கண்ணன் கதைகள் – 69
ஞானப்பான
கேரளாவிலுள்ள மலப்புரத்தில் கீழாத்தூர் என்னும் ஊரில் வாழ்ந்தவர் பூந்தானம் நம்பூதிரி. பூந்தானம் என்பது அவர்கள் இல்லத்தின் பெயர். இல்லப்பெயரே அவரது பெயராக நிலைத்துவிட்டது. சிறந்த பக்திமான். குருவாயூரப்பனிடம் மிகுந்த பக்தி கொண்டவர். மலையாளத்தில் பல ஸ்லோகங்கள் கண்ணன் மீது எழுதியுள்ளார்.
சரி, அதென்ன ஞானப்பான? மேலே படியுங்கள்.
பூந்தானத்திற்குத் தன் மடியில் கொஞ்சி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என்று குறை. குருவாயூரப்பனிடம் பிரார்த்திக்க, நீண்ட காலம் கழித்து அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்குப் பரம சந்தோஷம். நாமகரணம் செய்தார். குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆனபோது அன்னப்ராசனம் செய்ய முஹூர்த்தம் குறித்து, உறவினர்களை எல்லாம் அழைத்திருந்தார். அன்னப்ராசன தினத்தன்று, வீட்டில் உள்ள எல்லாரும் சீக்கிரமே எழுந்துவிட்டனர். அவர் மனைவி, குழந்தையை நீராட்டி, புதுத் துணிகள் உடுத்தி விட்டு, அலங்கரித்து, தாய்ப்பால் கொடுத்துவிட்டு, குழந்தையை ஒரு துணியில் சுற்றித் தூங்க வைத்தாள். குழந்தை உறங்க ஆரம்பித்ததும் உறவினர்களை வரவேற்கச் சென்றாள்.
கேரளத்தில், மிகவும் மடியாக இருக்கும் பெண்கள் கையில் தாழங்குடையையையும், மேலே வெள்ளைத் துணியையும் போர்த்தியிருப்பார்கள். வந்திருந்த பெண்களில் ஒருவர், தான் போர்த்தியிருந்த துணியை, குழந்தை இருப்பதை அறியாமல் அதன்மேல் போட்டாள். பின்னால் வந்த அனைவரும் மேலே மேலே துணிகளைப் போட்டார்கள். அன்னப்ராசனம் நடக்கவேண்டிய நேரம் நெருங்கவே, குழந்தையை எடுத்து வர உள்ளே சென்று பார்த்த போது, குழந்தை மூச்சு முட்டி இறந்துவிட்டிருந்தது. நீண்ட காலம் கழித்து பிறந்த குழந்தை இறந்ததைக் கண்ட
பூந்தானத்தின் மனைவி நிலைகுலைந்து போனாள். அழுது அரற்றினாள். கிருஷ்ணா ஏன் இப்படி? என்று கதறினார் பூந்தானம்.
அவரது சோகத்தைக் கண்ட குருவாயூரப்பன், “பூந்தானம் கவலைப் படாதே! இனி நானே உன் பிள்ளை, என்று கூறி அவர் மடியில் அமர்ந்து, உன் மடியில் படுத்துக் கொள்ளட்டுமா?” என்று கேட்டான். கண்ணனைத் தன் மடியில் கண்ட பூந்தானம், பரவசமடைந்து, “கண்ணனே என் மடியில் குழந்தையாகத் தவழும்போது, எனக்கென்று பிள்ளையும் வேண்டுமோ?” என்று பக்தியில் தன்னை மறந்தார். ‘ஞானப்பான’ என்ற தத்துவ முத்துக்கள் அவர் வாயிலிருந்து கவிதையாக வந்து விழுந்தது. சோகமே ஸ்லோகமானது. ‘ஞானப்பான’ எளிய மலையாள நடையில் உயர்ந்த தத்துவக் கருத்துகளைக் கொண்ட ஓர் காவியம். ஞானத்தைத் தரும் பானை அதாவது ஞானக் களஞ்சியம் என்றே சொல்லலாம்.
‘ஞானப்பானை’ சாஸ்வதமற்ற வாழ்க்கையைப் பற்றிய ஓர் கவிதை.
மனிதப்பிறவியின் அர்த்தத்தை மிக அழகாய்ச் சொல்லும் இந்தக் கவிதையிலிருந்து சில துளிகள்:
“எத்ர ஜென்மம் மலத்தில் கழிஞ்ஞதும்
எத்ர ஜென்மம் ஜலத்தில் கழிஞ்ஞதும்
எத்ர ஜென்மங்ஙள் மண்ணில் கழிஞ்ஞதும்
எத்ர ஜென்மங்ஙள் மரங்ஙளாய் நின்னதும்
எத்ர ஜென்மங்ஙள் மரிச்சு நடன்னதும்
எத்ர ஜென்மங்ஙள் ம்ருகங்ஙள் பஷுக்களாய்”
மானிடப் பிறவி அரியது. முன்பு புழுவாய், பூச்சியாய், மிருகங்களாய், மரங்களாய், பல ஜன்மங்களை எடுத்து பின்னர் இப்போது கிடைத்திருக்கிறது இந்த மனிதப் பிறவி. குறுகிய காலம் மட்டுமே இருக்கும் இந்த வாழ்க்கையில் நாம் பகவானது திருநாமத்தை உச்சரிக்காமல் இருக்கின்றோமே? என்று ஆச்சர்யப்படுகிறார் பூந்தானம்.
“இன்னலேயோளம் எந்தென்னறிஞ்ஞிலா
இனி நாளேயும் எந்தென்னறிஞ்ஞிலா
இன்னீக்கண்ட தடிக்கு வினாசவும்
இன்ன நேரம் என்னேதுமறிஞ்ஞிலா”
நேற்று வரை என்ன நிகழ்ந்தது என்று அறியவில்லை, இனி நாளை என்ன நடக்கும் என்றும் தெரியவில்லை, இன்றிருக்கும் இந்த சரீரத்திற்கு அழிவு எந்த நேரத்தில் என்றும் அறிவதில்லை.
“நம்மெயொக்கேயும் பந்திச்ச ஸாதனம்
கர்மம் என்னறியேண்டது முன்பினால்
முன்னில் இக்கண்ட விஸ்வம் அசேஷவும்
ஒன்னாயுள்ளொரு ஜ்யோதிஸ்வரூபமாய்”
நம் அனைவரையும் இந்த உலகத்தில் கட்டி இருப்பது கர்மமே என்பதை அறிய வேண்டும். ப்ரளயத்தில் நாம் காணும் இந்த உலகமெல்லாம் ஒன்றேயான ஒரே ஜோதிஸ்வரூபத்தில் ஒடுங்குகின்றது.
க்ருஷ்ண க்ருஷ்ண முகுந்தா ஜனார்த்தனா
க்ருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே
அச்யுதானந்த கோவிந்த மாதவா
சச்சிதானந்த நாராயணா ஹரே!!!