கண்ணன் கதைகள் – 50
அக்ரூரர் தூது, மதுரா நகரப் பயணம்
குருவாயூரப்பன் கதைகள்
கம்ஸன் அனுப்பிய அத்தனை அசுரர்களையும் கண்ணன் கொன்றுவிட்டான். கம்ஸன் மிகவும் பயந்தான். நாரதர் மூலம் கண்ணன் கோகுலத்தில் வசிப்பதை அறிந்த கம்ஸன், கண்ணனையும், பலராமனையும் கொல்லத் திட்டம் தீட்டினான். தனுர் யக்ஞம் என்ற வில் பூஜையில் கலந்து கொள்ள கிருஷ்ணனை அழைத்து வருமாறு பண்பில் சிறந்த அக்ரூரரை அனுப்பினான்.
அக்ரூரர் கிருஷ்ணனிடத்தில் பரம பக்தி கொண்டவர். கம்ஸனிடம் இருந்த பயத்தால் கிருஷ்ணனைத் தரிசிக்காமல் இருந்து வந்தார். கம்ஸனே கிருஷ்ணனை அழைத்து வரக் கட்டளையிட்டதும் மிகவும் மகிழ்ந்தார். ரதத்தில் ஏறி, கோகுலம் நோக்கிப் புறப்பட்டார். கிருஷ்ணனையே நினைத்து, அந்த நினைவுகளை அனுபவித்து, அவரை சந்திப்பதில் எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்று வேண்டிக்கொண்டே சென்றார். “பரமனை நான் தரிசிப்பேனா? தொட்டுத் தழுவுவேனா? அவர் என்னுடன் பேசுவாரா? அவரை எங்கு காண்பேன்?” என்று எண்ணியவாறே கிருஷ்ணனை நினைத்துக் கொண்டே வழியைக் கடந்தார். கண்ணனின் பாதம் பட்டதால் புனிதமானதும், சிவனும், பிரமனும், தேவர்களும் வணங்கத் தகுந்ததுமான பிருந்தாவனத்திற்குள் நுழைந்தார். எல்லையில்லா ஆனந்தத்தில் மூழ்கி, உணர்ச்சி மிகுந்த நிலைமைகளை அடைந்தார். கண்ணன் விளையாடிய இடங்களைப் பார்த்து வணங்கினார். கண்ணனின் பாதம் பட்ட புழுதியில் புரண்டார். அவர், கோபிகைகளின் வீடுகளைப் பார்த்துக் கொண்டும், அவர்கள் பாடும் தங்கள் புகழைக் கேட்டுக் கொண்டும், ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி, மாலையில் நந்தகோபரின் வீட்டு வாசலை அடைந்தார். பசுவிடமிருந்து பால் கறப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணனையும் பலராமனையும் கண்டார். தான் உள்ளே அனுபவித்த ப்ரும்மானந்தத்தை வெளியில் பார்ப்பதுபோல் உணர்ந்தார்.
பீதாம்பரம், நீலாம்பரம் இவற்றை அணிந்து மிக அழகுடன் விளங்கும் கிருஷ்ணனையும், பலராமனையும் கண்டார். சில ஆபரணங்களை மட்டுமே அணிந்து, புன்சிரிப்பு தவழும் முகத்துடன் இருக்கும் இருவரையும் கண்டார். அவர்களைக் கண்டவுடன், வெகு தூரத்திலேயே ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கி, தரையில் விழுந்து வணங்கினார். கிருஷ்ணன் அவரை எழுப்பித் தழுவிக் கொண்டான் . நலன்களைப் பற்றி விசாரித்து, கையைப் பிடித்துக் கொண்டு பலராமனுடன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். யதுகுலத்தில் பிறந்த அக்ரூரரை, நந்தகோபரும், கிருஷ்ணனும், பலராமனும் நன்கு உபசரித்தார்கள். கம்ஸனுடைய அழைப்பைப் பற்றி அக்ரூரர் தெரிவித்தார். அதைக் கேட்ட கிருஷ்ணன், கோபர்களிடம் அதை அறிவித்தார். இரவு முழுவதும் அக்ரூரருடன் பல கதைகளைப் பேசிக்கொண்டு கழித்தார். கிருஷ்ணனைக் காணாததால், இன்று கிருஷ்ணன் சந்திரை, சந்திரபாகை, ராதை அல்லது மித்திரவிந்தையின் வீட்டில் தங்கியிருக்கிறான் என்று கோபிகைகள் மற்ற கோபிகைகளை சந்தேகித்தார்கள்.
அக்ரூரருடன் கிருஷ்ணன் மதுரா நகரம் செல்லப் போவதை அறிந்த கோபியர்கள் மிகவும் துயரமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்று கூடி, கவலையுடன் புலம்பினார்கள். அவனைத் தவிர வேறு கதியற்ற நம்மை எப்படி விட்டுப் போகிறான்? இதுதான் தெய்வம் நமக்கு விதித்ததோ? என்று வருந்தி, அழுது புலம்பினார்கள். கிருஷ்ணன், கோபியர்களின் துயரைத் தீர்க்க, அங்கு ஒரு தோழனை அனுப்பினார். கிருஷ்ணன் அந்த இரவின் முடிவில் நந்தனுடனும், நண்பர்களுடனும் கலந்து பேசி, மதுரா நகரம் செல்லத் தீர்மானித்து பலராமனை கூட்டிக் கொண்டு அக்ரூரருடன் மதுரா புறப்படும் ஏற்பாடுகள் தொடங்கின. “நான் விரைவிலேயே தங்களிடம் திரும்பி வருவேன். என்னோடு உல்லாசமாய் இருக்கும் தருணமும் விரைவிலேயே ஏற்படும். ஆனந்தமயமான அம்ருத வெள்ளத்தில் மூழ்கடிப்பேன்” என்று கோபியர்களை சமாதானம் செய்தார். அவர்களும் மிகுந்த வருத்தத்துடன், வெகுதூரம் போகும்வரையில் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைக்கண்ணால் அவர்களைப் பார்த்துக்கொண்டே பலராமனுடனும், அக்ரூரனுடனும் தேரில் ஏறிப் புறப்பட்டார். கோபர்களின் எண்ணற்ற தேர்களும் பின்தொடர்ந்தன. கானகத்திலுள்ள மிருகங்கள் வருந்தின. மரங்கள் வாடின.
அனைவரும் யமுனைக் கரையை அடைந்தார்கள்.
அக்ரூரர், நித்ய அனுஷ்டானம் செய்வதற்காக யமுனையில் மூழ்கினார். பரப்ரம்மமான கிருஷ்ணனை நீரினுள்ளேயும், வெளியே எழுந்ததும் தேரிலும் இருக்கக் கண்டார். இரண்டு இடங்களிலும் கண்ணனது தரிசனம் ஏற்படுகிறதே, என்ன ஆச்சர்யம்! என்று மெய்சிலிர்த்தார். மீண்டும் நீரில் மூழ்கினார். அங்கு அவரைப் பாம்பணையின்மேல் பள்ளி கொண்டிருப்பவராகவும், கரங்களில் சங்கு, சக்ரம், கதை, தாமரை ஏந்தியிருப்பவராகவும் கண்டார். தேவர்களும், சித்தர்களும் சூழ்ந்திருக்கக் கண்டார். அளவற்ற ப்ரும்மானந்த வெள்ளத்தில் திளைத்தார். பிரமனாகவும், சிவனாகவும், விஷ்ணுவாகவும் கண்டு ஸ்தோத்திரம் செய்தார். வைகுண்ட ஸ்வரூப காட்சியும் மறைந்தது. அனுபவித்த ஆனந்தத்தினால் மயிர்க்கூச்சலடைந்து தேரின் அருகே வந்தார்.
அவரிடம் கிருஷ்ணன், “ இந்த யமுனையின் ஜலம் மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறதா? உனக்கு ரோமாஞ்சம் உண்டாகியிருக்கிறதே” என்று அறியாதவர்போல் கேட்க, அக்ரூரரோ வைகுண்ட ஸ்வரூபத்தைக் கண்டதால் ஏற்பட்ட ஆனந்தத்தில் பேசமுடியாமல், பதில் கூறாமல் இருந்தார்
Sani peyarchi palangal 2023-2025 மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கும் திருக்கணிதப் படி சனிப்பெயர்ச்சி பலன்கள், மதிப்பெண்,… Read More
அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில், மாநில நெடுஞ்சாலை 114, திருவொற்றியூர் குப்பம், திருவொற்றியூர், சென்னை 600019 *இத்திருக்கோயில் திருவொற்றியூரில் எண்ணூர் விரைவு… Read More
வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம் | Thiruvilayadal Vanigar marriage story வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்… Read More
சமணரைக் கழுவேற்றிய படலம் | Thiruvilayadal Samanar Story சமணரைக் கழுவேற்றிய படலம் (Thiruvilayadal Samanar Story) இறைவனான சொக்கநாதரின்… Read More
பாண்டியன் சுரம் தீர்த்த படலம் | Thirugnana sambandar story in tamil பாண்டியன் சுரம் தீர்த்த படலம் (Thirugnana… Read More
மண் சுமந்த படலம் | Thiruvilayadal man sumantha padalam மண் சுமந்த படலம் (Thiruvilayadal man sumantha padalam)… Read More
Leave a Comment