குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் | Thiruvilaiyadal Gundodharan Story

குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் (Thiruvilaiyadal Gundodharan Story) சிவகணங்களுள் ஒருவரான குண்டோதரன் என்னும் பூதத்திற்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்தின்போது மீனாட்சியம்மமை உணவளித்ததைப் பற்றி கூறுகிறது.
தன்னுடைய செல்வ செருக்கினால் மீனாட்சிக்கு உண்டான கர்வத்தினை அடக்க சுந்தரேஸ்வரர் இத்திருவிளையாடலை நிகழ்த்தியதாகவும் கருதப்படுகிறது.
இப்படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தின் ஏழாவது படலமாக அமைந்துள்ளது. இதில் திருமணத்திற்காக மீனாட்சி வீட்டினர் தயார் செய்த விருந்து, குண்டோதரரின் அகோரப் பசி ஆகியவற்றை இப்படலத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

திருமண விருந்து

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்திற்கு வந்திருந்த பதஞ்சலி வியாக்கிரபாதர் ஆகியோரின் வேண்டுதல்களுக்கு இணங்க இறைவனார் வெள்ளியம்பலத்தில் திருநடனத்தினை நிகழ்த்தினார்.
திருமண நிகழ்விற்கு வந்திருந்த அனைவரும் வெள்ளியம்பலத்தில் நிகழ்ந்த இறைவனாரின் திருநடனத்தினைக் கண்டு களித்தனர். பின்னர் அனைவரும் அறுசுவையுடன் கூடிய திருமண விருந்தினை உண்டனர். திருமண விருந்தினை உண்டவர்களுக்கு பாக்கு, தாம்பூலத்துடன் பரிசுப் பொருட்களையும் தடாதகை பிராட்டியார் வழங்கினார்.
அப்போது சமையல்காரர்கள் தடாதகையிடம் விரைந்து சென்று “அம்மையே திருமண விருந்திற்கு தயார் செய்த உணவு வகைகளில் ஆயிரத்தில் ஒரு பங்கு உணவுகூட காலியாகவில்லை. இப்போது என்ன செய்வது?” என்று கேட்டனர்.
இதனைக் கேட்ட தடாதகைக்கு ‘இத்தனை பேர் உணவு உண்ட பின்னும் திருமண உணவு மீதி இருக்கிறதா’ என்ற ஆச்சர்ய எண்ணத்தோடு கர்வமும் தொற்றிக் கொண்டது.

தடாதகை சுந்தரேஸ்வரரிடம் சென்று கூறுதல்

சமையல்காரர்கள் கூறியதைக் கேட்ட தடாதகை சுந்தரேசரிடம் சென்று “ஐயனே, திருமணத்தின் பொருட்டு முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு வந்தனர்.
அவர்களுக்காக அறுசுவையுடன் கூடிய திருமண விருந்து தயார் செய்யப்பட்டது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட திருமண விருந்து உணவினை எல்லோரும் உண்டும் ஆயிரத்தில் ஒரு பங்கு உணவுகூட காலியாகவில்லை.
வேறு யாரேனும் தங்களைச் சார்ந்தவர்கள் உணவு அருந்தாமல் இருந்தால் அவர்களை உணவு உண்ண அனுப்பி வையுங்கள்” என்று பெருமையும் கர்வமும் பொங்க கூறினார்.
சிவபெருமான் குண்டோதரனை அனுப்புதல்
தடாதகை கர்வத்துடன் கூறியதைக் கேட்ட சிவபெருமான் ஒரு திருவிளையாடலை நிகழ்த்த எண்ணினார். அவர் தடாதகையை நோக்கி புன்னகையுடன் “உலகில் பெறுதற்கரிய செல்வங்களை எல்லாம் நீ பெற்று உள்ளாய்.” என்றார்.
கற்பக விருட்சமும் உன்னுடைய செல்வ செழிப்பிற்கு முன்பு தோற்றுவிடும். உன்னுடைய செல்வத்தின் அளவினை அறிவிக்கவே இவ்வளவு உணவினை தயார் செய்ய சொல்லியுள்ளாய்.
ஆனாலும் அறுசுவை திருமண விருந்தினை உண்ண, பசியால் களைப்படைந்தோர் யாரும் எம்மைச் சார்ந்தவர்கள் இல்லை என்பதே உண்மை. நான் இப்போது என்ன செய்வது?” என்று கேட்டார்.
பின் பக்கத்தில் நின்றிருந்த குண்டோதரனுக்கு வடவைத்தீ என்னும் பசிநோயினை உண்டாக்கினார். பசிநோய் வந்ததும் குண்டோதரன் பசியால் தளர்ந்த உடலுடன் “ஐயனே எனக்கு பசிக்கிறது” என்றான்.
இதனைக் கேட்ட இறைவனார் “தடாதகை, எனது குடையினைத் தாங்கிவரும் இக்குறுங்கால் பூதத்திற்கு ஒரு பிடி சோறு கொடுப்பாய்” என்று கூறினார்.
இதனைக் கேட்ட மீனாட்சி “ஒரு பிடி சோறு என்ன, வயிறு நிறைய திருமண விருந்தினை குண்டோதரன் உண்ணட்டும்.” என்று கர்வத்துடன் கூறினார்.
குண்டோதரனும் பசியால் நலிந்து திருமண விருந்து நடைபெறும் இடத்தினை நோக்கிச் சென்றான்.

குண்டோதரன் உணவினை உண்ணுதல்
திருமண விருந்து நடைபெறும் இடத்தினை அடைந்த குண்டோதரன் அங்கிருந்த சமைத்த அறுசுவை உணவுகளை எல்லாம் ஒரு நொடியில் விழுங்கினான்.
பின் அங்கிருந்த காய்கறிகள், பழங்கள், கரும்பு, தேங்காய், அரிசி, நவதானியங்கள், சர்க்கரை என கண்ணில் பட்ட எல்லா உணவுப்பொருட்களையும் உண்டான்.
அப்போதும் அவனின் பசிநோய் தீரவில்லை. “இன்னும் ஏதாவது உண்ணத் தாருங்கள்” என்று அங்கிருந்த சமையல்காரர்களிடம் கேட்டான்.
அதனைக் கண்ட சமையல்காரர்கள் தடாதகையிடம் குண்டோதரன் உணவுகள் அனைத்தையும் விழுங்கியதையும், இன்னும் உண்ண உணவு கேட்டதையும் பற்றிக் கூறினர்.
இதனைக் கேட்ட தடாதகை சுந்தரேசரிடம் சென்றார். சுந்தரேசர் தடாதகையிடம் “குண்டோதரன் சாப்பிட்டபின் உணவு வகைகள் ஏதேனும் மீதமிருந்தால் என்னுடைய வேறு சில பூதகணங்களை உணவு உண்ண அனுப்பி உன்னை மகிழ்விக்கிறேன்” என்று கூறினார்.
இதனைக் கேட்ட மீனாட்சி “ஐயனே. நான் என்னுடைய செல்வத்தால் உலகத்தினர் அனைவருக்கும் உணவளிக்க முடியும் என்று கர்வம் கொண்டிருந்தேன்.
ஆனால் தாங்கள் ஒரு பிடி சோறு வழங்கச் சொன்ன குண்டோதரனின் பசியை என்னால் போக்க இயலவில்லை. என்னை மன்னியுங்கள்” என்று கூறி சரணடைந்தார்.

குண்டோதரன் இறைவனிடம் முறையிடல்
“வெள்ளியம்பலத்தினுள் நடனமாடிய பெருமானே, திருமண விருந்திற்காக தயார் செய்யப்பட்ட மலை போன்ற உணவு வகைகளை உண்ட பின்னும் என்னுடைய பசி அடங்கவில்லை. நான் என்ன செய்வது?” என்று கேட்டு பசிநோயால் கதறி அழுதான்.

குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் கூறும் கருத்து
ஒருவர் எப்போதும் தன் செல்வத்தை எண்ணிக் கர்வம் கொள்ளக் கூடாது என்பதே குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் கூறும் கருத்து ஆகும்.

திருவிளையாடல் புராணம் என்பது சிவபெருமானது திருவிளையாடல்களைக் கூறும் பரஞ்சோதி முனிவர் எழுதிய நூல் ஆகும். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. மதுரை மீனாட்சியம்மை பராசக்தி பரஞ்சோதி முனிவரின் கனவில் தோன்றிச் சிவபெருமானின் திருவிளையாடல்களைப் பாடும் படி கூறியமையால் இந்நூலைப் பரஞ்சோதியார் இயற்றியதாக நம்பப்படுகிறது. பரஞ்சோதி முனிவர் திருமறைக்காடு (வேதாரணியம்) எனும் ஊரில் மீனாட்சி சுந்தர தேசிகர் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். மதுரையில் சற்குருவை ஏற்று சைவ சந்நியாசம் பெற்றார்.