கண்ணன் கதைகள் – 26
கிருஷ்ணாவதாரத்தின் காரணம் / கிருஷ்ணாவதார நோக்கம்
முன்பு தேவாசுர யுத்தம் நடந்தபோது பல அசுரர்கள் மோக்ஷமடைந்தனர். சிலர் கர்மவசத்தால் கம்ஸன் முதலிய அசுரர்களாகப் பிறந்தார்கள். அவர்களின் பாரத்தால் பூமாதேவி துன்பமடைந்து, தேவர்களுடன் பிரமனை அண்டினாள்.
“பிரம்மதேவனே! அசுரர்களின் பாரத்தால் நான் கடலில் மூழ்கிவிடும் நிலையில் உள்ளேன்”என்று அழுத பூமாதேவியையும், தேவர்களையும் பார்த்த பிரமன், அவர்களிடம் பரிதாபப்பட்டு, “தேவர்களே! பூமாதேவியே! உங்கள் கவலையை அறிந்தேன். உங்கள் அனைவரையும் காக்கும் சக்தி விஷ்ணுவுக்கே உள்ளது, நாம் அனைவரும் பாற்கடல் செல்வோம்” என்று கூறினார். பிறகு அனைவரும் பரமசிவனுடன் சேர்ந்து, குளிர்ந்த காற்றுடன் இருக்கும் பாற்கடலின் கரையை அடைந்தனர். அனைவரும் மகாவிஷ்ணுவைத் தியானித்தனர்.
தியானத்தின்போது பிரமன் மகாவிஷ்ணுவினுடைய சொற்களை உள்ளத்தில் கேட்டார். “ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் ஸ்ரீமன் நாராயணன் கூறிய சொற்களைக் கூறுகிறேன், கேளுங்கள்” என்று ஆனந்தமளிக்கும் அந்த சொற்களைக் கூறத் தொடங்கினார். “பூமாதேவிக்கும், தேவர்களுக்கும் அசுரர்களால் ஏற்படும் துன்பத்தை அறிவேன். அதைப் போக்க யாதவ குலத்தில், வசுதேவருக்கும்,தேவகிக்கும் மகனாக அவதரிக்கிறேன். தேவர்களும், தேவப்பெண்டிரும் என்னைப் பூஜிக்க பூமியில் பிறப்பார்கள்” என்று விஷ்ணு கூறியதை பிரமன் கூறினார். அதைக் கேட்டு அனைவரும் மகிழ்ந்து திரும்பிச் சென்றனர்.
திருமால், யாதவ குலத்தில், வசுதேவருக்கும்,தேவகிக்கும் மகனாக அவதரிப்பதாக வாக்களித்துவிட்டார். யார் அவர்கள்? சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு, அரசன் யதுவின் வம்சத்தில், அரசனாக இருந்தவர் சூரசேனன். இவரது புத்திரன் வசுதேவர். யது வம்சத்தில் போஜகுலத்தில் தோன்றிய உக்ரசேனன், யமுனைக்கரையில் இருந்த, யாதவர்களின் தலைமையிடமான மதுராவை ஆண்டான். அவனுக்கு கம்ஸன் என்ற ஒரு மகன் இருந்தான். அவன், தனது சொந்தத் தந்தையான உக்ரசேனனையே சிறையிலிட்டு, அப்பாவி ஜனங்களைக் கொடுமை செய்து, கொடுங்கோலாட்சி நடத்தி வந்தான். உக்ரசேனனின் தம்பியான தேவகனுக்கு, தேவகி என்ற மிக அழகு வாய்ந்த ஒரு பெண் இருந்தாள். கம்ஸனுக்கு, தன் தங்கை தேவகியின் மீது மிகுந்த பாசம்.
சூரசேனனின் மகன் வசுதேவனுக்கு, தேவகன் மகள் தேவகியைத் திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. திருமணமும் நடந்து முடிந்தது. யாதவ குலத்தில் அனைவரும் மிக்க மகிழ்ச்சியில் இருந்தார்கள். கம்ஸன், தங்கையின் மீதுள்ள பாசத்தால், தம்பதியர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், அவளைப் புகுந்த வீட்டில் கொண்டு விடுவதற்காக, அவர்கள் அமர்ந்திருந்த ரதத்தைத் தானே ஓட்டிச் சென்றான். அப்போது, “மூடனே! இவளுடைய எட்டாவது பிள்ளை உன்னைக் கொல்வான்” என்ற அசரீரி வாக்கு கேட்டது. பயந்த கம்ஸன், தேவகியைக் கொல்ல வாளை எடுத்தான். தேவகியின் கூந்தலைப் பற்றி இழுத்தான். வசுதேவர் சமாதானப்படுத்தி, குழந்தைகள் பிறந்தவுடன், தன் குழந்தைகளை அவனிடம் தந்து விடுவதாகச் சொன்னார். அதனால் அவளைக் கொல்லாமல் விட்டான். ஆனால், அவர்கள் இருவரையும் சிறை வைத்தான்.
காலம் ஓடியது. தேவகி முதல் குழந்தையைப் பெற்றாள். முதல் குழந்தையை வசுதேவர் கொடுத்தும், கம்ஸன் கருணையால் கொல்லவில்லை. துஷ்டர்களிடமும் சில சமயம் கருணை இருக்கிறது!
வசுதேவர் சென்றதும், நாரதர் கம்ஸனைக் காண வந்தார். நாரதர் கம்ஸனிடம், “அரசனே! நீங்கள் அசுரர்கள். யாதவர்களோ தேவர்கள். இது நீ அறியாததா? மாயாவியான விஷ்ணு உன்னைக் கொல்ல அவதாரம் செய்யப் போகிறான்” என்று சொன்னார். அதைக் கேட்ட கம்ஸன் குழப்பமடைந்தான். யாதவர்களை நகரத்தை விட்டு விரட்டினான். வசுதேவருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றான்.
இவ்விதமிருக்க, மகாவிஷ்ணுவின் சித்தப்படி, ஆதிசேஷன் தேவகியின் ஏழாவது கர்ப்பத்தை அடைந்தான். திருமாலின் சக்தியான மாயையானவள், திருமாலின் கட்டளைப்படி அந்த கர்ப்பத்தை, வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணியிடம் கொண்டு சேர்த்தாள். மாயையிடம் விஷ்ணு, ” நீ செய்த இந்த உதவியால், உலகில் உள்ளோர், உன்னை என் தங்கையாகவும், துர்க்கா என்றும் பெயரிட்டு அழைப்பார்கள்” என்று வரமளித்தார். தேவகி தனது ஏழாவது கர்ப்பம் கலைந்துவிட்டது என்று கம்ஸனிடம் கூறினாள். தேவகிக்குப் பிறக்கப் போகும் எட்டாவது குழந்தைக்காக கம்ஸன் காத்திருந்தான்.
கோகுலத்தில், ரோகிணி அழகு மிக்க ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தைக்கு, ‘பலராமன்’ என்று பெயரிட்டனர். இவ்வாறு பலராமன் அவதரித்து, கோகுலத்தில் வளர்ந்து வந்தார்.
பூமாதேவிக்கும், தேவர்களுக்கும் கொடுத்த வாக்கின்படி, திருமால் தேவகியின் வயிற்றில் எட்டாவது கருவாக வந்து அடைந்தார். திருமாலின் கட்டளைப்படி, மாயையும் யசோதையின் வயிற்றில் கருவாக வந்து அடைந்தாள்