கண்ணன் கதைகள் (6)

சிவப்புக் கௌபீனம்

முந்தைய பதிவான “கண்ணன் கதைகள் (5)” -ல் சிவப்புக் கௌபீனம் பற்றிப் படித்திருப்பீர்கள். அதென்ன சிவப்புக் கௌபீனம்? குருவாயூரப்பனின் லீலைகளில் அதுவும் ஒன்றாகும்.

முன்னொரு சமயம் ஒரு வயதான மூதாட்டி இருந்தாள். அவள் குருவாயூர்க் கண்ணனின் தீவிர பக்தை. அவள், ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் குருவாயூரப்பனின் ஸன்னிதிக்குச் சென்று தரிசனம் செய்து, மனமுருக வழிபடுவது வழக்கம். ஒரு நாள் “சீவேலி” தரிசனம் முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது பெருங்காற்றுடன் கனமழை பெய்தது. அந்த நாட்களில் சாலை விளக்குகள் கிடையாது. இருட்டில் வழி தவறிவிட்டது. மிகுந்த கவலையோடு, குருவாயூரப்பனின் நாமங்களைச் சொல்லிக்கொண்டே சென்று கொண்டிருந்தாள். அப்போது, ஒரு சிறிய பையன் அவள் முன் தோன்றி, “ பாட்டி, கவலைப் படாதீர்கள். உங்களை நான் வீட்டில் கொண்டு விடுகிறேன்” என்று சொன்னான். மழையில் இருவரும் தெப்பமாக நனைந்து விட்டனர். பேசிக் கொண்டே பாட்டியின் வீட்டை அடைந்தார்கள்.

வீட்டை அடைந்ததும் அந்த சிறுவனுக்கு நன்றி சொல்லி, “உன் பெயர் என்ன?” என்று கேட்டாள். அதற்கு அவன் ‘கோபாலன்’ என்று சொன்னான். மூதாட்டி, “ நீ செய்திருக்கும் உதவிக்கு உனக்கு ஏதாவது நான் தர வேண்டும், என்ன வேண்டும்? கேள்” என்று சொன்னாள். அவனும், “ மழையில் என் துணி நனைந்துவிட்டது. எனக்கு உம்முடைய புடவையிலிருந்து ஒரு கௌபீனம் தாருங்கள் போதும்” என்று கூறினான். அவள் சுற்றிப் பார்த்த பொழுது ஒரு சிவப்புப் புடவை இருந்தது. அதிலிருந்து ஒரு சிறு பகுதியைக் கிழித்து அவனிடம் கொடுத்தாள். அவனும் பெற்றுக் கொண்டு சென்றான்.

அடுத்த நாள் காலை, நிர்மால்ய தரிசனத்திற்காக ஸன்னிதியின் கதவைத் திறந்தபோது, மூர்த்திக்கு சிவப்பு வர்ணக் கௌபீனம் கட்டியிருப்பதைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர். முதல் நாள்  நன்கு அலங்காரம் செய்யப்பட்ட கண்ணன் இப்போது எப்படி கௌபீனத்தோடு காட்சி அளிக்கிறான்? என்று ஆச்சர்யமடைந்தனர்.. கண்ணனின் திவ்ய மேனி அனைவரையும் மயக்கும் வண்ணம் இருந்தது.

வழக்கம்போல் தரிசனத்திற்காக வந்திருந்த மூதாட்டியும் மகிழ்ந்து அனைவரிடமும் முந்தைய நாள் நடந்தவற்றைச் சொன்னாள். தன்னுடைய சிறிது கிழிந்த புடவையையும் காண்பித்தாள். அதன் கிழிந்த பகுதி, குருவாயூரப்பனின் கௌபீனமாக இருப்பதைக் கண்ட அனைவரும் வியந்தனர். மூதாட்டி, இந்த தெய்வீக நாடகத்தையும், குருவாயூரப்பன் தனக்கு அனுக்ரஹம் செய்ததையும் எண்ணியெண்ணி ஆனந்தித்தாள். அன்று முதல் ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு இரவில் சிவப்புக் கௌபீனம் சாற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது.

Leave a Comment

Enable Notifications Allow Miss notifications