Krishna ashtakam lyrics in tamil

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் (Krishna ashtakam lyrics in tamil)

*ஶ்ரீகிருஷ்ணாஷ்டகம்*🙏

அஷ்டகம் என்ற எட்டு ஸ்லோகத்தால் தெய்வங்களைத் துதித்து வணங்குதல் சிறப்பு.

அந்த வகையில் *ஸ்ரீகிருஷ்ணனைத் துதிக்க உதவும் எட்டு ஸ்லோகங்களின் தொகுப்பு – கிருஷ்ணாஷ்டகம்.* ‘நினைத்துப் பார்க்க முடியாத நல்ல பலன்களை எல்லாம் கொடுக்கக் கூடியது இந்த கிருஷ்ணாஷ்டகம்‘ என்பதை இதன் கடைசி ஸ்லோகமான பலஸ்ருதி சொல்கிறது.

தமிழ்ப் பொருளோடு இந்த கிருஷ்ணாஷ்டகத்தைச் சொல்லி சகல பலன்களையும் பெறுவோம்.

*ஸ்ரீகிருஷ்ணாஷ்டகம்*🙏

1 *வசுதேவ ஸூதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம் தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*

*பொருள்:*

வசுதேவரின் குமாரன்; கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன்; தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

2.*அதஸீ புஷ்ப ஸங்காசம், ஹாரநூபுர சோபிதம் ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*

*பொருள்:*

காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன்; மாலை, தண்டை, சலங்கை இவற்றால் அழகாகத் திகழ்பவன்; ரத்தினம் இழைத்த கைவளைகள் தோள் அணிகள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

3.*குடிலாலக ஸம்யுக்தம் பூர்ண சந்த்ர நிபானனம் விலஸத் குண்டல தரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*

*பொருள்:*

சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவன்; முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவன்; பளீர் என ஒளி விடும் குண்டலங்கள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

4 *மந்தார கந்த
ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்ப்புஜம் பர்ஹிபிஞ்சாவ சூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*

*பொருள்:*

மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் கூடியவன்; அழகான புன்னகை கொண்டவன்; நான்கு கைகள் உடையவன்; மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

5.*உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் நீல ஜீமூத ஸந்நிபம் யாதவானாம் சிரோ ரத்னம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*

*பொருள்:*
மலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவன்; நீருண்ட மேகத்தைப் போன்றவன்; யாதவர்களின் ரத்னமாக முடிசூடா மன்னனாகத் திகழ்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

6.*ருக்மிணீ கேளீ ஸம்யுக்தம் பீதாம்பர ஸூசோபிதம் அவாப்த துளசீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*

*பொருள்:*
ருக்மிணி தேவியுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்பவன்; பீதாம்பரத்துடன் ஒளி பொருந்தியவனாகத் திகழ்பவன்; துளசியின் பரிமளத்தை உடையவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

7.*கோபிகாநாம் குசத்வந்த்வ குங்குமாங்கித வக்ஷஸம் ஸ்ரீநிகேதம் மஹேஷ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*

*பொருள்:*
கோபிகை கொங்கைகளின் குங்குமக்குழம்பு அடையாளத்தை மார்பில் கொண்டவன்; ஸ்ரீமகாலட்சுமிக்கு இருப்பிடமானவன். மிகப் பெரிய வில்லாளியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

8.*ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வநமாலா விராஜிதம் சங்க சக்ரதரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*

*பொருள்:*
ஸ்ரீவத்ஸம் எனும் மறுவை அடையாளமாகக் கொண்டவன்; அகன்ற மார்பை உடையவன்; வனமாலை சூடியிருப்பவன்; சங்கு சக்கரங்களைத் தரித்திருப்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.

*க்ருஷ்ணாஷ்டகம் இதம் புண்யம் ப்ராதருத்தாய ய படேத் கோடி ஜந்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி*
*பொருள்:*

எவன் ஒருவன் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணாஷ்டகம் என்னும் இந்த எட்டு சுலோகங்களைப் பற்றி எண்ணுகிறானோ அவன், கோடிப் பிறவிகளில் செய்த பாவம் அடியுடன் நாசமடையும். அப்படியிருக்க, இவற்றை காலை நேரத்தில் ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன் படித்து வணங்கினால், அவர்களுக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும்!

ஶ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்🙏

ஓம் நமோ நாராயணாய🙏

 

Leave a Comment