கண்ணன் கதைகள் – 57
கைசிக ஏகாதசி / நம்பாடுவான்
கரண்ட மாடு பொய்கையுள் கடும்பனைப் பெரும் பழம் புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்
திரண்டு தோளி ரணியன் சினங்கொளாக மொன்றையும்
இரண்டு கூறு செய்துகந்த சிங்க மென்ப துன்னையே
-திருமழிசையாழ்வார்!
திருக்குறுங்குடியின் அருகே உள்ள மகேந்திரகிரி மலையடிவாரத்தில் வசித்து வந்த ஹரிஜன வகுப்பை சேர்ந்தவர் நம்பாடுவான் என்னும் பாணன். வடிவழகிய நம்பியின் மேல் மிகவும் பக்தி கொண்டவர். அக்காலத்தில் அவருக்கு கோயிலுக்கு செல்ல அனுமதியில்லாமல் இருந்தது. கோயிலின் வாசலிலிருந்து பகவானை பார்க்க முடியாது. ஆயினும், வருத்தப்படாமல் தினமும் அதிகாலையில் நீராடிவிட்டு, கைசிகம் என்ற பண்ணில் (பைரவி ராகம்) திருக்குறுங்குடி நம்பியின் புகழை இசைத்து, திருப்பள்ளியெழுப்பும் சேவையை செய்து வந்தார். அவ்விதம் ஒரு நாள், கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசியன்று கோவிலுக்கு சென்றபொழுது, ஒரு பிரம்ம ராக்ஷஸன் அவரைத் தடுத்து, “ நீ எனக்கு உணவாக வேண்டும்” என்றது. நம்பாடுவானோ, “விரதம் முடித்துவிட்டு பெருமாளை வழிபட்டபின் உனக்கு உணவாகிறேன்” என்று சொல்ல, பிரம்ம ராக்ஷஸன் அதை நம்பவில்லை. அதற்கு நம்பாடுவான்,”பெருமாளின் உண்மையான பக்தன் பொய் சொல்லமாட்டான்” என்று கூறி பதினெட்டு விதமான சத்தியங்களைச் செய்கிறான். 16 சத்தியங்களைச் செய்தும் ராக்ஷஸன் நம்பாடுவானை விடவில்லை. 17-வதாக நம்பாடுவான்,” எவன் ஸர்வவ்யாபியான வாசுதேவனை ஆராதனை பண்ணாமல் இதர தேவதைகளை உபாஸிக்கிறானோ அவனது பாவத்தை அடைவேன்” என்று சொன்னதும் தனது பிடியை விட்டது. பிறகு நம்பாடுவான், 18–வதாக ,”எல்லா உயிரினங்களையும், ஜனங்களையும் காப்பவனும், இயக்குபவனும் , தேவர்கள், முனிவர்கள் முதலியோரால் ஆராதிக்கப்படுபவனுமான அந்த ஸ்ரீமன் நாராயணனையும் மற்ற தெய்வங்களையும் சமமாக பாவிப்பதால் வரும் பாவத்தை நான் அடையாக கடவேன்” என்று சொன்னான். இந்த வார்த்தையைக் கேட்டதும், பிரம்ம ராக்ஷஸ்,” சரி சரி சீக்கிரம் உனது விரதத்தை முடித்துவிட்டு வா” என்று அவனை அனுப்பியது.
நம்பாடுவான் கோவிலுக்கு ஓடிச் சென்று, ” பெருமானே! இனி உம்மைப் பாடவே முடியாதோ? நான் உம்மைப் பார்க்கவே முடியாதோ ?” என்று எண்ணிக் கொண்டு, கைசிகப் பண்ணை உருக்கமாகப் பாடினார். அப்போது பெருமாள், த்வஜஸ்தம்பத்தை விலகி இருக்கச் சொல்லி நம்பாடுவானுக்கு தரிசனம் தந்தார். திருக்குறுங்குடியில் மற்ற ஸ்தலங்களைப் போலல்லாமல் த்வஜஸ்தம்பம் சற்று விலகி இருப்பதை இப்போதும் காணலாம்.
பிறகு, தான் சத்தியம் செய்தபடி பிரம்ம ராக்ஷஸை நோக்கிச் சென்றபோது, திருக்குறுங்குடி எம்பெருமான் , ஒரு கிழப்பிராம்மணன் வேடத்தில் நம்பாடுவானுக்கு எதிரே தோன்றி, “இங்கே ஒரு பிரம்ம ராக்ஷஸ் இருக்கிறது. அதன் பசிக்கு இரையாகாமல் வேறு வழி செல்” என்று கூறினார். ஆனால், நம்பாடுவான் அதை மறுத்து, அந்த ராக்ஷஸனுக்கு உணவாவதற்காகவே செல்கிறேன் என்று கூறினான். இதைக்கேட்ட பிராம்மணன்,”ஆபத்துக் காலத்திலும், பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டிய சந்தர்ப்பத்திலும், பெண்களுடன் ஏகாந்தமாய் இருக்கும்போதும் பொய் சொல்வதும், சத்தியம் செய்வதும், பாபமாகாது” என்று கூற, நம்பாடுவான்,”நான் செய்து கொடுத்த சத்தியத்தை ஒரு போதும் மீறமாட்டேன்” என்று கூறி, வாக்களித்தபடி பிரம்ம ராக்ஷஸனிடம் சென்று என்னை உண்டு உன் பசியைப் போக்கிக் கொள் என்று கூறினான். நம்பாடுவானைப் பார்த்த பிரம்ம ராக்ஷஸ், “இப்போது எனக்குப் பசியே இல்லை. நான் என் மனதை மாற்றிக்கொண்டுவிட்டேன். நீ விரதத்தால் பெற்ற பலனை எனக்குக் கொடு என்று கேட்க, நம்பாடுவான் மறுத்தான். இன்றைய தினம் உனக்குக் கிடைத்த விரதப் பலனில் பாதியையாவது எனக்குக் கொடுத்தால் நான் சாபவிமோசனம் பெற்று சுய உருவைப் பெறுவேன்” என்றது. நம்பாடுவான், “உனக்கு ஏன் இந்த பிரம்ம ராட்சச உருவம் வந்தது? என்று கேட்க, பிரம்ம ராக்ஷஸன் தனது கதையைக் கூறினான். “நான் முற்பிறவியில் யோகசர்மா என்ற அந்தணன். யாகத்தை இழிவாகக் கருதிய நான், ஒரு யக்ஞத்தைத் தவறாகச் செய்து கொடுத்தேன். யாகத்தின் நடுவில் இறந்தேன். அதனால் , இவ்வாறு அலைகிறேன்” என்றது. மேலும், உனது தரிசனத்தால் எனக்கு முன் ஜன்ம ஞாபகம் உண்டானது என்றும் கூறியது.
நம்பாடுவான், கைசிகப் பண்ணினால் பகவானைப் பாடிய தன் புண்ணிய பலனில் பாதியை கைசிக துவாதசியன்று பிரம்மராட்சஸனுக்கு தத்தம் செய்துகொடுக்க, அந்த பிரம்ம ராட்சதனின் சாபம் நீங்கியது. நம்பாடுவானும் பலகாலம் பெருமாளை போற்றிப் பாடி மோக்ஷத்தை அடைந்தான்.
இந்த வரலாற்றை வராகமூர்த்தியே தன் மடியிலிருந்த பிராட்டிக்கு உரைத்ததாக புராணம் கூறுகிறது. இன்றும், இந்தப் புராணம் திருக்குறுங்குடியில் நாடக ரூபமாக கைசிக ஏகாதசியன்று இரவு நடக்கின்றது. இதில் நம்பாடுவான், பிரம்ம ராட்சசன், நம்பிக் கிழவன் ஆகிய மூன்று பாத்திரங்களில் நடிப்பவர்கள் 10 நாட்கள் விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.
ஒவ்வொரு கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி அன்று எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் கைசிக புராணம் இன்றும் வாசிக்கப்படுகிறது.
இந்த வரலாற்றை கைசிக ஏகாதசி தினம் அன்று படித்தாலும் கேட்டாலும் முன்னோர் சாபமும், துன்பங்களும் அகலும். பெருமாள் அருளும் புண்ணியமும் கிடைக்கும். நாமும் இந்த வரலாற்றைப் படித்து, திருக்குறுங்குடி நம்பியின் அனுக்ரஹத்தைப் பெறுவோமாக!
நம்பாடுவான் பிரம்மராக்ஷஸுக்கு சத்தியம் செய்து கொடுத்தபோது 18 வகை பாவங்களைக் குறிப்பிடுகிறான். அவற்றை வராக புராணத்திலே காணலாம். அவையாவன:
1. சத்தியம் தவறுதல்
2. பிறன் மனைவியிடம் இணைதல்.
3. தன்னுடன் உணவருந்துபவர்களிடம் ஏற்றத் தாழ்வுகளைக் காட்டி, தனக்கு சிறந்ததையும், உடன் உண்பவருக்கு அற்பமானதையும் அளித்தல்.
4. பிறருக்கு தானம் செய்த பொருளை திரும்பப்பெறுதல்.
5. அழகுள்ள பெண்ணை இளமையில் மணந்து, அனுபவித்து, வயதான காலத்தில் குற்றம் கூறி அவளைக் கைவிடுதல்.
6. அமாவாசையன்று மனைவியிடம் சுகம் அனுபவித்தல்.
7. உணவு கொடுத்து பசியாற்றியவனை நிந்தித்தல்.
8. ஒருவனுக்கு தன் பெண்ணை திருமணம் செய்து தருவதாக வாக்களித்து விட்டு, அவ்வாறு செய்யாமல் ஏமாற்றுதல்.
9. சஷ்டி, அஷ்டமி, அமாவாசை, சதுர்த்தி நாட்களில் ஸ்நானம் செய்யாமல் உண்ணுதல்.
10. தானம் தருவதாக வாக்களித்து, பின் தானம் செய்யாதிருத்தல்.
11. நண்பன் மனைவிமீது இச்சை கொள்ளுதல்.
12. குரு பத்தினி, மன்னன் மனைவி மீது காமம் கொள்ளுதல்.
13. இரண்டு மனைவியரை மணந்து, ஒருத்தியிடம் ஆசையும் இன்னொருத்தியை அலட்சியமாகத் தள்ளி வைத்தல்.
14. கற்புக்கரசியான தன் பத்தினியை யௌவனத்திலேயே புறக்கணித்தல்.
15. தாகத்துடன் வரும் பசுவைத் தண்ணீர் குடிக்க விடாமல் தடுத்தல்.
16. பிரம்மஹத்தி செய்தவன், பஞ்ச மகாபாவங்கள் செய்பவன் பெறும் பாபம்.
17. வாசுதேவனைவிட்டு இதர தெய்வங்களை ,தேவதைகளை உபாசனை செய்தல்.
18. ஸ்ரீமன் நாராயணனோடு மற்ற தெய்வங்களையும் மற்ற தேவதைகளையும் சமமாக நினைத்தல்.
மேற்கண்ட பாவங்களைச் செய்தவனுக்கு கிட்டும் பாவமும், தண்டனையும் , செய்த சத்தியத்தை மீறினால் என்னை வந்துசேரட்டும் என்கிறான் நம்பாடுவான்.
மகாளய பித்ரு பக்ஷ கேள்வி பதில்கள் | Mahalaya Patcham Questions 18/09/24 - 03/10/24 - தர்ம சாஸ்த்ரம்… Read More
முன்னோரை ஆராதிப்பதற்கு ஏற்ற மகாளய அமாவாசை | Mahalaya Amavasya 🌚 புரட்டாசி மாதத்தில் வரும் எல்லா சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு… Read More
மஹாளய பட்சம் பற்றிய தகவல்கள் | Mahalaya patcham Tamil | Mahalaya paksha information *மஹாளய பட்சம்* (30.9.2023… Read More
Srardham procedure in tamil சிராத்தம் விதிமுறைகள் (Srardham procedure) பரலோகம் பித்ருலோகம் பித்ரு கர்மா நாம் ஒரு விஷயத்தை… Read More
ஞான சரஸ்வதி கோவில் ஆதிலாபாத் தெலுங்கானா பஸாரா ஞான சரஸ்வதி கோயில் - Basara Saraswathi temple பஸாரா ஞான… Read More
சந்திரனுக்குக் கிடைத்த சாபம் | Chandran Vinayagar Story Tamil சந்திரனுக்குக் கிடைத்த சாபம்! ஒருமுறை, சந்திரன் கயிலைக்குச் சென்றிருந்தபோது,… Read More
Leave a Comment