயே பிரத்யக்ஷமாகக் கண்டவர். அவர் காலத்தில் மானவேடன் என்று ஒரு ராஜா இருந்தார். அவர் கவிஞர். சிறந்த பக்தரும் ஆவார். ஒரு முறை ராஜா குருவாயூருக்கு தரிசனம் செய்யச் சென்றார். அங்கே வில்வமங்கலம் ஸ்வாமிகளைக் கண்டார். அவரிடம் சென்று வணங்கி, ஸ்வாமிகளே! குருவாயூரப்பனை நேரில் காண எனக்கு வழிகாட்டுங்கள்” என்று வேண்டினார். ஸ்வாமிகள், “மிகுந்த பிரயத்தனத்துடன் முனிவர்கள் அடையும் அந்த மகாபாக்கியத்தை இவ்வளவு சுலபமாகக் கேட்கிறாயே! அது மிகவும் கடினம்” என்று சொன்னார். ராஜா மிகவும் வருந்தி, அழுது,”தாங்கள் எப்படியாவது பகவானைக் காண, அவனை அடைய வழி சொல்ல வேண்டும்” என்று கேட்டார்.

ஸ்வாமிகளும் அவனிடம் கருணை கொண்டு, கண்ணனிடம் கேட்டுவிட்டுச் சொல்கிறேன் என்று சொன்னார். பிறகு, கண்ணனிடம் கேட்டுவிட்டதாகவும், கண்ணனை அதிகாலையில் மகிழ மரத்தடியில் விளையாடும்போது பார்க்கலாம் என்றும் கூறினார். அதன்படி, மானவேடன் கண்ணனைக் கண்டான். அப்பொழுது கண்ணன், தலையில் மயில்தோகையுடனும், வனமாலை, கங்கணங்கள், கிண்கிணிகளால் ஆன அரைஞாண், பீதாம்பரம், தாமரை போன்ற திருவடிகள், மேகத்திற்கு ஒப்பான நிறமுடைய திருமேனியுடன், மயக்கும் அழகுடன் விளையாடுவதைக் கண்டான். உடல் புல்லரிக்க, தன்னை மறந்து ஓடி அப்பனைத் தழுவச் சென்றான். உடனே குருவாயூரப்பன், ” வில்வமங்கலம் உன்னிடம் பார்க்கத்தான் சொன்னார், தூக்கச் சொல்லவில்லை” என்று கூறி மறைந்தார். கண்ணனைத் தொட முடியவில்லையே என்று அரசனுக்கு ஏக்கமாக இருந்தது. அப்போது அரசன், தன் கையில் ஒரு மயில்தோகை இருக்கக் கண்டான். அதைக் கண்டு மகிழ்ந்து ஸ்வாமிகளிடம் சென்று நடந்ததைக் கூறினான். ஸ்வாமிகள் கூறியதன்பேரில் அந்தத் தோகையை ஒரு ரத்தினக் கிரீடத்தில் பதித்து, பூஜித்து வந்தான். மேலும், மகிழ மரத்தால் செய்யப்பட்ட கண்ணன் விக்ரகத்தைச் செய்து, அதைக் கோவிலின் தென்கிழக்குப் பகுதியில் வைத்து, அதன்முன் அமர்ந்து, பாகவதத்தின் தசம, ஏகாதசி ஸ்காந்தத்தைத் தழுவி, “கிருஷ்ணகீதி” என்ற நாட்டிய நாடகத்தை இயற்றி, அதை பகவானுக்கு அர்ப்பணித்தான்.

துலா மாதம் கடைசி தினத்தன்று அர்ப்பணித்ததால், கோவிலில் இன்றும் அந்த நாளை ‘கிருஷ்ணகீதி தினம்’ என்று கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் கிருஷ்ணகீதியை நாட்டிய நாடகமாக நடித்து ஆடுவார்கள், கிருஷ்ணராக நடிப்பவர் அந்த மயில்தோகை பதித்த கிரீடத்தைத் தரித்திருப்பார். ஸ்ரீ அப்பனை வழிபட்டால் யோகமும் க்ஷேமமும் தேடி வரும் என்பதைக் கண்கூடாக இன்றும் காணலாம்.

Leave a Comment