கண்ணன் கதைகள் – 36

கோகுலத்திலிருந்து பிருந்தாவனம் செல்லுதல்

ஒரு நாள் கிருஷ்ணனும் பலராமனும், இடைச்சிறுவர்களுடன் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது வாசலில் ஒரு வயதான பெண்மணி,”பழம்! நாவல் பழம்” என்று கூவிக் கொண்டு சென்றாள். கிருஷ்ணனுக்கு உடனே அதைச் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது, ஆனால் அவனிடம் கொடுப்பதற்குப் பணம் இல்லை. அருகில் தானியங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட அவன், தன் பிஞ்சுக் கை நிறைய தானியங்களை அள்ளிக் கொண்டு, வாசலுக்கு ஓடினான். வழியெல்லாம் தானியம் இறைந்தது. வாசலில் நாவல் பழம் விற்றுக் கொண்டிருந்த பெண்மணியை அழைத்து, “இந்த தானியத்தைப் பெற்றுக் கொண்டு எனக்கு பழங்களை தருவாயா?” என்று கெஞ்சலாகக் கேட்டான். கண்ணனின் அழகும், துறுதுறுப்பும் அந்தப் பெண்ணின் மனதைக் கொள்ளை கொண்டன. அவனது கால் கொலுசின் சத்தம் அவள் காதில் இசையைப் போன்று ஒலித்தது. அவள் உடனே, “குழந்தையே! நீ வேண்டிய பழங்களை எடுத்துக் கொள்” என்று கூறினாள். பிறகு, கண்ணன் கொடுத்த, மீதி இருந்த கொஞ்சம் தானியங்களை பெற்றுக் கொண்டு, கண்ணனின் கை நிறைய பழங்களை அன்புடன் கொடுத்து மகிழ்ந்தாள். குடிசைக்கு சென்றதும் தன் கூடையைப் பார்த்த அவள் திகைத்துப் போனாள். கண்ணன் செய்த மாயத்தால், தானியங்கள் மிக உயர்ந்த ரத்தினங்களாகவும், தங்கமாகவும் மாறியிருந்தது. அன்புடன் கொடுத்தால், கண்ணன் அதைப் போல் பல மடங்கு அளிப்பான் என்பதை உலகுக்கு உணர்த்தவே இந்த அதிசயத்தை நிகழ்த்தினான்.

கண்ணனின் பெருமையை உணராத இடையர்கள், மரங்கள் முறிந்ததை கெட்ட சகுனமாக எண்ணினார்கள். வேறு இடத்திற்குச் செல்லத் தீர்மானித்தார்கள். உபநந்தன் என்ற வயது முதிர்ந்த இடையர், “மேற்கே பிருந்தாவனம் என்ற அழகிய காடு உள்ளது, பசுக்களுக்கும், ஆயர்குல மக்களுக்கும் வசிக்கத் தகுதியான இடமாக அது இருக்கும்” என்று கூறினார்.

நந்தனும், மற்ற இடையர்களும் கோகுலத்தை பசுக்கொட்டிலாகச் செய்தனர். தங்களது உடைமைகளை வண்டிகளில் ஏற்றினார்கள். வயதானவர்களும், பெண்களும், குழந்தைகளும் வண்டிகளில் ஏறினார்கள். யசோதையும் கண்ணனைத் தூக்கிக்கொண்டு வண்டியில் ஏறினாள். மற்ற கோபர்கள் பின்தொடர்ந்தனர். வழி நெடுக இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டு சென்றனர். வண்டிகளின் சத்தத்திலும், பசுக்களின் குளம்புச்சத்தத்திலும், கண்ணனின் அழகான பேச்சுக்களிலும் மனமகிழ்ந்த கோபியர்கள், அந்த நீண்ட வழியைக் கடந்ததைக்கூட அறியவில்லை. பிருந்தாவனத்தை அடைந்தார்கள். அங்கு, பச்சை மணிகளை வாரி இரைத்தது போன்ற புல்வெளிகளையும், பூத்துக் குலுங்கிய குந்த மரங்களால் நிறைந்திருந்த அழகான வனத்தையும் கண்டார்கள்.

பிருந்தாவனத்தில், அன்னங்களின் சப்தத்துடன், தாமரைப்பூ போன்ற முகத்துடனும் சுத்தமான நீருடனும், களிந்தனின் பெண்ணான யமுனை, வளைந்து வளைந்து சென்றாள். அழகாக அகவும் மயில்கள் நிறைந்திருந்தன. வானுயர்ந்த சிகரங்களுடன் கூடிய கோவர்த்தனம் என்னும் மலை இருந்தது. கண்ணனும், மற்றவர்களும் மிக்க ஆனந்தமடைந்தார்கள். புது வீடுகள் கட்டிக்கொண்டு இடையர்கள் அங்கு குடியேறினர்.

கண்ணனும் பலராமனும் சற்றே வளர்ந்ததும், கன்றுகளை மேய்க்கத் தொடங்கினார்கள். கண்ணன் இடைச்சிறுவர்களோடு பிருந்தாவனத்தின் அழகைக் கண்டு களித்தான். கண்ணன் இடைச்சிறுவர்களுடன் எங்கெங்கு செல்கிறானோ, அங்கெல்லாம் வளைந்து வளைந்து, ஆசை கொண்டவள்போல் வரும் யமுனையைப் பார்த்தான். வானை முட்டும் உயர்ந்த உச்சிகளோடு, பல்வேறு நிறங்களுடன் ஒளிவீசிக்கொண்டிருக்கும் கோவர்த்தனம் என்னும் மலையைக் கண்டான். அந்தக் காடு, பசுமையான புல்வெளிகளுடன், பசுக்களுக்கு மிகவும் ஏற்றதாய் இருந்தது. கண்ணன், பலராமனோடும் ஆயர் சிறுவர்களோடும், கன்றுகளை மேய்த்துக் கொண்டு, மகிழ்ச்சியாய் இருந்தான்

Leave a Comment

Enable Notifications Allow Miss notifications