Aanmeega Kathaigal

கண்ணன் கதைகள் – 56 குருவாயூரப்பனும் குந்துமணியும்

கண்ணன் கதைகள் – 56

குருவாயூரப்பனும் குந்துமணியும்

குருவாயூரப்பன் கதைகள்

குண்டுமணி சிவப்பு, கறுப்பு நிறங்களில் சிறிய உருண்டை வடிவில் இருக்கும். கேரளாவில் அநேகமாக அனைவரது இல்லங்களிலும் இந்த மரம் இருக்கும். மஞ்சாடி என்ற மரத்தில் இருந்து வரும் விதை என்பதால் இதை கேரளாவில் “மஞ்சாடிக்குரு” என்று சொல்வார்கள். நாங்கள் கோவையில் இருந்தபொழுது, சின்ன வயதில், பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு தினம் சென்று அங்கு இருக்கும் குண்டுமணிகளைப் பொறுக்கி வீட்டிற்கு எடுத்து வருவோம். பிறகு அதை நன்கு கழுவி “பல்லாங்குழி” விளையாட உபயோகப்படுத்துவோம். சென்ற வருடம் கூட கேரளாவில் ஒரு நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தபொழுது நிறைய குண்டுமணிகளைப் பொறுக்கி வந்தோம். ”

குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும், குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும். பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும்.

நாங்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் வேண்டிக்கொண்டு வீட்டிலேயே ஒரு சின்னப் பெட்டியில், 7 மிளகு, கொஞ்சம் கடுகு, 7 குந்துமணி, ஒண்ணேகால் ரூபாய் எடுத்து வைத்து, குருவாயூர் செல்லும்போது அதை அங்கு சமர்ப்பிப்பது வழக்கம்.

அது சரி. குருவாயூர் கோயிலில் இதற்கு அப்படி என்ன விசேஷம்? இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு.

முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள். அவளுக்கு ஸ்ரீகுருவாயூரப்பன் மிகவும் இஷ்டமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை அழைத்துச் செல்வார் யாருமில்லை. பணவசதி கிடையாது. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும், அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் கொள்ளை ஆசை.

அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து, நன்கு அலம்பி, துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள்.

ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் பயணம் புறப்பட்டாள். வசதி படைத்தவள் அல்லவே ! அதனால் நடந்தே செல்லத் தீர்மானித்தாள். தொலை தூரம். வயது வேறு ஆகிவிட்டது. நடுநடுவே இளைப்பாறிக் கொள்வாள். ஸ்ரமமாக இருப்பினும் “கண்ணனைக் காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்கவும் வேண்டுமே” என்று தொடர்ந்து பயணம் செய்தாள்.

ஒரு மண்டலம் பயணம் செய்து குருவாயூரை அடைந்தாள். கோவிலையும்அடைந்தாள். அவள் சென்ற நாள் அந்த மாதத்தின் முதல் நாள். அவள் கோவிலைஅடைந்த சமயம், கோவிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஏதோ விசேஷம் என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன், அவன் பக்தியை வெளிப்படுத்த, கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அதனால்தான் அந்த பரபரப்பு. சேவகர்கள், அரசன் வருவதால் வழியை விலக்கிக் கொண்டிருந்தனர்.

இந்த வயதான பெண்மணி, தன்னுடைய பையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. கிழவியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது.

அதே சமயம், கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. அனைவரும் ” என்ன ஆயிற்று?” என்று பதறினர். கோவில்பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை. கலங்கிய மன்னனும் மற்றவர்களும் குருவாயூரப்பனிடமே ப்ரஸ்னம் கேட்டனர்.

அப்பொழுது கர்ப்பக்ருஹத்திலிருந்து ” நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்திவிட்டீர்கள். என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்குவேண்டும்” என்று அசரீரி கேட்டது. கீழே சிதறிக் கிடந்த குண்டுமணிகளை, அனைவரும் பொறுக்கி எடுத்தனர். அதை அந்த வயோதிகப் பெண்மணியிடம் கொடுத்து அவளிடம் மன்னிப்பும் கேட்டனர். அவளை ஸகல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர். அவள் ஆசையுடன் அதை அப்பனிடம் சமர்ப்பித்ததும், யானையின் மதம் அடங்கியது. அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது .

பகவான் வஸ்துக்களின் உயர்வு தாழ்வைப் பார்ப்பதில்லை. உள்ளத்தில் தூய்மையான அன்புடன் தரப்படும் பக்தியின் மேன்மையைத்தான் பார்க்கிறான்.

Share
ஆன்மிகம்

Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி?

    தைப்பூசம் தைப்பூசம் அன்று முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி? 🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔… Read More

    3 days ago

    Today rasi palan 26/1/2025 in tamil | இன்றைய ராசிபலன் ஞாயிற்றுக்கிழமை தை – 13

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் _* _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *தை -… Read More

    3 hours ago

    தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் – தைப்பூச விரதமுறை | Thaipusam 2025

    Thaipusam 2025 - தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் தைப்பூசம் / Thaipusam என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டு வரும்… Read More

    3 days ago

    தைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள் | Thaipusam special information

    தைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள், Thaipusam special informations 1. தைப்பூசம் (Thaipusam special informations)  இந்தியாவில்… Read More

    3 days ago

    அள்ளிக் கொடுப்பதில் பாடல் வரிகள்| Alli koduppathil song lyrics tamil

    அள்ளிக் கொடுப்பதில் பாடல் வரிகள்| Alli koduppathil song lyrics tamil அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன்… Read More

    1 month ago

    பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்| Pachai Mayil Vahananae Lyrics Tamil

    பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்| Pachai Mayil Vahananae Lyrics Tamil பச்சை மயில் வாகனனே – சிவ… Read More

    2 weeks ago