கண்ணன் கதைகள் – 33
யசோதை – கண்ணன் வாயில் பிரபஞ்சம் கண்டது
ஒரு சமயம், யசோதையிடம் பாலருந்திவிட்டுப் படுத்துக் கொண்டிருந்தபோது கொட்டாவி விட்டபோது , யசோதை கண்ணன் வாயில் அனைத்து உலகங்களையும் கண்டாள். மாயையால் அதை அவள் மறந்தாள். கண்ணன், இடைச்சிறுவர்களுடன் விளையாடும்போது, அவர்களுக்குப் பழம் தருவதாகச் சொல்லி, தராமல் ஏமாற்றினான். அதனால், கோபம் கொண்ட அவர்கள், யசோதையிடம் அவன் மண் தின்றதாகக் கூறினர்.
பிரளய காலத்தில் பூமி மற்றும் அனைத்தையும் உண்ணும் மாயக் கண்ணனுக்கு, மண் தின்றதால் வியாதி வரும் என்று யசோதை பயந்து கோபம் கொண்டாள். “ மண் தின்றாயா?” என்று யசோதை கேட்டாள். கண்ணன் சிரித்துக்கொண்டே இல்லையென்று சத்தியம் செய்தான். “உன் நண்பர்கள் சொல்வது பொய் என்றால், உன் வாயைத் திறந்து காட்டு” என்று சொன்னாள். உடனே, மலர்ந்த தாமரை மலரைப் போன்ற தன் திருவாயைத் திறந்து காட்டினான். அவனது சிறிய வாயில் மண் இருக்கிறதா என்று பார்க்க விரும்பிய யசோதைக்கு, இந்த பூமி மட்டுமல்லாமல் அனைத்து உலகங்களையும் வாயில் காண்பித்தான்.
கண்ணனது வாயில், காடுகளையும், கடல்களையும், மேகத்தையும், பாதாளத்தையும் கண்டாள். மனிதர்கள், அசுரர்கள், தேவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து ஜீவன்களையும் கண்டாள். பாற்கடலில் பள்ளி கொண்டவராகக் கண்டாள். வைகுண்டத்தில் இருப்பவராகக் கண்டாள். தன் முன்னே தன் குழந்தையாகவும் நிற்பதைக் கண்டாள். உலகங்கள் அனைத்தையும் கண்டாள். கோகுலத்தில் கண்ணனாகவும், அவன் முன் அனைத்து உலகங்களையும் வரிசையாகக் கண்டாள். ‘இவன் பரமாத்மா’ என்று ஒரு நொடிப்பொழுது நினைத்தாள். மீண்டும் மாயை அகன்று, அன்பினால் அவன் தன் மகன் என்ற நினைவினை அடைந்தாள். கனவினைப் போல நடந்த அனைத்தையும் மறந்தாள். ‘பசிக்கிறது, எனக்குப் பால் கொடு’ என்று கேட்டு அவள் மடிமீது ஏறி அமர்ந்த கண்ணனுக்கு ஸ்தன்யபானம் செய்தாள்