அட்டமா சித்தி உபதேசித்த படலம் | Karthigai pengal story – thiruvilaiyadal
அட்டமா சித்தி உபதேசித்த படலம் (Karthigai pengal story) இறைவனான சொக்கநாதர் கார்த்திகைப் பெண்களுக்கு அட்டமா சித்திகளை உபதேசித்ததைப் பற்றிக் கூறுகிறது.
கார்த்திகைப் பெண்கள் அட்டமாசித்திகளை உபதேசிக்க வேண்டுதல், ஊழ்வினையால் அவர்கள் பெற்ற சாபம், சொக்கநாதர் அவர்களின் சாபத்தை நீக்கி அட்டாமாசித்திகளை உபதேசித்தது ஆகியவை இப்படலத்தில் விளக்கப்பட்டுள்ளன.
அட்டாமா சித்தி உபதேசித்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் முப்பத்தி மூன்றாவது படலமாக அமைந்துள்ளது.
கார்த்திகை பெண்களின் வேண்டுதல்
ஒருமுறை இறைவனான சிவபெருமான் கயிலாயத்தில் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். அப்போது உமையம்மை அவர் பக்கத்திலேயே அமர்ந்து இறைவனாருக்கு வெற்றிலைச் சுருளை மடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது இறைவனார் சிவகணங்களுக்கும், பெருந்தவ முனிவர்களுக்கும் போக மூர்த்தியாய் அமர்ந்து சிவகதையினை திருவாய் மலர்ந்தருளிக் கொண்டிருந்தார்.
அப்போது கார்த்திகைப் பெண்கள் அறுவரும் கயிலாய மலைக்கு வந்தனர். இறைவனாரிடம் “எம்பெருமானே, தாங்கள் எங்களுக்கு அட்டமா சித்தியை உபதேசித்து அருள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டனர்.
கார்த்திகைப் பெண்களின் சாபம்
கார்த்திகைப் பெண்களின் வேண்டுதலைக் கேட்ட இறைவனார் அவர்களிடம் உமையம்மைச் சுட்டிக் காட்டி “உலகத்தின் அன்னையான இவ்வம்மை தன்னுடைய பூரணத் தன்மையால் உலகெங்கும் பராசக்தியாகியும், மகேஸ்வரியாகியும் எங்கும் நிறைந்திருக்கிறாள்.
அட்டாமா சித்திகள் இவளைப் பணிந்து பணிவிடைகள் செய்யும். ஆதலால் நீங்கள் இவ்வம்மையை வழிபட அட்டமா சித்திகளை இவள் உங்களுக்கு அருளுவாள்” என்று கூறினார்.
ஆனால் கார்த்திகைப் பெண்கள் ஊழ்வினையால் உமையம்மையை வழிபட மறந்தனர்.
இதனைக் கண்ட இறைவனார் “நீங்கள் உமையம்மையை அலட்சியப்படுத்தியதால் பட்டமங்கை என்னும் தலத்தில் கற்பாறைகளாகக் கிடக்கப் பெறுவீர்கள்” என்று சாபம் அளித்தார்.
இதனைக் கேட்டதும் கார்த்திகைப் பெண்கள் தங்களின் சாபம் எவ்வாறு நீங்கும் என்று இறைவனாரை வினவினர்.
அதற்கு அவர் “ஆயிரம் ஆண்டுகள் கழித்து யாம் மதுரையிலிருந்து வந்து உங்களுக்கு சாபம் நீக்கி அட்டமா சித்தியை உபதேசிக்கிறேன்” என்று கூறினார்.
கார்த்திகைப் பெண்கள் அட்டமா சித்தியைப் பெறுதல்
கார்த்திகைப் பெண்கள் பட்டமங்கலம் என்னும் தலத்தில் கற்பாறைகளாகக் கிடந்தனர். ஆயிரம் வருடங்கள் கழித்து சொக்கநாதர் ஞானாசிரியராக வடிவம் கொண்டு பட்டமங்கலத்திற்கு வந்தார்.
இறைவனாரின் கடைக்கண் பார்வை பட்டதும் கற்பாறைகள் கார்த்திகைப் பெண்களாக மாறினர். இறைவனார் அப்பெண்களின் தலைமீது தன்னுடைய கையினை வைத்து அட்டாமா சித்தியை உபதேசித்தார்.
அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகியவை அட்டமா சித்திகள் ஆகும்.
அணிமா என்பது மிகச்சிறிய உயிரினத்திலும் சிறுமையாகச் சென்று தங்குவது அணிமா ஆகும்.
மண் முதல் சிவதத்துவம் வரையிலான முப்பத்தாறு தத்துவங்களிலும் உள்ளும் புறமும் நீங்காமல் நிறைந்துள்ள பெருமை மகிமா ஆகும்.
மேருமலையைப் போல கனத்திருக்கும் யோகியை எடுத்தால் இலேசான பரமாணுவைப் போல் கனமற்று இருப்பது இலகிமா ஆகும்.
லேசான பரமாணுவைப் போல் மெலிந்திருக்கும் யோகியை எடுத்தால் மேருமலையின் பாரம் போல் கனப்பது கரிமா ஆகும்.
பாதாளத்தில் இருக்கும் ஒருவன் பிரம்மலோகம் சென்று மீண்டும் பாதாளத்தை அடைவது பிராத்தி ஆகும்.
வேறு உடலிற் புகுதலும், விண்ணில் சஞ்சரித்தலும், தான் விரும்பிய இன்பங்கள் அனைத்தையும் தான் இருக்கும் இடத்திற்கு வரவழைத்தல் பிராகமியம் ஆகும்.
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் தம் இச்சைப்படி இயற்றி, சூரியன் முதல் ஒன்பது கோள்களும் ஏவல் கேட்க வீற்றிருப்பது ஈசத்துவம் ஆகும்.
எல்லாவகை உயிர்களையும், இந்திரன் உள்ளிட்ட திக்பாலர்களையும் தன் வசமாகக் கொள்வது வசித்துவம் ஆகும்.
கார்த்திகைப் பெண்கள் உமையம்மையை முறைப்படி வழிபட்டு தியான பயிற்சி வலிமையால் அட்டமா சித்திகளில் தேர்ச்சி பெற்றனர். பின்னர் திருகையிலாய மலையை அடைந்து சிவப்பேறு பெற்றனர்.
அட்டமா சித்தி அருளிய படலம் கூறும் கருத்து
அலட்சியம் ஊறு விளைவிக்கும் என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்.